Friday, July 29, 2016

வானொலிக் குயிலின் எண்ணப் பறவை சிறகடித்து…


நேர்காணல்- மணி  ஸ்ரீகாந்தன்

தமிழ் வானொலி வரலாற்றில் ராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. தமிழ் கூறும் நல்லுலகின் பெரிய பிரபலங்கள் அனைவரும் இவரின் குரலுக்கு அடிமைதான்.
தனது எழுபத்திரெண்டாம் வயதிலும் இன்றும் இந்த வானொலிக் குயில் தமிழ் பாடிக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைய இளையதலைமுறை அறிவிப்பாளர்களுடன் போட்டிக்கு நிற்கும் இந்த பெண் சிங்கத்திற்கு வயதானாலும் இன்றும் அந்த குரலின் கம்பீரம் குறையாமல் கணீரென்று ஒலிக்கிறது.

“காலையில் பாடசாலைக்கு செல்லும்போது கூடவே ஒரு பிளாஸ்டிக் பையில் கொஞ்சம் பேனா மையை ஊற்றி ஒரு பொட்டலாக கட்டி அதை பத்திரமாக புத்தகப் பையில் வைத்து எடுத்துக்கொண்டு செல்வேன்.

வகுப்பிற்குள் சென்றதும் அவரவர் கதிரையில் அமர்ந்துகொள்வோம். கடவுள் வணக்கத்திற்காக அனைவரும் எழுந்து பிரார்த்தனை செய்ய அனைவரும் எழுவோம். அதுவரை நேரம் பார்த்துக் காத்திருந்த நான் எனது பையிலிருந்த மை பொட்டலத்தை எடுத்து முன் சீட்டில் வைத்துவிடுகிறேன். பிரார்த்தனை முடிந்து அனைவரும் அமர்கிறார்கள்.
இளமைக் காலத்தில்

அப்போது முன்னால் நின்றிருந்த மாணவியும் கதிரையில் அமர மை பொட்டலம் ‘சதக்’ என்று உடைந்து வெள்ளை சட்டையில் பட்டுத் தெறிக்கிறது. அப்பாடா எனக்கு அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு வருகிறது. ஏதோ பெரிய சாதனையை செய்துவிட்டதாக ஒரு நினைப்பு.

வெள்ளை சட்டையில் மை கறை பட்டதை வகுப்பாசிரியரிடம் அந்த மாணவி சொல்ல குற்றவாளியை தேடும் படலம் தொடங்கியது. நான் எப்படியோ தப்பிக்கொண்டேன். ஆனால் பிறகு ஒரு நாள் நான் கையும் களவுமாக பிடிபட செமத்தையாக அடிவிழுந்தது. பிறகு பல மணிநேரம் கொளுத்தும் வெயிலில் முழங்காலில் நின்றேன்” இப்படி தனது பள்ளியின் மறக்க முடியாத நினைவுகளை மீட்டி நெகிழ்கிறார் ராஜேஸ்வரி சண்முகம்.

“அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா- பிச்சாண்டிபிள்ளை ஆகியோருக்கு பிள்ளையாக விவேகானந்த மேட்டில் உள்ள ஒரு வீட்டில் நான் பிறந்தேன். ஸ்ரீகதிரேசன் வீதியிலுள்ள புனித மரியாள் பாடசாலையில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. அந்த நாளை மறக்கமுடியாது.

மணல் வீடு கட்டி, விளையாடி, பாவாடை சட்டை போட்டு சினிமா பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்த என்னை பிடித்து ஸ்கூல் பேக் மாட்டிவிட்டு பாடசாலை என்கிற ஒரு உலகத்திற்கு அனுப்பி வைத்தபோது அது எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. எல்லா சிறுமிகளைப் போலவே நானும் அடம்பிடித்தேன்.
இடமிருந்து வலமாக கடைசியில் அமர்ந்திருப்பவர்

பாட்டிதான் என்னை பாடசாலைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே எனக்கு ‘அ’ கற்றுக்கொடுத்த ஆசிரியைதான் கபிரியல் டீச்சர். அவரை என்னால் மறக்கவே முடியாது. இன்றைக்கு அவங்க ஏதோ ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் தனது முதுமை காலத்தை கழிப்பதாக அறிகிறேன். அவரைப் பார்த்துவிட வேண்டும்” என்ற ராஜேஸ்வரி மேலும் தொடர்ந்தார்.

