Saturday, September 10, 2016

சத்தி மாந்திரிகரின் இருள் உலகம்

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்

த்தியநாதன் மாந்திரிகர்,
இவர் கஹவத்தை வராபிட்டிய பகுதியில் பிரபல மாந்திரிகராகத் திகழ்கிறார். பேய்கள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டதற்கு, பகுத்தறிவு கலந்து அதிரடியாகப் பேசி நேர்காணலை ரொம்பவும் கலகலப்பாக்கினார்.

பேய்களை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா, அது எப்படி இருக்கும்? என்று கேட்டதும் ஒரு நமட்டுச் சிரிப்போடு பேசத் தொடங்கினார் சத்தி மாந்திரிகர்.

"பேய்கள் உலா வருவதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். நாய்கள் நடுநிசி நேரத்தில் வானத்தைப் பார்த்து குரைத்தாலோ அல்லது ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் நாய்கள் ஊளையிட்டாலோ பேய் நடமாட்டம் அங்கே இருக்கு என்பதை உறுதிப்படுத்தி விடலாம். நாய்க்கும் பேய்க்கும் உறவு இருப்பதாக அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் மனிதர்கள் குடியிருக்கும் வீடுகளில் பேயும் வசிக்கும் என்பதை, அந்த வீட்டில் நிலவும் பிணவாடை, செமன் டின் சமைக்காமலேயே நம் உடலில் ஏற்படும் மீன் வாடை என்பனவற்றை அறிகுறியாகக் கொள்ள முடியும். அதோடு வீடுகளில் சிலந்தி வலை பின்னினாலும் அந்த வீட்டுக்குள் ஏதோ தீயசக்தி புகுந்துவிட்டது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் பேயை நேரில் கண்டேன் என்று என்னால் பொய் சொல்ல முடியாது" என்று பெருமிதமாகச் சொல்கிறார் சத்தி.

"நான் சொல்லுவது ஏதோ சினமா வசனம் மாதிரி இருப்பதாக நீங்கள் நினைச்சுடவும் கூடாது" என்று அலாட்டாக வார்த்தைகளை விடுகிறார் மாந்திரிகர்.

பேய்கள் கோரமாகத்தான் காட்சியளிக்குமா நல்ல தோற்றத்தில் வரவே வராதா?
என்று அடுத்த கேள்விக்கு தாவினோம்.

"பேய்கள் சாந்த ரூபத்திலும் வரும். இப்போது மோகினி என்பது ஒரு பிசாசினி. அது ஒரு அழகான குமரியாகவும் வரும். குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டும் வரும். நண்பியாகவும் வரும். நம்மளோடு கூடவே இருந்து சிலர் குழிபறிப்பார்களே, அது மாதிரியான வேலைகளுக்கு பேய்களும் சாந்த ரூபத்தில் வந்து சிலரை ஏமாற்றி அவர்களை பாதாளத்தில் தள்ளப்பார்க்கும். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்" என்ற எச்சரிக்கையோடு நிறுத்தியவரிடம், பேயும் ஆவியும் ஒன்றா அல்லது இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறதா? என்று கேட்டதற்கு,

