Friday, August 12, 2016

முத்து பூசாரியின் இருள் உலகம்


மணி  ஸ்ரீகாந்தன்

'மற்றவர்கள் மாதிரி முட்டையை நான் வீசி எறிய மாட்டேன். கையில் வைத்து நீட்டுவேன் 'அது' எடுத்துக்கொள்ளும். பேயானாலும் அதற்கும் மரியாதை கொடுப்பவன் நான்'

'மரவள்ளி அவியல் வாசனை, கருவாடு வாசனை, வற்றாலை வாசனை முச்சந்தியில் நுகர்ந்தால் அங்கே ஏதோ ஒன்று சுற்றித்திரிகிறது என்று அர்த்தம்'

லகம் என்னதான் நாகரீக வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் பேய்கள் பற்றிய பயம் மேலை நாடுகளிலும் இங்கேயும் அப்படியேதான் இருக்கிறது. என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் ஒரு பாழடைந்த பங்களா, ஆள் அரவமில்லாத முச்சந்தி, பாழடைந்த கிணறு போன்றவைகளை பார்க்கும்போது நம் உடம்பிற்குள் ஏற்படும் அச்ச உணர்வைத் தடுக்க முடியவில்லை. அதோடு தினமும் வெளியாகும் பேய்ப்படங்களும் நாளுக்கு நாள் பேய், ஆவிகள் பற்றிய பயத்தை அதிகரிப்பதாகவே உள்ளது. இந்த நிலையில் பேய்கள் என்றால் என்ன? உண்மையிலேயே ஒரு தீய சக்தி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதற்காக இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் இரண்டு நாட்களாக முகாமிட்டு தேடுதலை தொடங்கினோம். அப்படியான எமது தேடுதலில் சிக்கியவர்தான் முத்துபூசாரி. கஹவத்தை பொறனுவை தோட்டத்தில் முத்து ரொம்பவும் பிரபலமான பூசாரி. தமது வாழ்க்கையின் பாதி நாட்களை பேயுடனேயே செலவிட்டதாக கூறும் அவரிடம் மேலும் பேச்சுக்கொடுத்து பேய்கள் பற்றிய ரொம்பவும் சுவையான விடயங்களை கறந்தோம்.

"பேயை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா? அது எப்படி இருக்கும்" என்று கேள்வியை தொடங்கியவுடனே முத்துவின் முகத்தில் பரவசம் பொங்கியது.

"இப்போது ஒரு ஐம்பது வருஷமா நம்ம வாழ்க்கையே பேய்களோடுதான்…" என்று சொல்லிச் சிரித்தவர் தொடர்ந்தார்:

"நான் சின்ன வயசிலேயே சடா முனியை தொட்டுப் பார்த்தவன். ஊத்துப்பட்டிதான் எங்க சொந்த ஊர். ஒருநாள் எங்கப்பா என்னை அடித்துவிட்டார். அதனால் அவரோடு கோபித்துக் கொண்டு வீட்டுக்கு வராமல் வெளியிலேயே சுத்திக்கிட்டு இருப்பேன். இரவானதும் வீட்டுக்கு வந்து எங்கம்மா ஜன்னல் வழியே நீட்டும் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வெளியே விறாந்தையில் படுத்து விடுவேன். அப்படி ஒரு நாள் வீட்டுக்கு வெளியே படுத்திருந்த போது…

