Sunday, September 25, 2016

றைகம் காட்டு முனீஸ்வரன் திருவிழா

இங்கிரிய,றைகம் மேற்பிரிவு அருள்மிகு காட்டு முனீஸ்வரன் கோவிலின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு கோலாகலமாக இன்று (25-09-2016) நடைபெற்றது.முனீஸ்வரனுக்கு 108 படையல் போட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.கூலித் தொழிலாளர்களாக இலங்கையில் குடியேறிய நம் உறவுகள் தாயகத்திலிருந்து வரும்போதே தமது குலதெய்வத்தையும் பிடிமண்ணாக கொண்டு வந்தார்களாம்.அப்படி கொண்டு வரப்பட்டதுதான் இந்த காட்டு முனீஸ்வரன்.சுமார் நூறு ஆண்டுகளை கடந்து விட்ட இந்த ஆலயத்தில் இதுவரை திருவிழாக்கள் நடைபெற்றது இல்லை. பழமையான ஆலயமாக இருந்தாலும் இம்முறைதான் முதல்முறையாக திருவிழா நடைபெற்றது.


Sunday, September 11, 2016

பெண்ணிய போராளி குட்டி ரேவதியுடன் ஒரு திறந்த உரையாடல் -3


நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன்

'உலக  நாடுகளுக்கு சென்று வந்தபோதுதான் இந்தியா கடுமையான பிற்போக்குத் தன்மை கொண்டது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது'


'இப்போதுதான் தலித் சமூகத்தின் முதல் தலைமுறைப் பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள். இவர்கள் எதை எழுதுவார்கள்? தமக்கு எதிரான அடக்கு முறையை எதிர்த்தே எழுதுவார்கள்'


'தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்ன பெரியார்தான் அதை செம்மைப்படுத்தவும் செய்தார்'


மிழ்மொழியை காட்டு மிராண்டி மொழி என்று பெரியார் விமர்சனம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே… அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று குட்டி ரேவதியை மேலும் சீண்டிப்பார்த்தோம்.

"மொழி சீர்த்திருத்தத்தை யார் செய்தது, பெரியார்தான் செய்தார். நமது மொழியை செம்மைப்படுத்தவும் பெரியார்தான் தேவைப்பட்டார். காட்டு மிராண்டி என்பதை எந்த சந்தர்ப்பத்தில் பெரியார் சொன்னார் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்னைக்கு என்னுடைய எழுத்தில் வடமொழி கலப்பு இல்லாமல் இருக்க நான் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். ஆனால் அவர் காலத்தில், தமிழகத்திலும் இலங்கையிலும் மற்றும் உலக முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் வடமொழி கலந்துதான் எழுதி வந்தார்கள். பேசியும் வந்தார்கள். ஆனால் இன்று நாம் வடமொழி கலக்காமல் தமிழை எழுதுவதற்கு காரணம் பெரியார் கொடுத்த விழிப்புணர்வுதான். அந்தக்காலத்தில் வடமொழிச் சொற்களை தமிழ்மொழி உள்வாங்கி இருந்ததால் அது காட்டுமிராண்டி மொழியாகத்தான் இருந்தது" என்று பெரியாரை நியாயப்படுத்தினார் குட்டி ரேவதி.

மோடி ஆட்சிக்காலத்தில் இந்துத்துவ அலை எழும்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது, எதிர்க்கப்படுகிறது. இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் இந்து ஆதரவு அலை ஏற்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

"இந்தக் கேள்வியே தவறாக இருக்கு!" என்று முறைத்துவிட்டு விளக்கம் தந்தார் ரேவதி.

"இந்து பெரும்பான்மை ஆதரவு என்று இவர்கள்தான் சொல்கிறார்கள். மண்சார்ந்த பழங்குடிகள் மற்றும் தலித்துகளின் விகிதாசாரம் இன்னும் எடுக்கப்படவில்லை. ஏனெனில் தலித்துகள் சாதி இந்துக்கள் அல்ல. அதனால் அவர்களுடைய விகிதாசாரத்தை எடுத்திருந்தால் அவர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள். இதனால்தான் முறையாக விகிதாசார கணக்கெடுப்பு செய்து அதை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதற்கு இதுவே காரணம். இதைச் செய்யாமல் இவர்களாகவே இந்துப் பெரும்பான்மை என்ற  ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். முறையான கணக்கெடுப்பு செய்தால் இந்தக் கட்டமைப்பு குலைந்துவிடும். இந்தியாவின் பழங்குடிகள், இஸ்லாமியர்கள், தலித்துகள் உள்ளிட்டோரின் மக்கள் கணக்கெடுப்பை முறையாக மேற்கொண்டால் இந்துப் பெரும்பான்மை என்கிற விம்பம் தகர்ந்து போகும்!" என்று குட்டி ரேவதி அடித்துச் சொல்கிறார்.

மதங்கள் இல்லையென்றால் மனிதன் மிருகமாகி விடுவான் என்று கூறப்படுகிறது. உதாரணத்துக்கு கிறிஸ்தவமே மனிதனுக்கு மனிதன் உதவ வேண்டும் என்பதையும் சுகாதாரம், கல்வி என்பன பொதுவாக்கப்பட வேண்டும் என்றும் சொல்லித் தந்தது. உங்கள் கருத்து?