"மனிதனோட உடம்பில் என்றைக்குமே சாமி வந்து இறங்குவது இல்ல. அது சுத்தப் பொய்! அதாவது நரனான மனிதனிடம் சாமி எதையும் எதிர்பார்ப்பதில்லை. சாமிதான் நமக்கு கொடுக்கும், நீங்கள் சொல்லுகிற ஆவியும், பேயும் வேறு, வேறு வகையைச் சேர்ந்தவை. ஆவி என்பது நம் முன்னோர்களின் ஆத்மா. அதாவது நமது பத்து தலைமுறைகளுக்கு முன்பாகவும் இருக்கலாம் அல்லது ஐம்பது தலைமுறைகளுக்கு முன்பாகவும் இருக்கலாம். நமது பரம்பரையைச் சேர்ந்த நமது முப்பாட்டன் ஒருவன் அவன் வாழ்ந்த காலத்தில் 'என் பேரன்களுக்கு நான் ஏதாவது உதவி செய்வேன்' என்று சொல்லிட்டு செத்துப் போயிருக்கலாம். அதன்பிறகு அவன் பரம்பரையும் அழிந்து அந்த ஆத்மாவுக்கான பாவ புண்ணிய தர்மங்கள் முடிவடைந்திருக்குமானால் அச்சமயத்தில் பூமியில் அந்த ஆத்மாவின் பரம்பரையில் ஒருவன் பிறந்திருந்தால் அவனுக்கு ஏதாவது உதவி செய்து அதன்மூலம் தமக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளலாமே என்று அந்த ஆத்மா நினைக்கலாம்.
இந்த முடிவின்படி அந்த ஆவி இறங்கி வந்து அந்த நபரின் உடலில் புகுந்து கொள்கிறது. அப்படி வரும்போது அது தமது இஷ்ட தெய்வங்களான மாரி, காளி, மதுரை வீரன், முனி உள்ளிட்ட தெய்வங்களிடம் அவற்றின் பெயர்களை பூமியில் பயன்படுத்த அனுமதி வாங்கிக் கொள்ளும். அந்நபரின் உடலில் குடியேறிய பிறகு அந்நபருக்கு விசேட சக்தி பிறந்துவிடும். அப்போது அந்நபர் சொல்வது நடக்கும். அவரது வார்த்தைகள் அவரை நம்பி ஓடுபவர்களுக்கு பயன்கொடுக்கும். அப்போதுதான் 'நான்தான் மாரி வந்திருக்கேன், காளி வந்திருக்கேன்' என்றெல்லாம் சொல்லி மாமிசத்தையும் பழங்களையும் அந்த ஆவி நம்மிடம் பெற்று உண்டு மகிழ்கிறது. அந்த ஆவி இருக்கும் வரை நாமும் ராஜ போகமாக வாழ்வோம். ஆனால் பேய் அப்படி அல்ல. அது எப்போதும் ரத்தமும், மாமிசத்தையுமே இலக்காகக் கொண்டு நமக்கு தீங்கு செய்யும்" என்று ஆவி – பேய் என இரண்டுக்கும் இடையிலான வேற்றுமைகளை விரல் நுனியில் வைத்து சுவாரஸ்யமாக சொல்லி கெத்துக் காட்டுகிறார் சத்தி மாந்திரிகர்.

பேய்கள் எப்படி உருவாகிறது? என்ற கேள்விக்கு அவர் பதில் சொன்னார்.

"பேய்களின் தோற்றம் மனிதர்களிலிருந்துதான் ஆரம்பமாகிறது. அதாவது உறக்கத்திலிருக்கும் போது மரணம் சம்பவித்தால் நிச்சயம் பேய் உருவாகி விடும். முக்கியமாக மனிதன் உறக்கத்திலிருக்கும் போது அவனது ஆன்மா வெளியே உலாவ போய்விடும். பிறகு நாம் எழும்புகிற அந்த நிமிடம் பார்த்து அது உடலுக்குள் வந்துவிடும். இது யதார்த்தம். அதனால்தான் குழந்தைகள் உறங்கும் போது திருநீறு மற்றும் பொட்டு வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். குழந்தையின் உறக்க நிலையில் உடலை விட்டு வெளியே போகும்போது குழந்தையின் முகம் எப்படி இருந்ததோ அப்படியே அதன் ஆத்மா திரும்ப வரும்போதும் இருக்கணும், அப்படி இல்லாமல் அதன் முகத்தில் வேறு ஏதாவது பூசி மாற்றம் நடந்திருந்தால் ஆத்மா குழப்பமடைந்து விடுமாம்.

அப்படியான சந்தர்ப்பத்தில் மரணம் சம்பவிக்க வாய்ப்பு உள்ளதா? என்று நாம் முறுக்கிட,

"கோடியில் ஒருவருக்கு நடக்கலாம்" என்றவர், 'குறிப்பாக நமக்கு மரணம் வரப்போகிறது'னு  நாம் சிந்திக்கும் முன்பே ஏற்படும் துர்மரணங்கள் மூலமாகத்தான் பேய்கள் உருவாகின்றன" என்று அடித்துச் சொன்னார்.

