Wednesday, August 10, 2016

பெண்ணிய போராளி குட்டி ரேவதியுடன் ஒரு திறந்த உரையாடல்

நேர்கண்டவர்: மணி ஸ்ரீகாந்தன்

'கவிதை படைத்தல் என்பது நம்முடைய சுயம், ஆளுமை, நம் கருத்தியல் சார்ந்த தெளிவு. இவை எல்லாம் நம்மைப் பக்குவப்படுத்துது. இதெல்லாம் சரியாக இருந்தால்தான் பாடல் எழுத முடியும்'

'நம்மைவிட மோசமான மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்திருந்த மேற்கத்திய சமூகங்களினால் அவற்றை உதறித்தள்ள முடிந்தது. ஏன் தமிழனால் மட்டும் முடியாதிருக்கிறது?'

மிழக வரலாற்றில் பல புரட்சிப் பெண்கள் அவ்வப்போது உலாவந்து அடங்கிப் போனாலும் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்தும் சிந்தனைத் தெளிவோடும், புரட்சித் தீயோடும் அணையாமல் அப்படியே இருக்கிறார்கள். அவர்களில் குட்டி ரேவதி தொடர்ந்தும் சூறாவளியாக வீசிக் கொண்டிருப்பவர்.

புரட்சி சிந்தனையும், கவித்துவமும் கொண்டவர். ஏராளமான படைப்புகளை நூலுருவில் தொடர்ச்சியாக தந்து கொண்டிருப்பவர். இவர் அண்மையில் எழுதிய மரியான் திரைப்படப் பாடல்களான 'நெஞ்சே எழு', 'எங்க போன மச்சான்' செம ஹிட்டானதில் தனது கவனத்தை சினிமாப் பக்கமாகத் திருப்பி இருக்கும் குட்டிரேவதியை ஒரு இனிய காலைவேளையில் சென்னை வடபழனியில் சந்தித்துப் பேசினோம்.

உங்களைப் பற்றியும் உங்கள் படைப்புகள் பற்றியும் சொல்லுங்களேன் என்றதும் ரொம்பவே ஜாலி மூடில் இருந்து ரேவதி உற்சாகமாக பேசத் தொடங்கினார்.
"நான் அடிப்படையில் ஒரு சித்த மருத்துவர். திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள அரச சார்பான பாரம்பரிய கல்லூரி ஒன்றில் பயின்றேன். என்னை வாசிப்புப் பழக்கத்திற்கு ஊக்கப்படுத்தியவர் என் அப்பாதான். நிறைய நூல்கள் வாசிப்பேன். அதனால் அதன்மீது பிடித்தம் அதிகமாகிவிட்டது. எழுத்தாளராக வரவேண்டும் என நினைக்கவேயில்லை. சித்த மருத்துவராக ஆசைப்பட்டேன். அத்தோடு திருநெல்வேலியில் இருந்த ஒரு சினிமா சங்கத்தோடு எனக்குத் தொடர்பு இருந்தது. அங்கே நிறைய வெளிநாட்டு சினிமாக்களை திரையிடுவாங்க. அதனால் சினிமாவின் மீதும் எனக்கு தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. தேவ தேவனுடைய நிறைய கவிதை நூல்கள் வாசித்திருக்கேன். அதற்கு பிறகு எனக்கு கவிதை மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. நானே சில கவிதைகளை எழுதி ஒரு குறிப்பேட்டில் ஒட்டி வைத்திருந்தேன். அதைப்பார்த்த என் நண்பர், 'நீங்கள் இதை நூலாகப் போடலாமே' என்றார். அதன்பிறகு இப்போது ஒன்பது கவிதை நூல்கள் எழுதியிருக்கேன். அத்தோடு ஒரு சிறுகதைத் தொகுப்பு. புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு ஒரு நாவலையும் வெளியிடவுள்ளேன் என்றவரிடம், 'குட்டி என்பது எப்படி உங்கள் பெயரோடு ஒட்டிக் கொண்டது. உங்கள் இயற்பெயர் என்ன?' என்று கேட்டோம்.
"என் அப்பா பெயர் சுயம்புலிங்கம். ரேவதி சுயம்பு லிங்கம் என்பது என் இயற்பெயர். ரேவதி என்கிற பெயரில் நிறையப் பேர் தமிழ் சூழலில் எழுதுகிற காரணத்தினால் எனக்கு முன்னாடி எழுத வந்த தோழி ரேவதி, நீதான் உன் பெயரை மாற்றிக் கொள்ளணும் என்று சொன்னாங்க. பெயரை மாற்றாமல் பெயருடன் எதையாவது சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றவே, 'குட்டி' என்கிற பதத்தைச் சேர்த்துக் கொண்டேன். நிறையப் பேருக்கு என் பெயரை உச்சரிக்கும் போதே அது புன்முறுவலை ஏற்படுத்தும்" சிரிக்கிறார் குட்டிரேவதி.

உங்கள் ஆற்றல் பற்றி அறிவோம். இருந்தாலும் கவிதை, எழுத்துத் தவிர வேறு எந்தெந்தத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது?