“அந்த நாட்களில் என்னோடு படித்த சக மாணவிகள் எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் புஸ்பம் கோமஸ், ஜெயசிலி அக்கா ஆகியோர் ஞாபகத்தில் இருக்கிறார்கள். நான் சின்ன வயசில் ரொம்பவும் அமைதியான சுபாவம். அந்த மை பொட்டலம் சம்பவத்தை தவிர நான் வேறு குறும்புகள் ஏதும் செய்யவில்லை. எனது குடும்பத்தில் ஐந்து பேர்.

இரண்டு சகோதரர்கள் மூன்று பெண்கள். இதில் மூத்தவள் நான். குடும்பத்தில் மூத்த பிள்ளையை பார்த்துதான் மற்ற பிள்ளைகள் ஒழுக்கமாக வளரும் என்று அம்மா சொன்ன அறிவுரையை கேட்ட என் குறும்புகள் அனைத்தும் எனக்குள்ளேயே அடங்கிப் போய்விட்டன.

கதிரேசன் வீதியில் இருந்த பாடசாலைக்குப் பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திற்கு படிக்க வந்துவிட்டேன். அங்கே எனக்கு நிறைய ஆசிரியர்கள் படிப்பித்தார்கள்.

அவர்களில் தெய்வேந்திரன், பண்டிதர் ஆறுமுகம், நாகபூசணி அம்மா, மெண்டிஸ் மாஸ்டர் ஆகியோரை என்னால் மறக்க முடியாது. என்னோடு பக்கத்து சீட்டில் இருந்தவர்தான் பஞ்சவர்ணம் லக்ஷ்மனன்.

அப்புறம் ராஜகுலேந்திரன், இவர்களோடு முக்கியமாக சண்முகநாதனையும், சந்திரலிங்கத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னோடு எப்போதும் போட்டிக்கே நிற்பார்கள். நான் அந்தப் பாடசாலையில் நடக்கும் பேச்சுப் போட்டி, நாடகம் போன்றவற்றில் பங்கு பற்றி பாராட்டைப் பெற்றிருக்கிறேன். அதனால் எனக்கு ‘சொல்லின் செல்வி’ என்ற சிறப்புப் பெயரும் பாடசாலை மட்டத்தில் உலா வந்தது.

பன்னிரெண்டு வயதாக இருக்கும்போதே சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கு பற்றினேன். அப்போது சரவணமுத்து மாமாதான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். பாடசாலை நாட்களில் அரங்கேற்றம் செய்யப்பட்ட கண்ணகி நாடகத்தில் நடித்தபோது அந்த நாடகத்தை பார்க்க வந்தவர்தான் சானா.

இலங்கை நாடக உலகில் மறக்கக் கூடாத, மறக்க முடியாத மனிதர்களில் இவர் முதன்மையானவர். அவருக்கு எனது நடிப்பு பிடித்துவிட, என்னை வானொலி நாடகத்திற்கு அழைத்தார்.

சானாவின் பயிற்சி பட்டறையில் உருவாக்கப்பட்ட பலர் இன்று உலகம் முழுவதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரின் பயிற்சி பட்டறையில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை ஒரு வரப்பிரசாதமாகத்தான் நான் நினைக்கிறேன்.

நான் நாடக உலகிற்கு பிரவேசம் செய்ய ஜிந்துப்பிட்டியில் இருந்த ராஜேந்திர மாஸ்டரின் நாடக சபாவும் ஒரு காரணம். ஜிந்துப்பிட்டியில் ஒரு பொது நீர்க் குழாய் இருந்தது. அங்கேதான் எல்லோரும் குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க செல்வோம்.

தண்ணீர்க் குழாய்க்கு நேராக குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நானும் எனது குடத்தை அந்த வரிசையில் வைத்துவிட்டு எனது முறை வரும் வரை காத்திருப்பேன். அந்த நேரத்தில் பக்கத்தில்தான் ராஜேந்திர மாஸ்டர் நாடக ஒத்திகை பார்ப்பார். எனக்கு அப்போது ஒரு பத்து வயதிருக்கும்.