பேய்கள் அல்லது பேய் வருவதற்கான அறிகுறிகளை எல்லோராலும் பார்த்து, கேட்டு உணர முடியுமா?

"அது எல்லோராலும் முடியாத காரியம். இந்த உலகில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பன்னிரெண்டு ராசிகளும் இருக்கின்றன. அதில் பேய்களுக்கு ரொம்பவும் பிடித்த நட்சத்திரம் மிருகசீரிடம். அதிலும் மிருகசீரிடத்தில் தேவகனம் உள்ளவர்களால் பேயைப் பார்க்க முடியாது. அதுவே ராட்சதகனமாக இருந்தால் நிச்சயம் பேயை உணர்ந்து கொள்ளலாம்" என்று பதில் சொன்னார்.

பேய்கள் என்று எதுவும் இல்லை. பூசாரிகள் பணம் பண்ணுவதற்காக கதை விடுகிறார்கள் என்று டாக்டர்கள் சொல்கிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்பது அடுத்த கேள்வி. அதற்கு கொஞ்சம் சூடாகவே பதில் சொல்லத் தொடங்கினார் சத்தி.

"நீங்கள் சொல்லும் அந்த டாக்டர்களெல்லாம் என்னைத் தேடி வந்து என்கிட்டதான் பரிகாரம் பார்க்கிறாங்க. நான் மந்திரித்துக் கொடுக்கும் தாயத்துகளைத்தான் அவங்க பிள்ளைகளே அணிந்து பரீட்சையில் பாஸ் பண்றாங்க. இரத்தினபுரி 18வது வார்ட்டுல இருக்கிற அனேக மனநோயாளிகளைக் குணமாக்க முடியாது என்று டாக்டர்கள் கைவிட்ட போது நான்தான் அவர்களைக் குணமாக்கினேன். இதெல்லாம் நான் செய்தேன்னு பெருமை பேச எனக்கு பிடிக்கலை. ஆனால் என்னால் முடிந்தது எதுவுமில்லை. அவளால் முடியாதது ஏதுமில்லை!"ன்னு  வானத்தை நோக்கி ஆள்காட்டி விரலை உயர்த்தினார் சத்தி.

தமிழ், சிங்களம் தவிர்ந்த வேற்றுமொழிகளில் பேசும் பேய்களோடு எப்படி உரையாடுவீர்கள்? என்று சத்திக்கு செக் வைத்த போது

"அது ஒரு சாதாரண விசயம்! ஆங்கில, பேயோ அல்லது மலையாள பேயோ வந்துவிட்டால் அதன் உடம்பில் அந்தமொழி தெரிந்த தீய சக்தியான காளியை பிடித்து அனுப்பிவிடுவேன். உடனே அது மொழி பெயர்ப்பாளராக ஈடுபடும்" என்று அசால்ட்டாக பதில் தந்தவரிடம்,

நீங்களும் உலகில் உள்ள மற்ற மாந்திரிகர்களும் தினமும் பேயை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால், பேய் ஒழிந்ததாக தெரியவில்லையே! என்ன நடக்கிறது? நீங்கள் விரட்டும் பேய்கள் ஓடி ஒழிந்துவிட்டு மீண்டும் வந்து விடுகிறதா? என்று கேட்டதற்கு, எம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த மாந்திரிகர் உங்கள் கேள்வியில் லொஜிக் இல்லையே! என்றார்.

"உலகில் வாழும் மனிதர்களை விட இறந்தவர்கள் தொகைதானே அதிகம்! வாழும் மனிதர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு விடுவீர்கள்… ஆனால் இறந்தவர்களின் தொகையை கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? அதனால் பேய்களின் வரவு அதிகமாகத்தானே இருக்கும்… ஒருவேளை, இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தால் ஆவிகளின் வரவு குறையலாம். எனவே பேய்களின் வரவை தடுப்பதற்கான சாத்தியம் இல்லை" என்று கூறி எம்மைத் திணற அடித்துவிட்ட மகிழ்ச்சியில் சத்தி சத்தமில்லாமல் சிரிக்கிறார்.

பேய்கள் மிருகங்களைப் பிடிப்பதில்லையா?

