Friday, July 8, 2016

இருள் உலகக் கதைகள்


வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்

த்துகமை நகரை அன்மித்து இருக்கும் அந்த இறப்பர் தோட்டத்தை, மாலை நேர இருள் மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது. அந்த தோட்டத்து சுற்று வட்டாரத்தில் அமைந்திருந்த ஒத்தை வீட்டுக்கு புதிதாக திருமணம் முடித்து வந்திருந்த பியசேனவும், சந்திராவும் குடியேறி இருந்தார்கள். அதனால் ரொம்ப நாளாக பாழடைந்து கிடந்த அந்த வீடு இப்போது புதுப்பொலிவோடு பிரகாசமாக இருந்தது.

பாழடைந்து கிடந்த அந்த வீட்டில் பேய் இருப்பதாக ஒரு கதை நீண்ட நெடுங்காலமாக அந்தப் பகுதியில் உலவி வருகிறது. அதனால் அந்த வீட்டில் குடியேற எவரும் தயாராக இருந்ததில்லை. அதனால் வீட்டு சொந்தக்காரனான பண்டார எப்படியாவது அந்த வீட்டை விற்று விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.

பல வருடங்கள் காத்திருந்த அவனுக்கு அன்மையில் திருமணம் முடித்து வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பியசேனவிடம் பேரம் பேசி எப்படியோ வந்த விலைக்கு கொடுத்து விட்டானாம்.

வீட்டை வாங்கிய பியசேன தம்பதியும்  எந்த பிரச்சினையும் இல்லாது, குறைந்த விலைக்கு பெரிய வீடு கிடைத்த சந்தோசத்தில் ரொம்பவே ஜொலியாக இருந்தார்கள்.

பியசேனவும், சந்திராவும் மத்துகமை நகருக்கு அன்மையில் இருக்கும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலைப்பார்த்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இருவரும் விடிந்தது கூடத் தெரியாமல் அசதியில் ரொம்ப நேரம் தூங்கினார்கள்.

சந்திரா கடிகாரத்தை பார்த்தப் போது நேரம் ஒன்பதரையைக் கடந்திருந்தது. அறக்க பறக்க எழுந்தவள் கணவனை எழுப்பிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தால். நேற்று இரவு சமைத்த கோழிக் கறியை சூடாக்கி பாண் வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்தப்படி அடுப்பில் இருந்த கறிச் சட்டியைத் திறந்து பார்த்தாள். ஆனால் அங்கே அந்தச் சட்டியில் மீதமிருந்த கறி சுத்தமாக வழித்தெடுக்கப்பட்டு சட்டி காலியாகக் கிடந்தது.
'பக்கத்து வீட்டு பூனைதான் இந்தக் காரியத்தை செய்திருக்கும் வரட்டும் அதை ஒரு வழிப் பண்ணுறேன்'னு  ஆத்திரத்தோடு சமையலை கவனிக்கத் தொடங்கினாள் சந்திரா.

அடுத்த நாள் வேலைக்கு போகும் போது கணவனுக்கும், தனக்கும் சோற்றுப் பார்சலைக் கட்ட முனைந்தாள் சந்திரா. சோற்றை லஞ்ச் சீட்டில் போட்டு விட்டு மீன் குழம்பை ஊற்றுவதற்காக சட்டியை திறந்தாள் சந்திரா. ஆனால், அந்தச் சட்டியில் மீன் எலும்புகள் மட்டுமே கிடந்தன. சுத்தமாக வழித்தெடுத்துச் சாப்பிட்ட மாதிரி சட்டி காலியாகக் கிடந்தது. 'எப்படி மூடிய சட்டிக்குள் உள்ள குழம்பு காணாமல் போனது? பூனையால் சட்டியை திறந்து மூட முடியுமா?' போன்ற வினாக்களோடு கணவனைப் பார்க்க, அவனும் அதிர்ந்து போய் நின்றான்! 'நமக்குத் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து சாப்பிட்டது யாராக இருக்கும்? ஒருவேளை ஏதாவது தீய சக்தியின் வேலையாக இருக்குமோ?' என்று பியசேன மனதிற்குள் நினைத்தானே தவிர வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