ராஜேந்திர மாஸ்டர் வீட்டை ஒரு மதில் மறைத்துக் கொண்டிருக்கும். நான் அங்கே கிடக்கும் செங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதன் மேல் ஏறி நின்று ராஜேந்திர மாஸ்டர் வீட்டில் நடக்கும் நாடக ஒத்திகையை பார்த்திருக்கிறேன். ஆனால் அவரின் நாடக குழுவில் நான் சேர்ந்து நடிக்கவில்லை.

அன்று நான் அப்படி வேடிக்கை பார்த்த நாடக ஒத்திகைதான் எனக்குள் நாடக கலையை விதைத்தது என்று சொல்ல வேண்டும்.

பிறகு சானாவின் அழைப்பை ஏற்று வானொலி நிலையத்திற்குள் நான் நுழைந்த போது என்னை கா. சிவதம்பி, ரொசாரியோ பீரிஸ் உள்ளிட்டோர் வரவேற்றார்கள். என்னை அதற்கு முன் எங்காவது அவர்கள் பார்த்திருந்தார்களோ தெரியவில்லை. அவர்களின் வரவேற்பில் ஒரு பாச உணர்வு இருந்ததை நான் உணர்ந்தேன்.

அன்று அவர்களின் வரவேற்பில் இலங்கை வானொலிக்குள் நுழைந்த எனக்கு இன்றுவரை வெற்றியைத் தான் என் தாய் வானொலி எனக்கு தந்துகொண்டிருக்கிறாள்.

அதனால் தான் என்னவோ இன்றும் என்னை என் தாய் வானொலியிலிருந்து யாராலும் பிரித்துவிட முடியாமலிருக்கிறது. இன்று, நேற்று வந்த உறவா இது! என் மரணம் வரை பிரிக்க முடியாத உறவல்லவா அது!’ என்று தமது தாய் வானொலி பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டவரிடம், காதல் பற்றிக் கேட்டோம்.

‘காதல் எல்லோருக்கும் வருவது தானே! அது எனக்கும் வந்தது. நான் நாடக உலகிற்குள் பிரவேசம் செய்த போது எனக்கு எத்தனையோ பேர் அறிமுகமானார்கள். ஆனால் அவர்களில் சி. சண்முகத்தை பார்த்ததும் ஒரு ஈர்ப்பு எனக்குள் தோன்றியதை என்னால் மறுக்க முடியாது.

என் முதல் நாடகம் ‘விடிவெள்ளி’ அதற்கு பிறகு நான் நடித்த பெரும்பாலான நாடகங்களை எழுதியவர் சி. சண்முகம் தான்.

எல்லா நாடகங்களிலும் எனக்கு கதாநாயகி வேடம் வழங்கினார் சண்முகம். விவேகானந்த பாடசாலைக்கு எதிரில்தான் எங்கள் வீடு இருந்தது. அந்தப் பாடசாலையில் பகுதி நேர ஊழியராக சண்முகம் வேலை பார்க்க வந்தபோது அவரை எதிர் எதிரே நான் சந்தித்திருக்கிறேன்.

பார்த்ததும் இருவரும் சிரித்துக் கொள்வோம். இப்படியே சிரித்து, சிரித்து அது காதலாகி கசிந்து கல்யாணத்தில் முடிந்தது.

பாபர் வீதியிலுள்ள ஒரு மண்டபத்தில் தான் எங்களின் திருமணம் நடைபெற்றது. இப்போது அந்தக் கல்யாண மண்டபம் இல்லை. எங்கள் திருமணத்திற்கு கலைத் துறையைச் சேர்ந்த பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். குறிப்பாக லெனின் மொறாயஸ், பட்டக்கண்ணு சற்குணன் அண்ணன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

அந்தக் காலத்தில் போட்டோ பிடிப்பது என்பது பெரிய விசயம். கல்யாண வீடுகளில் கெமராவை பார்க்க முடியாது. பெரிய வி. ஐ. பி. வீட்டுக் கல்யாணத்தில்தான் கெமரா வைத்து படம் பிடிப்பார்கள்.

