Friday, August 5, 2016

BMICH மாதிரி ஒரு கட்டடம் சென்னைக்கு அவசியம்


மணி  ஸ்ரீகாந்தன்

தீவுத்திடல் புத்தகக் கண்காட்சி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் பெரும்பாலான இலக்கிய, படைப்புலக பிரமுகர்கள் கண்காட்சியை பார்வையிடத் தவறவில்லை. கூட்டமும் ஓரளவுக்கு இருந்தது. ஆனால் இந்த சனத்தொகைக்கு ஏற்ப வசதிகள் செய்து வைக்கப்படவில்லை. மைதானத்தில் உணவகங்கள், தேனீர் கடைகள் இருந்த எண்ணிக்கைக்கு குறைவாகவே கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்கள் கழிப்பிடங்கள் பக்கம் எட்டிப்பார்த்த போது பிளாஸ்டிக் தற்காலிக மலசல கூடங்கள் மொத்தமே ஐந்துதான்! பல கோடி வருமானத்தை எதிர்பார்த்து ஏற்பாடு செய்யப்படும் கண்காட்சிக்கு இந்த எண்ணிக்கை போதும் என்று முடிவு செய்த புண்ணியவான் யாரோ! பெரிய தொட்டிகளில் நிரம்பியிருக்கும் தண்ணீரை வாளியில் அள்ளிக் கொண்டுதான் கழிப்பிடத்துக்கு செல்ல வேண்டும் என்பது பெரிய குறை.
தற்காலிக கழிப்பறைகள்
தற்காலிக பிளாஸ்டிக் கழிப்பறைகளில் குழாய்களைப் பொருத்தி தண்ணீர் வசதியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். சுகாதார விஷயத்தில் இவ்வளவு அசமந்தமா? அதோடு விழா பந்தலின் கூரை ஒழுங்காக பொறுத்தப்படாத காரணத்தினால் விழா காலத்தில் இரண்டு நாட்கள் கொட்டித்தீர்த்த அடை மழையில் கவிஞர் வைரமுத்துவின் அரங்கும், நியூ செஞ்சுரி பதிப்பகத்தின் அரங்கும் நீரில் நனைந்து புத்தகங்கள் சேதமடைந்துவிட்டதாக பின்னர் கேள்விப்பட்டோம். தமிழகம் என்னதான் முன்னேற்ற பாதையில் பயணித்தாலும் இன்னும் நிறைய விடங்களை சீர்செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக புத்தகக் கண்காட்சி போன்ற மாநாட்டு விழாக்களை நடத்துவதற்கு பெரிய அரங்குகள் அங்கே இல்லை. விழாக்கள் என்றதும் தற்காலிக பந்தல்களைத்தான் போடுகிறார்கள். ஆனால் இலங்கையில் இப்படியான விழாக்களை நடத்துவதற்கு பிரமாண்டமான  BMICH எனப்படும் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டப தொகுதி உள்ளது. இங்கே சகல வசதிகளும் உள்ளன. ஆயிரம் அரங்குகள் என்றாலும் அதில் அமைக்கலாம். இவ்வாறான ஒரு சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அமைப்பது பற்றி ஏனோ தமிழகம் இன்னும் யோசிக்காமல் உள்ளது. இவ்வாறான மண்டபத்துக்கான தேவை அங்கே நிறையவே உள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம்
ஆனாலும் அதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. கலைஞர் ஓமந்தூரில் அமைத்த புதிய சட்டமன்ற கட்டடத்தை அம்மா புறக்கணித்து அதை மருத்துவமனையாக மாற்றியது போல, இப்போது அம்மாவின் ஆட்சியில் பிரமாண்ட விழா அரங்கு அமைத்து அதை அடுத்து வரப்போகும் அரசு மீன் சந்தையாக மாற்றிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!

புத்தகக் கண்காட்சி பற்றி வாசகர்களை என்ன சொல்கிறார்கள் என்று சிலரிடம் கேட்டுப் பார்த்தபோது,

