Sunday, October 2, 2016

1974 இல் தமிழகம் சென்ற நடேசனின் அனுபவங்கள்நேர்காணல்-  மணி ஸ்ரீகாந்தன்

மிழகத்தில் 19ம் நூற்றாண்டில் வானம் பொய்த்ததால் ஏற்பட்ட பஞ்ச நிலையைப் பயன்படுத்தி தமிழகத்திலிருந்து பெருந்தொகையானோர் இலங்கை மத்திய மாகாணத்தை நோக்கி வந்தது தெரிந்த செய்தி அக்காலப்பகுதியில் இவர்கள் மொறிசியஸ், தென் ஆபிரிக்கா, மலேசியா, சூரிநாம், பிஜி உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். அக்காலத்தில் நிகழ்ந்த பெரும் புலம் பெயர்வு இது. அப்படிச் சென்றவர்களில் பலர் அந்தந்த நாட்டிலேயே குடியுரிமை பெற்று தங்கிவிட, சிலர் மட்டும் தமிழகத்திற்கு மீண்டும் திரும்பி வந்தார்கள்.

அப்படி தாயகம் திரும்பியவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை பற்றிய தேடல்தான் இந்தப் பதிவு.

மத்துகமை கல்கடுவை தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் நடேசன். தமது 21வது வயதில் தாயகம் திரும்பிய அவர் தமது சொந்த ஊரான தஞ்சாவூரில் தற்போது வாழ்ந்து வருகிறார். தமது சொந்த ஊரில் நாற்பது ஆண்டுகளை கழித்துவிட்ட அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
நடேசனின் இளமை காலத்தில்
"அரசாங்கத்தின் துணையோடு, அவர்கள் சொன்ன இடங்களுக்கு சென்றவர்களின் வாழ்வு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அரசின் உதவியில்லாமல் பூர்வீக மண்ணில் குடியேறியவர்களின் வாழ்வு நாசமாகிவிட்டது" என்று எடுத்த எடுப்பிலேயே தடாலடியாக பதில் சொன்னார் நடேசன்.

அப்போ உங்கள் வாழ்வு வளமானதாக இல்லையா? என்றதும்,

"வேலை வெட்டி இல்லாமல் இன்னமும் சும்மா இருக்கிற என் வாழ்வு எப்படி வளமானதாக இருக்கும்?" திருப்பிக் கேட்டார் நடேசன். நடேசனின் குரலில் சோகம் அப்பிக் கிடந்தது.

நடேசனுக்கு இப்போது அறுபத்தேழு வயதாகிறது. தஞ்சாவூரில் ஆம்பளாபட்டு, குடிகாடு தாலுகாவில் வசித்து வருகிறாராம்.

"மத்துகமை கல்கடுவை தோட்டத்தில் பிறந்த நான், மத்துகமை மத்திய மகா வித்தியாலயத்தில்தான் படித்தேன். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் என் வாழ்க்கை வசந்தமாகத்தான் இருந்தது.

இந்தியாவுக்கு போனா நல்லா வாழலாம். அங்கே நமக்கு சொந்த காணி இருக்கு என்று எங்கப்பா ஆசை வார்த்தை கூறியதில் மயங்கிய நாங்கள் இந்தியாவுக்கு வரச் சம்மதித்தோம்.

74 ஆம் ஆண்டில் ஒரு நாள் எங்க சாதி சனத்தையெல்லாம் எங்க ஊரு மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து, அம்மனுக்கு படையல் போட்டு பொங்கல் வைத்து நாங்க இந்தியாவுக்கு போகிற திகதியை அறிவித்தோம். அதன் பிறகு தட்டு முட்டு சாமானையெல்லாம் லொறியில் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்தோம். சாதி சனத்தை விட்டு பிரிந்த சோகம் முகமெல்லாம் அப்பிக் கிடந்த எமது பயணம் தொடர்ந்தது.
இரவு ஏழு மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயில் காலை ஆறு மணிக்கு தலைமன்னாரை வந்தடைந்தது. காலை ஒன்பது மணியளவில் ராமானுஜம் கப்பலில் ஏறினோம். கப்பல் பெரிய சங்கு சத்தத்தோடு இலங்கை கரையை விட்டு இராமேஸ்வரம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.

முதல் கப்பல் பயணம்தான் என்றாலும் என்னாலும் என் தம்பி, தங்கைகளாலும் அதை ரசித்து மகிழ முடியவில்லை. ஊரையும், உறவுகளையும் பிரிந்து வரும் சோகத்தில் வாடிக் கிடந்தோம். ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு வந்த போதே இலங்கைத் தீவு கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து போக மறு பக்கம் பார்த்தேன். இராமேஸ்வரம் கோயில் கோபுரம் தெரிய ஆரம்பித்தது. கோயிலை பார்த்ததும் மனதிற்கு ஒரு நம்பிக்கை. தைரியத்தோடு இராமேஸ்வரம் தரையில் இறங்கினோம். நான் அம்மா, அப்பா, தங்கை, தம்பியோடு சுடு மணலில் மண்டபம் நோக்கி நடந்தோம்.