நள்ளிரவு ஒரு மணியிருக்கும்… என் தலைக்கு பக்கத்தில் யாரோ அமர்ந்திருப்பது போல தோன்றவே, என் தலையால் முட்டிப்பார்த்தேன். பாறாங்கல் மாதிரி தோணவே என் கையால் தடவிப்பார்க்க கையை பின்பக்கமாக நீட்டினேன். என்ன ஆச்சர்யம்! ஒவ்வொரு சடையும் புடலங்கா சைசில் தொங்குவதாகப் பட்டது. தலையை தூக்கிப் பார்த்ததும் அதிர்ந்தேன்.
அங்கே விகாரமான தோற்றத்தோடு ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பிறகு நான் போட்ட கூச்சலில் எங்கப்பா வந்து எனக்கு விபூதி பூசி என்னை தைரியப்படுத்தினாரு. அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ தீய சக்திகளைப் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன்" என்று அலட்டலில்லாமல் பேசும் முத்து, அண்மையில் பேயை தனது ஊர் மக்களுக்கு காட்டியதையும் விபரிக்கிறார். பேய்கள் எப்போதும் தரையில் கால் ஊன்றி நிற்காது. ஒரு அரை அடிக்கு மேலேதான் நிற்கும். அதன் தோற்றம் குச்சிமாதிரித்தான் இருக்கும். ஆனால் முகம் ரொம்பவும் பயங்கரமாக இருக்கும். அழுகிப்போய் முகத்தில் ஓட்டை விழுந்த மாதிரி தெரியும். பற்கள் ரொம்பவே கோரமாக இருக்கும். பேயை காட்டுங்க பூசாரி நாங்க பார்க்கணும் என்று வயது கோளாறு காரணமா ஆர்வத்துடன் கேட்பாங்க. சில வயது பயல்களுக்கு அண்மையில் அப்படியொரு பேயைக் காட்டினேன். வெலவெலத்துப் போய் ஒரு மாதமா அவங்க பொண்டாட்டியைப் புடிச்சிட்டு திரிந்தாங்களாம்" என்று சொல்லும் போதே முத்து பூசாரி ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார்.

'சலங்கை ஒலி, சங்கிலி ஒலி, மல்லிகை வாசம், பிணவாடை, இவைகளெல்லாம் பேய்கள் வருவதற்கான அறிகுறிகள் என்கிறார்களே அது உண்மையா?' என்று கேட்டோம்.

"உண்மைதான்! எப்படிச் சொல்றேன்னா மரவள்ளிக் கிழங்கு அவிக்கும் வாசனை, வற்றாலைக் கிழங்கு வாசனை, கருவாடு வாசனை போன்றவை ஆள் அரவமில்லாத ஒரு முச்சந்தியில் நாம் நுகர்ந்தால் நிச்சயம் அங்கே ஏதோ தீய சக்தி உள்ளது அல்லது உலாவுவது என்றுதான் அர்த்தம்" என்று அடித்துச் சொல்கிறார் பூசாரி. அவரிடம், பேய்கள் எப்போதும் அவலட்சணமான தோற்றத்தில்தான் நமக்கு காட்சி தருமா? ஏன் நல்ல அழகான பேய்களை பார்க்க முடியாதா? என்றதும்,

"ஆமாம், அழகான மனுஷன் உருவத்திலும் பேய் வரும். அப்படி வந்து நம்மை ஏமாற்றி அழைச்சிட்டு போய் கொலையும் செய்யும். அப்படி முக்கால்வாசி நம்மை ஏமாத்துவது மாடனும், முனியும் தான். அண்மையில்கூட மலையகத்தில் ஒருவரை ஏமாற்றி நடுச்சாமத்தில் வந்து எழுப்பி கூட்டிட்டுப் போய் பாறை இடுக்கில் ஒருத்தர திணித்து வச்சதா நான் கேள்விப்பட்டேன். அதெல்லாம் முனியோட வேலை" என்று தனது தொழில் அனுபவங்களை ஒளிவுமறைவின்றி பூசாரி விபரித்தார்.

பேயும், ஆவியும் ஒன்றா அல்லது வேறு வேறயா? என்று கேட்டோம். இல்லை அந்த ஆவிதான் இந்தப்பேய். அதாவது திடீர்ன்னு சாகுறவங்க குறிப்பிட்ட நாள் வரைக்கும் பேயாக வண்ணத்துப் பூச்சி மாதிரி சுத்திட்டு இருப்பாங்க. அந்த குறிப்பிட்ட நாள் முடிஞ்ச பிறகுதான் அவங்களுக்கு மேலுலகம் போகும் வாய்ப்புக் கிடைக்குது. அதுவரை பேயாகவும், ஆவியாகவும் இருப்பாங்க" என்று அனைத்து கேள்விக்கும் டான் டான்னு பதில் சொல்லிவிடும் பூசாரியின் முகத்தில் ஒரு கெத்து மின்னலடிக்கிறது.

