Sunday, July 31, 2016

கூஜாவுடன் ஒரு குதூகல சந்திப்பு

நேர்காணல் -மணி ஸ்ரீகாந்தன்

கொழும்பில் நடக்கும் அனேக கொண்டாட்ட நிகழ்வுகளில் ‘கூஜா’ மறக்க முடியாத ஒரு நபர். இவரின் ஆட்டம், பாட்டம் இல்லாமலா. மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, புலியாட்டம், பேண்ட், மேளம் என்று அனைத்திற்கும் அனைவரும் ‘கூஜா’வைத்தான் தேடி வருகிறார்கள்.
கொம்பனி வீதி லீச்மர் தெருவில் வசிக்கும் அவரை ஒருகாலை வேளையில் சந்தித்து உரையாடினோம்.


“அப்பா வீட்டுல இல்லாத நேரத்தில என்ன நடந்தாலும் அப்பா வந்த பிறகு நான் அப்பாவிடம் போட்டுக்கொடுத்து விடுவேன். எனக்கு அப்படி ஒரு குணம் அந்த நேரத்தில்தான் ‘நவா’ தியேட்டரில புதையல் படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தில் கூஜா.... கூஜா.... கோல் சொல்லித் திரியும் கூஜா... என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்த என் சகோதரர்களும், குடும்ப அங்கத்தினர்களும் என்னைப் பார்த்து அந்தப் பாடலை பாடினார்கள். அந்தப் பாடலை அவர்கள் பாடும்போது எனக்கு கோபம் வரும். கண்டபடி நான் அவர்களைத் திட்டுவேன். பிறகு எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் என்னை அந்த ‘கூஜா’ என்கிற பெயரைச் சொல்லியே அழைக்க தொடங்கிவிட்டார்கள். இப்போது அந்தப் பெயரே எனக்கு டிரேட் மார்க் முத்திரைபோல பதிந்துவிட்டது. என் நிஜப் பெயர் ராஜேந்திரன். ஆனால் ‘கூஜா’ என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். ஆரம்பத்தில் என்னை கோபமடைய வைத்த அந்தப் பெயரே எனக்கு கைராசியான பெயராகவும் மாறிவிட்டது” என்று தனக்கு பெயர் வந்த காரணத்தை விளக்கிய கூஜா தனது பூர்வீகம் பற்றி இப்படி சொல்கிறார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இந்த கொம்பனி வீதி லீச்மென் பகுதியில்தான் வசிக்கிறேன்.
இளமையில்

எனவே நான் பிறந்தது இங்கேதான். எனது அப்பாவின் பெயர் நடராஜா. அம்மா மரியம் மார்கெட். அப்பாவை பற்றி பெரிதாக சொல்வதற்கில்லை. அவர் என்ன பெரிய தொழில் அதிபரா. சாதாரண ஆள். கோல்பேஸ் கடற்கரையில் பட்டம் செய்து விற்பதுதான் அவரின் வேலை. அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் எங்களை வளர்த்திருக்கிறார். எங்கள் குடும்பம் ரொம்ப பெரியது. எனக்கு மொத்தம் பதினாறு சகோதர சகோதரிகள். என்ன மலைப்பாக இருக்கிறதா. இன்றைக்கு ஒரு பிள்ளையை வைத்திருப்பவர்கள்கூட ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். அப்போ எங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். என் உடன் பிறப்புகள் பதினாறு பேரில் நான் நான்காவது. ஆனால் இன்று ஆறுபேர்தான் உயிரோடு இருக்கின்றோம். நான் இருக்கும் இந்த வீடு 42ல் எங்கப்பா வாங்கியது. இன்னமும் அதே வீட்டில்தான் இருக்கிறேன் என்ற கூஜாவிடம் பள்ளி வாழ்க்கையைப்பற்றி கேட்டோம்.

