Saturday, October 1, 2016

கண்ணகி ஆய்வாளர் யாணனுடன் ஒரு சந்திப்பு -2

இந்திர விழா விளக்குவீர்களா?

கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியை அடைந்து மதுரை புறப்படுவது வைகாசி மாதம் பௌர்ணமி நாளுக்கு அடுத்தநாள். புகார் நகரில் சித்திரை மாதம் சித்திரை நாளில் இந்திரவிழாத் தொடங்கி ஒரு மாதம் நடைபெறும்.  இளங்கோ இதனை “சித்திரைச் சித்திரைத் திங்கள் கேர்ந்தென(5:64) எனக் காட்டுவார். இந்திராவிழா முடிந்த நாளில் அதாவது வைகாசி பௌர்ணமிக்கு அடுத்தநாள் மதுரை புறப்படுகிறாள். மதுரைக்காண்ட நிகழ்ச்சிகள் ஏறத்தாழ இரண்டரை மாத நிகழ்ச்சிகள்.

இந்திர விழாவின் தத்துவம், இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகையினால்  துன்பம் அடையாது இருக்க,  தெய்வத்திற்கு பலிகொடுத்து வழிபடுதலே இந்திர விழா. இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார்.
இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது. தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர்.
சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து  இன்பமூட்டிய விழா. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்துள்ளது.

கண்ணகி கதை, கற்பு அறம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே தன் பெண்களை அடக்கி வந்திருக்கிறான் தமிழன். இதெல்லாம் இன்னும் அவசியமா? தமிழ்ப் பெண் கண்ணகி பெண்ணாகவா அல்லாது பெரியார் பெண்ணாகவா இருக்க வேண்டும்?

’’இருதாரம், பல தாரம் கொண்டோர், மனைவிக்கு தெரியாமல் மற்றொரு தொடர்பு வைத்திருக்கும் முற்போக்குவாதிகளில் பலர் தான்... பெண் சுதந்திரம் என்ற போர்வைக்குள் நுழைந்து தங்களை நம்பி வந்த மனைவிக்கு செய்யும் துரோகத்தை மறைக்கும் வகையில் கற்பு, கண்ணகிக்கு எதிராக கருத்து எழுப்புவர்...கற்பு என்பது சுயஒழுக்கம் என்பதை தாண்டி உணரதக்க ஓர் சொல். கற்பு என்றால் தெய்வீகம் குடிகொள்ளும் சொல். அதை அவரவர் மனசாட்சியால் மட்டுமே உணர முடியும். கற்புடைய பெண் மட்டுமல்ல, ஆணும் இணைந்ததுதான் இல்லறம். அப்படியான தம்பதியரே சமூகத்தில் மனநிறைவுடன் வாழ்கிறார்கள். தன் மனைவி கற்புடையவள் எனும் நம்பிக்கையுடனே ஒவ்வொரு கணவனும் வாழ்கிறான். அதே நம்பிக்கையே கணவன் மீதும் மனைவிக்கு இருக்கிறது. இன்றும் தம்பதியர்களுக்குள் கற்பு எனும் காந்த சக்தியே பினைக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்து இல்லறம் எனும் நல்லறம் நிகழ்த்துகிறார்கள். கற்பில் சந்தேகம் வந்தால்...குடும்பங்கள் என்னாகும்?
அறம், எனும் இயற்கை தரும் தண்டனைகள் தீர்ப்புகளால்தான் இன்றும் சமூகம் கட்டமைக்கப்படுவதாக அடியேன், நம்புகிறேன். ’இதனால் தான் இது நிகழ்கிறது’ என்பதை உணரும் சக்தியை மாயையில் சிக்கியவர்கள் இழந்ததின் விளைவே... எதிர் விமர்சனங்களுக்கு காரணம். அறத்தண்டனைகளைத் ’தற்செயல் நிகழ்வு’ என சாதாரணமாக எடுத்துக்கொள்வர். அது அவரவர் அறியாமை சார்ந்ததே ஆகும். கற்பு, அறம் போன்றவற்றின் மீதான நம்பிக்கையை முற்போக்கு எனும் வார்த்தையால் உடைக்க முயல்வது சமூக ஓழுக்கம் கெடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் ஓர் ஆபத்து என்பது என் கருத்து.

தமிழகத்தில் கண்ணகி வழிபாடு எப்படித் திகழ்கிறது?

கண்ணகி, கண்ணகையம்மா, கண்ணேயம்மா, கண்ணியம்மன், கண்ணம்மா, கண்ணாம்பாள், கண்ணாத்தாள், கண்ணு, கண்ணி போன்ற பெயர்கள் கண்ணகி அம்மன் மீது கொண்ட பக்தியால் கடந்தகால தமிழர்கள் தங்கள் சந்ததியினருக்கு வைத்து பரவசப்பட்டனர்.

