Sunday, September 11, 2016

பெண்ணிய போராளி குட்டி ரேவதியுடன் ஒரு திறந்த உரையாடல் -3


நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன்

'உலக  நாடுகளுக்கு சென்று வந்தபோதுதான் இந்தியா கடுமையான பிற்போக்குத் தன்மை கொண்டது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது'


'இப்போதுதான் தலித் சமூகத்தின் முதல் தலைமுறைப் பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள். இவர்கள் எதை எழுதுவார்கள்? தமக்கு எதிரான அடக்கு முறையை எதிர்த்தே எழுதுவார்கள்'


'தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்ன பெரியார்தான் அதை செம்மைப்படுத்தவும் செய்தார்'


மிழ்மொழியை காட்டு மிராண்டி மொழி என்று பெரியார் விமர்சனம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே… அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று குட்டி ரேவதியை மேலும் சீண்டிப்பார்த்தோம்.

"மொழி சீர்த்திருத்தத்தை யார் செய்தது, பெரியார்தான் செய்தார். நமது மொழியை செம்மைப்படுத்தவும் பெரியார்தான் தேவைப்பட்டார். காட்டு மிராண்டி என்பதை எந்த சந்தர்ப்பத்தில் பெரியார் சொன்னார் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்னைக்கு என்னுடைய எழுத்தில் வடமொழி கலப்பு இல்லாமல் இருக்க நான் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். ஆனால் அவர் காலத்தில், தமிழகத்திலும் இலங்கையிலும் மற்றும் உலக முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் வடமொழி கலந்துதான் எழுதி வந்தார்கள். பேசியும் வந்தார்கள். ஆனால் இன்று நாம் வடமொழி கலக்காமல் தமிழை எழுதுவதற்கு காரணம் பெரியார் கொடுத்த விழிப்புணர்வுதான். அந்தக்காலத்தில் வடமொழிச் சொற்களை தமிழ்மொழி உள்வாங்கி இருந்ததால் அது காட்டுமிராண்டி மொழியாகத்தான் இருந்தது" என்று பெரியாரை நியாயப்படுத்தினார் குட்டி ரேவதி.

மோடி ஆட்சிக்காலத்தில் இந்துத்துவ அலை எழும்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது, எதிர்க்கப்படுகிறது. இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் இந்து ஆதரவு அலை ஏற்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

"இந்தக் கேள்வியே தவறாக இருக்கு!" என்று முறைத்துவிட்டு விளக்கம் தந்தார் ரேவதி.

"இந்து பெரும்பான்மை ஆதரவு என்று இவர்கள்தான் சொல்கிறார்கள். மண்சார்ந்த பழங்குடிகள் மற்றும் தலித்துகளின் விகிதாசாரம் இன்னும் எடுக்கப்படவில்லை. ஏனெனில் தலித்துகள் சாதி இந்துக்கள் அல்ல. அதனால் அவர்களுடைய விகிதாசாரத்தை எடுத்திருந்தால் அவர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள். இதனால்தான் முறையாக விகிதாசார கணக்கெடுப்பு செய்து அதை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதற்கு இதுவே காரணம். இதைச் செய்யாமல் இவர்களாகவே இந்துப் பெரும்பான்மை என்ற  ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். முறையான கணக்கெடுப்பு செய்தால் இந்தக் கட்டமைப்பு குலைந்துவிடும். இந்தியாவின் பழங்குடிகள், இஸ்லாமியர்கள், தலித்துகள் உள்ளிட்டோரின் மக்கள் கணக்கெடுப்பை முறையாக மேற்கொண்டால் இந்துப் பெரும்பான்மை என்கிற விம்பம் தகர்ந்து போகும்!" என்று குட்டி ரேவதி அடித்துச் சொல்கிறார்.

மதங்கள் இல்லையென்றால் மனிதன் மிருகமாகி விடுவான் என்று கூறப்படுகிறது. உதாரணத்துக்கு கிறிஸ்தவமே மனிதனுக்கு மனிதன் உதவ வேண்டும் என்பதையும் சுகாதாரம், கல்வி என்பன பொதுவாக்கப்பட வேண்டும் என்றும் சொல்லித் தந்தது. உங்கள் கருத்து?