பிறகு ஊரின் எல்லையில் இருக்கும் குறி சொல்லும் சிறிசேன கட்டாடியிடம் சென்று பியசேன மை பார்க்க, அது எச்சில் பேயின் சித்து விளையாட்டுதான் என்று சொன்ன சிறிசேன, ஒரு எழுமிச்சை பழத்தை மத்திரித்து கொடுத்து அதை வீட்டுக்கு கிழக்கு, மேற்காக வீசச் சொன்னார். அதை அப்படியே செய்தான் பியசேன. அடுத்து வந்த இரண்டு வாரமும் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் அதற்கு அடுத்து வந்த நாட்கள் பியசேன தம்பதிக்கு பெரிய பிரச்சினைகளை உருவாக்கின. அன்று இரவு பியசேன வாங்கி வந்த ஆட்டிறச்சியை சந்திரா குழம்பு வைத்தாள். அடுப்பில் குழம்பு வாசனையோடு கொதிக்க கரண்டியை எடுத்து குழம்பை கிண்டி விட்டு உள்ளங்கையில் கொஞ்சம் விட்டு ருசி பார்த்தாள். அப்போது அந்த விறகடுப்பின் மேலே இருக்கும் புகை போக்கியினுள் யாரோ சப்புக்கொட்டும் சத்தம் கேட்க திடுக்கிட்ட சந்திரா தைரியமாக குனிந்து புகை போக்கியைப் பார்த்தாள்.
வீரசிங்கம் பூசாரி
ஆனால் அந்த புகைப் போக்கி கரி படிந்து கும்மிருட்டாகக் காணப்பட்டது. இது ஏதோ பல்லியாக இருக்கும் என்று நினைத்த சந்திரா, சமையல் வேலையில் மூழ்கினாள். கொதிக்கும் இறைச்சி குழம்பின் வாசனை மூக்கை துளைக்க, கறி கொதித்து விட்டது இனி இறக்கி விட வேண்டியதுதான் என்றெண்ணிய அவள் அடுப்பைப் பார்த்தாள். அங்கே சந்திரா கண்ட காட்சி அவளை நிலை குலையச் செய்தது. புகைப் போக்கியின் மேலிருந்து தலை கீழாக தொங்கும் வெளவாலைப் போன்ற ஒரு அகோரமான உருவம் தலையை தொங்கப் போட்டப்படி நாக்கை நீட்டி கொதிக்கும் சட்டிக்குள் விட்டு இறைச்சிக் குழம்பை உறிஞ்சி கொண்டிருந்தது.

அந்த கோரக்காட்சியை பார்த்த அடுத்த நிமிடமே சந்திரா 'வீல்'…ன்னு கத்தியப்படியே தரையில் விழுந்தாள். சந்திரா போட்ட சத்தத்தைக் கேட்ட பியசேன, அறைக்குள்ளிருந்து பதறியடித்தப்படி ஓடி வந்தான்.

தலைவிரி கோலமாக நிலத்தில் கிடந்த மனைவியைத் தூக்கியெடுத்து தண்ணீர் தெளித்து அவளை பழைய நிலைக்கு கொண்டு வந்தான். நடந்த சம்பவத்தை சந்திரா சொன்னப்போது பியசேனவுக்கு வியர்த்துக் கொட்டியது.

இது நடைபெற்ற இரண்டு நாட்களின் பின் சந்திரா, மனப்பிரமை பிடித்தவள் போல சம்பந்தமில்லாமல் ஏதேதோ உளறத் தொடங்கினாள். பியசேனவுக்கு நிலமை மோசமாகி விட்டது என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. இதற்கு ஒரு பரிகார பூஜையை உடனடியாக செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவன் அடுத்த நாளே அந்தப் பகுதியில் பிரபள பூசாரியாக விளங்கும் வீரசிங்கத்தை சந்தித்து பரிகார பூஜைக்கு ஒரு திகதியையும் குறித்துக் கொண்டான்.

