Wednesday, August 17, 2016

பெண்ணிய போராளி குட்டி ரேவதியுடன் ஒரு திறந்த உரையாடல் -2


நேர்காணல்-  மணி  ஸ்ரீகாந்தன்

ஸ்டாலினின் துணைவியார் கோவிலுக்குப் போகும் ஆஸ்திகர் என்றும் ஸ்டாலினில் பிரச்சினை இல்லை என்றும் சுப்பிரமணியம் சுவாமி கூறியிருக்கிறார். இது 'வஞ்சகப் புகழ்ச்சியா அல்லது தி.மு.க அதன் ஆதாரத் தளங்களிலிருந்து மாறி விலகிச் சென்று கொண்டிருக்கிறதா?' என்றதும்,

"இது ரொம்பவும் முரணான குதர்க்கமான விசயங்கள். சுப்ரமணியசுவாமி என்ன சொல்கிறார் என்பது நமக்கு ஒரு பொருட்டே கிடையாது. மனைவி கோவிலுக்குப் போவது ஸ்டாலினிக்கு ஒரு பொருட்டே கிடையாது என்பதை சிலர் மத நல்லிணக்கம் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அப்படி ஒரு மத நல்லிணக்கம் என்பது நம் சமூகத்தில் இல்லவே இல்லை. அது ஒரு போலியான வார்த்தை. நீங்கள் ஒரு சமூகத்தில் உங்கள் மனைவியை உண்மையாக நேசிக்கிறீர்கள் என்றால், அவங்களுக்குப் பகுத்தறிவு பற்றிய அறிவைப் புகுத்தி ஒரு நல்ல மேம்பட்ட வாழ்வை வாழ்வற்குத்தான் அவர் துணை செய்திருக்கணும். ஆனால் அவர் அதை செய்யவில்லை" என்று கொஞ்சம் சூடாகவே பேசிய ரேவதியிடம், கலைஞர் அணிந்துவரும் மஞ்சள் சால்வை மத அல்லது அதிர்ஷ்ட நம்பிக்கை அடிப்படையில் அணியப்பட்டு வருவதாக அவ்வப்போது தெரிவிக்கப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதும்,

"நீங்கள் ஏன் இப்படி தி.மு.கவை குறிவைத்து கேள்வி கேட்கிறீங்க?" என்று ஆச்சரியம் காட்டினார். பின்னர் பதில் சொன்னார்.

"நீங்கள் இப்படி தி.மு.க. மீது வைக்கும் மேலோட்டமான விமர்சனங்களை எல்லாம் விட்டு விடுங்கள். அதைவிட அவர்களை கடுமையாக விமர்சிக்க வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கு, இப்போ நான் சித்த மருத்துவ பின்னணியில் இருந்து வந்திருக்கேன். தமிழனுடைய ஆதாரமான இரண்டு தளங்களாக தமிழ் மருத்துவத்தையும், தமிழ் இசையையும் குறிப்பிடுவேன். இந்த இரண்டு விடயங்களையும் முன்னேற்ற தி.மு.க. தமக்குக் கிடைத்த அதிகார வாய்ப்பின் போது எதுவும் செய்யவில்லை. நான் அப்படித்தான் பார்க்கிறேன். தமிழ் மொழியை, தமிழ் அறிவை, தமிழ் உணர்வை இவர்கள் உண்மையிலேயே கருத்தில் கொண்டிருந்தால் அவர்கள் செய்திருக்க வேண்டியது, தமிழனுடைய இரண்டு கண்களான தமிழ் மருத்துவ தமிழ் இசை சார்ந்த கல்லூரிகளை அதிக எண்ணிக்கையில் நிறுவியிருக்க வேண்டும். இந்த இரண்டின் மீதும் அவர்கள் அக்கறையின்றி இருந்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்கிற ஒரு நூலை எழுதுகிறார். 1350 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் அது. இன்று கர்நாடக இசை என்று சொல்லப்படுபவை திரிக்கப்பட்ட தமிழ் இசைதான். ஆனால் இன்று நம்மில் யாருமே பாடகர்களாக இல்லை. யாருக்குமே தமிழிசையில் இல்லை. தமிழ்ப் பண்களின் ஏழு இசையின் பாடு ஒலிகளான 'குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்' என்பவற்றைப் பற்றிப் பேசுகிறோம்.
தவிர அதனைப் பாடுவது எப்படி என்கிற அறிவு நம்மிடம் இல்லை. நம்மிடமிருந்து அந்த அறிவு பிரிக்கப்பட்டு, இன்னொரு சமூகத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுகிறது. அவர்கள் திரைப்படங்களில் மேடைகளில் பாடுகிறார்கள். ஆனால் நம் சமூகம் பாடுவதற்கான எந்தப் பண்பாட்டு சூழலும் உருவாக்கப்படாத நிலையில் இருக்கிறோம். இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்திருக்கிறது? எதையுமே செய்யவில்லை. அதேமாதிரிதான் தமிழ் மருத்துவமும். அது இங்கே வளர்த்தெடுக்கப்படவில்லை. பெரியாருக்கு பின்பு வந்த கழக அரசுகள் ஒன்றும் செய்யவில்லை என்பதுதான் எனது பெரிய குற்றச்சாட்டு. திராவிட அரசு தான் சார்ந்த கருத்தியல் ரீதியான அடிப்படை விசயங்களை செய்யவில்லை. மஞ்சள் சால்வையை விட மருத்துவமும், தமிழர் இசையும் மிகவும் முக்கியமான விசயம்" என்று வெடித்தவர் அமைதியானார்.