“எங்கப்பாவிடமிருந்து காற்றில்விடும் பட்டம் வாங்கியிருக்கிறேன். ஆனால் படிப்பை வாங்கவில்லை. பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்திருக்கிறேன். அவ்வளவுதான். என் படிப்பு பத்திரிகை வாசிப்பதோடு மட்டும்தான். அந்த முதல்நாள் என்னை பள்ளிக்கு அனுப்பிய அந்த நாட்கள் எனக்கு இன்னமும் ஞாபகத்திலிருக்கிறது. அம்மாதான் நான் கதற கதற என்னை கையை பிடித்து அந்த பாடசாலைக்குள் அனுப்பிவைத்தார். இப்போ ‘அல் இக்பால்’ பாட சாலையாக இருக்கும் அந்தப் பாடசாலையை அந்தக் காலத்தில் மீன்கடை ஸ்கூல் என்றுதான் அழைப்போம். நான் பாடசாலை சென்ற முதல் எனக்கு ‘அ’ சொல்லித் தந்த மாஸ்டர் இன்னமும் என் ஞாபகத்திலிருக்கிறார். அவர் பெயர் மரிக்கார் மாஸ்டர்.

இப்போ மாதிரி கதிரை, மேசை எல்லாம் அப்போ கிடையாது. நீளமான பெஞ்ச் போட்டிருப்பார்கள். அதில்தான் வரிசையாக அமர்ந்திருப்போம். அப்போ என்னோடு செல்வம், ஆதிமூலம், செல்வரட்ணம், முத்து உள்ளிட்ட பல நண்பர்கள் என்னோடு ஒன்றாக ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்போம். மாசத்தில எப்படியோ கஷ்டப்பட்டு மூனு நாள் பாடசாலைக்கு போவேன். மற்ற நாட்கள் எல்லாம் ஒரே ஆட்டம் பாட்டம்தான். எங்க வீட்டுலேயே நான் ரொம்ப சுட்டி. என் நண்பர்களான அன்சார், ராசா, தம்பி செல்வராஜா ஆகியோரும் காலையிலேயே எங்க ஊரை சுத்த கிளம்பிடுவோம்.

நவா தியேட்டர் பக்கத்தில் இருந்த டீ கடையில தேநீர் ஊற்றிய பிறகு வீசப்படும் அந்தக் கழிவு தேயிலையை ஒரு கூடையில கொட்டி வைத்திருப்பார்கள். நானும் என் நண்பர்களும் சென்று அந்த தேயிலையை ஒவ்வொரு பிடி உருண்டையாக எடுத்துக்கொண்டு கொம்பனி வீதி சுப்ரமணியர் கோயில் பக்கமாக போவோம். அங்கே கை ரிக்ஷாகாரர்கள் ரிக்ஷாவை வைத்துக்கொண்டு வரிசையாக நிற்பார்கள். இப்போ மாதிரி அப்போ வாகனங்கள் இல்லை. கொம்பனி வீதியில் கை ரிக்ஷாவும், மாட்டு வண்டியும்தான் இருக்கும். சவாரிக்காக காத்து நிற்கும் அவர்களின் மேல் எங்கள் கைகளிலிருக்கும் தேயிலை உருண்டையை எடுத்து வீசி அடிப்போம். அவர்கள் கத்திக்கொண்டு எங்களை துரத்த நாங்கள் சிட்டாக பறந்து விடுவோம். பிறகு கொம்பனி வீதி ஸ்டேஷன் பக்கமாக நடப்போம். அங்கே ஒரு மனிதர் தினமும் அந்த ஸ்டேஷனில் படுத்துக்கிடப்பார்.