"கிறிஸ்தவம் இந்தியாவிற்குள் வராமல் இருந்திருந்தால் இப்போது இருக்கிற மாற்றம்கூட நிகழ்ந்திருக்காது. படித்தே இருக்க மாட்டோம். கருப்பாக இருக்கிற நீங்களோ நாங்களோ சட்டைகூட அணிந்திருக்க மாட்டோம். சுகாதாரம் உண்மையிலேயே அவர்கள் வழியாகத்தான் வந்தது. கிறிஸ்தவத்தின் இன்னொரு முக்கிய விசயம், கூட்டு உணர்வும், கூட்டுறவும். கிறிஸ்தவ மதம் என்பது ஒரு விழிப்புணர்வாகத்தான் வந்தது. மதங்களை பரப்புவதற்காக அவர்கள் வந்தது சுயநலம்தான். என்றாலும் அதிலே நிறைய பொதுநலமும் கலந்து இருந்தது. அப்போது மதம் பரப்ப வந்தவர்களுக்கு எதிராக இருந்தவர்கள் பிராமணர்கள்தான். இயல்பாகவே இந்து பார்பனியமும், கிறிஸ்தவமும் எதிரெதிராகவே இயங்கின. அப்போது சாதி இந்துக்கள், கிறிஸ்தவம் வந்ததால்தான் தலித்துகள் நாகரிகமடைந்து விட்டார்கள் என்றும் கேள்வி கேட்கிறார்கள் என்றும் நினைத்தார்கள். கிறிஸ்தவர்கள் வராவிட்டால் சமத்துவமே வந்திருக்காதே! என்பதுதான் பார்பனிய கண்ணோட்டமாக இருக்கிறது. இயல்பிலேயே நமது இலக்கிய மாண்பும் தமிழ் மொழியும் மரபும் மிகுந்த பகுத்தறிவும் சமத்துவமும் கொண்டது. ஒருவருக்கொருவர் பண்புகளை பரிமாறிக் கொள்பவர்கள். இயல்பிலேயே தமிழ்மொழியில் இருக்கிற பகுத்தறிவு விசயங்கள் கிடைமட்டமான விசயம். அதனால் மதமெல்லாம் வந்து நெறிப்படுத்த வேண்டிய தேவை நமக்குக் கிடையாது. நமக்குப் பகுத்தறிவு என்பது இந்த மதங்களைவிட ஆயிரம் மடங்கு வீச்சுக் கொண்டது. அது நம்மை இன்னும் நல்ல சமூகமாக வைத்திருக்கும். நான் உலக நாடுகளுக்கு சென்று பார்க்கும்போது நமது இந்தியாதான் கடுமையான பிற்போக்குத் தன்மை கொண்ட நாடு என்பதை என்னால் உணர முடிகிறது" என்றார் குட்டி ரேவதி.

முலை அரசியல், உடல் அரசியல் எல்லாம் இந்தத் தமிழ்நாட்டில் உங்களைப் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. கிடைத்த பலன்களை சீர்தூக்கிப் பார்ப்போமா?

"என்ன கிண்டலா?"என்றார் எடுத்த எடுப்பிலேயே!

"ஆதிக்க சாதிப் பெண்கள்தான் தமிழில் இலக்கணம் படைத்தார்கள். அவர்கள் எதை எழுதினார்களோ அதுதான் இலக்கியம் என்று சொல்லப்பட்டது. அவர்கள் என்ன எழுதினார்கள் தெரியுமா? குடும்பம், கணவன், காதல், குடும்பத்துக்குள் உறவுகளை எப்படி வைத்துக்கொள்வது. சமூகம் தொந்தரவுக்கு ஆளாகாமல் அச்சமூகத்தை எப்படி வழிநடத்துவது என்பது போன்ற அடக்கியாளும் தந்திரங்களை பிரயோகித்துதான் எழுத்துகளைப் படைத்தார்கள். அம்பேத்கார் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியா முழுவதும் ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வு அலை எழும்பியது. அதுமட்டுமல்ல, பார்பனிய சமூகத்தின் மூன்றாவது தலைமுறை பெண்கள் மொழியை எழுதுவதற்கு அறிந்திருக்கும்போது, தலித் சமூகத்தின் முதல் தலைமுறை பெண்கள் எழுதவும், பேசவும் வருகிறார்கள். அப்போது நம்மால் எப்படி எழுதக்கூடும். அறிவுபூர்வமாக எழுதுவதைத்தவிர! அப்போது எதை எழுதுவோம் என்றால் இதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்தவற்றைத்தானே! நாம் உடல் ரீதியாகவும், அடக்கப்பட்டிருந்தோம், ஒடுக்கப்பட்டிருந்தோம். முலை என்பது அருவருப்பான அசிங்கமான விசயமாக வெளிப்படுத்தியதற்கு காரணம் இந்துத்துவ சிந்தனைதான்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மாவின் அம்மாவெல்லாம் மேல்சட்டை பிளவுஸ் அனிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதற்கெதிராக போராட்டம் நடத்தி துப்பாயம் அணிவதற்கு அனுமதி கிடைத்தது, கிறிஸ்தவம் வந்த பின்னர்தான். அதற்கு முன்னரெல்லாம் முலைகள் ஒரு காட்சிப் பொருளாகவே இருந்தது. எங்கம்மா சொல்லி நான் கேட்டிருக்கிறேன். பெண்கள் குடத்தை தலையில் வைத்துதான் தூக்கிச் செல்ல வேண்டுமாம். இடுப்பில் வைத்துத் தூக்கக் கூடாதாம். அப்படி தலையில் வைத்துத் தூக்கினால்தான் அவர்களின் முலைகள் ஆண்களின் கண்களுக்கு எடுப்பாகத் தோற்றமளிக்குமாம். இதுவே எவ்வளவு பெரிய அடக்குமுறை! இதுமட்டுமா, முலைகளின் அளவைப் பொறுத்ததாக வரி வசூலும் செய்திருக்கிறார்கள்.

பெண் முறைகளைப் பற்றிய பார்வை சமூகத்தில் இவ்வாறிருக்கும்போது முலை அரசியலை சமூகம் எதிர்க்கத்தான் செய்யும். எதிர்ப்பு இருக்கும்போது நாங்கள் தொடர்ந்து எழுத வேண்டிய அவசியம், ஏற்படுகிறது. உடல் அரசியல் என்பது தீண்டாமைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிரான அரசியல். குறிப்பாக பார்பனிய பெண்களுக்கு எதிரான அரசியல். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தடதடத்தார் குட்டி ரேவதி.

(தொடரும்)

No comments:

Post a Comment