"கிறிஸ்தவம் இந்தியாவிற்குள் வராமல் இருந்திருந்தால் இப்போது இருக்கிற மாற்றம்கூட நிகழ்ந்திருக்காது. படித்தே இருக்க மாட்டோம். கருப்பாக இருக்கிற நீங்களோ நாங்களோ சட்டைகூட அணிந்திருக்க மாட்டோம். சுகாதாரம் உண்மையிலேயே அவர்கள் வழியாகத்தான் வந்தது. கிறிஸ்தவத்தின் இன்னொரு முக்கிய விசயம், கூட்டு உணர்வும், கூட்டுறவும். கிறிஸ்தவ மதம் என்பது ஒரு விழிப்புணர்வாகத்தான் வந்தது. மதங்களை பரப்புவதற்காக அவர்கள் வந்தது சுயநலம்தான். என்றாலும் அதிலே நிறைய பொதுநலமும் கலந்து இருந்தது. அப்போது மதம் பரப்ப வந்தவர்களுக்கு எதிராக இருந்தவர்கள் பிராமணர்கள்தான். இயல்பாகவே இந்து பார்பனியமும், கிறிஸ்தவமும் எதிரெதிராகவே இயங்கின. அப்போது சாதி இந்துக்கள், கிறிஸ்தவம் வந்ததால்தான் தலித்துகள் நாகரிகமடைந்து விட்டார்கள் என்றும் கேள்வி கேட்கிறார்கள் என்றும் நினைத்தார்கள். கிறிஸ்தவர்கள் வராவிட்டால் சமத்துவமே வந்திருக்காதே! என்பதுதான் பார்பனிய கண்ணோட்டமாக இருக்கிறது. இயல்பிலேயே நமது இலக்கிய மாண்பும் தமிழ் மொழியும் மரபும் மிகுந்த பகுத்தறிவும் சமத்துவமும் கொண்டது. ஒருவருக்கொருவர் பண்புகளை பரிமாறிக் கொள்பவர்கள். இயல்பிலேயே தமிழ்மொழியில் இருக்கிற பகுத்தறிவு விசயங்கள் கிடைமட்டமான விசயம். அதனால் மதமெல்லாம் வந்து நெறிப்படுத்த வேண்டிய தேவை நமக்குக் கிடையாது. நமக்குப் பகுத்தறிவு என்பது இந்த மதங்களைவிட ஆயிரம் மடங்கு வீச்சுக் கொண்டது. அது நம்மை இன்னும் நல்ல சமூகமாக வைத்திருக்கும். நான் உலக நாடுகளுக்கு சென்று பார்க்கும்போது நமது இந்தியாதான் கடுமையான பிற்போக்குத் தன்மை கொண்ட நாடு என்பதை என்னால் உணர முடிகிறது" என்றார் குட்டி ரேவதி.

FACE BOOK மசாலா-2


Saturday, September 10, 2016

சத்தி மாந்திரிகரின் இருள் உலகம்

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்

த்தியநாதன் மாந்திரிகர்,
இவர் கஹவத்தை வராபிட்டிய பகுதியில் பிரபல மாந்திரிகராகத் திகழ்கிறார். பேய்கள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டதற்கு, பகுத்தறிவு கலந்து அதிரடியாகப் பேசி நேர்காணலை ரொம்பவும் கலகலப்பாக்கினார்.

பேய்களை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா, அது எப்படி இருக்கும்? என்று கேட்டதும் ஒரு நமட்டுச் சிரிப்போடு பேசத் தொடங்கினார் சத்தி மாந்திரிகர்.

"பேய்கள் உலா வருவதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். நாய்கள் நடுநிசி நேரத்தில் வானத்தைப் பார்த்து குரைத்தாலோ அல்லது ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் நாய்கள் ஊளையிட்டாலோ பேய் நடமாட்டம் அங்கே இருக்கு என்பதை உறுதிப்படுத்தி விடலாம். நாய்க்கும் பேய்க்கும் உறவு இருப்பதாக அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் மனிதர்கள் குடியிருக்கும் வீடுகளில் பேயும் வசிக்கும் என்பதை, அந்த வீட்டில் நிலவும் பிணவாடை, செமன் டின் சமைக்காமலேயே நம் உடலில் ஏற்படும் மீன் வாடை என்பனவற்றை அறிகுறியாகக் கொள்ள முடியும். அதோடு வீடுகளில் சிலந்தி வலை பின்னினாலும் அந்த வீட்டுக்குள் ஏதோ தீயசக்தி புகுந்துவிட்டது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் பேயை நேரில் கண்டேன் என்று என்னால் பொய் சொல்ல முடியாது" என்று பெருமிதமாகச் சொல்கிறார் சத்தி.

"நான் சொல்லுவது ஏதோ சினமா வசனம் மாதிரி இருப்பதாக நீங்கள் நினைச்சுடவும் கூடாது" என்று அலாட்டாக வார்த்தைகளை விடுகிறார் மாந்திரிகர்.

பேய்கள் கோரமாகத்தான் காட்சியளிக்குமா நல்ல தோற்றத்தில் வரவே வராதா?
என்று அடுத்த கேள்விக்கு தாவினோம்.

"பேய்கள் சாந்த ரூபத்திலும் வரும். இப்போது மோகினி என்பது ஒரு பிசாசினி. அது ஒரு அழகான குமரியாகவும் வரும். குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டும் வரும். நண்பியாகவும் வரும். நம்மளோடு கூடவே இருந்து சிலர் குழிபறிப்பார்களே, அது மாதிரியான வேலைகளுக்கு பேய்களும் சாந்த ரூபத்தில் வந்து சிலரை ஏமாற்றி அவர்களை பாதாளத்தில் தள்ளப்பார்க்கும். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்" என்ற எச்சரிக்கையோடு நிறுத்தியவரிடம், பேயும் ஆவியும் ஒன்றா அல்லது இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறதா? என்று கேட்டதற்கு,

