Thursday, August 18, 2016

எம்.ஜி.ஆரால் தெரிவு செய்யப்பட்ட மலைநாட்டு லட்சுமியின் கதை


ம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் 1965ம் வருடம் இலங்கைக்கு வந்திருந்தார்கள். எம்.டி.குணசேனாவின் தவஸ குழுமம் வெளியிட்டு வந்த 'ராதா' என்ற வாரப் பத்திரிகைக்கு விளம்பரம் தேடும் வகையில் அந்நிறுவனம் எம்.ஜி.ஆரையும் சரோஜாதேவியையும் இலங்கைக்கு வரவழைத்திருந்தது. இதற்கு முன்பாக மலைநாட்டில் ஒரு அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் இப்பத்திரிகை மேற்கொண்டிருந்தது. அப்பத்திரிகை வெளியிட்ட விளம்பரத்தையடுத்து அழகுராணிப் போட்டிக்கு பல மலையகப் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். அதுதான் மலையகத்தில் நடைபெற்ற முதல் அழகுராணிப் போட்டி.

இவர்களில் 60 பேர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இறுதியாக நடுவர்கள் 12 அழகிகளைத் தெரிவு செய்தனர். இந்த 12 பெண்களில் ஒருவரையே எம்.ஜி.ஆர் மலையக லட்சுமியாகத் தெரிவு செய்ய வேண்டும்.
எம்.ஜி.ஆர்,சரோஜாதேவியுடன்
அழகுராணியாக ராசம்மா

எம்.ஜி.ஆர் நுவரெலியாவுக்கு வந்து கிராண்ட் ஹோட்டலில் தங்கினார். அழகிப் போட்டி ரேஸ் கோஸ் மைதானத்தில் நடத்தப்படவிருந்தது. இன்று சினிசிட்டா கட்டடம் அமைந்திருக்கும் இடத்தில் அன்று பலகைகளாலான ஒரு இரண்டு மாடிக் கட்டடம் இருந்தது. ஹொலிவூட் கௌபோய் படங்களில் வருமே, அச்சு அசலாக அந்த மாதிரியான அழகான கம்பீரமான கட்டடம் அது. அன்றைய 'டௌன் ஹோல்' ஆக அது விளங்கியது. அக்கட்டடத்தை ஒட்டியதாக மேடை அமைக்கப்பட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் விமரிசையாகச் செய்யப்பட்டிருந்தன. அன்றைக்கு இளைஞர்களாகத் திகழ்ந்தவர்களைக் கேட்டால், விழாவன்று அப்படி ஒரு ஜனத்திரள் ரேஸ்கோஸ் மைதானத்தில் கூடியிருந்ததாகவும் இரண்டு லட்சம் பேர் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்திருப்பார்கள் என்றும் அதற்குப் பின்னர் இன்றுவரை அவ்வளவு மக்கள் நுவரெலியாவில் கூடியதில்லை என்றும் சொல்கிறார்கள்.

இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் எம்.ஜி.ஆர் வருகையின் பின்னர்தான் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தாகி எழுபதுகளின் பின்னர் மலையக 'நாடற்ற' தமிழர்கள் தாயகம் திரும்பத் தொடங்கினர். எம்.ஜி.ஆர். நுவரெலியா வருகிறார் என்றதும் தோட்டத் தொழிலாளர்களிடையே அச்செய்தி வைரலானது. இதை அறிந்து கொண்ட அன்றைய கம்பனித் தோட்டங்கள் நுவரெலியாவில் வைபவம் நடக்கும் தினத்தை விடுமுறைத் தினமாக அறிவித்து விட்டன. குடிகள் எவ்வழியோ அவ்வழியே கம்பனிகள் என்பதாக லீவு கொடுத்து விட்டார்கள்.

கிராண்ட் ஹோட்டலில் இருந்து பவனியாக வந்த எம்.ஜி.ஆர், மேடையேறியதும் அவர் முன்னே ஆர்ப்பரித்த மக்கள் சமுத்திரத்தைக் கண்டு உற்சாகமாகிப் போனாராம். மத்திய மாகாணத்தில் இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற செய்தி எட்டு கோடி தமிழகத் தமிழர்களிடையே எத்தனை பேருக்குத் தெரியும்? சுமார் ஒரு லட்சம் பேருக்குத் தெரிந்தாலேயே பெரிய விஷயம்தான்! அறுபதுகளில் இலங்கை வந்த எம்.ஜி.ஆருக்கும் நுவரெலியாவில் கூடிய கூட்டத்தைப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.