பெண்களை எடுத்துக்கொண்டால் நீங்கள், ஷோபா சக்தி, தமிழச்சி தங்க பாண்டியன் ஏன் நம் கனிமொழி ஆகியோர் மகளிர் மறுமலர்ச்சி அல்லது தன்னம்பிக்கை கொள்ளல் தொடர்பாக எவ்வளவோ செய்திருக்கிறார்கள். மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறதா?

"மாற்றங்களுக்கு சாத்தியமில்லை. முன்னர் இயக்கம் சார்ந்த நம்பிக்கை இருந்தது. இப்போது நாம் எல்லோரும் எப்படி ஆகிவிட்டோம் என்றால் தனிமனித நம்பிக்கைக்கு அதிகமாக போய்விட்டோம். நீங்கள், சொல்கிற தன்நம்பிக்கை இந்தக்காலத்தில் உதவாது. அது தனிமனித முன்னேற்றத்துக்கு மட்டும் உதவலாம். இன்றைக்கு நான் ஆளுமையோடு இருக்கலாம். நாளை இதைவிட மிகச்சிறந்த ஆளுமையாக ஆகலாம். ஆனால், அந்த ஆளுமையை ஒரு செல்வாக்காக, ஒரு மாற்றதிற்காக சமூகத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்கிற போது, நீங்கள் சொல்கிற எல்லா நபர்களும் தோல்வியடைந்தவர்கள். நான் உட்பட. இன்றைய சமூக ஊடகங்களுக்கு பின்பாக நான் என்ன பார்க்கிறேன் என்றால், எல்லோருக்கும் தனது விம்பத்தின் மீது ஒரு மிகை நம்பிக்கை இருக்கிறது. தன்னுடைய பேஸ்புக்கில் தன்னுடைய படம் வரவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இன்னைக்கு நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வரும் படைப்பாளர்கள் தத்தமது முகநூல் பக்கங்களில் தமிழில் சிறந்த புத்தகத்தை நானே படைத்திருக்கிறேன் என்றும் 'நீங்களா அந்த நூலாசிரியர்?' என்று அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள் என்றும் தம்மைத்தாமே பாராட்டி பதிவு செய்வதைப் பார்க்கிறோம். எனவே இப்படி குறுகிப்போன ஆளுமைகளிலிருந்து நீங்கள் என்ன வகையான மாற்றத்தை எதிர்பார்கிறீர்கள்? தனி மனிதன் தன் மீதே கொண்டிருக்கும் மிகை நம்பிக்கையினால் எந்த சமூக மாற்றமும் சாத்தியமில்லை என்பதே என் கருத்து" என்று கையை விரிக்கும் அவரிடம், காலில் விழும் கலாசாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று வினவினோம்.

"அது ஒரு அடிமைத்தனம்தானே! அதை ஆண்டான் அடிமைன்னு சொல்லலாம். எந்த சமூகத்தில் விடுதலைக்கான போராட்டங்கள் அதிகமாக இருக்கிறதோ அதே சமயத்தில் இன்னொரு பக்கம் ஒடுக்கு முறையை நோக்கி அதாவது ஆண்டான் அடிமையை நோக்கி சமூகம் நகர்வதும் இருக்கும். இந்த இழுபறி சமூகத்தில் இருந்துகொண்டே இருக்கும். காலில் விழுவதை நான் அதிகாரத்தின் ஒரு பண்பாகவே பார்க்கிறேன்"

இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் போன்றோரை பெரியார் மூடி மறைத்துவிட்டு தன்னை மட்டும் முன் நிறுத்திக்கொண்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது உண்மையா?