 அவரை ‘ஸ்டேஷன் பல்லா’ என்று அழைக்க அந்த மனிதன் தூக்கம் கலைந்து, எழுந்து எங்களை துரத்துவார் அங்கிருந்து ஓடி கிளனி ஏரியாவிற்குள் நுழைவோம். அங்கே பக்கோன் என்ற ஒரு மனிதர் இருப்பார். அவர் எங்காவது வெட்டியாக கதை அளந்து கொண்டிருப்பார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவர் மீது கையில் கிடைக்கும் பொருட்களை வீசி அடித்து விட்டு நாங்கள் ஓடுவோம். இப்படி யாரையாவது நாங்கள் சீண்ட அவர்கள் எங்களை துரத்த நாங்கள் ஓட இது எங்களுக்கு ரொம்பவும் பிடித்த விளையாட்டு. கடைசியாக ஜாவா தோட்டத்திற்குள் நுழைய அங்கே ஒரு ஊமை பெண் இருப்பாள். அவளை கை சைகையால் கேலி செய்ய அவள் எங்களை துரத்துவாள். அவள் ஊமையாக இருந்தாலும் அவள் பொல்லாத ஆள். எங்களை வீடுவரை துரத்தி வருவாள். நாங்கள் வீட்டிற்குள் நுழைந்து பதுங்கிக் கொள்வோம். அவள் என் அப்பாவிடம் நாங்கள் செய்த சேட்டைகளை ஊமை மொழியில் சொல்வாள். அப்பா எங்களை வெளியே இழுத்து வந்து கம்பத்தில் கட்டிப்போட்டு அடிப்பார். இப்படி அடி வாங்குவது வாரத்திற்கு ஒரு முறையாவது நடக்கும். ஆனாலும் நான் திருந்துவதாக இல்லை. எனவே எனக்கு ஏதாவது தொழில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அப்பா நினைத்தார். அவருக்கு தெரிந்ததெல்லாம் பட்டம் செய்வது, வேப்பிலை கரம் ஆடுவது, உடுக்கை அடித்து பேய் ஓட்டுவது, குறி சொல்வது.

லீச்மன் பகுதியில் பத்தாம் இலக்க தோட்டத்தில் ஆத்திசாமின்னு ஒருத்தர் இருந்தாரு. அவருடைய முத்துமாரி கோயிலதான் எங்கப்பா சாமி ஆட்டம் ஆடுவார். இப்போ அந்த முத்துமாரி கோயில் இருந்த இடத்தில அடுக்குமாடி கட்டிடம் வந்து விட்டது. எனது தம்பி செல்வராஜாவுக்கு உடுக்கை அடிக்க பழக்கி கொடுத்த அப்பா  எனக்கு கரகம் ஆட சொல்லிக்கொடுக்க தொடங்கினார். தினமும் இரவு 9.30 மணியிலிருந்து 10.30 மணிவரையும் ரேடியோவில நேயர் விருப்பம் ஒலிபரப்பாகும். அந்த நேரத்திலதான் எனக்கு ஆட்டம் சொல்லிக்கொடுப்பார். அப்போ ரேடியோ கிடையாது. ‘ரெடிபீசன்’ என்று சொல்லுவாங்க. இப்போ இருக்கிற கேபிள் டிவி மாதிரி ஒரு வயர் வரும் அதை வீட்டில் பொருத்தியிருக்கும் ஒரு பெட்டியில் இணைத்துவிட அது பாடும். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று அலைவரிசை மட்டுமே இருந்தது. அதற்கு மாதா மாதம் வாடகைப் பணம் செலுத்த வேண்டும். நல்ல வசதியான பணக்காரர்கள் வீட்டுலதான் ‘ரெடிபீசன்’ இருக்கும். எங்க வீட்டுக்கு எதிரில இருந்தவங்க வீட்டுல ‘ரெடிபீசன்’ இருந்ததால அவங்க வீட்டுல போடுர நேயர் விருப்பம் எங்க வீட்டுக்கும் கேட்கும். அதில் இடம்பெறும் பாடலுக்கு நான் கரகம் ஆடவேண்டும்.

ஆரம்பத்துல ஒரு உடைந்த அம்மி கல்லை தலையில் வைத்துக்கொண்டுதான் ஆட்டம் பழகினேன். அந்தக் கல்லு ரொம்ப பாரம். கல்லு தலையில இருந்து கீழே விழுந்தால் அப்பா பிரம்புல அடிப்பாரு. அதனால ரொம்பவும் அவதானமெடுத்து ஆடுவேன். பிறகுதான் ஒரு குடத்தை என் தலையில் வைத்தார் அப்பா. அதற்கு பிறகு என் முதல் கரகாட்டம் ஆத்திசாமி கோயில்ல தான் நடந்தது. அன்று நான் வாங்கிய முதல் சம்பளம் இரண்டு ரூபாதான். என்னோடு என் அண்ணன் கணேசனும் கரகம் ஆடுவார். அப்போ கொழும்பு புறக்கோட்டையில் செய்யது பீடி, சோலார் பீடி, காஜா பீடி ஆகிய பெரிய பீடி கம்பனிகள் இருந்தது. அவர்களின் எற்பாட்டில் நடந்த அனேக மேடை நிகழ்ச்சிகளில் நானும் அண்ணனும் ஆடியிருக்கிறோம். மலையக பகுதி களுக்கு முதல் முறையாக பெருமாள் மாஸ்டர் என்னை கரகம் ஆட அழைத்துச் சென்றார். கரகத்தோடு, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட ஆட்டங்களையும் நான் ஆடுவேன்.

