Sunday, September 4, 2016

'ஜோக்கர்' பார்த்தீர்களா?- ராஜா மாஸ்டர், கண்டி

மக்கள்தான் ஆட்சி செய்பவர்கள். அரசியல்வாதிகள் மக்களின் பிரதிநிதிகள். எனவே மக்களுக்கு உள்ள உரிமையை அரசியல்வாதிகள் கொடுக்க மறுத்தால் மக்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த  அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இதை ஒரு மன்னர், ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு பைத்தியக்காரன் என்ற தோரணையில் ஒரு ஜோக்கரைப் போல் சொன்னால் எப்படியிருக்கும்?

'நறுக்' வசனங்களை உண்டி வில்லில் வைத்து இழுத்துச் சுண்டும் போது 'சுருக்' என்று தைக்கிறது. ஆனால் ஒரு பைத்தியக்காரனின் கைகள் அதைச் செய்வதால் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
மனச்சாட்சிக்கு உருவமிட்டு வீதியில் உலா வரச் செய்யும் தெருக்கூத்து. இது சினிமாவைவிட பலம் வாய்ந்தது. இங்கு சொல்வதெல்லாம் சுடுகிறது. மூளையில் உறைக்கிறது. ஆனால் அத்துடன் அம்பேல் ஆகிவிடுகிறது.
காதலில் பின் தொடரும் படலம், துணையுடன் இணங்கும் சிணுங்கும் படலத்தின் சுகம் தெரிந்தோர் அறிவர். கிராமத்துப் பாடல் பின்னோட காட்சிகள் முன்னோட காதல் படலம் படத்தில் சிறப்பு.

நடிப்பில் மன்னர், அவர் மனைவி, பொன்னூஞ்சல் ஆகியோர் புதுமுகங்களா? பழகிய முகங்களா? இதுவரை எந்தப் பரணில் ஒளிந்திருந்தார்கள்?
இவ்வளவு ருசியாக சமைத்து விட்டு ஜோக்கர் என்று பெயர் வைத்தால் (வரிச்சலுகை கூட கிடையாது) பொருத்தமில்லை. மக்கள் மன்னன் அல்லது 'கோண மண்டை'  'குறுக்கு புத்தி' என்று வைத்திருந்தால் கூட பொருத்தமாக இருந்திருக்கும்.
நித்தமும் நிதமும் போராட்டம் என்பது மக்களுக்கு அன்றாடம் பழகிப் போன ஒன்று. நிறையப் போராட்டங்களைத் திணித்து ஒன்றுக்குக் கூட தீர்வு வழியோ யோசனையோ சொல்லாமல் விட்டது கறியின்றி சோறு சாப்பிட்டதைப் போல் உள்ளது. வயிறு நிரம்பியது. வாய்க்கு ருசி? இரண்டாம் பாகத்தில் வருமா?

இலங்கையில் தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் எதுவும் திரையிடப்படுவதாகத் தெரியவில்லையே?
- ராஜன், கண்டி

ஏன் இல்லை, 'வட்டி இலக்கம் 303' என்ற திரைப்படம் அடுத்த ஓரிரு மாதங்களில் திரைக்கு வரவுள்ளதே. (தீபாவளிக்கு வந்தால் முதலும் மிஞ்சாது என்பதால் தீபாவளிக்கு முன்னர் அல்லது பின்னர் வரலாம்).
'ஒரே நாளில்', 'கீறல்கள்' ஆகிய இரு படங்களையும் தயாரித்து இயக்கிய ஏ.ஆர்.எம்.ரஸீமின் மூன்றாவது படம்தான் 'வட்டி இலக்கம் 303' (தொடர்ந்து படங்களைத் தயாரித்தால்தான் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறாரோ).
'வட்டி இலக்கம் 303' படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீடு அண்மையில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் 'தரங்கனி' திரையரங்கில் இடம்பெற்றது (பேஸ்புக் மற்றும் யுடியூப் பதிவேற்றங்களும் அன்றே இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்).