"இது தலித் சிந்தனையாளர்கள் முன்வைக்கிற முக்கியமான குற்றச்சாட்டு. ஏன் பெரியாரை அவர்கள் குறை சொல்கிறார்கள்? பார்பனிய அதிகார விசயங்களை குறை சொல்லலாமே! இன்று ஏன் பெரியாரை குறை சொல்கிற போது எங்கேயோ ஒரு பார்பனிய கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொள்கிற மனோபாவத்தைத்தான் நான் பார்க்கிறேன். இதே நீங்கள், பார்பனிய படைப்பாளிகளையும் சான்றோர்களையும் பார்த்தும் அயோத்திதாசரையும், ரெட்டை மலையையும் நீங்கள் இருட்டடிப்பு செய்து விட்டீர்களே! என்று யாரும் கேட்பதில்லை. அதோடு பெரியாரின் நிலப்பரப்பு கள ஆய்வு வேறு மாதிரி இருந்தது. அயோத்திதாச பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன் மாதிரியான ஒரு கூர்மையான படைப்பாளியாகவோ, படிப்பாளியாகவோ பெரியார் தன்னை முன்வைத்ததில்லை. பெரியாரை ஒரு களப்பணியாளராகவே நாம் பார்க்க வேண்டும். அவர் சமூகத்தின் பரப்புகளில் இறங்கி வேலை செய்தார். அப்படி ஆள் நான் கிடையாது. ஆனால் சிவகாமி போன்றவர்கள் இருக்கிறார்கள். தலித் பெண்ணியவாதியாகவும் படைப்பாளியாகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் பணியாற்றிய அந்த சிவகாமியோடு நான் இரண்டு வருடங்கள் வேலை செய்திருக்கேன். அவர் பார்க்காத சேரி கிடையாது. சந்திக்காத தலித் பெண் கிடையாது. அப்படி ஊடுருவி ஊடறுத்து வேலை செய்தவர். அப்படி அந்தக் காலத்தில் பெரியார் எல்லா தட்டுகளிலும் சேவை செய்தவர். அதனை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சுப் போடுவது போலதான் இது இருக்கிறது. அதோடு ரெட்டை மலை சீனிவாசனையும், அயோத்திதாச பண்டிதரையும் குறைத்து மதிப்பிடுவதாகவும் இருக்கிறது. இப்படி சம்மந்தம் சம்பந்தமில்லாத கேள்விகளை எழுப்புவது என்பதே அதிகார மனப்பான்மைக்கு துணை போவதாகவும் இருக்கிறது. பெரியாரை தலித் படைப்பாளிகளோ, தலித் களப்பணியாளர்களோ எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள் என்றால் பார்ப்பனியத்தை எதிர்ப்பதற்கு பதிலாக பெரியாரை எதிர்க்கிறீர்கள். பாப்பனர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள். இதுக்கு என்ன காரணம் என்றால் இந்த சாதி இந்துக்களான வன்னியர், நாடார், கவுண்டர், தேவர் ஆகியோருக்கும் தலித்துக்கும் இடையிலான வெறுப்பும் மோதலும்தான் இப்போது அதிகரித்து வருகிறது. அதனால் அதற்கு பதில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து பார்ப்பனர்களுக்கு ஆதரவாக போய்விடுகிறீர்கள். எனவே நாம் உரையாட வேண்டியது இவர்களிடம்தான். இவங்க மத்தியிலதான் மனமாற்றத்தைக் கொண்டு வரணும். இது தெரியாமல் நீங்க பார்ப்பனர்களிடம் போகும்போது அவங்க அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பார்ப்பனர்களின் மரபு ரீதியான அறிவு என்னவென்றால் ஒரு விடயத்தை பிரிப்பதுதான். இந்த அடுக்கு விசயத்தை அவங்க அடுக்காக வைத்துக் கொள்வதற்கும் பிரித்து வைப்பதற்குமான சூழ்ச்சியை சமீபகாலமாக தலித்துக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதில் என்ன நடக்கிறது தெரியுமா? தலித்துகள் பார்ப்பனர்களை விட்டுவிட்டு நம்மைத் தாக்க வரும் தேவர், வன்னியர் நாடார்களுக்கு எதிராகவே வேலை செய்யணும் என்று நினைக்கிறார்கள். இது காலம் காலமாக இருந்துவருகிறது. முக்கியமாக நாம் அம்பேத்கார் பார்பனியம் பற்றி சொன்னதையெல்லாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை. அவர் சொன்ன எதனையும் உள்வாங்கி கொள்ளாமல் பெரியாரை எதிர்ப்பது என்பது பார்ப்பனியத்துக்கு துணை போவதற்கு சமமானது. பார்ப்பனியத்திற்கு துணை போவது என்பது அம்பேத்கருக்கு துரோகம் செய்வது என்று அர்த்தம். அம்பேத்கருக்கு துரோகம் செய்வது தலித் மக்கள் தமது சொந்த சமூகத்துக்கே துரோகம் செய்வதற்கு ஒப்பானது" என்று ஒரு நீண்ட விளக்கம் தந்தார் குட்டி ரேவதி.


