Saturday, September 3, 2016

கவிஞர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

இதை எழுதுபவர் நெல்லை பாரதி. சென்னையில் இருந்து வெளிவரும் வண்ணத்திரை சினமா வார இதழின் தலைமை நிருபராகக் கடமையாற்றிவரும் இவர் தமிழ் சினமா வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர். கவிஞரின் திடீர் மரணத்தால் அதிர்ந்துபோன நெல்லை பாரதி வானவில்லுக்காக எழுதிய உண்மை வரிகள் இவை. இப்படி எழுதவே ஒரு நெஞ்சுரம் வேண்டும். 

நெல்லை பாரதி

வனுடன் குறைந்தபட்சம் 100 முறையாவது 180 மில்லி அடித்திருப்பேன். ஐம்பது முறையாவது ஆயிரங்களை வாங்கியிருப்பேன். அவ்வப்போது எனக்கு துன்பம் நேர்கையில் பண யாழ் எடுத்து மீட்டியவன். அழைப்பு வந்தாலே அவசர உதவி கேட்கவே என்பதை தெளிவாகத் தெரிந்திருந்தும், ஒருபோதும் தட்டிக் கழித்ததில்லை.

"முத்து! வணக்கம்!"

"ஆயிரம் ரூபாய் வேணும்"

"தலைவா! மலேசியாவுல இருக்கேன். தம்பிக்கிட்ட சொல்றேன். வாங்கிக்குங்க"

அடுத்த சில நிமிடங்களில் தம்பி ரமேஷ் குமார் தொடர்பில் வருவான்.

"அண்ணே! அண்ணன் சொன்னான், நீ எங்க இருக்க?"

"வீட்ல இருக்கேன் தம்பி"

"கால்மணி நேரத்துல வர்றேன்" வருவான்; தருவான். விடைபெறும்போது "நெறய்யா குடிக்காத" என்று அக்கறைச் செருப்பால் அடித்துவிட்டுப் போவான்.

"முத்து! எங்க இருக்கீங்க?"

"அலுவலகத்துல தலைவா!" எனக்கு 'ஜி' பிடிக்காதென தெரிந்ததால் 'தலைவா" என்றே விளிப்பான்.

"வரட்டுமா?"

"வாங்க!"

போவேன். முழுக்க வெள்ளை நிறத்தில் இருக்கும், ஈர்க்குச்சியைவிட சற்றே கனத்த சிகரெட்டை நீட்டுவான். அதை இழுத்துக்கொண்டே, இழுத்து நீட்டாமல், "வீட்டுச்செலவுக்கு ஆயிரம் ரூவா வேணும் முத்து" என்பேன். பேசிக்கொண்டே மேஜை டிராயரை இழுப்பான், கொடுப்பான்.
"யோவ்! ஆயிரம்தான கேட்டேன். ஐநூறு எக்ஸ்ட்ரா இருக்கு"
"ஒன்ன தெரியாதா தலைவா! போர வழில கடைக்குப் போவ. எரநூறு காலியாகும். வீட்டுக்கு முழுசா போகாது. அண்ணிகிட்ட ஆயிரம் குடுத்துரு. நீ ஐநூறு வச்சுக்கோ" என்பான். இதயம் தன்னைத்தானே பிசைந்துகொண்டு, அதன் சாற்றை கண்ணீர்க்கோடாக கன்னத்தில் ஓடவிடும்.
"அய்யய்ய என்ன இது அழுதுக்கிட்டு? நீயெல்லாம் தொடர்ந்து பாட்டெழுதுனா ஆயிரம் பேருக்கு ஒதவி செய்வ. எழுது தலைவா!" என்று தோள் தட்டுவான்.

நண்பன் லிங்குசாமியின் தயாரிப்பில் நதியா நடித்த 'பட்டாளம்' படத்தில் எனது முதல் திரைப்பாடல் வந்தது. சத்யம் திரையரங்கில் இசை வெளியீடு. நா.முத்துக்குமார்தான் தொகுப்பாளர். "மாணவர்களின் மனநிலை குறித்த பாடலில், 'தலையெழுத்தை ரப்பர் வச்சு அழிப்பாங்க, தாகம் வந்தா மேகத்தையே குடிப்பாங்க" என்று வரிந்து கட்டியுள்ள நண்பர் நெல்லைபாரதி தொடர்ந்து எழுதவேண்டும்" எனப் பாசத்தோடு பேசினான்.

முக்கிய குறிப்பு: நெருக்கமானவர்களின் மரணத்தை சகித்துக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. ஆகவே, சீக்கிரம் செத்துப் போகலாம்னு தோணுது.

No comments:

Post a Comment