Tuesday, July 5, 2016

ஹல்வத்துறையை திடுக்கிடச் செய்த கொலைச் சம்பவம்

தமிழில்-ராம்ஜி

புலத்சிங்கள ஹல்வத்துர பத்ரகாளி அம்மன் கோவிலின் தர்மகர்த்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த மாதம் அப்பிரதேசத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணையை ஆரம்பித்த களுத்துறை மாவட்ட குற்றச் செயல் ஒழிப்பு பிரிவினால் கொலை நடந்த ஒரு சில நாட்களிலேயே அக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முடிந்தது.

கொலையுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் பழைய இரும்பு சேகரிக்கும் நபரொருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸாருக்கு கொலையுடன் தொடர்படைய ஏனைய சந்தேக நபர்களை பிடிக்க முடிந்தது.

கோவிலின் பிரதம பூசாரியின் பேச்சைக் கேட்டே கோவில் தர்மகர்த்தாவை கொலை செய்ததாக சம்பந்தப்பட்ட பழைய இரும்பு வியாபாரி பொலிஸாரிடம் கூறியிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட கோவில் பூசாரியை புலத்சிங்கள பொலிஸார் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

பொலிஸார் கடுமையாக விசாரித்த போதும் தர்மகர்த்தா கொலையுடன் தான் சம்பந்தப்படவில்லை என்றே பூசாரி தொடர்ந்தும் கூறி வந்திருக்கிறார்.

எனினும் தர்மகர்த்தாவின் பிள்ளைகள் தமது தந்தையின் கொலை தொடர்பாக பூசாரியையே சந்தேகித்தனர்.

குறிப்பிட்ட பத்ரகாளி அம்மன் கோவிலில் சம்பந்தப்பட்ட பிரதம பூசாரியுடன் இரண்டு உதவி பூசகர்களும் இருந்தனர். கோவில் விடயங்களுக்கு இவர்கள் மூவருமே பொறுப்பாக இருந்தனர்.

தர்மகர்த்தா கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது உடலை கட்டிப் பிடித்தபடி பிரதம பூசாரி கதறி அழுதிருக்கிறார். இந்த அழுகை, மற்றவர்களிடம் அனுதாபத்தை தோற்றுவிப்பதற்கு பதில் சந்தேகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. தர்மகர்த்தாவின் பிள்ளைகளும் ஊர் மக்களும் இதுபற்றி பொலிஸாரிடம் கூறியதையடுத்து மூவரையும் பொலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.

கொலையுண்ட தர்மகர்த்தாவின் பெயர் சோமதாச. ஒன்பது பிள்ளைகளின் தந்தை. ஹல்வத்துர தோட்டத்தில் கங்காணியாக வேலை பார்த்த இவர் ஓய்வு பெற்றதும் பிரதேசவாசிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் கோவிலின் நிர்வாக வேலைகளை சோமதாச பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

கோவில் நிர்வாகத்தை பொறுப்பேற்றுக் கொண்ட சோமதாச தனது சொந்தச் செலவில் கோவில் வேலைகளை செய்து வந்திருக்கிறார்.

கோவில் பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் அவர் வெள்ளவத்தையில் இருந்த ஒரு பூசாரிக்கு அதிக சம்பளம் மற்றும் வசதிகளை அளித்து ஹல்வத்துர பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்திருக்கிறார். ஹல்வத்துற வந்த அந்த இளம் பூசாரி அந்த பிரதேசத்திலேயே திருமணமும் செய்து கொண்டார். திருமணச் செலவு முழுவதையும் சோமதாசவே பொறுப்பேற்றிருக்கிறார்.