(தொடரும்..)

 ந்தியாவில் சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடிய காலத்தில் 'முலை வரிச்சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டம் அமுலில் இருந்தது. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் தமது மார்பின் அளவுக்கேற்ப வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். மார்பை மறைக்காவிட்டால் வரி செலுத்தத் தேவையில்லையாம். குறிப்பாக கேரளா, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இச்சட்டம் கடுமையாக அமுலில் இருந்ததாம்.

அப்போது கேரளா திருவாங்கூர் அரசின் முலைவரிச் சட்டத்துக்கு எதிராக நாஞ்செலி என்ற தாழ்த்தப்பட்ட பெண் போராடி இருக்கிறாள். 30 வயதை நெருங்கிக் கொண்டிருந்த அழகியான நாஞ்செலியின் மார்புகள் ரொம்பவும் பெரிதாக இருந்ததினால் திருவாங்கூர் அரசு அம்முலைகளுக்கு இரட்டை வரி செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்ததாம். அதனால் ஆத்திரப்பட்ட நாஞ்செலி வரி செலுத்த மறுத்துவிட்டாள். ஆனாலும் திருவாங்கூர் அரசு விடாமல் அவளிடம் வரி கேட்டு வற்புறுத்தி வந்தது. ஒருநாள் வரி வசூலிப்பவர்கள் வீடுவரை வந்து நாஞ்செலியிடம் வரி கேட்டபோது, கொஞ்சம் பொறுங்கள் எடுத்து வருகிறேன் என்று வீட்டுக்குள் சென்ற நாஞ்செலி, ஒரு கத்தியுடன் வெளியே வந்தாள்.
முலைவரிச்சட்ம் அமுலில் இருந்த காலத்தில்
கேரள கடைத்தெருவில் தலித் பெண்கள்.

வாழை இலையை நிலத்தில் பரப்பி தமது கையிலிருந்த கத்தியால் மார்புகள் இரண்டையும் அறுத்து இலையில் வைத்தாளாம்! அந்தக் கொடுமையான காட்சியை நேரில் பார்த்த வரிவிதிப்பவர்கள் ஆடிப்போனார்களம். 'இது இருந்தால்தானே வரி கேட்பாய்? நீயே எடுத்துக்கோ' என்று சொல்லிவிட்டு நாஞ்செலி தரையில் வீழ்ந்து இறந்தாள். இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன திருவாங்கூர் அரசு உடனடியாக முலை வரிச் சட்டத்தை நீக்கியது. இந்த சம்பவம் நடந்து நூறு வருடங்கள் கடந்து விட்டன. சம்பவம் நடந்த இடம், கேரளாவில் சேர்தலா அருகே உள்ளது. அதன் பெயர் முலைச்சிபுரம். அந்த ஊர் மக்கள் இன்னும் நாஞ்செலியை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால் கேரளாவில் நாஞ்செலிக்கு எந்த நினைவுச் சின்னமும் கிடையாது. நாமும் தான் எத்தனையோ மகளிர் தினங்களைக் கொண்டாடி விட்டோம். ஆனால் நம்மில் எத்தனை பெண்களுக்கு நாஞ்செலியைத் தெரியும்? பெண்கள் தமது உரிமைகளுக்காக எவ்வாறெல்லாம் போராட வேண்டியிருக்கிறது!

No comments:

Post a Comment