Monday, August 1, 2016

வாரத்துக்கு நான்கைந்து படங்கள் வருகின்றனவே அண்மையில் வந்ததில் எது நல்ல படம்?

எஸ். ராஜ்குமார் வெள்ளவத்தை

அண்மையில் வெளிவந்த படங்களில் தரமானவை ஒரு சில படங்கள்தான். அவற்றை வடிகட்டியதில் கிடைத்தது இரண்டு மட்டுமே. அதில் ஒன்று பிடித்தது (அப்பா) மற்றது மிரட்டியது (உறியடி)

அப்பாவில் பாசத்தை பிழிந்திருந்தார் சமுத்திரக்கனி. அவரிடம் எதிர்பார்த்ததுதான். அதை கச்சிதமாக சொல்லியிருந்தார். ஆனால் எதிர்பாராமல் பளார் அறை கொடுத்து மிரட்டியது விஜயகுமார்தான். உறியடிக்கு பதில் நெத்தியடி என்றே பெயர் வைத்திருக்கலாம். பொருத்தமாக இருந்திருக்கும்.

கோபமே வராத குழந்தை முகத்தை வைத்துக்கொண்டு வெறியாட்டம் ஆடுவது எப்படி? விஜயகுமார் பாணி சிலிர்க்க வைக்கிறது.

தமிழ் சினிமாவுக்கு என்று சில தூண்கள் உண்டு. அம்மா அப்பா, தங்கை, நகைச்சுவை பாட்டு, குத்தாட்டம் இவற்றை சரியான அளவில் சேர்த்துத்தான் தமிழ் சினிமாவை கட்டியெழுப்புவது வழக்கம். இவை இல்லாமலும் அல்லது கொஞ்சமாகவும் தமிழ் சினிமாக்கள் எப்போதாவது வருவதுண்டு. இந்த வகையில் இருந்து முதலில் வந்து மிரட்டியது 'ஆரண்ய காண்டம்', இப்போது 'உறியடி' மையங்கள்தான் மாறியுள்ளன. முதலாவதில் கோடிட்டது போதை வர்த்தகம். இதில் பொட்டில் அறைந்தது சாதிக்கலவரம்.

இன்றைய தமிழ்நாட்டு மாணவன் எப்படி இருப்பான் என்பதை இத்தனை அழகாக ஆனால் அசிங்கமாக அக்மார்க் ஆணி மார்க் ஆக காட்டுகிறார் விஜயகுமார். படத்தில் அடிப்பதும் (மது) பிடிப்பதும் (சிகரெட்) கொஞ்சம் அதிகம்தான். ஆனால் இப்போதைய தமிழ்நாடு, கல்லூரி மாணவன் இப்படித்தான் இருக்கும் (ப்பான்) என்பது தெரிந்தால் அதனை மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் சினிமாவுக்கான தகுதிகான் பரீட்சையில் விஜயகுமார் வீசு வண்ணங்களுடன் (flying colours) பாஸ் ஆகிறார். நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வீட்டு வேலைகளில் உதவியதாகக் கேள்வி. தமிழ் சினிமா கல்லூரியில் இருந்து வெற்றிகரமாக பாஸ் ஆகியுள்ள விஜயகுமார் இனித்தான் அவரது முதல் படத்தை ஆரம்பிக்க வேண்டும்.                           (அதாவது main picture)
அழகும் ஆற்றலும், விறுவிறுப்பும் விவேகமும் நிறைந்த ஒரு ஹீரோ டைரக்டர் கிடைப்பது மிகவும் அபூர்வம். விஜயகுமார் மூலம் கிடைத்திருப்பது தமிழ் சினிமாவின் பாக்கியம்.

அவசரம் கூடாது (பொறுமை தேவை) ஆர்ப்பாட்டம் கூடாது (அவதானம் தேவை) இறுமாப்பு கூடாது (தன்னடக்கம் தேவை) ஈயக்கூடாது (ஆற்றல் தேவை) உணர்ச்சி வேகம் கூடாது (நிதானம் தேவை) இவை இருந்தால் மற்றைய டைரக்டர்களை அனுசரித்துப் போனால் விஜயகுமார் நல்ல ஹீரோ. மற்றவர்களை அனுசரிக்கச் செய்தால் நல்ல டைரக்டர்.

‘கபாலி' கயவர்களுக்கு நெருப்பு (டா) உறியடி சாதிக்கலவரம் ஏற்படுத்துவோருக்கு ஜூவாலை (டா) பொசுக்கிவிடும்.

கபாலி 'பீவர்' (காய்ச்சல்) எப்படி இருக்கு?
ரஜினி ரசிகன், கொழும்பு

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளிவரும் சூழலில் இத்தனை விறுவிறுப்பு, எதிர்பார்ப்பு, படபடப்பு இருந்ததில்லை. இனிமேல் இருக்கப் போவதும் இல்லை.