படத்தின் கதாநாயகன், கதாநாயகி இசையமைப்பாளர், பாடகர்கள் மற்றும் அவரது உதவியாளர்களை மேடைக்கு வரவழைத்து அறிமுகம் செய்தார் இயக்குனர் ரஸீம். (இது இலங்கைக்கு புதுசு)
படத்தில் உள்ள 'நெஞ்சினிலே' என்ற பாடலை நேரில் பாடியும், திரையில் காட்சியாகவும் காட்டினார்கள் (வித்தியாசமான முயற்சி).
கதாநாயகன், கதாநாயகி திரையில் தோன்றியதைவிட நேரில் அழகாகத் தெரிகிறார்கள் (கூடியிருந்தவர்கள் சொன்னது)
'ஒரே நாளில்', 'கீறல்கள்' ஆகிய இரு படங்களிலும் அப்பா வேடத்தில் தோன்றிய தயாரிப்பாளர் ரஸீம் இந்தப் படத்தில் கந்து வட்டி கறக்கும் வில்லனாக வருகிறார். (அவரது உருவத்துக்கும் தோற்றத்துக்கும் இந்த வேடம் கச்சிதமாகப் பொருந்துகிறது)
இலங்கையில் தமிழ் சினிமா என்று பெயர் பொறித்த டீ சேர்ட்களுடன் இளைஞர் அணியொன்று சுறுசுறுப்பாக இயங்கியதை காண முடிந்தது. படத்தின் விளம்பர செயற்பாடுகளில் இவர்கள் இறங்கியுள்ளதாகக் கூறப்பட்டது. (மற்றவர்களின் தயாரிப்புகளிலும் இவர்கள் உதவ முடிந்தால் 'இலங்கை தமிழ் சினிமா' பயன்பெறும்).


தமிழ்நாட்டில் அம்மா ஆட்சி அமைந்திருப்பதால் சினிமாவுக்கு நல்லது நடக்கும் என்கிறார்களே?
- ஆர். புஷ்பநாதன், நீர்கொழும்பு

சினிமா பார்ப்பதற்கு அம்மா தியேட்டர்கள் வரப்போகின்றனவே அது நல்லதுதானே!
முதலில் வந்தது அம்மா உணவகம். அது வெற்றியளித்ததும் அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சீமெந்து என்று திட்டங்கள் வரிசை கட்டின. தேர்தல் வாக்குறுதியில் அம்மா சினிமா வரும் என்று சொல்லப்பட்டது. சொன்னது போலவே அம்மா தியேட்டர்கள் வரவுள்ளன. ஏற்கனவே சென்னையில் இருந்த மாநகர சபையின் இரு அரங்குகள் தியேட்டர்களாக மாறவுள்ளன. ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசனங்களுடன் குளிர்சாதன வசதியுடன் இவை அமையும். நான்கு ஏக்கர் அரச காணியில் மேலும் சில அரங்குகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடித்தட்டு மக்களின் வசதிக்காக கட்டப்படும் இந்த தியேட்டர்களில் படம் பார்க்க ஆகக்குறைந்தது 10 ரூபா என்றும் அதிகபட்சம் 30 ரூபா என்றும் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாம்.
மாவட்டத்துக்கு 10 என்ற வகையில் தியேட்டர்களை ஆரம்பித்தால் மொத்தம் 400 தியேட்டர்கள் வரும். திரையிடுவதற்கு தியேட்டர் இல்லாமல் பிரச்சினைகளை எதிர்நோக்கும் சிறிய பட்ஜட் படங்களை இங்கு திரையிட்டால் அரசுக்கு லாபம். அடித்தட்டு மக்களுக்கு மகிழ்ச்சி. சிறிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நிம்மதி.

இப்போது வரும் பாடல்களில் ரீங்காரம் இல்லையே?
- ரவீந்திரன், சிலாபம்

ரீங்காரத்தை இப்போது யார் கேட்பார்கள்? எதுகை மோனை யில் சில வார்த்தைகள் இருந்தால் போதும். மெட்டு இருந்தாலும் ஒன்றுதான்.
இல்லாவிட்டாலும்…. அதனால்தான் எல்லாப் பாடல்களும் ஒரே மெட்டில் இருப்பதைப் போல் உணர்கிறீர்கள்.
அன்றைய பாடல்கள் நினைவில் இனித்தன
இன்றைய பாடல்கள் கேட்டதும் மறந்தன!

முத்துக்குமார் மறைந்து விட்டாரே?
- பரசுராம், கொழும்பு

உடல் மறைந்தாலும்
உணர்வுகள் பாடல்களாக
கேட்கும் போதெல்லாம்
சிலிர்க்க வைக்கிறதே!

அப்படியானால்
உயிர்ப்பு இருப்பதாகத்தானே அர்த்தம்?
முத்துக்குமாரின் பாடல்கள்
பல இன்னும் வெளிவரவுள்ளன
'தரமணி' 'நிசப்தம்' உள்ளிட்ட படப் பாடல்களுக்கு
தேசிய விருதொன்று
எதிர்பார்க்கப்படுகிறதுNo comments:

Post a Comment