குறித்த திகதியில் வீரசிங்கம் தனது உதவியாளர்களோடு மத்துகமைக்கு வந்தார். பியசேனவின் வீட்டில் பரிகாரத்துக்கான பூஜை ஏற்பாடுகள் அவர் சொன்னபடியே சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. அவர் பூஜை மன்றில் அமர்ந்து உடுக்கையை கையில் எடுத்தார். தமது குலதெய்வத்தை நினைத்து இரண்டு மந்திரங்களை உச்சரித்தப்போது அந்த புகை போக்கியினுள் இருந்து ஒரு பலமான கர்ஜனை பூசாரியின் காதுக்குள் மட்டும் கேட்டது.

பூசாரியின் மந்திர வித்தைக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியாத அந்த எச்சினி சந்திராவின் உடம்பிலிருந்து ஓடி அந்த புகை போக்கியினுள் நுழைந்து கொண்டதை பூசாரியின் எக்ஸ்ரே கண்கள் படம் பிடித்தன. எச்சினி தனக்கு பயந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டதும் இனி விடுவாரா பூசாரி! அடுத்த நிமிடமே சந்திராவின் கையில் மத்திரித்த கயிற்றை கட்டிய பூசாரி வேலை முடியும் மட்டும் அவளை ஒரு தனி அறையில் பூட்டி வைக்கும்படி சொன்னார். பூட்டிய அறைக்கு வெளியே ஒரு கரியால் கோடு கீறி வைத்த பூசாரி, அடுத்த நிமிடம் சமையல் கட்டுக்குள் தீப் பந்தத்தோடு நுழைந்தார்.

'ஏய் எச்சில் பேயே, எனக்கு பயந்து இங்கே வந்து பதுங்கிக் கொண்டாயா! இனி வெளியே வா!' என்று வீரசிங்கம் போட்ட கர்ஜனை அங்கே கூடி இருந்தவர்களையே அச்சமடையச் செய்தது.
'டேய் பூசாரி! என்கிட்டே உன் வேலையைக் காட்டதே! தைரியம் இருந்தா உள்ள வாடா, உன் கதையை முடிக்கிறேன்!' என்று புகை போக்கியிலிருந்து ஒரு பயங்கரமான குரல் ஒலித்ததை கேட்ட ஊர்வாசிகள் அப்படியே உறைந்து போய் நின்றார்கள்.

ஆனாலும் வீரசிங்கம் அசரவில்லை. இப்படி எத்தனையோ பேய்களைப் பார்த்து பழக்கப்பட்ட அவருக்கு இது புதுசா, என்ன! புகைப் போக்கியினுள் அடைந்திருக்கும் எச்சில் பேயை வளைப்பது ரொம்பவும் சுலபம் என்பது அவருக்குத் தெரியும்.

புகை போக்கிக்குள் வைத்தே பேயின் கதையை முடிக்கத் தீர்மானித்த பூசாரி, குங்குலியம் தூளை அள்ளி எடுத்து தீச்சட்டியில் போட்டார்.

பூசாரி பேயை புகைபோக்கியினுள் வைத்து எரிக்கப் போகிறார் என்பது கூடியிருந்தவர்களுக்கு தெரிந்ததும்  பேயின் பதில் தாக்குதல் எப்படி இருக்குமோ எனப் பயந்தவர்கள் அந்த இடத்தைக் காலி செய்தார்கள்.

அப்போது பூசாரி குங்கிலியப் புகையோடு பெரிய தீச் சுவாலையை அந்த புகைப் போக்கியினுள் குபீர் என்று அடிக்க  'அய்யோ…. அய்யோ.. எரியுதே!' என்று அந்த எச்சினி அவலக்குரல் எழுப்பியது.

பேய்க்கு யோசிக்கவே இடம் தரக்கூடாது என்பதால் பூசாரி தொடர்ந்து தீப் பிழம்பை அடித்து பேயின் கதறலை அடக்கி அதை ஒழித்துக் கட்டினார்.

புகைபோக்கியை மட்டும் உடைத்து விட்டு புதிதாக இடத்தை மாற்றி கட்டிக்கொள்ளுங்கள் இனி ஒரு பிரச்சினையும் வராது என்று வாக்குறுதி அளித்து விட்டு பூசாரி புறப்படார்.

No comments:

Post a Comment