ஆனால் எங்கள் கல்யாணயத்தில் பட்டக்கண்ணு சற்குணன் ஒரு சிறிய கெமராவை கொண்டு வந்து எங்களை போட்டோ எடுத்தார்.

அது எங்களுக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது. திருமணப் படத்தை புறக்கோட்டையில் உள்ள லங்கா ஸ்டூடியோவிற்கு சென்று படம் பிடித்தோம்’ என்ற ராஜேஸ்வரியிடம், வாழ்க்கையில் எதையாவது தறவிட்டதாக கருதுகிறீர்களா? என்று கேட்டோம்.

‘நான் வானொலியில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்காக என்னைத்தேடி வந்த பல நல்ல வாய்ப்புகளை தவறவிட்டிருக்கேன். அப்படி நான் தவறவிட்டது தான் இன்று ராஜேஸ்வரி சண்முகம் என்கிற என் பெயர் உலகம் முழுவதும் உலா வந்ததற்கும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போதும் பயப்படுகிற விசயம்?

‘ஒரு மணி நேரம் வானொலி நிலையத்தின் மைக் முன்னால் அமரும் போது என்னையறியாமல் பயம் ஏற்படும். ஏனென்றால் நான் சொல்லும் விசயங்களை கேட்டு ரசிக்கும் ரசிகர்களின் நம்பிக்கைக்கு உரியவளாக நான் இருக்க வேண்டுமே ஏதாவது பிழைவந்து விடக் கூடாதே என்கிற பயம்’

நாடகத் துறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதாவது ஞாபகத்திலிருக்கிறதா?

‘மறக்க முடியாத கலைஞர் ஏகாம்பரம், சாத்தான்குளம் ஜப்பார் உள்ளிட்ட பலரோடு நான் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஒரு முறை என்னோடு ஜோடியாக நடிக்க வேண்டிய நடிகர் குறித்த நேரத்திற்கு வராத காரணத்தினால் அந்த பாத்திரத்தில் எனது கணவரே நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் முறையாக மேக் அப் போட்டு மேடைக்கு வந்தார். நாடகக் காட்சி தொடங்கியதும், நாடக காட்சியில் இல்லாத வசனங்களை அவர் பேச நான் தடுமாறிப் போனேன். அடுத்த காட்சியில் நடிக்க முடியாது என்று நான் மறுக்க என் கணவரோ நான்தானே நாடக வசனத்தை எழுதினேன். அதனால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் வசனத்தை மாற்றிப் பேசினேன் என்று கூறி தன் தவறுக்காக வருந்தினார். அதற்குப் பிறகுதான் நடிக்கவே சம்மதித்தேன்’
தன் கணவர்,மகளுடன்

என்று அந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டவரிடம், நீங்கள் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது எப்போது என்று கேட்டோம். 'நான் செய்த இந்தக் கலைப் பணிக்காக 87ல் இலங்கை கலாசார அமைச்சு 'வாகீச வாஹினி' என்ற விருதை வழங்கியது. அந்த சந்தர்ப்பத்தில் ரொம்பவும் மகிழ்ந்து போனேன். அதன் பிறகு தமிழகத்தில் எனக்கு 'வானொலிக் குயில்' விருது வழங்கினார்கள். அப்போது மகிழ்ச்சியில் என்னையே மறந்து போனேன்.

அந்த விருது பாரதி பிறந்த மண் எட்டயபுரத்தில் வழங்கப்பட்டதால் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் போய்விட்டது' என்று நெகிழ்கிறார் ராஜேஸ்வரி.

யாரையாவது சந்திக்க முடியாமல் போனதாக நீங்கள் நினைத்து கவலைப்படுகிறீர்களா?