"மனிதனோட உடம்பில் என்றைக்குமே சாமி வந்து இறங்குவது இல்ல. அது சுத்தப் பொய்! அதாவது நரனான மனிதனிடம் சாமி எதையும் எதிர்பார்ப்பதில்லை. சாமிதான் நமக்கு கொடுக்கும், நீங்கள் சொல்லுகிற ஆவியும், பேயும் வேறு, வேறு வகையைச் சேர்ந்தவை. ஆவி என்பது நம் முன்னோர்களின் ஆத்மா. அதாவது நமது பத்து தலைமுறைகளுக்கு முன்பாகவும் இருக்கலாம் அல்லது ஐம்பது தலைமுறைகளுக்கு முன்பாகவும் இருக்கலாம். நமது பரம்பரையைச் சேர்ந்த நமது முப்பாட்டன் ஒருவன் அவன் வாழ்ந்த காலத்தில் 'என் பேரன்களுக்கு நான் ஏதாவது உதவி செய்வேன்' என்று சொல்லிட்டு செத்துப் போயிருக்கலாம். அதன்பிறகு அவன் பரம்பரையும் அழிந்து அந்த ஆத்மாவுக்கான பாவ புண்ணிய தர்மங்கள் முடிவடைந்திருக்குமானால் அச்சமயத்தில் பூமியில் அந்த ஆத்மாவின் பரம்பரையில் ஒருவன் பிறந்திருந்தால் அவனுக்கு ஏதாவது உதவி செய்து அதன்மூலம் தமக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளலாமே என்று அந்த ஆத்மா நினைக்கலாம்.
இந்த முடிவின்படி அந்த ஆவி இறங்கி வந்து அந்த நபரின் உடலில் புகுந்து கொள்கிறது. அப்படி வரும்போது அது தமது இஷ்ட தெய்வங்களான மாரி, காளி, மதுரை வீரன், முனி உள்ளிட்ட தெய்வங்களிடம் அவற்றின் பெயர்களை பூமியில் பயன்படுத்த அனுமதி வாங்கிக் கொள்ளும். அந்நபரின் உடலில் குடியேறிய பிறகு அந்நபருக்கு விசேட சக்தி பிறந்துவிடும். அப்போது அந்நபர் சொல்வது நடக்கும். அவரது வார்த்தைகள் அவரை நம்பி ஓடுபவர்களுக்கு பயன்கொடுக்கும். அப்போதுதான் 'நான்தான் மாரி வந்திருக்கேன், காளி வந்திருக்கேன்' என்றெல்லாம் சொல்லி மாமிசத்தையும் பழங்களையும் அந்த ஆவி நம்மிடம் பெற்று உண்டு மகிழ்கிறது. அந்த ஆவி இருக்கும் வரை நாமும் ராஜ போகமாக வாழ்வோம். ஆனால் பேய் அப்படி அல்ல. அது எப்போதும் ரத்தமும், மாமிசத்தையுமே இலக்காகக் கொண்டு நமக்கு தீங்கு செய்யும்" என்று ஆவி – பேய் என இரண்டுக்கும் இடையிலான வேற்றுமைகளை விரல் நுனியில் வைத்து சுவாரஸ்யமாக சொல்லி கெத்துக் காட்டுகிறார் சத்தி மாந்திரிகர்.

பேய்கள் எப்படி உருவாகிறது? என்ற கேள்விக்கு அவர் பதில் சொன்னார்.

"பேய்களின் தோற்றம் மனிதர்களிலிருந்துதான் ஆரம்பமாகிறது. அதாவது உறக்கத்திலிருக்கும் போது மரணம் சம்பவித்தால் நிச்சயம் பேய் உருவாகி விடும். முக்கியமாக மனிதன் உறக்கத்திலிருக்கும் போது அவனது ஆன்மா வெளியே உலாவ போய்விடும். பிறகு நாம் எழும்புகிற அந்த நிமிடம் பார்த்து அது உடலுக்குள் வந்துவிடும். இது யதார்த்தம். அதனால்தான் குழந்தைகள் உறங்கும் போது திருநீறு மற்றும் பொட்டு வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். குழந்தையின் உறக்க நிலையில் உடலை விட்டு வெளியே போகும்போது குழந்தையின் முகம் எப்படி இருந்ததோ அப்படியே அதன் ஆத்மா திரும்ப வரும்போதும் இருக்கணும், அப்படி இல்லாமல் அதன் முகத்தில் வேறு ஏதாவது பூசி மாற்றம் நடந்திருந்தால் ஆத்மா குழப்பமடைந்து விடுமாம்.

அப்படியான சந்தர்ப்பத்தில் மரணம் சம்பவிக்க வாய்ப்பு உள்ளதா? என்று நாம் முறுக்கிட,

"கோடியில் ஒருவருக்கு நடக்கலாம்" என்றவர், 'குறிப்பாக நமக்கு மரணம் வரப்போகிறது'னு  நாம் சிந்திக்கும் முன்பே ஏற்படும் துர்மரணங்கள் மூலமாகத்தான் பேய்கள் உருவாகின்றன" என்று அடித்துச் சொன்னார்.

பேய்கள் அல்லது பேய் வருவதற்கான அறிகுறிகளை எல்லோராலும் பார்த்து, கேட்டு உணர முடியுமா?

"அது எல்லோராலும் முடியாத காரியம். இந்த உலகில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பன்னிரெண்டு ராசிகளும் இருக்கின்றன. அதில் பேய்களுக்கு ரொம்பவும் பிடித்த நட்சத்திரம் மிருகசீரிடம். அதிலும் மிருகசீரிடத்தில் தேவகனம் உள்ளவர்களால் பேயைப் பார்க்க முடியாது. அதுவே ராட்சதகனமாக இருந்தால் நிச்சயம் பேயை உணர்ந்து கொள்ளலாம்" என்று பதில் சொன்னார்.

பேய்கள் என்று எதுவும் இல்லை. பூசாரிகள் பணம் பண்ணுவதற்காக கதை விடுகிறார்கள் என்று டாக்டர்கள் சொல்கிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்பது அடுத்த கேள்வி. அதற்கு கொஞ்சம் சூடாகவே பதில் சொல்லத் தொடங்கினார் சத்தி.

"நீங்கள் சொல்லும் அந்த டாக்டர்களெல்லாம் என்னைத் தேடி வந்து என்கிட்டதான் பரிகாரம் பார்க்கிறாங்க. நான் மந்திரித்துக் கொடுக்கும் தாயத்துகளைத்தான் அவங்க பிள்ளைகளே அணிந்து பரீட்சையில் பாஸ் பண்றாங்க. இரத்தினபுரி 18வது வார்ட்டுல இருக்கிற அனேக மனநோயாளிகளைக் குணமாக்க முடியாது என்று டாக்டர்கள் கைவிட்ட போது நான்தான் அவர்களைக் குணமாக்கினேன். இதெல்லாம் நான் செய்தேன்னு பெருமை பேச எனக்கு பிடிக்கலை. ஆனால் என்னால் முடிந்தது எதுவுமில்லை. அவளால் முடியாதது ஏதுமில்லை!"ன்னு  வானத்தை நோக்கி ஆள்காட்டி விரலை உயர்த்தினார் சத்தி.

