Sunday, July 24, 2016

செல்வராஜா மாஸ்டருடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்புநேர்காணல்: மணி  ஶ்ரீகாந்தன்

ம் நாட்டு மெல்லிசை பாடல்களின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அதில் இசையமைப்பாளர் எஸ். செல்வராஜாவின் பெயரும் முத்திரை பதிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து புகழ் பெற்று விளங்கும் இவர் மெல்லிசை, சினிமா, ஆல்பம் என்று இசைத்துறையில் ஒரு ரவுண்ட் வந்த கலைஞர்.

இலங்கை தமிழ் சினிமாவில் ‘அவள் ஒரு ஜீவநதி’ திரைப்படத்தில் இவர் இசையமைத்த பருவம் பதினாறு அவள் பார்வை....... என்ற பாடல் அந்தக் காலத்தில் பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்ட பாடல் இன்றும் வானொலியில் வலம் வரத்தான் செய்கிறது.

அதேபோல் என். ரகுநாதன் பாடிய மூங்கிலின் நாதமும் என்கிற பாடலும் இவரின் இசையில் உலகத் தமிழர்களின் இல்லங்களில் தினமும் ஒரு கந்த சஷ்டி கவசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்றும் இசை, பாட்டு என்று மனிதர் பரபரப்பாகத்தான் இருக்கிறார்.
செல்வராஜா

“மருதானை சென்றல் ஸ்கூல்தான் எனக்கு அரிவரி கற்றுக்கொடுத்த பாடசாலை. இப்போது அந்தப் பாடசாலை பெயர் மாற்றம் பெற்று சிங்களப் பாடசாலையாக இயங்கி வருகிறது. அந்த முதல் நாள் பள்ளி அனுபவம் இன்றும் என் ஞாபகத்தில் அப்படியே இருக்கிறது.

காலையில் புதிய ஆடை உடுத்தி தண்ணீர் போத்தல், சாப்பாட்டு பெட்டி ஆகியவற்றை பையில் போட்டு என் தோளில் மாட்டிவிட்டார்கள். பாடசாலைக்கு அழைத்துச் செல்ல என் பாட்டிதான் தயாராக இருந்தாள். குடும்ப உறுப்பினர்கள் எனக்கு டாட்டா காட்டி வழி அனுப்பி வைக்கும்போது எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

பாடசாலைக்கு போகமாட்டேன் என்று அழுதேன். ஆனால் என் பாட்டி என் கையைப் பிடித்து நான் கதற கதற என்னை இழுத்துக்கொண்டு போனாள் அங்கே ஒரு இடத்தில் என்ன அமர வைத்துவிட்டு பாட்டி வெளியே வந்துவிட்டாள். நான் பாடசாலையை விட்டு வெளியே வரும் வரை பாட்டி எனக்காக வெளியே காத்திருந்தாள். அந்தப் பாடசாலையில் ஒரு டீச்சர் இருந்தார்.

அவர் ரொம்பவும் கண்டிப்பான ஆள். எனக்கு அவரைக் கண்டாலேயே பயம் பிடுங்கும்.... ‘மேம்’ என்று தன்னை அழைக்கும்படி எனக்கு கட்டளை போட்டார் அந்த ‘மேம்’! அவர் தான் எனக்கு அரிவரி எழுத கற்றுக்கொடுத்தவர்’ என்று தனது பாடசாலை பிரவேசம் பற்றி சுவைபட விபரிக்கும் செல்வராஜாவின் நிஜப்பெயர் வடிவேலன்.

இந்தப் பெயரில்தான் தனக்கு இசை ஆசிரியருக்கான நியமனம் கிடைத்ததாக சொல்லும் செல்வராஜா திருகோணமலையில் உள்ள ஒரு பாடசாலையில் இசை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார்.
இளமையில்

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மருதானை டெக்னிக்கல் சந்தியில் தான். இந்த சந்தியில் தர்மசேன என்பவர் இசைக் கருவி விற்பனை செய்யும் ஒரு கடை வைத்திருந்தார். நான் சின்னவனாக இருக்கும் போதே அந்தக் கடைக்குச் சென்று அங்குள்ள கருவிகளை எடுத்து தட்டிப்பார்ப்பேன்.