அடுத்ததாக மனிதர்களுக்கு உதவி செய்யும் பேய்கள் இருக்கிறதா? என்று வினவினோம். ரொம்பவும் உற்சாகமான முத்து,

"நாங்க இவ்வளவு காலம் தொழில் செய்கிறதே தீய சக்திகளோட உதவியில்தானே! அப்படி பேய்களோடு உதவியில்லாமல் வேலை செய்த எத்தனையோ பூசாரிகள் இறந்து போயிருக்காங்க என்பது தெரியுமா?" என்று மிரட்டியவர்,

"என்னால் முடியாத சில வேலைகளை முடித்து வைக்க காட்டேரியைத்தான் கூப்பிடுவேன். அவ கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்திடுவா. அவ ரொம்பவும் அவலட்சணமான தோற்றத்தில் இருப்பா. உடம்பெல்லாம் உதிரம் வழியும். அப்படியொரு அசிங்கமானவ. அவ வந்திட்டா அந்தப்பக்கம் முருகன்கூட எட்டிப்பார்க்க அஞ்சுவார். அப்படியானவளை துணைக்கு வச்சு வேலை செய்கிறேன்" என்றார் இறுமாப்போடு முத்துபூசாரி.

ஐம்பது வருடங்களுக்கு மேலாக பேய்களுடன் சினேகம் வைத்திருக்கும் முத்து, தமக்கும் பேய்க்குமான உறவை பற்றி இப்படிச் சொல்கிறார்:

"நான் மாந்திரீக வேலை செய்யும் போது என்னை சுற்றி நிறைய தீய சக்திகள் உலாவிக் கொண்டிருக்கும். எனது வேலை முடிந்ததும் அதுகளுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்திடனும். இது எல்லா பூசாரிகளுக்கும் பொருந்தும். ஆனால் அவங்க முட்டையை எடுத்து நாய்க்கு போடுகிற மாதிரி வீசி எறிவாங்க. ஆனா நான் அப்படி செய்ய மாட்டேன். பேயையும் மதிக்கிறவன் நான். அதனால் முட்டையை கையிலதான் கொடுப்பேன். அதுங்க வந்து கையில உள்ள முட்டையை வாங்கிட்டு போகும். அப்போது சில எச்சினிங்க என் தோளில செல்லமா தட்டிட்டுப் போறதும் உண்டு.

பேய் உரசிட்டுப் போனாலேயே மரணம் நிச்சயம் என்று நம்புற நம் சமூகத்தில் பேய் பூசாரியின் தோளை செல்லமாக தட்டுகிற விசயத்தைக் கேட்டு நாம் ஆடிப்போனோம்!

நீங்கள் சொல்கிற மந்திரங்களை இடத்திற்கு இடம் மாறுபடுமா, பேய்கள் பேசுகிற எல்லா மொழியும் உங்களுக்கு புரியுமா?

"நான் சொல்லும் மந்திரங்கள் என் முன்னோர்கள் எழுதியது. அதில் எந்த மாற்றமும் வராது. மந்திரங்களை தமிழிலேயே உச்சரிப்பேன். வெளிநாட்டு பேய்களை விரட்டும் சந்தர்ப்பங்களில் எனக்கு அவை பேசும் மொழி புரியாது. அப்போது அதன் நாக்கை இழுத்து அதில் தமிழில் அச்சாரம் போட்டு எலுமிச்சை பழத்தை வெட்டி மந்திரங்களை உச்சரிப்பேன். அடுத்த நொடியே வேற்றுமொழி தமிழுக்கு மாறிவிடும் சர்வதாசாரணமாக முத்து பதிலளித்தார்.

"நீங்களும் மற்ற பூசாரிகளும் தினமும் பேய் ஓட்டுகிறீர்கள்… ஆனால் பேய்கள் குறைந்த மாதிரி தெரியவில்லையே?" என்று முத்துவுக்கு வலை விரித்தோம்.

"அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்? நான் அடக்கும் பேய்களை போத்தலில் போட்டு பூமியில சமாதி கட்டுவேன். ஆனால் மற்ற பூசாரிகள் என்ன செய்கிறாங்க என்பது எனக்குத் தெரியாது. சில சமயம் அவை அவங்க கிட்டேயிருந்து தப்பிவிடுகின்றனவோ எனக்குத் தெரியாது! அண்மையில் கூட ஒரு வெள்ளைக்காரப் பேயைப் பிடித்து போத்தலில் போட்டு அடைத்து எடுத்து செல்லும்போது கூட வந்தவங்க, 'பூசாரி அந்த பேயை இங்கேயே வீசிட்டு வாங்க அது யாரையாவது பிடிச்சா உங்களுக்கு திரும்பவும் வேலை வருமே!' என்றார்கள். ஆனால் நான் செய்யும் தொழிலுக்கு அநியாயம் செய்யமாட்டேன். தொழிலில் நேர்மை இருக்கணும். இதுவே வேற பேராசைக்கார பூசாரியா இருந்தால் பேயை விட்டிருப்பான்" என்றார்.