தமிழ், சிங்களம் தவிர்ந்த வேற்றுமொழிகளில் பேசும் பேய்களோடு எப்படி உரையாடுவீர்கள்? என்று சத்திக்கு செக் வைத்த போது

"அது ஒரு சாதாரண விசயம்! ஆங்கில, பேயோ அல்லது மலையாள பேயோ வந்துவிட்டால் அதன் உடம்பில் அந்தமொழி தெரிந்த தீய சக்தியான காளியை பிடித்து அனுப்பிவிடுவேன். உடனே அது மொழி பெயர்ப்பாளராக ஈடுபடும்" என்று அசால்ட்டாக பதில் தந்தவரிடம்,

நீங்களும் உலகில் உள்ள மற்ற மாந்திரிகர்களும் தினமும் பேயை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால், பேய் ஒழிந்ததாக தெரியவில்லையே! என்ன நடக்கிறது? நீங்கள் விரட்டும் பேய்கள் ஓடி ஒழிந்துவிட்டு மீண்டும் வந்து விடுகிறதா? என்று கேட்டதற்கு, எம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த மாந்திரிகர் உங்கள் கேள்வியில் லொஜிக் இல்லையே! என்றார்.

"உலகில் வாழும் மனிதர்களை விட இறந்தவர்கள் தொகைதானே அதிகம்! வாழும் மனிதர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு விடுவீர்கள்… ஆனால் இறந்தவர்களின் தொகையை கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? அதனால் பேய்களின் வரவு அதிகமாகத்தானே இருக்கும்… ஒருவேளை, இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தால் ஆவிகளின் வரவு குறையலாம். எனவே பேய்களின் வரவை தடுப்பதற்கான சாத்தியம் இல்லை" என்று கூறி எம்மைத் திணற அடித்துவிட்ட மகிழ்ச்சியில் சத்தி சத்தமில்லாமல் சிரிக்கிறார்.

பேய்கள் மிருகங்களைப் பிடிப்பதில்லையா?

"நீங்கள் மிருகம் என்று சொல்வது நாலு காலும் ஒரு வாலும் உள்ள ஐந்தறிவு கொண்ட மிருகத்தை. அப்படிப் பார்த்தால் நாய், ஆடு, மாடு உள்ளிட்டவைகளும் இந்தப் பட்டியலில் வந்துவிடும். முட்டும் மாடு, ஆடு, கடிக்கும் நாய் பற்றியெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அவையெல்லாம் துஷ்ட ஆவிகளின் பிடியில் இருப்பவை. ஒரு மிருகத்தின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட ஆவிகள் புகுந்தால் அவைகள் இறந்து விடும். ஆடு கயிற்றில் தொங்குவதும் மாடு குழியில் விழுவதும் அப்படித்தான். மனிதனின் உடம்பு மூன்றுக்கு மேற்பட்ட ஆவிகளைக்கூடத் தாங்கும். ஆனால் மிருகங்களால் அது முடியாத காரியம். பாவம்!" என்று பரிதாபத்தோடு நிறுத்தியவரிடம்,

எச்சினி, ஏவள், குரளி, எசக்கி உள்ளிட்ட தீய சக்திகளில் இலகுவாக கையாளக்கூடியது எது? என்று கேட்டோம்.

"ஏவள் ரொம்பவும் பயங்கரமானது. அது ஒரு ஏவுகணை மாதிரி யாருக்கும் சிக்காமல் தப்பிப் போய்விடும். ஆனால் ஈசியாக கையாளக்கூடியது எச்சினி. ஒரு தீய சக்தி என்றாலும் நாம் ஜாக்கிரதையாக இருந்தால் எச்சினியிடம் இருந்தும் தப்பலாம். இரவு நேரத்தில் எச்சினி வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருக்கும். அந்த நேரத்தில் சாப்பிட்டு தட்டைக் கழுவி கொல்லையிலேயோ, சமையலறை சிங்கிலேயோ ஊற்றிவிடக்கூடாது. அப்படித் தெரியாமல் ஊற்றினால் அதை ருசி பார்க்கும் எச்சினி வீட்டுக்குள் வந்து சோற்றுப்பானையில் உட்கார்ந்து கொள்ளும். எனவே இரவு நேரங்களில் நாம் சாப்பிட்ட தட்டை ஒரு பேசனில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு அடுத்தநாள் கழுவுவதே சிறந்தது" என்று எச்சினியிடமிருந்து தப்புவதற்கான ஒரு வழிமுறையையும் சத்தி விளக்கினார்.

பார்ப்பதற்கு ஒரு ஆச்சாரமான பிராமண குருக்கள் மாதிரி இருக்கிறீர்களே நீங்கள் சைவ மாந்திரிகரா, அசைவ மாந்திரிகரா?
என்று கேட்டோம்.

"அதாவது சிவன், விஷ்ணு, பார்வதி முருகன், பிள்ளையார் சைவ பூஜையை ஏற்கும் தெய்வங்கள். ஆனால் கண்ணப்ப நாயனார் பன்றி மாமிசத்தை சிவனுக்கு படைத்தார் அதை சிவனும் ஏற்றுக்கொண்டார் என்பது வேறு விசயம். மச்ச, மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குள் போகக்கூடாது என்பது ஐதீகம். ஆனால் மாட்டுத் தோலில் செய்த மேளத்தையும், கன்றுக் குட்டி தோலில் செய்த சித்து உடுக்கு, மந்தி தோலில் செய்த உருமியையும் சைவக் கோவிலின் உள்ளே வைத்து இசைக்கிறார்களே, இதில் என்ன நியாயம் இருக்கிறது? அப்போது இதில் சைவம் எது அசைவம் எது? நீங்களும் நானும் ஒரு விசயத்துக்காக சண்டை போட்டால் குற்றம். எங்க ரெண்டு பேரையும் பொலிஸ்காரன் அடிச்சா சட்டம்" என்று ஆவேசமாக கொந்தளித்தவர், 'இறைச்சி சாப்பிடமாட்டேன் ஆனா குழம்பு மட்டும் சாப்பிடுவேன்' என்கிற கதை மாதிரித்தானே இது இருக்கு? ஆட்டிறைச்சியையும், மாட்டிறைச்சியையும் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு வராதே என்று சொல்லும் கருத்து அர்த்தமற்றது. பஞ்ச குண்டம், நவ குண்டம், பிரதிஷ்ட்டா கும்பாபிஷேகம் என்று நடத்தப்படுகிற அனைத்து சைவ நிகழ்வுகளிலும் மிருக தோல் என்கிற மச்சம் உள்ளே வந்து விடுகிறதே! சரியான சைவம் என்றால் இறப்பரில் தோல் செய்துதான் மேளம் அடிக்க வேண்டும். அப்போ நீங்கள் செய்தா சரி நாங்கள் செய்தா பிழையா? இப்படி நியாயபூர்வமாக சிந்தித்து கேள்வி எழுப்பினால், மதத்தில் புதிய மாற்றங்களும் ஏற்படலாம். சைவம் என்பதே பொய். நாம் அணியும் செருப்பு, மணிபேர்ஸ் ஆகியவை மிருகத் தோலினால் செய்யப்படுபவை. பெண்கள் அணியும் பட்டுப்புடவை லட்சக்கணக்கான பட்டுப்புழுவை பலியாக்கி உருவாக்கப்படுபவை. இப்போது சொல்லுங்கள். சைவம் யார், அசைவம் யார்?" என்று கோபமாக முறைத்தவர், தொடர்ந்து ஆவேசமாகவே பேசினார்.