கோவில் பூசாரிகள் மூவருக்குமான சாப்பாடு சோமதாசவின் வீட்டில் இருந்தே வழங்கப்பட்டிருக்கிறது. பூசாரிகள் மூவரும் கோவிலை நன்கு பராமரித்து பூஜை நடவடிக்கைகளிலும் சிறப்பாக செயற்பட்டதால் அப்பிரதேச மக்கள் அதிக அளவில் கோவிலுக்கு வரத் தொடங்கினர். இதனால் கோவிலுக்கு கிடைத்த ஆதாயமும் அதிகரித்தது.
சோமதாச கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். அவரது மகன்மாரில் ஒருவரும் அந்த வீட்டுக்கு அருகிலேயே குடியிருந்தார். சம்பவ தினம் இரவு சோமதாசவின் வீட்டில் லைட் எரியாததால் சந்தேகத்துடன் சென்று பார்த்தபோது வீட்டுக்கு அருகாமையில் இருந்த கொட்டிலில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாடுகள் இரண்டும் அங்கு இல்லாதிருந்ததைக் கண்டிருக்கிறார். மாடு போகட்டும் அப்பா எங்கே என்று அவர் தேடத் தொடங்கிய போது பிரதம பூசாரியும் அவருடன் சேர்ந்து கொண்டாராம்.

கோவிலுக்கு பின்புறம் சிறிது தூரத்தில் சோமதாச விழுந்து கிடப்பதை இருவரும் கண்டிருக்கின்றனர். ஓடிச் சென்று பார்த்தபோது கீழே விழுந்து கிடந்த சோமதாச உயிரற்ற நிலையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனே உடலை கட்டியணைத்தபடி பூசாரி கதறி அழத் தொடங்கியிருக்கிறார்.

சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் சடலத்தை மரண விசாரணைக்கு அனுப்பிவிட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சோமதாசவின் மரணத்தையடுத்து கோவிலுக்கு தோசம் வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தினால் கோவிலை கழுவிச் சுத்தம் செய்ததுதான் பூசாரியை பெரிய சங்கடத்தில் மாட்டிவிட்டது. கொலையை செய்துவிட்டு அடையாளங்களை மறைத்துவிடும் வகையில் கோவிலை கழுவியிருக்கிறார் என அவர் மீது சந்தேகம் வலுத்தது. அவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கவும் வழி வகுத்தது!

சோமதாச கொலை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். கோவிலுக்கு வருவோர் போவோர் என நிறையப் பேரை விசாரித்தனர். அண்மைக் காலத்தில் கோவிலுக்கு வெளியூரில் இருந்து வந்தவர்கள் பற்றி அக்கம் பக்கத்தவர்களிடம் விசாரித்தபோது பழைய இரும்பு சேகரிக்கும் ஒருவர் கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வந்து பூசாரியுடன் பேசிக் கொண்டிருந்ததை பொலிசாரிடம் சிலர் தெரிவித்தனர். அந்தப் பழைய இரும்பு வாங்கும் நபரைப் பற்றி விசாரித்த போது அவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. வெல்லம்பிட்டி பொலிஸாரின் உதவியுடன் பழைய இரும்பு வியாபாரியை கைது செய்து களுத்துறைக்கு அழைத்து வந்தனர்.

அந்தப் பழைய இரும்பு வியாபாரியின் பெயர் ஜோசப், பயந்த சுபாவம். உள்ளே வைத்து பொலிஸார் நாலு சாத்து சாத்தியதும் எல்லா உண்மையையும் கக்கிவிட்டார்.

ஜோசப்பும் பூசாரியும் பழைய நண்பர்கள். வெள்ளவத்தையில் இருந்த அவரை, தற்போது தான் புலத்சிங்களவில் இருப்பதாகக் கூறிய பூசாரி, ஜோசப்பை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு சென்றதும் ஜோசப்பின் பழைய இரும்பு வியாபாரம் பற்றி பூசாரி விசாரித்திருக்கிறார். "ஏதோ சுமாராகப் போகிறது" என்று கூறிய ஜோசப்புக்கு "நான் உனக்கு இரண்டு இலட்சம் ரூபா தருகிறேன். உனது வர்த்தகத்தை நன்றாக நடத்து" என்று கூறிய பூசாரியை ஜோசப் வியப்புடன் பார்த்தார். "இரண்டு இலட்சமா! அது இருந்தா பழைய இரும்புக் கடையையே ஆரம்பித்து விடுவேனே!" என்று ஜோசப் கூறியதும், "எனக்கு ஒரு வேலையை முடிக்க உதவி செய்தால் இரண்டு இலட்சம் தருவேன்" என்று கூறிய பூசாரி கோவில் தர்மகர்த்தா சோமதாசவை முடிக்க வேண்டும் என்று கூறி தனது திட்டத்தை பூசாரி விபரித்திருக்கிறார். அத்துடன் ஒரு இலட்சம் ரூபாவை முற்பணமாக ஜோசப்புக்குக் கொடுத்திருக்கிறார் பூசாரி.
"பஞ்சாங்கத்தில் நல்ல நாள் பார்த்திருக்கிறேன். அன்றைய தினம் விடயத்தை முடித்தால் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விடும்" என்று கூறியதுடன், "பயப்படாதே எல்லாம் நல்லபடியே நடக்கும். கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார்" என்றும் கூறிய பூசாரி, நைச்சியமாகப் பேசி ஜோசப்பை தனது திட்டத்துக்கு சம்மதிக்க வைத்தார்.