அப்போ என்னோடு சாரதா, நளினி, மல்லிகா ஆகியோரும் ஆடினார்கள். அந்த மூன்று பெண்களில் சாரதா எங்கே போனாள் என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு ‘கூஜா’ என்கிற பெயர் நாடு முழுவதும் பேசப்படும் அளவிற்கு தெரிந்து விட்டது. அதற்கு ‘பைலட் பிரேம்நாத்’ படமும் ஒரு காரணம் தான்.

சிவாஜி நடித்த அந்த படத்தில் சிவாஜியோடு கரகம் ஆடும் வாய்ப்பு எனக்கும், என் அண்ணன் கணேசுக்கும் கிடைத்தது. கதிர்காமத்தில் மூன்று நாள் படிப்பிடிப்பு நடந்தது ஒரு நாளைக்கு எனக்கு மட்டும் நூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதற்கு பிறகு எண்பதுகளோடு நான் கரகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, பேண்ட், மேளம், உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைக்கும் ‘கூஜா - பப்பர பப்பர பேண்ட்’ என்ற குழுவை அமைத்தேன். இப்போ என்னிடம், ஒரு விழாவிற்கு தேவையான அனைத்து ஆட்டம், இசைக் கருவிகள் அனைத்தும் இருக்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் என்னிடம் பணியாற்றுகிறார்கள். கொழும்பிலிருந்து நாடு முழுவதும் கோயில் திருவிழா, பெரஹேரா, கிரிக்கெட் மேட்ச், அரசியல் பேரணி என்று எதுவாக இருந்தாலும் கூஜாவின் இசைக் குழு கட்டாயம் இருக்கும் என்று சொல்லும் கூஜா. ஒரு கட்டை பிரம்மசாரி. இன்னும் தனியாகத்தான் இருக்கிறார்.

உங்களுக்கு எப்போதும் காதல் வரவே இல்லையா? என்று கேட்ட போது ‘என் காதல் 67ல் தொடங்கியது. இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நான் பள்ளித் தோட்டத்தில் ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலித்தேன். அவளுக்கும் என் மீது கொள்ளை ப்பிரியம். அவள் பாடசாலை போகும் போதே எங்கள் காதல் பத்திக் கொண்டது. அவள் பாடசாலை காலத்தில் எடுத்த போட்டோவை எனக்குத் தந்தாள். அதை இன்றும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அவளோடு சினிமாவிற்கு போனது, அவள் கையால் சமைத்த சாப்பாட்டை என் வீட்டிற்கு கொடுத்து அனுப்பி அதை நான் யாருக்கும் கொடுக்காமல் சாப்பிட்டது. மறக்க முடியவில்லை. ஆனால் யார் கண் பட்டதோ எங்கள் காதல் கைகூடவில்லை. அவள் இப்போது வேறு ஒருவனுக்கு மனைவியாகி குழந்தைகளும் இருக்கிறது. ஆனால் அந்தக் காதல் மட்டும் இன்று வரை என் மனதில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவளுக்கு இடம்கொடுத்த என் இதயத்தில் வேறு ஒருத்திக்கு இடம் கிடையாது. அதனால்தான் இன்று வரை தனிமையில் இருக்கிறேன் என்கிறார் கூஜா.

வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள் பற்றி? எனக்கு தொழில் கற்றுக் கொடுத்த என் அப்பா, அப்புறம் என் அண்ணன் கணேஷ். வாழ்க்கையில் நீங்கள் எதையாவது தவற விட்டு விட்டீர்களா?
ஆமாம், என் வாழ்க்கை. குடும்பம், பிள்ளைகள் என்று எதுவுமே இல்லையே.
நீங்கள் சந்திக்கணும் என்று ஆசைப்பட்டது?

‘நான் சின்ன வயசிலே இருந்தே எம். ஜி. ஆரின் தீவிர ரசிகன். தலைவரின் ஒரு படத்தையும் விடாமல் பார்த்திருக்கிறேன். எங்க தோட்டத்தில் இருந்த நாராயனோடுதான் படம் பார்க்கப் போவேன். அதற்காக அப்பாவிடம் எத்தனையோ நாள் அடிபட்டிருக்கிறேன். எம். ஜி. ஆர். நடித்த 168 படங்களில் 134 படங்களின் வீடியோ சீடிக்கள் என்னிடம் இருக்கிறது. எம். ஜி. ஆர். பட சீடிகளை சேகரிப்பது தான் என் பொழுது போக்கு.

எம். ஜி. ஆர். இலங்கைக்கு வந்த போது கோல்பேஸ் ஹோட்டலில்தான் தங்கியிருந்தார். அவர் வந்த செய்தி காட்டுத்தீ போல பரவ தலைவரை பார்க்க அதிகாலையிலேயே நண்பர்கள் பட்டாளத்துடன் கோல்பேஸ் ஹோட்டலுக்கு முன்னாடி சென்று அமர்ந்து விட்டேன். தலைவர் அதோ வந்தார். இதோ வர்ரார் என்ற பரபரப்புகள் அடங்கி சுமார் பகல் பன்னிரெண்டு மணியளவில் அவர் வெளியே வந்தார். எனக்கு அவரின் முகத்தை பார்க்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அவரை நெருங்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம். அப்போது கோல்பேஸ் ஹோட்டலில் வேலை செய்த கொம்பனி வீதியைச் சேர்ந்த சங்கிலி என்பவர் தலைவரிடம் கேட்டு அவரின் தொப்பியையும், கண்ணாடியையும் பெற்று வந்திருந்தார்.

 அதைப் பார்க்க நாங்கள் அவரின் வீட்டிற்கு சென்றோம். தலைவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் அவர் பட்டக்கண்ணு ஆச்சாரியார் வீட்டில் தங்கியிருப்பதை தெரிந்து கொண்டு அந்த வீட்டிற்கு சென்று அவர்களிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தலைவரை சந்தித்து கைகொடுத்தேன். தலைவரின் அந்த மென்மையான கரங்களை பற்றிய போது என் உடலில் மின்சாரம் பாய்ந்த மாதிரி ஒரு உணர்வு. உலகில் நான் பெரிதாக எதையோ சாதித்து விட்டதாக ஒரு நினைப்பு. என் வாழ்க்கையில் நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது அன்றுதான்.

என்று மகிழ்ச்சி பொங்க தன் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் கூஜாவிடம் அவர் கடந்து வந்த வாழ்க்கை பற்றி கேட்டோம். கடந்து வந்த பாதையில் இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான் என் வாழ்க்கை. ஆனால் இப்போது சொல்கிறேன். இந்த வாழ்க்கை சும்மா! ஏதோ வாழ்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு பிறகு என் பெயரை பறைசாற்ற குடும்பம், குழந்தை என்று எதுவுமே இல்லாமல் போய் விட்டதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. கடைசி காலங்களில் என்னை கவனித்துக் கொள்ள யாருமே இல்லாத அநாதையாகி விட்டேன். சுடுகாடு செல்ல உன் உடம்பில் வலு இருக்கும் போதே செத்துப்போ என்று ஒரு கவிஞன் சொல்லியிருக்கிறான். அது என் வாழ்க்கையில் பலிக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை என்று தனது பேட்டியை முடித்துக் கொள்கிறார் கூஜா.

 (நான் எழுதிய இந்த நேர்காணல் 2010ம் ஆண்டு  தினகரன் வார மஞ்சரியில் வெளியானது.)

No comments:

Post a Comment