அங்குவரும் இசைக் கலைஞர்களின் பெயர்களையும் கேட்டு தெரிந்துகொள்வேன். அப்படி நான் ஒரு மிருதங்கத்தை தட்டும்போது எழுந்த ஓசையில் ஒரு தாளம் இருப்பதை அவதானித்த என் தந்தை எனக்குள் இசை ஞானம் இருப்பதை உணர்ந்துகொண்டார்.

அதன் பிறகு எனக்கு பத்து வயதாக இருக்கும்போது ஒரு மாஸ்டரை வீட்டுக்கு வரவழைத்து ஆர்மோனியம் கற்றுக்கொள்ளச் செய்தார். பிறகு கிருஷ்ணபிள்ளை மாஸ்டரிடம் கர்நாடக சங்கீதம் முறையாக கற்றேன்.

எழுபத்தோராம் ஆண்டு இலங்கை வானொலியில் மெல்லிசை பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது எனக்கு அதில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை எனக்கான வெற்றிக்கு களமாக நான் மாற்றிக்கொண்டேன். அதன் பிறகு எனக்கு மெல்லிசை பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அதிகமாயின.

அப்போது தான் மாத்தளை கார்த்திகேசு தயாரித்த ‘அவள் ஒரு ஜீவநதி’ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்தப் படத்தில் விஜயராஜா நாயகனாக நடித்தார். அந்தப் பட வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாகவே முறுகல் என்ற நாடகத்திற்கு இசையமைத்துத் தந்தேன்’ என்று ஞாபகப்படுத்திக் கூறியவர். தன் வாழ்க்கையில் தான் சந்தித்த மறக்க முடியாத நபர்களைப் பற்றிக் கூறத் தொடங்கினர்.

“நான் அரிவரி படிக்கப் போகும்போது நல்லதம்பியுடன் தான் செல்வேன். அந்தக் குழந்தை பருவத்தில் இருவரும் பள்ளிச் சென்ற அந்தக் காலம் இன்று நினைத்தாலும் அப்படியே பசுமையாக இருக்கிறது. அப்புறம் சாஹிராவில் நான் படிக்கும்போது என்னோடு படித்த என் நண்பன் கணேசன் மறக்க முடியாதவன்.

அவன் ஒரு சாயிபக்தன். நான் இசையில் ஆர்வமாக உள்ளதை அறிந்த அவன் சாயி பஜனையில் பங்குபற்றினால். உன் இசை ஆர்வத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்று அவன் சொல்ல, நானும் ருத்ரா மாவத்தையில் நடைபெறும் சாயி பஜனையில் கலந்துகொண்டு பாட ஆரம்பித்தேன். என் இசை ஆர்வத்திற்கு மேலும் உந்து சக்தியாக விளங்கிய கணேசனை என்னால் மறக்க முடியாது.

கலைத்துறையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவம் பற்றி செல்வராஜா விவரித்தார்.

“அவள் ஒரு ஜீவநதி படத் தயாரிப்பாளரான மாத்தளை கார்த்திகேசு என்னிடம் வந்து, ‘நீங்க எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். எனது படத்திற்கு நீங்க தான் இசையமைக்கிறீங்க... ஆனா பெரிய சம்பளம் எல்லாம் என்னால் தர முடியாது’ என்றார். நானும் சரி என்று சம்மதித்தேன். முதல் நாள் பாடல் ஒலிப்பதிவு, மாத்தளையில் மாசி மாதம் திருவிழா... என்று தொடங்கும் பாடல்.

அந்த பாடலுக்கு நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட குறைவான வாத்தியக் கருவிகளையே பாவித்தேன். முதல் நாளே எல்லா இசைக் கருவிகளையும் கொண்டு வந்து மாத்தளை கார்த்திகேசுவுக்கு ஏன் வீண் செலவை ஏற்படுத்த வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் தான் நான் அப்படிச் செய்தேன். ஆனால் மாத்தளை கார்த்திகேசுவுக்கு எங்கே இவன் இந்த இரண்டு இசைக்கருவிகளையேதான் படம் முழுவதும் பயன்படுத்தப் போகிறானோ என்கிற பயம் ஏற்பட்டிருந்தது எனக்குத் தெரியாது.

உடனே இந்த விடயத்தை றொக்சாமி மாஸ்டரிடம் சொல்லி குறைப்பட்டு கொண்டாராம். அதற்கு றொக்சாமி மாஸ்டரோ ‘செல்வராஜா ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் அப்படிச் செய்திருக்கிறார். அவரைப் பற்றிய பயம் தேவையில்லை. உங்கள் படத்திற்கு சிறந்த பாடல்களைக் கொடுப்பார்’ என்று எனக்கு நற் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்.