மேடைக்கு அழைத்துவரப்பட்ட 12 மலையக இளம் பெண்களில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் மூவரைத் தேர்ந்தெடுத்தனர். இவர்களில் மலையக லட்சுமியாகத் தெரிவு செய்யப்பட்டவர்தான் ராசம்மா. ஐந்தடி இரண்டங்குல உயரம், சிவந்த மேனி, வாட்டசாட்டமான உடல்வாகு, பளீர் புன்னகை எனக் காணப்பட்ட ராசம்மா, நாவலப்பிட்டி கொலபொத்தன தேயிலைத் தேட்டத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு தோட்டத்து வாத்தியார். ராசம்மாவின் அக்கா திருமணமானவர். கணவர் பெயர் தம்பிராஜா. தோட்டத்துரையின் வாகன சாரதியாகக் கடமையாற்றியவர். ராசம்மா மலையக அழகியாக தெரிவு செய்யப்பட்டபோது அவர் தோட்டத்தில் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தச் சமயத்தில் ராசம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தார்கள். நுவரெலிய தோட்டமொன்றில் கணக்குப் பிள்ளையாக பணியாற்றி வந்த சிவலிங்கம் கொலபொத்தன தோட்டத்துக்கு உற்றார் உறவினர்களுடன் பெண் பார்க்கச் சென்றிருக்கிறார். மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போய் விட்டது. பெண்ணைப் பார்த்ததும் அவருக்கு கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி ஞாபகத்துக்கு வந்திருக்கிறது. சிவலிங்கத்தைப் பொறுத்தவரை அது கண்டதும் காதல். இவள் எனக்காகப் பிறந்தவள் என்ற நினைப்பு அவருள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டது.

பலகாரத் தட்டுடன் உள்ளே வந்த ராசம்மாவுக்கு வந்திருப்பவர்களில் மாப்பிள்ளை யார் என்பதை சொல்லியா தர வேண்டும்! இளைஞன் சிவலிங்கம் அமர்ந்திருந்த தோரணையும் அரும்பு மீசையும், அலை அலையாய் படிந்திருந்த கேசமும் அவளுக்குப் பிடித்திருந்தது. சிவலிங்கம் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துவிட்டு முகத்தை தாழ்த்திக் கொண்டபோது கண்களில் வீசிய ஒளியை அவள் கௌவிக் கொண்டாள்.  அந்த இளவரசன் இவன்தான் என்பதை அக்கணத்தில் ராசம்மா தீர்மானித்துக் கொண்டாள்.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடித்துப்போய் இருந்தாலும் அது அறுபதுகளின் காலம் அல்லவா? இன்றைக்கெல்லாம் பெண் பார்க்கப் போய் ஒருவருக்கொருவர் சம்மதம் என்று சொன்னால் திருமணம் முடிந்த மாதிரித்தான். பெற்றோர் இந்த சம்பந்தம் வேண்டாம் என்றெல்லாம் சொல்வதில்லை. ஆனால் அன்றைக்கு மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் பிடித்திருக்க வேண்டும். சீர் செனத்தி எல்லாம் சரியாக அமைய வேண்டும். ஜாதகப் பொருத்தம் சரியாக அமைய வேண்டும். கொஞ்சம் இடக்கு மடக்காக இருந்தாலும் போதும், சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