சிலம்பு ஒரு கதைதான் எனக் கட்சி பேசுவோர் இங்கே அதிகம். கண்ணகி ஒரு காப்பியத்தின் நாயகி. அதனால் அவளை ஒரு கதாபாத்திரமாக மட்டுமே  காணுங்கள் என  வலியுறுத்தும் இறை நம்பிக்கையற்ற ஆய்வறிஞர்கள், கட்டுரைகள், நூல்கள் பல உள்ளன. இறை நம்பிக்கையுடைய தமிழர்களிடம் கூட ‘எதை வேண்டுமானலும் வழிபடு; கண்ணகியை வழிபடாதே துயரம் வரும்!’ என அச்சம் மூட்டினர்.  இத்தனைத் தடைகளைத் தாண்டி மலைவாழ்மக்கள், பழங்குடியினர், குரும்பர்கள் மத்தியில் மிகுந்த பயபக்தியோடு, மரியாதையோடு வாழ்கிறாள்.
ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை முழுநிலவு வழிபாடு சேரன் எழுப்பிய ஆலயத்தில் நிகழ்கிறது. அங்கே ஆண்டுதோறும் பக்தர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. கடந்த சித்திரை விழாவில் சுமார் ஒரு லெட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.  பூம்பூகார் அருகே உள்ள மேலையூர் தாசில் பண்ணையில் இந்த நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் வெகு விமர்சையாக ஆடி அனுஷம் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பூ பல்லக்கில் ஏறி விண்ணுலகம் சென்றதை நினைவுபடுத்தும் விழா சுமார் நாற்பத்து நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது.
இனி மேலும் ஆலயங்கள் எதிர்காலத்தில் தோன்றும்.

கண்ணகி வழிபாடு வளர்ந்தால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும்? 

"அறநெறிகள் வளரும். மனசாட்சிக்கு
அஞ்சுவர். பாவ புண்ணியம் பார்ப்பர். தர்மச் சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகத்தில் நீதி, நேர்மை மதிக்கப்படும். நல்லோர் உயர்வர். ’’

யாணனைப் பற்றி...

"சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன.
பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில்,மலைப்பிரதேசங்களில், பறவைகளில், கடல்வெளியில், வான்வெளியில் என உணருகிறேன்.. என்னைத் தூண்டும் சக்தியாக இவையே இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும்.
நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.’’
என தன்னைக்குறித்து கூறும் இவர் அதிககாலம் வசித்தது திருவாரூரில்... இதழாளராக நீண்ட காலம் பணிசெய்த இவர், ஆன்மீக தேடலில் சிறுவயது முதலே நாட்டம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். திருவாரூரில் தான் கட்டிய வீட்டின் மீது ஓர் சிறு தியான ஆலயமும், தாமரைகள் மலர தண்ணீர் தொட்டியும் அமைத்துள்ளார். பின்னர் தைவான் நாட்டைச்சேர்ந்த தௌ(tao) எனும்  ஓர் வழிபாட்டு பிரிவில் சில ஆண்டுகள் ஈடுபட்டுள்ளார்.

 கண்ணகி வழிபாடு அதுவாக தன்னை ஆட்கொண்டதாக குறிப்பிடுகிறார். தற்போது தனது முழுமையான வழிபாடு கண்ணகியும், கடல் தேவதையான மணிமேகலாவுதான் என குறிப்பிடுகிறார். தனது இல்லத்தில் நாளும் வழிபடும் இவர், வாரம் ஒருநாள் மட்டும் பொதுமக்கள் வழிபாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கிறார்.
கண்ணகி வழிபாடு மீண்டும் தழைத்தோங்க செய்யவே இப்பூமியில் தன் பிறப்பின் இரகசியம் என்பதை உணருவதாகக் குறிப்பிடுகிறார்.
இன்பம், துன்பம், ஏமாற்றம், அவமானம், ஆசீர்வாதம், அரவணைப்பு யாவும் எனது பயணத்தில் கலந்தே கடந்து சென்றிருக்கின்றன. ஒரு நல்ல சிறுகதை அமையும் வரை எழுதியதை அடித்து திருத்தி மீண்டும் மீண்டும் எழுத முயல்வதைப்போலவே நாளும் வாழ்க்கை நகர்கிறது. என்கிறார் யாணன் கவிதை மொழியில்.

முற்றும்

No comments:

Post a Comment