அனைத்து சாலைகளும் ரோமில்தான் முடிகின்றன என்று ஆங்கில பழமொழியொன்று உண்டு. அது போல இப்போது எங்கும் எதிலும் எல்லாமே கபாலி மயமாகத்தான் உள்ளது. ரஜினியின் திரைப்படம் வெளிவருவது இது முதல் முறையல்ல. எனினும் இம்முறைதான் விளம்பர (வர்த்தக) உலகம் அவரை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. விமானம் முதல் வங்கிச் சேவை வரை, தங்கக்காசு முதல் சாக்லேட் வரை கபாலி மயமாகியுள்ளன.

தமிழ், ஹிந்தி என இந்தியாவிலும் மலாய், சீன ஜப்பானிய மொழிகளில் வெளிநாடுகளிலும் உலகளாவிய ரீதியில் மொத்தம் 12 ஆயிரம் திரைகளில் கபாலி ஒரே நேர வெளியீடு. இந்தியப் படம் என்றால் ஹிந்திப்படம்தான் என்று இதுவரை பரவலாக இருந்த கருத்தை இந்தியப்படம் என்றால் தமிழ்ப் படம்தான் என்று கபாலி மாற்றியெழுதியிருக்கிறது.  franceஇல் rex தியேட்டரில் கபாலி பிரிமீயர் காட்சி இடம்பெற்றது. அந்த தியேட்டரில் காட்டப்பட்ட முதல் தமிழ்ப் படம் கபாலிதான்.

இணையத்தளத்தில் வெளிவரக்கூடாது என்றும் அவ்வாறு வெளியிடப்பட்டால் அந்த இணையத்தளங்களை (சுமார் 160) முடக்க வேண்டும் என்று 'கபாலி' தயாரிப்பாளர் தாணு வழக்கு போட்டு அதற்கு சார்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் தமிழ்ச்சினிமாவுக்கு முதல் நிகழ்வு கபாலி வெளிவரும் முன்னரே 200 கோடி இந்திய ரூபாவுக்கு வியாபாரம் நடந்துள்ளது.

இந்திய திரைகளில் இப்போது அனல் பறக்கும் ஓட்டம் சல்மான் கானின் சுல்தான்தான். வெளிவந்த 4 வார காலத்தில் இந்தியாவில் நான்காவது அதிக வசூல் இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கிறது. முதல் இடத்துக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கபாலி இதனை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது. எப்போது என்பதுதான் கேள்வி!

கபாலி படத்தின் படிப்பிடிப்பு மற்றும் வெளியீட்டுடன் சம்பந்தப்பட்ட மனம் நெகிழ்வு சம்பவங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு நடந்தபோது ரஜினியின் தீவிர ரசிகையான எக்னஸ் என்ற பெண் இதய நோய் காரணமாக மலேசிய மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தாராம். அவரது உடல் நிலை மோசமாக இருந்திருக்கிறது. அவரது கடைசி ஆசையாக ரஜினியை பார்க்க வேண்டும் என்று நண்பர்களிடம் கூறியிருக்கிறார். படப்பிடிப்பில் இருந்த ரஜினிக்கு இதை சொல்லியிருக்கிறார்கள். அன்று படப்பிடிப்பு முடிந்தவுடன் நேரே மருத்துவ மனைக்கு சென்று எக்னசை பார்த்து ஆறுதல் சொல்லி அவருடன் படமும் எடுத்திருக்கிறார் பாசம் கொண்ட ரஜினி.

அடுத்த நிகழ்வு கொஞ்சம் சோகமானது. மலேசியாவில் படத்தின் முதல்நாள் காட்சிக்காக டிக்கட் விற்பனை நடந்து கொண்டிருந்த போது, டிக்கெட் கிடைக்காத காரணத்தால் ரஜினி ரசிகர் ஒருவர். டிக்கட் கிடைக்காத அதே திரையரங்கில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டாராம். குற்றுயிரும் குலையுயிருமாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பிழைத்தாரா இல்லையா என்று சரியாகத் தெரியவில்லை. 'கபாலியின் முதல் காவு' என்று தலைப்பிட்டு இணையத்தில் இதை வைரலாக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவில் அதிக முன்பதிவு வசூல், மிகச் சிறந்த ஒப்பனிங் (முதல் மூன்று நாள் வசூல்), அதிக வெளிநாட்டு வசூல், உலகளாவிய ரீதியில் அதிக வசூல் என்ற சாதனைகள் கபாலிக்காக காத்திருக்கின்றன.

கபாலி வந்தான்டா
காட்சி தந்தான்டா
நெருப்பா சுட்டான்டா
புரட்டி போட்டான்டா
சாதனை படைச்சாண்டா
இந்திய சினிமாடா
இனிமே தமிழ்தான்டா
முடிஞ்சா நெருங்குடா
கிடைக்கும் தோல்விடா
சினிமானந்தா சொன்னான்டா
எழுதி வச்சுக்கடா!

No comments:

Post a Comment