அந்த முகாமில் ஒரு நாள் தங்க வைக்கப்பட்ட பின் ஊர்களுக்கு அனுப்பப்பட்டோம். ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி தாயகம் திரும்பியவர்களுக்கு வீடும், தொழிலும் அரசாங்கம் வழங்கியது. ஆனால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு அந்த சலுகை கிடையாது. தஞ்சை மண்ணை பூர்வீகமாகக் கொண்டதால் என் அப்பாவுக்கு தன்மானம் கொஞ்சம் அதிகமாகவே இருந்திருக்கும் போல. அதனால் அரசாங்கம் அனுப்பி வைக்கும் இடத்துக்குப் போய் அங்கேயும் நாம் ஏன் கைகட்டி அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அதனால் சொந்த ஊருக்கே போய் நம்ம மண்ணிலேயே தலை நிமிர்ந்து வாழலாம் என்று எங்களை அங்கே அழைத்துச் சென்றார். நாங்கள் பட்டுக்கோட்டைக்கு ரயில் ஏறினோம்" என்று பெருமூச்சோடு நடேசன் நிறுத்தினார். பட்டுக்கோட்டையில் என்ன நடந்தது என்று நாமும் ஆவலாய் கேட்க, நடேசன் தொடர்ந்தார்:
"பட்டுக்கோட்டை ஸ்டேசனில் ரயில் நின்றபோது அங்கே எனது அப்பாவின் சகோதரர்கள் மாட்டு வண்டியோடு காத்திருந்தார்கள். வந்திருந்த மூவரில் யாருமே சட்டை அணிந்திருக்கவில்லை. கசங்கிய அழுக்கு வேட்டி அணிந்திருந்தார்கள். பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டதும் வண்டி நகர்ந்தது. அம்மா, அப்பா நான் அப்புறம் என் மூன்று தம்பிகளும், மூன்று தங்கைகளுமாக மொத்தம் ஒன்பது பேர். பங்காளிகள் மூவரோடு பொசுக்கும் வெயிலில் நடந்தோம். ஓரிரு டீ கடைகளை தவிர பட்டுக்கோட்டை வெறிச்சோடிக் கிடந்தது. இன்றைய பரபரப்பு அன்று இருக்கவில்லை. மாட்டு வண்டியை மட்டும் முன்னால் அனுப்பிவிட்டு நாங்கள் ஊர் பஸ்சை பிடித்து அரை மணி நேரத்தில் 'மில்லு முக்கம்' பஸ் ஸ்டாப்பில் இறங்கினோம்.

பங்காளிகளின், வீட்டு வாசலில் பெட்டி படுக்கையோடு நின்ற எங்களை 'ஏன் வந்தீங்க?' என்பதை சொல்ல முடியாமல் முக பாவனையில் காட்டியவாறு வரவேற்றார்கள். அதன் பிறகு எங்களுக்கு உணவு கொடுத்தார்கள். எங்களிடம் ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை நாங்கள் கொடுக்கவில்லை. பிறகு எங்களின் நிலத்திலும் அவர்களுக்கு பங்கு இருப்பதாகக் கூறி பிரச்சினை செய்தார்கள். முடிவில் பஞ்சாயத்து போய் பொலிஸில் முடிந்தது. எங்களுக்கு சிறிய நிலம் மட்டுமே சொந்தமானது. என் அப்பா சொன்னமாதிரி தமிழ் நாட்டு வாழ்க்கை வசந்தமானதாக இல்லை. அப்பாவிடம் அதுபற்றி நானும் என் சகோதரர்களும் கேட்டதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. மௌனமாக இருந்த அப்பா எங்களை கஷ்டப்படுத்திவிட்ட கவலையிலேயே இரண்டு ஆண்டுகளிலேயே இறந்து விட்டார்.

தாயகம் வந்த புதுசில் எங்களுக்கு இங்கே பேசுகிற தமிழும் சரியாகப் புரியவில்லை. காணியில் வேலை செய்த அனுபவமும் இல்லை. அதனால் ரொம்ப கஷ்டப்பட்டோம். கொண்டு வந்த பணம் தீர்ந்தது. நகைகளை அடகு வைத்து சாப்பிட்டோம். மூன்று வேளை சாப்பிட்டோம் என்றெல்லாம் பொய் சொல்ல முடியாது. தமிழகத்தில் பஞ்சம் தாண்டவமாடிய காலம் அது. நான் தஞ்சாவூரில் படிக்க ஆரம்பித்த போது சினிமா மோகம் தலைக்கேறியது. எம்.ஜி.ஆர். படம் முதல் காட்சிக்கு முதல் டிக்கெட் என்று திரிந்ததில் என் படிப்பில் மண் விழுந்தது.