பேய்கள் ஏன் சுடலையை சுற்றுகிறது? என்ற கேள்விக்கு,

"நாம் இறந்து போனதும் நம்ம உடம்பு சுடலை மாடனுக்கும் எசக்கி அம்மன்னு சொல்லுகிற மயான காளிக்குத்தான் சொந்தம். அப்போது அங்கே வரும் பேய்களுக்கு நம்ம உடம்பை 'காலு உனக்கு, கை உனக்கு, தலை உனக்கு' என்று நம்ம உடம்பை பாகம் போட்டுப் பிரித்து பேய்களுக்கு மயான காளியும், மாடனும் கொடுத்து விடுவார்கள். இது அவங்களிடம் இருக்கிற உடன்படிக்கை. இந்த சம்பிரதாயம் அந்தக் காலத்துல இருந்து இப்போது வரை நடந்துக்கிட்டு வருது. இதெல்லாம் நாங்க படிச்ச படிப்பில் இருக்கு" என்று சொல்லி பெருமைப்படும் அவரிடம், 'எச்சினி, ஏவல், குறளி மோகினி, காட்டேரி இவைகளில் இலகுவாக கையாளக்கூடிய பேய் எது?'ன்னு எமது சந்தேகத்தை முன்வைத்தோம்.

"குரளி ரொம்ப இலகுவானது. அது ரொம்ப நேரம் இருக்காது. உடனே ஓடிடும். ஆனா மோகினியை விரட்டுறது ரொம்ப கஷ்டம்!" என்றார்.

பேய்களை ஒழிப்பதற்கான வழிகளான புதைப்பது, எரிப்பது, கரைப்பது இதில் சிறந்த முறை எது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

"எனக்கு என் ஊத்துப்பட்டி குருநாதர் சொல்லிக் கொடுத்த முறைப்படி புதைப்பதுதான் சிறந்த முறையாகும். பாதளத்தில் இறக்கும் மந்திரத்தை உச்சரித்து போத்தலை குழிக்குள் போட்டு மூடினால் போத்தல் பாதாளம் நோக்கி தாழ்ந்து செல்லும் பிறகு அதை யாராலும் எடுக்க முடியாது. அப்படி யாராவது போத்தலை எடுத்தால் அந்தக் காரியத்தை செய்த பூசாரியின் மந்திரத்தில் பிழை இருக்கிறது என்றுதான் அர்த்தம்" என்று மற்ற பூசாரிகளுக்கு செக் வைக்கிறார் முத்து.

ஏவல், சூனியம் என்றால் என்ன? ஏவல், சூனியம் இரண்டும் வெவ்வேறு வகையை சார்ந்தவையா? குறைந்த செலவில் ஒரு ஏவலை செய்து ஒரு வீட்டுக்கு அனுப்பி விடலாம். ஆனால் சூனியம் செய்வதற்கு ரொம்பவும் செலவாகும். கிட்டத்தட்ட மூவாயிரத்தில் இருந்து ஐயாயிரம் வரை செலவாகும். சாம்பல் வாழையின் கிழங்கை எடுத்து அதில் உருவம் வெட்டி பிறகு அதற்கு சில பரிகார பூஜை மந்திரங்களை ஏற்றி நடு சாமத்தில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஜெபித்து குறிப்பிட்ட வீட்டில் வைக்கணும். அப்படி வைத்தால் அந்தக் குடும்பமே விநாசம் அடையும். ஏவல் செய்வதற்கு ஆயிரம் ரூபா போதும். ஒரு தேங்காய், காட்டில் கிடைக்கும் அன்னாசி, முட்டைக்கரு இவ்வளவுதான்! காரியத்தை முடித்து ஒரு குடும்பத்தையே ஆட்டி வைக்கலாம். நான்கூட ஒரு காலத்தில் சூனியம் வைத்திருக்கேன். அந்தக் குடும்பமே நாசமாப் போனது. ஆனால் இப்போது அதை நினைச்சா மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு! இப்போது அப்படியான தீங்கான காரியங்களை செய்வதில்லை"னு முத்துபூசாரி நீண்ட பெருமூச்சு விட்டார்.