அடுத்த நாள் ‘பருவம் பதினாறு என் பார்வை...’ என்ற பாடலை ஒலிப்பதிவு செய்தோம். முதல் நாளை விட அன்று நிறைய இசைக் கருவிகளை பாவித்தோம். அப்போதுதான் மாத்தளை கார்த்திகேசுவின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. படம் வெளியாகி பாடல்கள் சக்கை போடு போட்டன.

ஆனால் எனக்குத்தான் வாய்ப்புகள் வரவில்லை. இதிலிருந்து ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்துகொண்டேன். என்னதான் நமக்கு திறமை இருந்தாலும், கடவுளின் அனுக்கிரகம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது என்பதை இது எனக்கு அனுபவ ரீதியாகக் கற்றுக்கொடுத்தது.

பிறகு மலரன்பன் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பம் வெளியிட்டோம். அதில் உலகளாவிய ரீதியில் சக்கைபோடு போட்ட ஒரு பாடல் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். கிருஷ்ணனிடம் எப்போதும் இருக்கின்ற புல்லாங்குழல் பற்றி ஒரு புத்தகத்தில் படித்திருந்தேன்.

புல்லாங்குழலிடம் நேர்மை, தியாகம், எளிமை என்ற மூன்றும் இருக்கின்றன. தன்னையே துளையிட்டு கொண்ட தியாகம். நேர்மையாக இருப்பது பத்து ரூபா கொடுத்து சந்தையில் வாங்கக்கூடிய ஒரு பொருளும் கூட. இதை மலரன்பனிடம் சொன்னேன்.

இதைக் கேட்டதும் மலரன்பன் பாடல் வரிகளை எழுதினார். அதுதான் ‘மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும்...’ என்ற என். ரகுநாதன் பாடிய பாடல். அந்தப் பாடல் எனக்கு பெரிய பேரை வாங்கிக் கொடுத்தது’. என்ற செல்வராஜாவிடம், வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டு விட்டதாக வருத்தப்பட்டிருக்கிறீர்களா? என்று கேட்டோம்.

ஆம். இசைத் துறையில் நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறேன். ஆனால் என்னைவிட சின்ன பையன் யார் யாரையோ காக்கா பிடித்து இசைப்பணிக்காக ஜனாதிபதி விருது வாங்கிட்டான்.

அதை நினைத்துத்தான் வருத்தப்படுகிறேன். சந்திரிகா ஜனாதிபதியாக இருக்கும் போதுதான் அந்த விருது வழங்கப்பட்டது” என்று கூறிய அவர், தகுதியானவர்கள்தான் கெளரவிக்கப்பட வேண்டும் என்றார்.

இசைத்துறையில் தன்னை ஆச்சரியப்படுத்திய விடயங்களாக சிலவற்றை இங்கே விபரிக்கிறார் செல்வராஜா.

அவள் ஒரு ஜீவநதி படத்தில் வந்த பக்தி கலந்த பாடல் தான் “மாத்தளையில் மாசி மாத திருவிழா” என்ற பாடல். இதன் பாடல் பதிவின் போது ஒரு கருவியை வாசிக்க நூர் என்கிற மலே கலைஞர் வந்திருந்தார்.

அந்தப் பாடலில் உடுக்கை பயன் படுத்தப்படவிருந்ததால் எனது சக இசைக் கலைஞர் உடுக்கையை கையிலிருந்து வெளியே எடுத்ததும் அந்த மலேக்காரர் ஏதோ பாம்பை கண்டவர் போல பயந்து எழுந்தார். ‘எனக்கு உடுக்கையை கண்டாலேயே பயம்..... ஏனென்றால் அதை தட்டியவுடன் எனக்கு அருள் வந்து விடும். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சினை. எனவே அதை உள்ளே வையுங்கள்’ என்றார் நூர். அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என்னடா இது இந்தப் பாடலின் முக்கிய இடமே இந்த உடுக்கை தான்.... இதை அடிக்க வேண்டாம் என்கிறாரே என்று கவலை வந்து விட்டது. பிறகு நூர் வாசிக்க விருந்த கருவியை நிறுத்தி விட்டு உடுக்கையை மட்டும் உபயோகப்படுத்த முடிவெடுத்தோம். அந்தப் பாடல் ஒலிப்பதிவு முடியும் வரை நூர் கலையகத்தின் கேன்டினில் அமர்ந்திருந்தார்.”