Sunday, September 4, 2016

'ஜோக்கர்' பார்த்தீர்களா?- ராஜா மாஸ்டர், கண்டி

மக்கள்தான் ஆட்சி செய்பவர்கள். அரசியல்வாதிகள் மக்களின் பிரதிநிதிகள். எனவே மக்களுக்கு உள்ள உரிமையை அரசியல்வாதிகள் கொடுக்க மறுத்தால் மக்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த  அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இதை ஒரு மன்னர், ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு பைத்தியக்காரன் என்ற தோரணையில் ஒரு ஜோக்கரைப் போல் சொன்னால் எப்படியிருக்கும்?

'நறுக்' வசனங்களை உண்டி வில்லில் வைத்து இழுத்துச் சுண்டும் போது 'சுருக்' என்று தைக்கிறது. ஆனால் ஒரு பைத்தியக்காரனின் கைகள் அதைச் செய்வதால் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
மனச்சாட்சிக்கு உருவமிட்டு வீதியில் உலா வரச் செய்யும் தெருக்கூத்து. இது சினிமாவைவிட பலம் வாய்ந்தது. இங்கு சொல்வதெல்லாம் சுடுகிறது. மூளையில் உறைக்கிறது. ஆனால் அத்துடன் அம்பேல் ஆகிவிடுகிறது.
காதலில் பின் தொடரும் படலம், துணையுடன் இணங்கும் சிணுங்கும் படலத்தின் சுகம் தெரிந்தோர் அறிவர். கிராமத்துப் பாடல் பின்னோட காட்சிகள் முன்னோட காதல் படலம் படத்தில் சிறப்பு.

நடிப்பில் மன்னர், அவர் மனைவி, பொன்னூஞ்சல் ஆகியோர் புதுமுகங்களா? பழகிய முகங்களா? இதுவரை எந்தப் பரணில் ஒளிந்திருந்தார்கள்?
இவ்வளவு ருசியாக சமைத்து விட்டு ஜோக்கர் என்று பெயர் வைத்தால் (வரிச்சலுகை கூட கிடையாது) பொருத்தமில்லை. மக்கள் மன்னன் அல்லது 'கோண மண்டை'  'குறுக்கு புத்தி' என்று வைத்திருந்தால் கூட பொருத்தமாக இருந்திருக்கும்.
நித்தமும் நிதமும் போராட்டம் என்பது மக்களுக்கு அன்றாடம் பழகிப் போன ஒன்று. நிறையப் போராட்டங்களைத் திணித்து ஒன்றுக்குக் கூட தீர்வு வழியோ யோசனையோ சொல்லாமல் விட்டது கறியின்றி சோறு சாப்பிட்டதைப் போல் உள்ளது. வயிறு நிரம்பியது. வாய்க்கு ருசி? இரண்டாம் பாகத்தில் வருமா?

இலங்கையில் தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் எதுவும் திரையிடப்படுவதாகத் தெரியவில்லையே?
- ராஜன், கண்டி

ஏன் இல்லை, 'வட்டி இலக்கம் 303' என்ற திரைப்படம் அடுத்த ஓரிரு மாதங்களில் திரைக்கு வரவுள்ளதே. (தீபாவளிக்கு வந்தால் முதலும் மிஞ்சாது என்பதால் தீபாவளிக்கு முன்னர் அல்லது பின்னர் வரலாம்).
'ஒரே நாளில்', 'கீறல்கள்' ஆகிய இரு படங்களையும் தயாரித்து இயக்கிய ஏ.ஆர்.எம்.ரஸீமின் மூன்றாவது படம்தான் 'வட்டி இலக்கம் 303' (தொடர்ந்து படங்களைத் தயாரித்தால்தான் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறாரோ).
'வட்டி இலக்கம் 303' படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீடு அண்மையில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் 'தரங்கனி' திரையரங்கில் இடம்பெற்றது (பேஸ்புக் மற்றும் யுடியூப் பதிவேற்றங்களும் அன்றே இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்).

படத்தின் கதாநாயகன், கதாநாயகி இசையமைப்பாளர், பாடகர்கள் மற்றும் அவரது உதவியாளர்களை மேடைக்கு வரவழைத்து அறிமுகம் செய்தார் இயக்குனர் ரஸீம். (இது இலங்கைக்கு புதுசு)
படத்தில் உள்ள 'நெஞ்சினிலே' என்ற பாடலை நேரில் பாடியும், திரையில் காட்சியாகவும் காட்டினார்கள் (வித்தியாசமான முயற்சி).
கதாநாயகன், கதாநாயகி திரையில் தோன்றியதைவிட நேரில் அழகாகத் தெரிகிறார்கள் (கூடியிருந்தவர்கள் சொன்னது)
'ஒரே நாளில்', 'கீறல்கள்' ஆகிய இரு படங்களிலும் அப்பா வேடத்தில் தோன்றிய தயாரிப்பாளர் ரஸீம் இந்தப் படத்தில் கந்து வட்டி கறக்கும் வில்லனாக வருகிறார். (அவரது உருவத்துக்கும் தோற்றத்துக்கும் இந்த வேடம் கச்சிதமாகப் பொருந்துகிறது)
இலங்கையில் தமிழ் சினிமா என்று பெயர் பொறித்த டீ சேர்ட்களுடன் இளைஞர் அணியொன்று சுறுசுறுப்பாக இயங்கியதை காண முடிந்தது. படத்தின் விளம்பர செயற்பாடுகளில் இவர்கள் இறங்கியுள்ளதாகக் கூறப்பட்டது. (மற்றவர்களின் தயாரிப்புகளிலும் இவர்கள் உதவ முடிந்தால் 'இலங்கை தமிழ் சினிமா' பயன்பெறும்).