'சிவாஜி இலங்கை வந்தபோது எல்லாக் கலைஞர்களும் அவரைச் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது இலங்கை வானொலி பெண் அறிவிப்பாளர்கள் சிவாஜியை பார்க்கச் சென்ற போது நீங்கள் ராஜேஸ்வரி சண்முகமா? என்று விசாரித்திருக்கிறார். இதை தயானந்தா என்னிடம் வந்துகூற, நானும் சிவாஜியைப் பார்க்க போனேன், அவர் என்னைப் பார்த்ததும் 'காலையில் உங்க குரலை இலங்கை வானொலியில் கேட்டுத்தான் கண் விழிக்கிறேன்.... பின்னேரம் சாப்பிட்டு விட்டு கண் அயரும் போதும் உங்கள் குரல்தான் என் காதுகளில் தேனாக பாய்கிறது' என்று அந்த நடிப்பின் இமயம் என்னைப் புகழ்ந்த போது என் உடல் சிலிர்த்தது. அதன்பிறகு தமிழகம் வந்தால் தன் வீட்டிற்கு கட்டாயம் வரும்படி எனக்கு அழைப்பும் விடுத்தார். அவரின் அழைப்பிற்கு பிறகு நான் ஒரு முறை தமிழகம் சென்ற போது அவரின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் சிவாஜி அப்போது தஞ்சாவூரில் இருந்ததால் அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.

அதற்குப் பிறகு நான் அவரை பார்க்கப் போனபோது அவர் உயிருடன் இல்லை.'

என்று அந்த பழைய ஞாபகத்தை மீட்டிய அறிவிப்பாளரிடம் 'ம்' அது ஒரு காலம் என்று நீங்கள் இப்போதும் நினைத்து ஏங்குவது...? என்று கேட்டோம்.

'இலங்கை வானொலியின் அந்தப் பச்சை புல் தரையில் அமர்ந்து நாடக ஒத்திகை பார்த்த அந்த நாட்கள்... அப்புறம் எங்களின் நாடகங்கள் மேடையேற்றப்படும் லயனல் வென்ட், சரஸ்வதி மண்டபத்தை இன்று கடந்து போகும் போதும் அந்த இளமையான பழைய நாட்கள் வந்து போகும். எங்கள் நாடகம் குறிப்பாக சனி, ஞாயிறு தினங்களில்தான் அரங்கேறும். அதற்கு முதல் நாளே பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்து 'அப்பனே பிள்ளையார் அப்பா நாளைக்கும் அதற்கு எடுத்த நாளும் மழை வராமல் நீ தான் காப்பாற்ற வேண்டும்...

நாடகத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் தடுத்தால் இன்னும் பத்து தேங்காய்கள் உடைக்கின்றேன்னு' பிள்ளையாருக்கு நேத்தி வைப்பேன். அதன்படியே நாடகமும் சிறப்பாக அரங்கேறும்... அந்த நாட்கள் திரும்பவும் வருமா...?' என்று ஏங்கும் நமது வானொலிக் குயிலிடம் வாழ்க்கையைப் பற்றிய தங்களின் புரிதல் என்ன என்று கேட்டோம்.

'நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை இனிமையானதுதான் ஆனால் வாழ்க்கை நிரந்தரமில்லை என்பதை நினைக்கும் போதுதான் விரக்தியாக இருக்கிறது. என் மூத்த மகன் சந்திரமோகனை காலன் பறித்துக்கொண்டபோது என் வாழ்க்கையில் பாதி பறிப்போனதாக ஒரு உணர்வு என்னில் ஏற்பட்டது.

காலச் சக்ரம் சுழல, மீண்டும் அதே சகஜ வாழ்க்கை திரும்பக் கிடைத்தது. வானொலி, ஒளிப்பதிவு என்று மீண்டும் பரபரப்பாகி விட்டேன். வாழ்க்கையின் ஓட்டத்திற்கு அமைய நாம் பயணம் செய்யவேண்டும். வாழ்க்கையின் இறுதியை நினைத்துப் பார்த்தால் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் அச்சமாகத்தானே இருக்கும்!' என்று கூறி முடித்துக் கொண்டார் ராஜேஸ்வரி.
இந்த பசுமையான நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்ட வானொலிக் குயில் இன்று உயிரோடு இல்லை.

2010ம் ஆண்டு வெளியான தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரிக்கப்பட்டிருந்த எனது நேர்காணலை தமிழ் வம்பனில் மீள் பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment