Sunday, August 7, 2016

ரஜினி என்ற BRAND ஐ வெற்றிகரமாக விற்றது எப்படி?


மிழகத் தேர்தலின் பின்னர் தமிழுலகக் கவனத்தை மொத்தமாக ஈர்த்த ஒரு நிகழ்வு என்றால், நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ, அது கபாலி திரைப்பட வெளியீடாகத்தான் இருக்க முடியும். ரஜினி நடித்து வெளிவரும் இன்னொரு தமிழ்ச் சினமா என்பதைத் தவிர கபாலிக்கு மேலோட்டமாகப் பார்த்தால், வேறெந்த முக்கியத்துவமும் கிடையாதுதான். அப்படிக் கொண்டாடி மகிழ்வதற்கு இதுவொன்றும் கருத்துச் செறிவும், சமூகப் பார்வையும், ஆழமான கதையமைப்பும் கொண்ட ஒரு படமும் அல்ல. ஏற்கனவே பல நாயகர்கள் கையில் எடுத்த அதரப் பழசு கதை. ரஜினி ஏற்கனவே பழம் தின்று கொட்டை போட்ட சப்ஜெக்ட், அதையே,

வயதான, பலவீனமான, நோயுற்ற உடலைக் கொண்ட ரஜினிக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து கதை பண்ணியிருக்கிறார்கள். என்ன ஒரு விசேஷமென்றால், ரஜினி படம் என்றால், பீட்ஸாவுக்கு எப்படி சீசும், சோசும், மாமிசமும், கோலாக்களும் அணி சேர வேண்டுமோ அப்படியே ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர்,ரவிக்குமார், வைரமுத்து, சந்தோஷ் சிவன், வடநாட்டு உச்ச நட்சத்திரங்கள் என ஒரு 'ஹைகிளாஸ்' ஊறுகாய்கள் ஒன்றிணைந்து முட்டுக் கொடுப்பது வழமை. ஆனால் அடுத்தடுத்து பொக்ஸ் ஒஃபிசில் தோல்வி கண்ட இரு படங்களைக் கொடுத்து கூடவே கையையும் சுட்டுக் கொண்ட ரஜினிக்கு ஒரு 'புளொக் பஸ்ட'ரை கொடுக்க வேண்டிய கட்டாயம். ரஜினியின் தனிப்பட்ட இயல்புகளை வைத்துப் பார்க்கும்போது மிகுதி காலத்தை அவர் ஓய்வாக செலவிடத் தயாராக இருக்கலாம். ஆனால் அவரது குடும்பத்துக்கு அவர் நடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கோடம்பாக்கத்துக்கும்தான்!

அப்புறம் தமிழகத் திரைத்துறையை எடுத்துக் கொண்டாலும், எத்தனை சதைப்பிடிப்பான காக்கா முட்டைகளும், அம்மா கணக்குகளும் வெளிவந்தாலும், பெரும் பணம் புரளும், பெருமளவு கறுப்பை வெள்ளையாக மாற்றக் கூடிய ஒரு கனவுத் தொழிற்சாலைக்கு பெருமளவு கோடிகளை அள்ளித்தரக்கூடிய பெருந்திரைப்படங்களின் தேவை உள்ளது.
ஒரு படம், இன்றைய மார்க்கட்டிங் உலகில், விற்கக் கூடிய படமாகவும் விற்பனைக்கு உகந்த படமாகவும் இருக்கின்றதா என்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது. தமிழர்களுக்கு திரைப்படம் என்றால் அதீத விருப்பு. அது ஒரு மதத்தைப் போல. பிடித்த நடிகர் கடவுள் போல. ரசிகர்கள் காவடி எடுத்து வழிபடும் பக்தர்கள் போல. இப்படி ஒரு பித்துப் பிடித்த நிலையை இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாது. இலங்கையிலும் அப்படித்தான். உயரமான கட் அவுட் வைத்து, பால் வார்த்து ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து கொண்டாடுகிறார்கள். கோவில் வழிபாட்டைப் போலவே சூடம் ஏற்றி, வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள். டிக்கர் கிடைக்கவில்லை என்ற கவலையில் மலேசியாவில் ஒரு ரஜினி ரசிகர் தற்கொலையே செய்து கொண்டார். இதெல்லாம் வேறிடங்களில் நடப்பதில்லை. சிங்களப்படம் பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதற்காக எந்த சிங்கள இளைஞரும் உயிரை மாய்த்துக் கொண்டதில்லை. இந்த விசித்திரமான தமிழ் மனதை, அதன் கட்டமைப்பை, தனியொரு கட்டுரையில்தான் பார்க்க வேண்டும்.

கபாலியை எடுத்துக் கொண்டால் அது இன்னொரு சிவாஜியோ, அண்ணாமலையோ அல்லது பாட்ஷாவோ அல்ல. இத்தகைய ONE MAN ARMY ரக படங்களை இனி ரஜினியை வைத்து எடுக்கவும் முடியாது. ரஜினி இத்தகைய பரபரப்பு, விறுவிறுப்பு படங்களைத் தவிர்த்து குசேலன் போன்ற படங்களில் தன்னை மையப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். வட நாட்டு சுப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சான் தன் 'ஷோலே' இமேஜை கழற்றிப் போட்டு நெடு நாட்களாகின்றன. அவர் 'பிக்கு' என்ற படத்தில் படு கிழவராகத் தோன்றினார். எப்போதும் தன் 'கக்கூஸ் வாழ்க்கை' பற்றி பேசுபவராக அதில் வருகிறார். இதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ரஜினியும் இத்தகைய பாத்திரங்களில் நடிக்கத் கூடிய நல்ல நடிகராகத் தன்னைக் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார். ஆனால் அவரது ரசிகர்களோ அவரை இன்றைக்கும் மானிக் பாட்ஷாவாகவே பார்க்க விரும்புவதுதான் ரஜினி எதிர்கொண்டிருக்கும் சிக்கல்!