தமிழ்நாட்டில் அம்மா ஆட்சி அமைந்திருப்பதால் சினிமாவுக்கு நல்லது நடக்கும் என்கிறார்களே?
- ஆர். புஷ்பநாதன், நீர்கொழும்பு

சினிமா பார்ப்பதற்கு அம்மா தியேட்டர்கள் வரப்போகின்றனவே அது நல்லதுதானே!
முதலில் வந்தது அம்மா உணவகம். அது வெற்றியளித்ததும் அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சீமெந்து என்று திட்டங்கள் வரிசை கட்டின. தேர்தல் வாக்குறுதியில் அம்மா சினிமா வரும் என்று சொல்லப்பட்டது. சொன்னது போலவே அம்மா தியேட்டர்கள் வரவுள்ளன. ஏற்கனவே சென்னையில் இருந்த மாநகர சபையின் இரு அரங்குகள் தியேட்டர்களாக மாறவுள்ளன. ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசனங்களுடன் குளிர்சாதன வசதியுடன் இவை அமையும். நான்கு ஏக்கர் அரச காணியில் மேலும் சில அரங்குகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடித்தட்டு மக்களின் வசதிக்காக கட்டப்படும் இந்த தியேட்டர்களில் படம் பார்க்க ஆகக்குறைந்தது 10 ரூபா என்றும் அதிகபட்சம் 30 ரூபா என்றும் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாம்.
மாவட்டத்துக்கு 10 என்ற வகையில் தியேட்டர்களை ஆரம்பித்தால் மொத்தம் 400 தியேட்டர்கள் வரும். திரையிடுவதற்கு தியேட்டர் இல்லாமல் பிரச்சினைகளை எதிர்நோக்கும் சிறிய பட்ஜட் படங்களை இங்கு திரையிட்டால் அரசுக்கு லாபம். அடித்தட்டு மக்களுக்கு மகிழ்ச்சி. சிறிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நிம்மதி.

இப்போது வரும் பாடல்களில் ரீங்காரம் இல்லையே?
- ரவீந்திரன், சிலாபம்

ரீங்காரத்தை இப்போது யார் கேட்பார்கள்? எதுகை மோனை யில் சில வார்த்தைகள் இருந்தால் போதும். மெட்டு இருந்தாலும் ஒன்றுதான்.
இல்லாவிட்டாலும்…. அதனால்தான் எல்லாப் பாடல்களும் ஒரே மெட்டில் இருப்பதைப் போல் உணர்கிறீர்கள்.
அன்றைய பாடல்கள் நினைவில் இனித்தன
இன்றைய பாடல்கள் கேட்டதும் மறந்தன!

முத்துக்குமார் மறைந்து விட்டாரே?
- பரசுராம், கொழும்பு

உடல் மறைந்தாலும்
உணர்வுகள் பாடல்களாக
கேட்கும் போதெல்லாம்
சிலிர்க்க வைக்கிறதே!

Saturday, September 3, 2016

கவிஞர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

இதை எழுதுபவர் நெல்லை பாரதி. சென்னையில் இருந்து வெளிவரும் வண்ணத்திரை சினமா வார இதழின் தலைமை நிருபராகக் கடமையாற்றிவரும் இவர் தமிழ் சினமா வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர். கவிஞரின் திடீர் மரணத்தால் அதிர்ந்துபோன நெல்லை பாரதி வானவில்லுக்காக எழுதிய உண்மை வரிகள் இவை. இப்படி எழுதவே ஒரு நெஞ்சுரம் வேண்டும். 

நெல்லை பாரதி

வனுடன் குறைந்தபட்சம் 100 முறையாவது 180 மில்லி அடித்திருப்பேன். ஐம்பது முறையாவது ஆயிரங்களை வாங்கியிருப்பேன். அவ்வப்போது எனக்கு துன்பம் நேர்கையில் பண யாழ் எடுத்து மீட்டியவன். அழைப்பு வந்தாலே அவசர உதவி கேட்கவே என்பதை தெளிவாகத் தெரிந்திருந்தும், ஒருபோதும் தட்டிக் கழித்ததில்லை.

"முத்து! வணக்கம்!"

"ஆயிரம் ரூபாய் வேணும்"

"தலைவா! மலேசியாவுல இருக்கேன். தம்பிக்கிட்ட சொல்றேன். வாங்கிக்குங்க"

அடுத்த சில நிமிடங்களில் தம்பி ரமேஷ் குமார் தொடர்பில் வருவான்.

"அண்ணே! அண்ணன் சொன்னான், நீ எங்க இருக்க?"

"வீட்ல இருக்கேன் தம்பி"

"கால்மணி நேரத்துல வர்றேன்" வருவான்; தருவான். விடைபெறும்போது "நெறய்யா குடிக்காத" என்று அக்கறைச் செருப்பால் அடித்துவிட்டுப் போவான்.

"முத்து! எங்க இருக்கீங்க?"

"அலுவலகத்துல தலைவா!" எனக்கு 'ஜி' பிடிக்காதென தெரிந்ததால் 'தலைவா" என்றே விளிப்பான்.

"வரட்டுமா?"

"வாங்க!"

போவேன். முழுக்க வெள்ளை நிறத்தில் இருக்கும், ஈர்க்குச்சியைவிட சற்றே கனத்த சிகரெட்டை நீட்டுவான். அதை இழுத்துக்கொண்டே, இழுத்து நீட்டாமல், "வீட்டுச்செலவுக்கு ஆயிரம் ரூவா வேணும் முத்து" என்பேன். பேசிக்கொண்டே மேஜை டிராயரை இழுப்பான், கொடுப்பான்.
"யோவ்! ஆயிரம்தான கேட்டேன். ஐநூறு எக்ஸ்ட்ரா இருக்கு"
"ஒன்ன தெரியாதா தலைவா! போர வழில கடைக்குப் போவ. எரநூறு காலியாகும். வீட்டுக்கு முழுசா போகாது. அண்ணிகிட்ட ஆயிரம் குடுத்துரு. நீ ஐநூறு வச்சுக்கோ" என்பான். இதயம் தன்னைத்தானே பிசைந்துகொண்டு, அதன் சாற்றை கண்ணீர்க்கோடாக கன்னத்தில் ஓடவிடும்.
"அய்யய்ய என்ன இது அழுதுக்கிட்டு? நீயெல்லாம் தொடர்ந்து பாட்டெழுதுனா ஆயிரம் பேருக்கு ஒதவி செய்வ. எழுது தலைவா!" என்று தோள் தட்டுவான்.

நண்பன் லிங்குசாமியின் தயாரிப்பில் நதியா நடித்த 'பட்டாளம்' படத்தில் எனது முதல் திரைப்பாடல் வந்தது. சத்யம் திரையரங்கில் இசை வெளியீடு. நா.முத்துக்குமார்தான் தொகுப்பாளர். "மாணவர்களின் மனநிலை குறித்த பாடலில், 'தலையெழுத்தை ரப்பர் வச்சு அழிப்பாங்க, தாகம் வந்தா மேகத்தையே குடிப்பாங்க" என்று வரிந்து கட்டியுள்ள நண்பர் நெல்லைபாரதி தொடர்ந்து எழுதவேண்டும்" எனப் பாசத்தோடு பேசினான்.

முக்கிய குறிப்பு: நெருக்கமானவர்களின் மரணத்தை சகித்துக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. ஆகவே, சீக்கிரம் செத்துப் போகலாம்னு தோணுது.

Friday, September 2, 2016

கண்ணகி ஆய்வாளர் யாணனுடன் ஒரு சந்திப்பு

நேர்காணல் : மணி  ஸ்ரீகாந்தன்

'கண்ணகி வழிபாடு ஒரு மதமாகக் கூட வளர்ச்சி பெற்றிருக்கும். ஆனால் ஒரு சாதாரண குடும்பப் பெண் அதுவும் ஒரு சமணப் பெண் தெய்வ நிலை அடைவதா என்ற காழ்ப்புணர்வில் வேண்டுமென்றே தடுத்தனர் அரசர்களிடம் ஆதிக்கம் செலுத்தியோர்'

'கேரளத்தில் பரவி நின்ற கண்ணகி வழிபாட்டை பின்னர் வந்த ஆதிசங்கரர் அதை பகவதி வழிபாடாக மாற்றி அமைத்தார்'

'ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியினர் பிரித்து வைக்கப்படுவதற்கான உண்மைக் காரணம், அது கண்ணகி கணவனை இழந்த மாதம் என்பதால்தான் எனக் கருதுகிறேன்'

'மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நான்கு கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் கோவலன் பொட்டல் என்ற இடத்திலேயே கோவலன் தலை துண்டிக்கப்பட்டது'
மிழகத்தில் அருகிவிட்ட கண்ணகி அம்மன் வழிபாடு இலங்கையில்தான் அதிகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இவ்வழிபாட்டில் தமிழர்களைவிட சிங்களவர்களே அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிங்களவர்களின் முக்கியமான காவல் தெய்வமாக கண்ணகி (பத்தினி தெய்யோ) விளங்குகிறாள். பில்லி, சூன்யம், செய்வினை போன்றவற்றை பத்தினியின் உதவியுடனேயே செய்வதால் சிங்கள மாந்திரிகர்களின் குலதெய்வமாக கண்ணகி வீற்றிருக்கிறாள். தமிழகத்திலிருந்து கண்ணகி அம்மன் வழிபாடு எப்படி பெரும்பான்மை சமூகத்தில் ஊடுருவியது? கண்ணகி யார்? என்ற கேள்விகளோடு தமிழகத்தில் ஒரு தேடுதலில் இறங்கியபோது எமது கண்ணில் பட்டவர்தான் எழுத்தாளர் யாணன். பிளக் ஹோல்
(Black Hole) பதிப்பகத்தை நடத்தி வரும் இவரின் ஏராளமான படைப்புகள் நூலுருவில் வெளியாகி இருக்கின்றன. அதில் பாவ புண்ணிய கணக்குகள் என்னும் நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூலாகும். அதோடு கண்ணகி அம்மன் பற்றிய ஆராச்சி நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கும் இவர் தமிழகத்தில் அருகிப்போய் விட்ட கண்ணகி அம்மன் வழிபாட்டை மீட்டெடுத்து அதைப் பொதுமக்களிடம் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். யாணனின் இந்த களப்பணிக்கு அவரின் துணைவியார் கௌரியும் பக்கபலமாக இருக்கிறார். தங்கள் இல்லத்திலேயே கண்ணகி அம்மனுக்கு உருவச்சிலை அமைத்து வழிபாடு செய்து வரும் யாணனை ஒரு இனிய மாலை வேளையில் சந்தித்து கண்ணகி அம்மன் பற்றி உரையாடினோம்.

கண்ணகி வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தவர் கஜபா என்ற சிங்கள மன்னன் என்று சொல்லப்படுகிறது.. பத்தினி என்ற பெயரில் கண்ணகி வழிபாடு சிங்கள பௌத்தர்களிடம் காணப்படுகிறது. இதுபற்றி ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