"இப்போது நான் 38 வருசமா புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். முதலாவது கண்காட்சி ராஜாஜி ஹோலில் 10 பதிப்பக அரங்குகளோடு நடைபெற்றது. அப்போது மூவேந்தர் முத்து என்கிற கவிஞர் என்னை அழைத்ததனால் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவருகிறேன். பத்து நாள் புத்தகக் கண்காட்சி நடந்தாலும் பத்து நாளும் அங்கேதான் இருப்பேன். கண்காட்சிக்கு தேர்வு செய்யப்படும் இடங்கள் தற்காலிக இடங்கள் என்பதால் இதுவரை ஐந்து இடங்களில் கண்காட்சி மாறி மாறி நடந்திருக்கிறது.
லேனா தமிழ்வாணன்,காஞ்சிபுரம் தங்கராஜ்,தேவதர்ஷினி
தீவுத் திடலில் இதுதான் முதல்முறை. இந்தமுறை நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நேர்த்தியாக இருந்தது என்று சொல்வதற்கு இல்லை. சிங்கப்பூரிலும், இலங்கையிலும் புத்தகக் கண்காட்சிகள் நேர்த்தியான அரங்குகளில் மிகவும் சிறப்பாக நடைபெறும். எதிர்காலத்தில் நாமும் நிரந்தர அரங்கில் அப்படி செய்தால் சிறப்பாக இருக்கும்" என்று சொல்லும் காஞ்சிபுரம் தங்கராஜ். தமிழர்களின் வாசிப்பு பற்றிக் கூறும்போது, "25 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் வாசிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு கீழ் உள்ளவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் இணையத்திலும், போனிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். புத்தக கொள்வனவு பற்றி சொல்வதனால் நம்மவர்கள் இந்திய பணத்தில் 10 ஆயிரம் ரூபாவுக்குக் கூட புத்தகங்களை வாங்குவதைப் பார்த்தேன். அதே நேரத்தில் நாம் உண்மையான எழுத்தாளர்களையும் இனம் கண்டுகொள்ள வேண்டும். ஏனென்றால் நிறைய திருட்டு எழுத்தாளர்கள் வந்து விட்டார்கள். பல புத்தகங்களிலிருந்து எடுத்து எழுதினால் திரட்டு, அதே ஒரு புத்தகத்தை பார்த்து பிரதிபண்ணி எழுதினால் திருட்டு. ஒரு பெண் எழுத்தாளரின் புத்தகத்தை அப்படியே எடுத்து கொப்பியடித்து புத்தகமாக போட்டிருப்பதை அவரே என்னிடம் காட்டி வேதனைப்பட்டார். அதில் வார்த்தைகளில் மட்டும் கொஞ்சம் அலங்காரம் செய்திருந்தார்கள். மற்றப்படி அச்சு அசல் அப்படியே பிரதியெடுக்கப்பட்டிருந்தது" என்று தங்கராஜ் முடித்தபோது, அங்கே வந்த கவிஞர் ஏகலைவன்
கவிஞர் ஏகலைவன்
"நான் இப்போது ஒரு பதினைந்து வருடமாக வருகிறேன். இதுவரை நடைபெற்றது எல்லாமே சிறப்பாகத்தான் இருந்தது. ஆனால் தீவுத்திடல் சரியாக வரலீங்க… ஏனென்றால் G.H வரைக்கும் பஸ் வரும். இந்தப் பக்கம் வராது. அந்தப் பக்கம் அண்ணா சதுக்கம் வரைக்கும் பஸ் வருது. இந்தப் பக்கம் வராது. மறுபக்கம் பிராட்வே வரைக்கும் பஸ் வருது. இந்தப் பக்கம் வராது. அதோடு சென்னையில் இருக்கிறவங்களே தீவுத்திடல் எங்கே இருக்கு என்று கேட்கிறாங்க.

பபாஸி அமைப்பின் உறுப்பினராக உள்ள ஒருவர் இங்கே அரங்கு அமைப்பதற்கு 15 ஆயிரம் செலுத்த வேண்டும். மெம்பர் அல்லாத ஒருவர் ஸ்டோல் அமைக்க 30 ஆயிரம் செலுத்த வேண்டும். இப்புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாட்டாளர்கள் போதிய விளம்பரம் செய்ய முன்வரவில்லை. தீவுத்திடல் வெளிப்புறமாக அமைந்திருக்கும் இடம் என்பதால் அதிக விளம்பரம் செய்திருக்க வேண்டும்.
சிரிப்பானந்தா
மேலும் பதிப்பகங்களில் தண்ணீர் புகுந்தத்தில் பலர் நஷ்டங்களை அனுபவித்துவிட்டார்கள். இந்த புத்தக விழாவிலும் முப்பதாயிரத்தையும் கொடுத்து வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டார்கள் என்றால் எப்படி நஷ்டத்தைத் தாங்குவார்கள்? அதோடு பபாசி அமைப்பு புதிய பதிப்பகங்களுக்கு கூடங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதும் இல்லை. கொடுத்தாலும் முப்பதாயிரம் கேட்கிறார்கள். மேலும் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வதும் இல்லை. இப்படி நிறைய பிரச்சினைகள் இருக்கு!" என்று வேதனையை வெளிப்படுத்தினார் கவிஞர் ஏகலைவன்.

"இந்தமுறை வசதிகள் ரொம்பவும் குறைவு. அதோட திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. கோடை காலம் என்பதால் புழுக்கம் ரொம்ப அதிகம் இருந்தது. முதல் நாள் அன்று டிக்கட் கவுண்டர் அமைக்க தாமதமாகிவிட்டதால் அனுமதிச் சீட்டு இல்லாமலேயே அனைவரும் இலவசமாக உள்ளே சென்றார்கள்.
அன்றைக்கே கூட்டம் குறைவுதான். ஆனால் வகை வகையாக புதிய புத்தகங்கள் நிறைய இருந்தன" என்று ஆனந்தமாக பேசிய சிரிப்பானந்தா சிரிப்பு யோகா பயிற்சிக்கு நேரமாகிவிட்டதாகக் கூறி அவஞ்சர் வண்டியை அவசரமாக ஸ்டாட் செய்தார். நமக்கு நேரமாகி விட்டதால் அவரிடமே லிப்ட் கேட்டு வண்டியில் ஏறிக்கொண்டோம்.

No comments:

Post a Comment