கபாலி ஒரு கேங்ஸ்டர் படம். கோட்பாதரின் சாயல்களை அதில் பார்க்க முடிகிறது. ஆனால் இதை இயக்க ரஜினிக்கு ஒரு ரஞ்சித் தேவைப்பட்டிருக்கிறார். இன்றைய டிரெண்டுக்கு ரஞ்சித்தான் சரிப்பட்டு வருவார் என்ற அவரது நம்பிக்கையை ரஞ்சித்தும் காப்பாற்றித் தந்திருக்கிறார். படத்தில் ரஜினி இருந்தாலும் ரஞ்சித் தன் பட்டாளங்களுக்கே வாய்ப்பு அளித்திருக்கிறார். தன் பகுத்தறிவு சிந்தனைகளுக்கு ரஜினி படத்தில் களம் அமைத்து வைத்ததை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. அருள் வந்த பூசாரி கத்திமேல் ஏறி நின்று அருள்வாக்கு சொல்ல முயல்கையில் அவர் சுட்டு வீழ்த்தப்படுகிறார், அடுத்ததாக பூசாரி ஏறி நின்ற கத்தியை எடுத்து எதிரிகளைப் பந்தாடுவார் ரஜினி. சன்மார்க்கக்காரர்களை இக்காட்சி தூக்கிப் போட்டிருக்கும்! இந்துத்வா ரஜனி இப்படி ஒரு காட்சியில் நடித்திருக்கலாமா என்ற கொதிப்புக்கு ரஜினி பதில் சொல்ல வேண்டியிருக்கும்!

கபாலி பெற்றிருக்கும் வெற்றியைப் பார்த்தால், பாகுபலியைத் தாண்டிய வசூல் கிடைத்திருப்பதோடு உலக அதிக வசூல் பட்டியலிலும் இது இடம் பிடிக்கும் என்கிறார்கள். எனினும் படத்தைப் பார்க்கும்போது இத்தகைய பெரு வெற்றிக்கு தகுதியான படம்தானா இது? என்ற கேள்வி எழவே செய்கிறது. தமிழ்ப்பட வெற்றி சம்பிரதாயங்களின்படி பார்த்தால் இது வெற்றிப்படமாக அமைய வாய்ப்பில்லைதான். ஆனால் அந்த இமாலய வசூல் வெற்றி, ஆறு நாட்களில் கிடைத்தது எப்படி என்று பார்த்தால்தான் அந்த சூட்சுமம் புரியும்.

இந்தப் படம் பொக்ஸ் ஒஃபிசில் ஊற்றிக் கொண்டுவிட்டால் அதன் எதிர் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட கலைப்புலி தாணு, தன் வியாபார, விளம்பர உத்திகளை கட்டவிழ்த்து விட்டார். உதாரணத்துக்கு எயார் ஏசியா விமானத்தில் கபாலி படம் விளம்பரமாக வரையப்பட்டதைச் சொல்லலாம். அதை இணையத்தளத்திலும் வெளியிட, மளமளவென 'கபாலி மேனியா' பற்றிக் கொண்டது. பம்பரத்தை வெற்றிகரமாக சூழல விட வேண்டும். சூழலத் தொடங்கியதும் அது பாட்டுக்கு சுழன்று கொண்டே இருக்கும். எப்படியோ தாணுவின் மார்க்கெட்டிங் ஏஜண்டுகள் கபாலி மாயையை சடுதியாக உருவாக்கி பற்றிக்கொள்ள வைத்துவிட்டார்கள். இப்படி ஒரு விளம்பர அல்லது மார்க்கட்டிங் தந்திரங்கள் இதற்கு முன் இந்தியாவில் பிரயோகிக்கப்படவே இல்லை! ஏற்கனவே கையில் இருந்த ரஜினி மாயையை ஊதிப் பெருப்பித்து உலவவிட்டதில், படம் வெற்றி பெறுவது நிச்சயம் என்பது 20ம் திகதியே நிச்சயமாகிவிட்டது.

எல்லாக் காலங்களிலும் விற்கக் கூடிய பிராண்டுகள் சில உள்ளன. யாரும் தவறாகக் கருதாவிட்டால், அப்படி சந்தைப்படுத்தக்கூடிய ஒரு பொருள்தான் கடவுள். மார்க்கட்டிங் உலகில் அனைத்துமே, 'புரடக்ட்ஸ்', பண்டங்களாகவே பார்க்கப்படுகின்றன. இந்தியனும் தமிழனும் வாழக்கூடிய எல்லா இடங்களிலும் விற்கக் கூடிய ஒரு பிராண்ட்தான் ரஜினி. ரஜினி என்ற பிராண்டை வைத்து கபாலி என்ற விற்பனைப் பொருளைத் தயாரித்து கோடிகளை இலாபமாகப் பார்த்து விட்டார்கள்.

ஒரு பொருளை வெற்றிகரமாக சந்தைப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள விரும்பும் சந்தை முகவர்கள் முதல் மாணவர் வரை இந்த கபாலி மார்க்கட்டிங் எப்படி சாத்தியமானது என்பதைத் தேடிப் புரிந்து கொள்வது உபயோகமானது.

இப்போது விற்பனை சூத்திரம் பிடிபட்டுவிட்டது. இனி ரஜினி என்ற HOT BRAND ஐ ஓய்வெடுக்க இவர்கள் விடப் போவதில்லை!

அருள்-
நன்றி- வண்ண வானவில்

No comments:

Post a Comment