இது குறித்து சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தில் குறிப்பிடப்படுகிறது. இன்றைய கேரள மாநிலம் குமுளிக்கு மேலே அமைந்துள்ளது, மங்கலதேவி கோட்டம். இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால எழுப்பப்பட்டது. இமயம் சென்று திரும்ப ஐந்தரை ஆண்டுகள் பயணம் மேற்கொண்ட சேரன் செங்குட்டுவன் வடபுலத்து அரசர்களான கனக, விசயன் ஆகியோரை வெற்றி கொண்டு இமயமலையில் கல்லெடுத்து அதைக் கங்கையில் நீராட்டித் சிற்றரசர்களின் தலைச்சுமையாக இங்குக் கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகி சிலை வடித்துள்ளான்.  அச்சிலையை, குன்றக் குறவர்கள் சாட்சியாக கண்ணகி விண்ணுலகம் சென்ற அம்மலையின் மீது எழுப்பபட்ட ஆலயத்தில் நிறுவி குடமுழுக்கு செய்துள்ளான். அந்நிகழ்வில் பல அரசர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இருந்து கஜபாகு எனும் மன்னனும் விருந்தினராக கலந்துகொண்டுள்ளான். அன்றைய இரவு விண்ணில் விஸ்வரூப தரிசனம் தந்தாள் கண்ணகி. அதைக் கண்ட சேரன் சிலிர்ப்புற்றான். அருகில் இருந்த கஜபாகு தரிசனத்தைத் தன்னால் காண இயலவில்லையே என ஏங்கி கற்பகிரத்தினுள் சென்று 'தாயே, அடியேன் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன். நான் உனக்கு இலங்கையிலும் ஆலயம் எழுப்பி வழிபட விரும்புகிறேன். உத்தரவு வேண்டும்’ என கேட்க  சிலையில் இருந்து அசரீரியாக சம்மத வாக்கு கிடைத்திருக்கிறது. பெரிதும் மகிழ்வுற்ற மன்னனிடம், சேரன் சந்தனப்பேழையில் வைத்து சிலம்புகள் வழங்கியதாக குறிப்புகள் உள்ளன. இராஜவளி என்ற சிங்கள நூலிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் ‘அங்கணக்கடவை’ எனும் இடமாம். சிங்களநாட்டில் ‘பத்தினி தெய்யோ’ என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும்.  கண்ணகியை ஒரு குறிப்பிட்ட  மொழி இனத்துக்கான தெய்வமாக  ஏன் சுருக்க வேண்டும்? சிங்களவர் கண்னகியை வழிபடுவது, வரவேற்கதக்கது. தமிழர் சிங்களவர் ஒற்றுமைக்கு ஓரு காரணியாக இது அமைந்திருக்கிறது.

இலங்கை வரை வந்த கண்ணகி வழிபாடு இந்தியா முழுமைக்கும் பரவவில்லையே?

அக்கால அடித்தட்டு மக்கள் அபலைகள். சமூக பலம், பொருள் பலம் இல்லாத சாமானியர்கள். அவர்களே கண்ணகியைத் தங்களில் ஒருத்தியாகப் பார்த்தனர். கணவனோடு பிழைப்பு தேடி இடம்பெயர்ந்த இடத்தில் துயரம் நேர்ந்தபோது ஆவேசம் கொண்ட அவளுக்கு இயற்கை கைகட்டி மண்டியிட்டது! அந்தக் காட்சி சாமானிய ஏழைகளின் வாழ்வில் நம்பிக்கைகொள்ள வைத்தது. நமக்குக் கண்ணகி துணை நிற்பாள் என  நெஞ்சுரத்தோடு நடந்தனர். கண்ணகியைப் போல் கறைபடாது வாழ்ந்தவர்கள் வாக்கு பலித்தது. தாங்கள் வயிறு எரிந்து  வழங்கும் சாபமும் வஞ்சகர்களைக் கேட்கும் என நம்பினர். அப்படியே நடக்கவும் செய்தது. எதிர்த்து பேச முடியாத அநியாயக்காரர்களை எண்ணி மண் வாரி இறைத்தனர். ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும் என்பதைக் கையில் உண்மையான வாளோடு திரிந்தவர்கள் உணர்ந்து அடங்கினர். ஏழைகளுக்கு, அபலைகளுக்குக் கண்ணகி துணையானாள். அவளை நினைத்து நெற்றியில் மஞ்சள் பூசினர். தலையில் வேப்பிலை சூடினர். கண்ணகி துயரம் கொண்ட ஆடிமாதம் விரத மாதம் ஆனது.  கண்ணகி வழிபாடு தமிழர்களிடம் அசுர வளர்ச்சிபெற்றது.
ஆறுமுக நாவலர்
இந்தியாவில் தோன்றிய பௌத்தம், ஆசிய நாடுகளில் பரவியதுபோல, இஸ்ரேலில் தோன்றிய இயேசுவின் போதனைகள், பின்னர் வழிபாடாக உலகளவில் பரவியது போல, கண்ணகியும் உலகம் முழுதும் பரவி நின்றிருக்க வேண்டியவள். கண்ணகி வழிபாடு தனி ஒரு மதமாக கூட உலகம் தழுவியிருந்திருக்கும். அதை உணர்ந்தே தடுத்தனர் அரசர்களைக் கையில் வைத்திருந்தவர்கள். அவள் சமணப் பெண் என்று சமூகத்தில் தாழ்த்தினர். சிறுதெய்வ வழிபாடு என்றனர். பலி கேட்கும் தெய்வம் எனப் பழித்தனர். இதெல்லாம் எதனால்? ஒரு சாதாரண குடும்பப்பெண்ணாக இருந்தவள், ‘தவறு என்றால் அரசனாக இருந்தாலும் தட்டிக்கேள்’ எனும் நெஞ்சுரத்தை சமூகத்திற்கு விதைத்துள்ளாளே! எளியோர் அவளை வழிபடுவதின் வாயிலாக, அவள் வரலாறு திரும்ப திரும்ப நினைவுகூரப்படுவதன் வாயிலாக, அவளை அடியொற்றி ஒரு பாதை விழுந்தால், ஒரு பக்தப்படை எழுந்தால் என்னவாகும்? என்பதே, பின்னர் வந்த அரசர்களுக்கு, எடுத்துச்சொல்லப்பட்ட யோசனையாக, எச்சரிக்கையாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த சைவ நெறிப் பற்றாளர் ஆறுமுகநாவலர்  மிகக் கடுமையாகக் கண்ணகி வழிபாட்டை எதிர்த்துள்ளார். கண்ணகி ஒரு தமிழச்சி. முதல் புரட்சிப்பெண். தமிழர்களின் அடையாளம் எனப் பலவாறு புகழ வாய்ப்பிருந்தும், அவளை மிகச் சாதாரணமாக 'சமண மதத்து செட்டிச்சி’ எனக் குறிப்பிட்டார் ஆறுமுக நாவலர். "அவளை ஏன் வழிபடுகிறீர்கள்?" எனக் கொச்சையாகக் கேட்டு, தன் அசுரச் செல்வாக்கால் ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்துள்ளார். எனினும் இலங்கையில் இன்றும் செல்வாக்கோடு இருக்கிறாள் கண்ணகி என்பது ஓர் ஆறுதல்.
கோவலன் பொட்டல்,
கோவலன் தலை வெட்டப்பட்ட கல்