அன்று இரவு கோவிலுக்கு வந்த தர்மகர்த்தா சோமதாச, பூசாரிக்கு பணிஸ் மற்றும் வாழைப்பழங்களை வாங்கி வந்தார். மூவரும் நாற்காலிகளில் உட்கார்ந்து பணிஸ், வாழைப்பழம் சாப்பிட்டனர். ஜோசப்பை தனது நண்பன் என்று பூசாரி கூறியிருக்கிறார். சோமதாச நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது திடீரென தயாராக வைத்திருந்த உர பேக்கை எடுத்து சோமதாசவின் தலைக்கு மேல் போட்டு அவரை மூச்சுத்திணற வைத்தார். ஜோசப் பாய்ந்து சோமதாசவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

70 வயதாகியபோதும் திடகாத்திரமாக இருந்த சோமதாச திமிறிய போதும் நடுத்தர வயது பூசாரியும் ஜோசப்பும் அவரை திமிற விடாமல் உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டனர். ஓரிரு நிமிடங்களில் சோமதாசவின் அசைவுகள் அடங்கிப் போயின. அதன்பின்தான் தலையில் போட்ட உறையை பூசாரி அகற்றினார்.

சோமதாசவின் மூக்கில் இரத்தம் வழிந்தது. ஆனால் உயிர் பிரிந்திருந்தது.

சோமதாசவின் உடலை காட்டுப்பகுதியில் வீசி விடுவதே பூசாரியின் திட்டம். உடலை காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்ல ஒரு வேனை பேசியிருந்தார் பூசாரி. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு வேன் வரவில்லை. எனவே சோமதாசவின் உடலை கோயிலுக்கு அருகில் போட்டுவிட்டனர்.

மூக்கில் இரத்தம் வந்ததால் உடலை குப்புறப் போட்டனர். உயர் இரத்த அழுத்தம் காரணமாக கீழே விழுந்தபோது மூக்கில் இரத்தம் வந்ததைப் போல் இருக்க வேண்டும் என்பதற்காகவே உடலை குப்புறப் போட்டிருக்கிறார்கள்.

கோவிலுக்கு வரும் வருமானம் முழுவதையும் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை காரணமாகவே பூசாரி தர்மகர்த்தா சோமதாசவை கொலை செய்திருக்கிறார்.

சோமதாசவுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது. இதனைப் பயன்படுத்தி பழி தன் மீது வராமல் இருக்கும் வகையில் திட்டம் தீட்டிய பூசாரிக்கு கோவிலுக்கு தோசம் வரக்கூடாது என்ற நினைப்பில் சோமதாச இறந்த அடுத்த நாளே கோவிலை கழுவி சுத்தம் செய்ததுதான் பூசாரிக்கு விதியாகிப் போனது. அந்த சம்பவம்தான் பிறருக்கு பூசாரி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் ஜோசப் பொலிஸாரிடம் பிடிப்பட்டது பூசாரியின் நிலையை மிகவும் மோசமாக்கிவிட்டது!

கோவில் வருமானம் முழுவதையும் தான் ஒருவரே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பூசாரி இப்போது தடுப்புக் காவலில் தனது சகாக்கள் இருவருடன் கம்பி எண்ணுகிறார்.

அடுத்த சில நாட்களில் அவர் ஜெயில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கப் போகிறார்.
பஞ்சாங்கத்தில் நல்ல நேரம் பார்த்துத்தான் அவர் தனது திட்டத்தை நிறைவேற்றினார். ஆனால் கடவுள் சித்தம் அவரது நினைப்புக்கு மாறாக அமைத்து விட்டது!

No comments:

Post a Comment