"புகைப்படங்கள் மீதான ஆர்வத்தால் இரண்டு புகைப்படக் கண்காட்சி வைத்திருக்கிறேன். மீனவர்களின் பாடுகள் குறித்து ஒரு கண்காட்சியும், அதோட இருளர்கள் குறித்து ஒரு நாலு வருடம் நான் செய்த கள ஆய்வுகள் பற்றியும் கண்காட்சியும் நடத்தினேன். என்னுடைய அடையாளம் என்று நான் அதைத்தான் சொல்வேன். எனக்கு நிறைவு தருகிற பணியாக அது இருந்தது. இருளர் பழங்குடிகள் அதுவரைக்கும் பெரிய படிமங்களாக வெளியே தெரியவில்லை. முதல்முறையாக அதை காட்சி படிமங்களாக கொண்டுவந்தது எனக்கு மன நிறைவைத் தருகிறது. அடுத்து திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். மரியான் திரைப்படத்தில் இணை இயக்குனராக வேலை செய்தேன். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கேட்டுக் கொண்டதற்காக 'நெஞ்சே எழு' என்கிற பாடலையும், 'எங்க போன ராசா' பாடலையும் எழுதினேன். ரஹ்மான் ரொம்பவும் பிரியமானவர். அவரும் நானும் சேர்ந்தே, 'எங்க போன ராசா' பாடலை எழுதினோம். அதற்குப் பிறகு இப்போது நிறையப் படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றி வருகிறேன். இப்போது சமுத்திரக்கனி தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கப் போகிறேன். அந்தப் படத்திற்கான திரைக்கதையை சிறுகதை எழுத்தாளர் தமயந்தி எழுதியிருக்காங்க" என்று மகிழ்வாகப் பேசியவரிடம் உங்களுக்கு மன நிறைவைத் தருவது கவிதையா சினிமாப் பாடலா? என்று கேட்டோம்.

"கவிதைதான். ஆனால் சினிமா என்பது நேரடி மக்கள் ஊடகம். ஆனால் இரண்டையும் ஒப்பிட முடியாது என்று நினைக்கிறேன். இந்த வருடமும் 'கால வேக மத யானை' என்ற ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டு இருக்கிறேன். கவிதை எழுதுவது என்பது நம்முடைய சுயம், ஆளுமை, கருத்தியல் சார்ந்த தெளிவு. அதெல்லாம் நம்மை பக்குவப்படுத்தி வைக்குது. இதெல்லாம் சரியா இருந்தாதான் பாடல் எழுத முடியும்" என்று ரேவதி நச்சென்று பதில் சொல்கிறார்.
பகுத்தறிவைப் பரப்புவதற்காக திராவிட இயக்கம் 1920 முதல் பல முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறது. ஆனால் தமிழன் மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபட்ட மாதிரித் தெரியவில்லையே?

அஞ்ஞானம்தானே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது? நம்மைவிட மோசமான மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்திருந்த மேற்கத்திய சமூகங்களினால் அவற்றை உதறித் தள்ள முடிந்தது. ஏன் தமிழனால் முடியாதிருக்கிறது? என்று பெரிய கேள்விக் கணையை ரேவதியை நோக்கி வீசினோம்.

"காரணம் சாதி அமைப்புதான். நாம் என்னதான் எல்லா விசயங்களையும் பேசினால் கூட இந்தியா என்கிற நிலப்பரப்பு சாதி என்கிற இரும்பு வலைப் பின்னலால் கட்டிப் போடப்பட்டிருக்கிறது. மூட நம்பிக்கையாக இருக்கட்டும். சினிமா மீதான மோகமாக இருக்கட்டும். இந்த இரண்டு விடயங்களிலும் இருந்து அவர்களால் வெளியே வரமுடியாதுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் நிலை வேறு. விஞ்ஞானி ஸ்டீபன் ஹோகிங் ஆரம்பகால ஆய்வுகளின்படி கடவுள் இருக்கிறார் என்று சொன்னார். ஆனால் சமீபகால ஆய்வுகளின்படி அவர் கடவுள் இல்லை என்று சொல்கிறார். இதையெல்லாம் நம்ம மூத்த குடிமக்கள் எப்போவோ சொல்லிட்டாங்க. நமக்கு இரண்டு கண்கள் என்றால் அவை பகுத்தறிவு இரண்டாவது விஞ்ஞான பார்வை என்பதாக இருக்க வேண்டும். குறிப்பாக தமிழர்களுக்கு இன்னொரு விசயத்தை சொல்லணும். நாம் கறுப்பின சமூகத்திற்கு நிகரானவர்கள். எந்த அளவுக்கு மேலை நாடுகளில் கறுப்பின சமூகம் இடைவிடாது எதிர்த்துப் போராடி தம்மீதான அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து வென்றார்களோ அந்தளவிற்கு நாமும் போராட வேண்டியிருக்கிறது. உலகம் முழுவதும் தமிழர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இந்த நிலையை உணர்வதற்கு வழி என்னவென்றால் அது பகுத்தறிவுதான். அதோட நமது நீண்டமொழி பாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம் போன்றவற்றை நாம் தொலைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது. இன்றைக்கு நாம் என்னதான் பெரிதாக பெருமை பேசினாலும், அதை அர்த்தபூர்வமாக புரிந்து கொண்டு வாழ்க்கையில் அதைச் செயல்படுத்துவதே இல்லை என்பது பெரிய குறைப்பாடு. நீங்கள் சொல்வது போல தமிழர் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கையும் நாம் நமது மரபு சார்ந்த அறிவை விட்டுக் கொடுத்ததும் நமது சமூகத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது" என்று கூறி நிறுத்தினார்.

(தொடரும்)

No comments:

Post a Comment