பேய்கள் எல்லா நேரத்திலும் உலா வருமா குறிப்பாக மோகினி எப்போ வரும்?

"அப்படி எல்லா நேரத்திலும் பேய்கள் வராது. குறிப்பாக பகல் 12 மணிக்கு வரும். அதுவும் மரங்களில் இலைகள் ஆடாமல் காற்றே இல்லாமல் இருக்கிற நேரத்தில் வரும், பிறகு நள்ளிரவிலும் வரும். ஆனால் இப்போ மோகினி ரொம்பவே குறைந்துவிட்டது. அதற்கு நாகரீக வளர்ச்சியும் ஒரு காரணம்தான். அந்தக்காலத்தில் வீட்டுக்கு ஒரு மாட்டு பட்டி இருக்கும். பெரும்பாலும் மோகினி மாட்டுத் தொழுவத்தில்தான் வசிக்கும். பசுவில் பால் எடுக்கும் போது அதை குடிப்பதற்காகத்தான் அங்கே திரியும். இப்போது மாட்டுப்பட்டியும் குறைந்து விட்டதால மோகினியும் இல்லை!" என்று புது விளக்கம் தந்தார் பூசாரி.

பேயை கட்டி வேலை வாங்க முடியுமா?
அப்படியான சந்தர்ப்பங்களில் கொஞ்சம் பிழைத்தாலும் பேய் நம்மளை கொன்றுவிடும் என்றும் சொல்கிறார்களே உண்மையா? என்றதும் உற்சாகமான பூசாரி புன்முறுவலோடு, "பேயைக் கட்டி வைத்து வேலை வாங்குவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றார்.

"அந்தக் காலத்தில் நான் ஒரு சிங்கள கட்டாடியிடம் வேலை செய்தேன். அப்போது அந்தக் கட்டாடி ஒரு மோகினியை பிடித்து அதன் உச்சந்தலையில் எழுமிச்சை மரமுள்ளை அடித்து அதனை தனது கட்டுப்பாட்டில் வீட்டு வேலைக்காரியாக வைத்திருந்தார் அந்த மோகினி. அம்மியில் மிளகாய் அரைப்பதிலிருந்து குடத்தில் தண்ணீர் தூக்கி வருவது வரை எல்லா வேலையையும் செய்யும். ஒரு ஆறுமாத காலமாக அப்படி வேலை செய்த மோகினியை எங்கள் இருவரையும் தவிர வேறு யாருக்கும் அது ஒரு தீய சக்திதான் என்பது தெரியாது. நாங்களும் சொல்லவில்லை. ஒருநாள் கட்டாடி ஒரு தொவில் வீட்டுக்கு சென்றுவிட மோகினி தனது விளையாட்டை தொடங்கிவிட்டது. தனது தலையில் முள்ளு குத்திவிட்டது, அதை எடுத்து விடுங்கள் என்று கட்டாடியின் மனைவியிடம் சொல்லியிருக்கிறது. பரிதாபப்ட்ட அவள் மோகினியின் தலையிருந்த முள்ளை பிடுங்க அடுத்த நிமிடமே அவளை ஒரே அடியில் வீழ்த்தி, அவளின் குடலை உருவி மாலையாக போட்டபடி கட்டாடி இருக்கும் தொவில் வீட்டுக்கு சென்றிருக்கிறது. மோகினியைக் கண்ட கட்டாடி ஆடிப்போக, அவரையும் ஒரே அடியில் நாக்கு வெளியே தள்ள அடித்துக் கொன்றுவிட்டது. எந்த சாமி புண்ணியமோ எனக்கு ஒண்ணும் ஆகல!" என்று மெய்சிலிர்த்து தமது அனுபவங்களை முத்துபூசாரி சொல்லி முடித்தார்.

2 comments:

 1. இப்போது ஒரு ஐம்பது வருஷமா நம்ம வாழ்க்கையே பேய்களோடுதான்…" என்று சொல்லிச் சிரித்தவர் தொடர்ந்தார்:

  நாட்டிலே பலபேர் அப்படித்தான் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. அட உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கா....?

   Delete