அதன் பிறகு இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பித்தேன். உடனே வருமாறு அழைப்பு வந்தது. ஆனால் என் அம்மா என்னை விடவில்லை. 'நீ அதுக்கெல்லாம் போகாதே… கஷ்டப்பட்டு கஞ்சி குடித்தாலும் ஒன்றாக இருந்து குடிப்போம்'னு  சொல்லி என்னைத் தேடி வந்த வாய்ப்பையும் தடுத்து விட்டார். ஆனா அன்றைக்கு அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தியிருந்தால் என் வாழ்க்கை மாறிப்போயிருக்கும். வாய்ப்பு ஒரு முறைதான் வரும். அதை அப்போதே நாம் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் பின்னாடி ரொம்ப வருத்தப்பட வேணும் என்பதை நான் தாமதமாகவே புரிந்துகொண்டேன். அதன் பிறகு எனக்கு சரியாக எந்தத் தொழிலும் அமையவில்லை. கொஞ்சக் காலமா லாட்டரி சீட்டு விற்பனை ஏஜெண்டாக இருந்தேன். அப்போது என் வாழ்க்கை ஓஹோ என்று உயர்ந்தது. பிறகு தமிழகத்தில் லொட்டரிக்கு தடை கொண்டு வந்ததால் என் வாழ்க்கையும் அதோடு முடங்கிப் போனது.

வீட்டில் நான்தான் மூத்தவன். அதனால் எனக்கு எப்போதும் ராஜமரியாதைதான். அம்மா, அப்பா, சகோதரர்கள் யாரும் என்னை எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை. 'உனக்கு அதெல்லாம் முடியாதுப்பா நீ சும்மா இரு' என்று என் அம்மா பாசத்தால் என்னை கட்டிப் போட்டார். இதுவே இன்றைக்கு வரை நீடிக்குது. இப்போதும் நான் என் தங்கை, தம்பிகளின் அரவணைப்பில்தான் இருக்கேன். என் தங்கச்சி, 'அண்ணே அப்போவே அந்த வேலையெல்லாம் செய்யாது.. இப்போது அதை செய்யவிடுவோமா?' என்கிறா. இனி நான் எப்படி கஷ்ட நஷ்டம் தெரிஞ்சி உருப்படுறது?" என்று தமது குடும்பத்தின் பாசக் கயிறு எப்படியெல்லாம் தம்மை முடமாக்கி போட்டு விட்டது என்பதைச் சொல்லும் போதே நடேசனின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கிறது.
களுத்துறை மாவட்ட தோட்டங்களில் நடேசன் மேடை நாடகங்கள் போடுவாராம். முக்கியமாக கோவில் திருவிழாக்களில் இவரின் நாடகங்கள் அரங்கேறுமாம். எழுத்து, இயக்கம், நடிப்பு என்று பன்முக ஆளுமை கொண்ட கலைஞராக விளங்கிய இவரின் நாடகங்களில் 'தாய் மேல் ஆணை', 'நீதி எங்கே' உள்ளிட்ட நாடகங்கள் பல தடவைகள் மேடையேறின என்கிறார்.

"நாடகத்தில் நடித்த கலைஞர்களில் பெண் வேடம் போடும் சாமிநாதன், ஆறுமுகம், கோவிந்தன், கீகியேன கந்தையை சேர்ந்த செல்லத்துரை ஆகியோரை இப்போதும் நினைக்கிறேன். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களோடு என் நண்பர்களான வோகன் எஸ்டேட்டை சேர்ந்த சுப்ரமணி சத்திவேலு, பாலன் உள்ளிட்டோரை நினைத்து பார்க்கிறேன். அந்தப் பசுமையான காலம் திரும்பக் கிடைக்காது. பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்கும்போது ஒரு புதுத்தெம்பு வந்து விடுகிறது" சொல்லும் போதே நடேசனின் முகத்தில் பூரிப்பு பளிச்சிடுகிறது.

உளுத்தூர் பேட்டை உணவகத்தில் நடேசன் தொழில் செய்து வந்த காலத்தில் அந்தக் கடைக்குப் பக்கத்து வீட்டில் இருந்த மரகதம் என்ற பெண் மீது காதல் பூத்திருக்கிறது. அவரையே திருமணம் செய்திருக்கிறார். இருபது வருடங்கள் நீடித்த இல்லறம் மனைவியின் திடீர் மரணத்தோடு முற்றுப்பெற்றுவிட, இப்போது மீண்டு சகோதரர்களோடு வாழ்கிறாராம்.

என் பாட்டன் கரிகால பெருவளத்தான். ராஜராஜ சோழனின் தஞ்சை மண்ணில் வாழ்வது மட்டுமே எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஆனால் யாராவது இலங்கைக்கு வாங்க போகலாம்னு கூப்பிட்டால், இப்போதே புறப்பட்டு விடுவேன்!" என்கிறார் நடேசன். இலங்கை போல வராதாம்! மீண்டும் நடேசன் விட்ட இடத்திலிருந்து தொடங்க ஆசைப்படுகிறார். ஆனால் என்ன செய்வது, காலம் கடந்து விட்டதே!

No comments:

Post a Comment