"நீங்கள் மிருகம் என்று சொல்வது நாலு காலும் ஒரு வாலும் உள்ள ஐந்தறிவு கொண்ட மிருகத்தை. அப்படிப் பார்த்தால் நாய், ஆடு, மாடு உள்ளிட்டவைகளும் இந்தப் பட்டியலில் வந்துவிடும். முட்டும் மாடு, ஆடு, கடிக்கும் நாய் பற்றியெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அவையெல்லாம் துஷ்ட ஆவிகளின் பிடியில் இருப்பவை. ஒரு மிருகத்தின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட ஆவிகள் புகுந்தால் அவைகள் இறந்து விடும். ஆடு கயிற்றில் தொங்குவதும் மாடு குழியில் விழுவதும் அப்படித்தான். மனிதனின் உடம்பு மூன்றுக்கு மேற்பட்ட ஆவிகளைக்கூடத் தாங்கும். ஆனால் மிருகங்களால் அது முடியாத காரியம். பாவம்!" என்று பரிதாபத்தோடு நிறுத்தியவரிடம்,

எச்சினி, ஏவள், குரளி, எசக்கி உள்ளிட்ட தீய சக்திகளில் இலகுவாக கையாளக்கூடியது எது? என்று கேட்டோம்.

"ஏவள் ரொம்பவும் பயங்கரமானது. அது ஒரு ஏவுகணை மாதிரி யாருக்கும் சிக்காமல் தப்பிப் போய்விடும். ஆனால் ஈசியாக கையாளக்கூடியது எச்சினி. ஒரு தீய சக்தி என்றாலும் நாம் ஜாக்கிரதையாக இருந்தால் எச்சினியிடம் இருந்தும் தப்பலாம். இரவு நேரத்தில் எச்சினி வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருக்கும். அந்த நேரத்தில் சாப்பிட்டு தட்டைக் கழுவி கொல்லையிலேயோ, சமையலறை சிங்கிலேயோ ஊற்றிவிடக்கூடாது. அப்படித் தெரியாமல் ஊற்றினால் அதை ருசி பார்க்கும் எச்சினி வீட்டுக்குள் வந்து சோற்றுப்பானையில் உட்கார்ந்து கொள்ளும். எனவே இரவு நேரங்களில் நாம் சாப்பிட்ட தட்டை ஒரு பேசனில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு அடுத்தநாள் கழுவுவதே சிறந்தது" என்று எச்சினியிடமிருந்து தப்புவதற்கான ஒரு வழிமுறையையும் சத்தி விளக்கினார்.

பார்ப்பதற்கு ஒரு ஆச்சாரமான பிராமண குருக்கள் மாதிரி இருக்கிறீர்களே நீங்கள் சைவ மாந்திரிகரா, அசைவ மாந்திரிகரா?
என்று கேட்டோம்.

"அதாவது சிவன், விஷ்ணு, பார்வதி முருகன், பிள்ளையார் சைவ பூஜையை ஏற்கும் தெய்வங்கள். ஆனால் கண்ணப்ப நாயனார் பன்றி மாமிசத்தை சிவனுக்கு படைத்தார் அதை சிவனும் ஏற்றுக்கொண்டார் என்பது வேறு விசயம். மச்ச, மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குள் போகக்கூடாது என்பது ஐதீகம். ஆனால் மாட்டுத் தோலில் செய்த மேளத்தையும், கன்றுக் குட்டி தோலில் செய்த சித்து உடுக்கு, மந்தி தோலில் செய்த உருமியையும் சைவக் கோவிலின் உள்ளே வைத்து இசைக்கிறார்களே, இதில் என்ன நியாயம் இருக்கிறது? அப்போது இதில் சைவம் எது அசைவம் எது? நீங்களும் நானும் ஒரு விசயத்துக்காக சண்டை போட்டால் குற்றம். எங்க ரெண்டு பேரையும் பொலிஸ்காரன் அடிச்சா சட்டம்" என்று ஆவேசமாக கொந்தளித்தவர், 'இறைச்சி சாப்பிடமாட்டேன் ஆனா குழம்பு மட்டும் சாப்பிடுவேன்' என்கிற கதை மாதிரித்தானே இது இருக்கு? ஆட்டிறைச்சியையும், மாட்டிறைச்சியையும் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு வராதே என்று சொல்லும் கருத்து அர்த்தமற்றது. பஞ்ச குண்டம், நவ குண்டம், பிரதிஷ்ட்டா கும்பாபிஷேகம் என்று நடத்தப்படுகிற அனைத்து சைவ நிகழ்வுகளிலும் மிருக தோல் என்கிற மச்சம் உள்ளே வந்து விடுகிறதே! சரியான சைவம் என்றால் இறப்பரில் தோல் செய்துதான் மேளம் அடிக்க வேண்டும். அப்போ நீங்கள் செய்தா சரி நாங்கள் செய்தா பிழையா? இப்படி நியாயபூர்வமாக சிந்தித்து கேள்வி எழுப்பினால், மதத்தில் புதிய மாற்றங்களும் ஏற்படலாம். சைவம் என்பதே பொய். நாம் அணியும் செருப்பு, மணிபேர்ஸ் ஆகியவை மிருகத் தோலினால் செய்யப்படுபவை. பெண்கள் அணியும் பட்டுப்புடவை லட்சக்கணக்கான பட்டுப்புழுவை பலியாக்கி உருவாக்கப்படுபவை. இப்போது சொல்லுங்கள். சைவம் யார், அசைவம் யார்?" என்று கோபமாக முறைத்தவர், தொடர்ந்து ஆவேசமாகவே பேசினார்.