காதல் அனுபவம் பற்றி அவரிடம் கேட்டோம். கேட்டதுமே செல்வராஜாவின் முகத்தில் சோகம் படர்கிறது.

“எங்க பெரியம்மா வீட்டின் பக்கத்தில்தான் என்னை சிறைப்படுத்திய அந்தப் பெண் இருந்தாள். என் பெரியம்மா திருத்தல யாத்திரைகள் மேற்கொள்வார். அப்படித்தான் ஒரு முறை கதிர்காமத்திற்கு சென்றோம். அப்போது அந்தப் பெண்ணும் எங்களோடு வந்தாள். அப்போது தான் எங்கள் இருவருக்கும் காதல் பத்திக் கொண்டது. இருவரும் உயிருக்குயிராக காதலித்தோம். யார் கண் பட்டதோ, எங்களின் காதல் இடையிலேயே முறிந்து விட்டது. அதற்குப் பிறகு என் வாழ்க்கையில் நான் வேறொரு பெண்ணை நினைத்தும் பார்க்கவில்லை. இன்று என் வாழ்க்கை தனியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இன்று அந்தப் பெண் கொழும்பில் தான் இருக்கிறாள். ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஆசை வந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேச வேண்டும் என்கிற எண்ணம்..... ஆனால் முடியவில்லை. எனக்குள் எழுந்த அந்த அற்ப ஆசையை நானே அடக்கிக் கொண்டேன். மரணத்திற்கு முன்னராவது ஒரு தடவையாவது அவளுடன் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முடியவில்லையே.... இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். தனிமை ரொம்பவும் கொடுமையானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்” என்று சொல்லும் போது அவரது குரல் சோபையிழந்திருந்தது.

ம்.... அது ஒரு காலம் என்று நீங்கள் இன்றும் நினைத்து ஏங்குவது?

“இந்த வீட்டில் என் சகோதரர்களோடு ஓடி ஆடி விளையாடிய அந்த நாட்கள்.... ஐந்து பெண்களும் மூன்று ஆண்களுமாக மொத்தம் எட்டுப் பேர்.... இனி கொண்டாட்டத்திற்கு கேட்கவும் வேண்டுமா! அப்பா வியாபாரம் செய்ததால் பணத்திற்கும் பஞ்சமிருக்கவில்லை. வருடா வருடம் கதிர்காமத்திற்கு குடும்பமாகச் செல்வோம். அப்படிச் செல்லும் போது திஸ்ஸமஹாராமை வரையில்தான் தார் சாலை இருந்தது. அதற்குப் பிறகு மண் ரோடுதான். மாட்டு வண்டியில்தான் பயணம். அப்பா ஒரு மாட்டு வண்டியை வாடகைக்கு வாங்கி எங்கள் அனைவரையும் மாட்டு வண்டியில் ஏற்றி விட்டு வண்டிக்குப் பின்னாலேயே நடந்து வருவார். அந்த வண்டியில் நாங்கள் பாட்டுப் பாடிக் கொண்டே பயணித்த அந்த அனுபவம் இன்று நினைத்தாலும் இனிக்கிறது. எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் அந்த சுகத்தை திரும்பவும் பெற முடியாதுங்க.....” என்று பெருமூச்சு விடுகிறார் செல்வராஜா.

வாழக்கையை எப்படிப் புரிந்து கொண்டீர்கள்?

“வாழ்க்கை நிஜம் இல்லை. கெளதம புத்தனின் சிந்தனைப்படி சொல்வதானால் வாழ்க்கை பொய். இப்போது என்னையே எடுத்துக்கங்க... நான் நூறு வருடங்களுக்கு முன்னாடி எங்கே இருந்தேன் என்பது எனக்கே தெரியாது. அது மாதிரி தான் நான் இறந்த பிறகு ஒன்றுமே இல்லை. உலகம் என்கிற ஒரு வாடகை வீட்டில் கொஞ்ச காலம் தங்கி விட்டுப் போகிறோம். அவ்வளவு தான்” என்று தமது நினைவுகளை நிறைவு செய்தார் செல்வராஜா மாஸ்டர்.

(நான் எழுதிய இந்த நேர்காணல் 2010ம் ஆண்டு  தினகரன் வார மஞ்சரியில் வெளியானது.)

No comments:

Post a Comment