என்ன காரணமோ தெரியவில்லை பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் பதில் எழுதாமல் தாமதம் செய்தார்கள். ஆனால் ராசம்மா சிவலிங்கத்துக்கு தபால் எழுதினாள். சிவலிங்கமும் ராசம்மாவுக்கு கடிதம் எழுதுவார். "அன்புள்ள மச்சானுக்கு…" என்று ராசம்மாவின் கடிதம் ஆரம்பமாகும். ஏன் பதில் எழுதுகிறார்கள் இல்லை, என்ன பிரச்சினை? என்றெல்லாம் கேட்டு எழுதுவாள்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் மலையக லட்சுமி தெரிவுக்கான இறுதிச் சுற்றுக்கு ராசம்மா தெரிவானாள். அவளுடைய இலக்கம் 12. மேடைக்கு வந்த 12 பேரில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் ராசம்மாவையே மலையக லட்சுமியாகத் தெரிவு செய்து கிரீடம் சூட்டினார்கள். தான் அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆடிப்போன ராசம்மாவுக்கு உடனடியாக ஞாபகம் வந்தது சிவலிங்கம்தான். அட இந்த நேரத்தில் அவர் என்னுடன் இருந்தால்… இந்த சனக்கூட்டத்தில் எங்கேயோ நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை உணர்ந்து கொண்ட ராசம்மா, தான் ஒருவரைத் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் இங்கே வந்திருப்பதாகவும் எம்.ஜி.ஆரிடம் தெரிவித்ததோடு அவரை மேடைக்கு அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

உடனடியாக சிவலிங்கத்தின் பெயர் மைக்கில் அறிவிக்கப்பட்டு, மேடைக்கு வரும்படி கேட்கப்பட்டார். தூரத்தில் நின்று கொண்டிருந்த சிவலிங்கத்தினால் மேடையை நெருங்க முடியவில்லை. உடனே அவர் ஒரு பொலிஸ்காரரிடம், தன்னைத்தான் மேடைக்கு வரும்படி அழைக்கிறார்கள் என்றும் தன்னை அழைத்துப் போகும்படியும் கேட்டுக் கொண்டார். அந்தப் பொலிஸ்காரர் அவரை அழைத்துச் சென்று மேடையில் ஏற்றினார்.

ஏற்கனவே மகிழ்ச்சியால் முகமெல்லாம் ரோஜாத் தோட்டமாகிக் கிடந்த ராசம்மா, தன் வருங்காலக் கணவனைக் கண்டதில் திக்குமுக்காடிப் போனாள். எம்.ஜி.ஆர், சரோஜாதேவியிடம் சிவலிங்கத்தை அறிமுகப்படுத்தினாள். தனக்கு வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபாயை சிவலிங்கத்தின் கையில் திணித்தாள். சிவலிங்கத்துக்கு அந்த மேடை தேவலோகம் போலிருந்தது. எம்.ஜி.ஆரையும் சரோஜாதேவியையும் அருகே நின்று பார்க்கத் கிடைத்த பரவசம் ஒருபுறம் என்றால் தன் வருங்கால துணை தன்னருகே பூத்துக் குலுங்கிக் கொண்டிருப்பது மறுபுறம்… எனினும் பரிசுப் பணத்தை மீண்டும் ராசம்மாவிடம் அவர் கொடுத்துவிட்டார்.

ராசம்மா அழகியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சிவலிங்கம் வீட்டார் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. அழகிப் பட்டம் பெற்ற ஒருத்தி நம் குடும்பத்துக்கு சரிப்பட்டு வருவாளா? என்பது போன்ற பேச்சுகள் கிளம்பின. ராசம்மாவும் தாமதம் ஏன் எனவும் பெண் கேட்டு பலரும் வருகிறார்கள் என்றும் சிவலிங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தாள். சிவலிங்கத்தின் அண்ணன் ஒரு பாடசாலை அதிபர். அழகிப் பட்டம் எல்லாம் அவருக்கு சரிப்பட்டு வரவில்லை. இறுதியாக ராசம்மா சம்பந்தத்தைக் கைவிடுவது எனத் தீர்மானித்தார்கள். குடும்பம் எடுத்த முடிவை எதிர்க்கத் திராணியின்றி சிவலிங்கம் மௌனமானார். பணிந்து போனார். சம்பந்தம் தடைப்பட்டது.

1972 இல் சிவலிங்கம் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ராசம்மாவுக்கு நானுஓயாவைச் சேர்ந்த ஒரு வர்த்தகரைத் திருமணம் செய்து வைத்தார்கள்.

இவை எல்லாம் நடந்து ஐம்பது ஆண்டுகள் கழிந்து விட்டன.

சிவலிங்கத்துக்கு இப்போது 75 வயது. நுவரெலிய மாவட்டத்தில் தன் குடும்ப வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் மனைவி காலமாகி விட்டார். பிள்ளைகள் தனியாக வசித்து வருகிறார்கள். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. அவரைச் சந்தித்து ராசம்மா கதையை அவரிடம் தயக்கத்துடன் கேட்டோம். தயக்கமின்றி அவர் பேசினார். உள்ளத்தைத் திறந்து காட்டினார். அவர் சொன்ன தகவல்களே மேலே விபரிக்கப்பட்டுள்ளன.

ராசம்மா இப்போ எங்கே இருக்கிறார், தகவல் தெரியுமா? என்று கேட்டபோது சோகமாக மாறியது அவர் முகம்.

"1983 கலவரத்தின்போது நானுஓயாவில் இருந்து நுவரெலியாவுக்கு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த போது அந்த பஸ் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்கானது. முடிந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ராசம்மா பஸ்சுக்குள் மாட்டிக் கொண்டாள். காடையர்கள் பஸ்சைக் கொளுத்தியபோது வண்டிக்குள் அவள் சிக்கிக் கொண்டாள். அவளுக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டிருக்கக் கூடாது" என்கிறார் சிவலிங்கம்.
ராசம்மாவுக்கு ஒரு மகன். தான் ஒருமுறை அவரை பஸ்சில் சந்தித்ததாகவும் அம்மாவின் மரணத்தை அவர் ஊர்ஜிதப்படுத்தியதாகவும் சொல்லும் சிவலிங்கம், ராசம்மாவின் கணவர், அவர்களின் மகன் ஆகியோர் எங்கிருக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்கிறார். ஆனால் கொலபொத்தன தோட்டத்தில் அக்காவும் அக்காள் கணவர் தம்பிராஜாவும் வாழ்ந்து வரலாம் என்று நம்புகிறார். ஒருமுறை நாணுஓயாவில் தான் ஏறிய பஸ்சில் ராசம்மாவும் அவள் கணவரும் அமர்ந்திருப்பதைக் கண்டதாகவும் தன்னைப் பார்த்த ராசம்மா கண்கலங்கியதை அவதானித்ததாகவும் நினைவுபடுத்திச் சொன்னார்.

சிவலிங்கத்திடம், ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் நீங்கள் துணிச்சலற்ற கோழையாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டபோது, "சரியாகத்தான் சொல்கிறீர்கள்… கோழையாகத்தான் இருந்திருக்கிறேன். அக்காள் கணவர் எனக்குக் கடிதம் எழுதி, சம்பந்தத்தை தொடரும்படி கேட்டுக் கொண்டார். நான் அவருடன் சேர்ந்து நாவலப்பிட்டிக்குச் சென்று ராசம்மாவை பதிவுத் திருமணம் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இன்றைக்கும் அவள் உயிருடன் இருந்திருப்பாள். அவள் நினைவு இன்றைக்கும் என்மனதில் அப்படியே பசுமையாகத்தான் இருக்கிறது என்று சொன்னார். இதைத்தான் தெய்வீகக் காதல் என்று சொல்வார்களோ!

"அவள் எனக்கு 15,16 கடிதங்கள் எழுதியிருப்பாள். அழகிப் போட்டி தொடர்பாக ராதா பேப்பரில் படங்களும் தகவல்களும் வந்திருந்தன. அவற்றை பொக்கிஷம் போல பேணி வந்தேன். என் மனைவிதான், 'அதையே எணணிக் கொண்டிருக்காதீர்கள். போனது போகட்டும்' என்று சொல்லி அவ்வளவையும் எரித்து விட்டாள். சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர்தான் ராசம்மா எழுதிய கடைசி கடிதத்தையும் கிழித்துப் போட்டு விட்டேன். பாருங்கள், இப்போது வந்து இவற்றை எல்லாம் கேட்கிறீர்களே! உங்களிடம் காட்டுவதற்கு இப்போது என்னிடம் எந்தவொரு ஆவணமும் கிடையாது!" என்று சோகத்துடன் சொன்னார் சிவலிங்கம்.

சத்யா-(நன்றி: வண்ண வானவில்)

No comments:

Post a Comment