"நம்ம மதம் வீணா போறதுக்கு முக்கியமாக ஒரு காரணம் இருக்கு. இப்போது நான் இருக்கும் வரைதான் என் மனைவிக்கு கணவன். என் பிள்ளைக்கு அப்பன். அதுவே நான் திடீர்னு இறந்து போனால் எவனுக்கும் என் மேல கையை வைக்க முடியாது. முதல் வேலையா பொலிசுக்கு அறிவிக்கணும். ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யணும், அப்புறம் நெஞ்சில் இருந்து வயிறு வரைக்கு வெட்டிக் கிழித்து உறுப்புகளை எடுத்து எப்படி மரணம் நடந்தது என்பதை ஆராய்வான். எடுத்த உறுப்புகளை புதைத்து விடுவான். உடலின் ஒரு பாகத்தை பரிசோதனைக்கும் அனுப்பிடுவான். பிறகு அந்த உடலின் வயிற்றுக்குள் பழைய துணியையும், பஞ்சையும் வைத்து திணித்து தைத்து அனுப்பிவிடுவான். இந்த உடலை வைத்துக்கொண்டு நம்ம ஆட்கள் என்ன செய்வாங்க தெரியுமா? இவரு எந்த திதியில இறந்தாரு என்பதைப் பார்த்து அந்த திதியில் திதி செய்வாங்க. 'பிணத்தை எத்தினை மணிக்குங்க வெளியே எடுக்கணும் எத்தினை மணிக்குங்க புதைக்கணும்' என்பதை ஐயரிடம் சென்று நேரம் கேட்பாங்க. நாங்களும் எமகண்டம் ராசி காலம் தவிர்ந்த சுபநேரத்தை குறித்துக் கொடுப்போம். ஆனால் பிணத்தை பரிசோதனைக்குக் கொண்டு போன பொலிஸ்காரன் நேரம் பார்த்தா எடுத்திட்டு போனான்? அந்த உடலின் முக்கிய பாகங்களை எடுத்து புதைத்தானே அவன் நேரம் பார்த்தானா? ஆனால் ஒன்றுமே இல்லாத சக்கையை புதைக்க எதுக்கு நேரம்? என்று அதிரடியான விஷயங்களை சத்தி மாந்திரிகர் அவிழ்த்து விடவும், நாம் ஒரு பேயோட்டும் மாந்திரிகரிடம் பேசிக் கொண்டிருக்கிறோமா அல்லது ஒரு பகுத்தறிவுவாதியுடன் பேசிக் கொண்டிருக்கிறோமா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. பகுத்தறிவு பேசுகிறீர்களே…? என்று நாம் தொடர்ந்த போது குறுக்கிட்ட சத்தி,

"உயிரிருக்கும் நேரம் மட்டும் ஊத்தமாட்டான் பாலை. காலை நீட்டி படுத்துக்கிடந்தா எத்தனை பெரிய மாலை!" என்று ஒரு அருமையான தத்துவத்தைச் சொல்லிவிட்டு உயிரோடு இருக்கும்போது ஒரு சொட்டுத் தண்ணீர் கொடுக்காதவன் இறந்து போனதும் பெட்டியைச் சுற்றி சீரியல் பல்ப்பு போட்டு பிணத்தின் கையில் கடிகாரத்தையும் கட்டி விட்டிருப்பான். என்னமோ டைம் பார்த்துட்டே தூங்கிற மாதிரி! அப்புறம் 'பெட்டியை மூடப்போறம் சம்மதமா' என்று கேட்பான். 'நாங்க சம்மதம் இல்லைன்னு சொன்னா' பொட்டியை வீட்டு வாசல்ல வச்சி நாரடிப்பானா? இப்படித்தான் மதம் கேவலமாகிறது. அப்புறம் சீதேவின்னு மாட்டு சாணத்தை பிடித்து வீட்டில் அடித்து வைப்பார்கள். அதாவது இறந்த மனிதன் கையினால் செய்த நன்மைகள் அந்த வீட்டை விட்டு போய் விடக்கூடாதே என்று சொல்லித்தான் அந்த சீதேவியை எடுத்து வைப்பார்கள். நவதானிய விதைகளை தண்ணீரில் போட்டு மிதக்கும் விதைகளை அப்புறப்படுத்திவிட்டு, தண்ணீரில் அமிழ்ந்து இருப்பதை எடுத்து சாணத்தோடு பிசைந்து வீட்டில் அடித்து வைத்தால் தானியங்கள் வளரும். ஆனால் அதைக்கூடச் சரியாக செய்யத் தெரியாமல் விதைகளை அப்படியே கடையிலிருந்து வாங்கி வந்து அதை தரம்பிரித்து எடுக்காமல் சாணத்தில் போட்டு பிசைந்து சுவரில் அடித்து வைப்பார்கள். அதோடு விளக்கையும் பதினாறு நாளைக்குப் பக்கத்திலேயே எரிய விடுவார்கள். அதன் சூடு சாணத்தில் பட்டால் எப்படி தானியம் முளைக்கும்? அது கருகி போய்விட்டால் பெருசுகள் வந்து சொல்லும் 'இன்னும் ஆயுசு இருக்குப் போல… ஒண்ணுகூட முளைக்கலையே!' என்று. இவங்க எல்லாம் பெரிய விஞ்ஞானி என்ற நினைப்பு! தேங்காயை தண்ணீரில் போட்டு ஊறவைத்து உடைத்தால் சரியாக உடையும். உடையாவிட்டாலும் அதற்கும் ஒரு காரணத்தைச் சொல்லுவாங்க இந்த அறிவாளிங்க" என்று தன் ரௌத்திரத்தால் மடமையைக் கொளுத்தினார்.

அறுபதுகளுக்கு பிறகு மோகினி பிசாசுகள் பற்றிய கதைகளை கேட்க முடிவதில்லையே? என்று பேய்ப்பக்கமாக இவரைத் திருப்பினோம்.

"இப்போதான் குறைந்த வயதிலேயே கல்யாணம் முடிந்து விடுதே அப்புறம் எப்படி மோகினி வரப்போகுது? அந்தக் காலத்தில் முப்பது, முப்பத்தைந்து வயசில் கல்யாணம் நடந்தது. அதனால் மோகினிக்கு இருக்க முடியாமல் வாலிப வயதினரிடம் சென்று தொற்றிக் கொள்ளும். இப்போது பன்னிரெண்டு வயதிலேயே குடிசையில் உட்கார்ந்து கொள்வது. அப்புறம் பதின்மூன்று வயதில் கல்யாணம் பதிநான்கு வயதிலே டெலிவரி ஆகி பதினைந்தில் கையில குழந்தையை வைத்து ஆட்டுது. அப்போ மோகினி எங்கே வரப்போகுது" என்று கலகலன்னு சிரித்திவரிடமிருந்து மகிழ்வோடு விடை பெற்றோம்.

No comments:

Post a Comment