Friday, July 22, 2016

மனம் திறந்து பேசுகிறார் பி.பி.தேவராஜ்நேர்காணல் -மணி  ஶ்ரீகாந்தன் 

சூரியன் சுட்டெரிக்க ஆரம்பிக்கும் ஒரு இனிய காலைப் பொழுதில் பி. பி. யின் இல்லத்தில் வைத்து அவரை சந்தித்தோம். தன் இளமைக்கால நினைவுகளை பசுமையாக நினைவுகூரும் பி. பி. தேவராஜுடன் பேச்சு கொடுத்தோம்.

கொட்டும் அருவியாக பழைய நினைவுகளை மீட்டிப் பேசுகிறார்.

"அப்போ எனக்கு ஒரு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். கண்டி வீரங்கி எஸ்டேட் பக்கத்தில் அலதெனிய என்ற ஒரு சிங்கள கிராமம். இரண்டுக்கும் நடுவே எங்கள் வீடு அமைந்திருந்தது.

அது ஒரு உயரமான மலைப் பகுதி அங்கே நாங்கள் மட்டும் தான் தமிழர்கள். அங்கே தமிழ் பாடசாலை கிடையாது. தமிழ்ப் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்றால் அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்தாக வேண்டும்.

குருந்துகொல்ல என்கிற முஸ்லிம் கிராமத்தில்தான் அந்த தமிழ்ப் பாடசாலை அமைந்திருந்தது. அங்கே படிப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தவர்கள்.

எங்கள் வீட்டிலிருந்து பாடசாலை செல்லும் வழி ரொம்பவும் கரடுமுரடானது. மலையிலிருந்து கீழே கிடுகிடு பள்ளத்தில் இறங்கி வயல் வெளி வரப்புகளில் நடந்து பிறகு மீண்டும் ஒரு குன்றில் ஏறித் தான் அந்த பள்ளிக்குச் செல்லவேண்டும்.

அந்த பாதை வழியாக நானும் எனது சகோதரியும் தான் பாடசாலைக்கு செல்வோம். சில நாட்களில் நான் மட்டும் தனியாகவும் செல்வேன். அப்படி வயல் வரப்புகளில் நான் செல்லும்போது ஒரு கிணற்றைத் தாண்டிச் செல்வேன். அங்கே ஒரு முரட்டு ஆசாமி குளித்துக் கொண்டிருப்பதை அடிக்கடி பார்ப்பேன்.

அவனைப் பார்க்க எனக்கு பயமாக இருக்கும். அந்த கிணற்றை நெருங்கும் போது என் இதயம் பக் பக் என்று அடித்துக்கொள்ளும். அவன் பெயர் ம்...... (யோசித்துவிட்டு) போரசோதயா.... அந்தப் பெயரை கேட்டாலேயே எனக்கு அப்படி ஒரு பயம்.

அவனை கண்டதும் குதித்து ஓடுவேன். இதை பார்க்க அவனுக்கு வேடிக்கையாக இருக்கும் போல. அவனும் எங்களை மேலும் ஓட வைக்க மிரட்டலான குரலில் ஏதோ சிங்களத்தில் சத்தம் போடுவான்.

நான் பார்க்கும் போதெல்லாம் போர சோதயா குளித்துக்கொண்டுதான் இருப்பான். சிங்களவர்கள் குளிப்பதில் கெட்டிக்காரர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது போரசோதயா விடயத்தில் உண்மைதான் போலிருக்கிறது. மலை ஏறி இறங்கி பாடசாலை செல்வதில் எனக்கு விருப்பமே இல்லை. எனக்கு அது கஷ்டமாக தெரிந்தது.

வழியில் நின்று பயமுறுத்தும் போரசோதயா வேறு! இப்படி ஒரு படிப்பு தேவையா என்று தீர்மானித்து ஒரு நாள் பாடசாலை செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நான் வழியில் இருந்த ஒரு அடர்த்தியான மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். காலையிலிருந்து அப்படியே இருந்துவிட்டு மாலையில் பாடசாலைவிட்டு வீடு செல்வது போல வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
இளமைத் தோற்றம்

எனக்கு அன்று ஒரே மகிழ்ச்சி. இனி பாடசாலை செல்லத் தேவையில்லை. அப்படியே மரத்தில் ஏறி உட்கார்ந்துவிட்டு வர வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டேன். அடுத்த நாளும் அதே மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

சில மணித்தியாலங்களின் பின் மரத்திற்கு கீழே எனது அப்பா பிரம்போடு நிற்பதைக் கண்டு அதிர்ந்து போனேன். எனக்கு உடல் நடுங்கியது. கீழே இறங்கியதும் அடி செமத்தையாக விழுந்தது. நான் மரத்தில் ஏறி இருப்பதைக் கண்ட எவனோ என் அப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டிருக்கிறான்.

போட்டுக் கொடுத்த பாவி யாராக இருக்கும் என்பதிலேயே மனம் அலைபாய்ந்து கொண்டிருந்ததால் அப்பா போட்ட அடி பெரிதாக வலிக்கவில்லை.

எனது அப்பா பெயர் பெரியண்ணபிள்ளை தமிழ்நாட்டிலிருந்து பத்து வயதாக இருக்கும் போதே அவரின் மாமாவால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். அப்பாவுக்கு எழுத படிக்க தெரியாது. எனது மாமாவுக்கு எடுபிடியாக வேலை செய்திருக்கிறார்.

அப்போது அவர்கள் தங்கியிருந்த கண்டி வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் சில பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்களாம். அதை மறைந்திருந்து வேடிக்கை பார்த்த அப்பா கொஞ்சம் வாசிக்கவும் எழுதவும் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் கடும் உழைப்பாளி.

ஆரம்பத்தில் சின்னதாக காய்கறி தோட்டம் தான் வைத்திருந்தார். பிறகு பெரிய எஸ்டேட்டுக்கு சொந்தக்காரர் ஆனார். நாவலப்பிட்டிய உலப்பனை எஸ்டேட் எங்களுக்கு சொந்தமாக இருந்தது தான் என்று தனது கடந்த காலத்தை மீட்டிப் பார்க்க தொடங்குகிறார் தேவராஜ்.

கண்டி, குருநாகல், ஹாரிஸ்பத்துவ, போஹோதொட்டவில்தான் தேவராஜ் பிறந்தாராம். குழந்தையாக இருக்கும் போதே வீரங்கி எஸ்டேட் அலதெனியவிற்கு இடமாறி வந்துவிட்டதாக சொல்லும் அவரிடம், பாடசாலை நாட்களின் இனிமையான அந்த அனுபவங்களைச் சொல்லுங்களேன் என்றோம்.

“பள்ளி நாட்கள் ரொம்பவும் இனிமையானதுதான். நானும் எனது சகோதரியும் பாடசாலையில் படிக்கும் நாட்களில் பாடசாலைக்கு எதிரில் ஒரு பெட்டிக் கடையில் எனது அக்கா பணிஸ் வாங்கி தருவார். எனக்கு அந்த பணிஸ் ரொம்பவும் பிடிக்கும். அந்த பணிஸிற்காக பாடசாலையில் எப்போது இடைவேளை விடுவார்கள் என்று எதிர் பார்த்திருப்பேன்.

இப்படி நான் இடைவேளையில் பணிஸ் வாங்கிச் சாப்பிடுவதை பார்த்த எங்கள் கிளாஸ் டீச்சர் இனி உனக்கு என் வீட்டிலேயே சாப்பாடு தாரேன் என்றார். அதன் பிறகு எனக்கு அவர் வீட்டில் தொடர்ந்து சாப்பாடு தந்தார். அவர் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லை. நான் சுட்டி பையன் இல்லை என்பதால் பாடசாலையில் குறும்பு எதுவும் செய்யவில்லை.

அதன் பிறகு கண்டி தர்மராஜா கல்லூரிக்கு படிக்க வந்தேன். அங்கே கணபதிப்பிள்ளை என்கிற மாஸ்டர் ஒருவர் இருந்தார். அவர் கண்டிப்பானவர். அவரிடம் நிறையவே அடிப்பட்டிருக்கேன். அதனால் அவரை என்னால் மறக்கமுடியாது.

அப்புறம் வகுப்பில் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படிப்போம். எனது இருபக்கத்திலும் அத்தநாயக்க, பேருசிங்க ஆகிய இரண்டு மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள்.

என்னோடு நன்றாகத்தான் கதைப்பார்கள். ஆனாலும் நான் தமிழன் என்பதால் சில நேரங்களில் என்னை கேலி செய்வார்கள். அதற்கு, ‘கோல்டன் ஐலண்ட்’ என்கிற நூலில் துட்டைகைமுன பற்றிய பாடத்தில் தமிழர்களை இழிவாகக் குறிப்பிட்டிருந்ததுதான் காரணம்.

எனது கண்டி கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு பேருசிங்க, அத்தநாயக்க ஆகிய இருவரையும் நான் காணவில்லை. அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்களோ...? என்று தமது கல்லூரி கனவுகளில் சிறகடிக்கும் பி. பி., புல்பராஸ் டீ பற்றியும் விபரிக்கிறார். அது என்ன புல்பராஸ் டீ? நான் தங்கியிருந்த அசோகா ஹொஸ்டிலிலிருந்து கல்லூரி செல்லும் வழியில் ஒரு முஸ்லிம் டீ கடை இருந்தது.

அந்தக் கடையின் பெயர் ஞாபகத்தில் இல்லை என்னால் அந்தக் கடையை மறக்க முடியாது. எனது நண்பர்களுடன் அந்தக் கடையில் உட்கார்ந்து டீ குடிப்போம். இங்கே புல்பராஸ் டீ கிடைக்கும். சூடாக்கிய வெறும் பாலில் அதன் வெள்ளை நுரையின் மீது தேயிலை சாயத்தை ஒரு டிசைன் மாதிரி போட்டுத் தருவார்கள்.

சிங்களத்தில் கிரிகஹாட்ட என்று சொல்வார்கள். அதற்கு அவர்கள் வைத்த பெயர் புல்பராஸ் தினமும் அந்த டீ குடிக்க மறக்க மாட்டோம். அதன் பிறகு அதே வழியில் இருந்த புஹாரி ஹோட்டலில் தொதல் சாப்பிடுவேன்.

நான் கல்லூரி நாட்களில் விரும்பி சாப்பிட்ட இனிப்பு அந்த புஹாரி கடை தொதல்தான். இப்போதும் அதிகம் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

என்னால் இன்றுவரை விடமுடியாத ஒரு பழக்கமும் அதுதான். இப்போது கண்டிக்கு சென்றாலும் அந்த புல்பராஸ் டீ, புஹாரி கடை தொதல் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அந்த கடைகள் இரண்டும் இப்போது இல்லை.

அதேபோல் இன்னொரு மறக்க முடியாத இடம்தான் ஹிங்குரு வனாந்தர பீலி. இது கண்டி வீரங்கி எஸ்டேட் பகத்திலிருந்தது. ஐந்து கிலோ மீட்டர் நடந்துதான் போகவேண்டும். அங்கே இரண்டு பெரிய குழாய்களில் தண்ணீர் கொட்டும் அதை பீலி என்றுதான் அழைப்பார்கள். அதில் தான் குளிப்போம். அதில் குளிப்பதென்பது ஒரு சுகமான அனுபவம். அதை நான் அனுபவித்திருக்கிறேன். பிறகு பல ஆண்டுகள் கழிந்து நான் அரசியலில் முக்கிய பிரமுகராக இருந்த போது ஒருநாள் ஹிங்குரு வானந்தர பீலியை பார்க்க ஆசைப்பட்டு அந்த இடத்திற்கு சென்று பார்த்தேன்.

அந்த இரண்டு பீலிகளிலும் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால் என்ன ஆச்சர்யம்! அன்று எனக்கு பெரிதாக தெரிந்த அந்த இரண்டு பீலிகளும் ரொம்ப சின்னதாக காட்சியளித்தன. அதே மாதிரி வீரங்கி எஸ்டேட்டில் இருந்த மயில் கல் பாறையும் மறக்க முடியாத இடம்தான். அந்தக் காலத்தில் மயில்கள் வந்து அந்த பாறை மீது அமர்ந்து ஆடிக்கொண்டிருக்குமாம். அதனால் அந்த கல்பாறைக்கு மயில் கல்பாறை என்று பெயர். ரொம்பவும் பெரிய பாறைக் குன்று. காற்று வாங்க அதில் ஏறி நிற்பேன்.

ரொம்பவும் ரம்மியமாக இருக்கும். அந்தக் கல்லிலேயே ஒரு குளமும் இருக்கும் பிறகு நான் அங்கிருந்து கொழும்பிற்கு வந்து ஆண்டுகள் பல கடந்த பின்பு அந்த மயில் கல்பாறைக்கு சென்றேன். அங்கே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நான் காற்றுவாங்கிய குன்று காணாமற் போயிருந்தது. விசாரித்து பார்த்ததில் அந்த கல் கிரைனைட் என்பதை கண்டுபிடித்து அதை உடைத்தெடுத்து கொண்டுபோய் விட்டார்களாம்.

தன் பழைய நினைவுகளில் மூழ்கியவரை ‘வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக படம் பார்த்த அனுபவம் இருக்கிறதா...’ என்று கேட்டோம். சிரித்துக் கொண்டே ‘வீட்டுக்கு தெரியாமல் பார்த்ததில்லை என்றார்.’ ‘நான் கண்டி அசோகா ஹொஸ்டலில் தங்கியிருந்த போது படம் பார்த்திருக்கிறேன். படம் பார்ப்பதற்கென்றே முதல் நாளே நண்பர்களுடன் சேர்ந்து பெரிய திட்டம் போடுவோம். அதன்படி மாலை ஆறு மணி காட்சிக்குத்தான் செல்வோம். அசோகா ஹொஸ்டலில் காவல்காரன் முன் வாசலில் தான் நிற்பான். நானும் எனது நண்பர்களும் அந்த கட்டத்தின் மாடிக்கு போவோம். அங்கிருந்து அடுத்த கட்டடத்திற்கு தாவிப் போகலாம். அப்படி அடுத்த கட்டடத்திற்கு போய் அங்குள்ள மாடி படிகளில் கீழ் இறங்கி சென்று விடுவோம். கண்டி வெம்பிலி படமாளிகையில் தான் படம் பார்ப்போம். பெரும்பாலும் ஆங்கில படங்கள்தான் பார்த்திருக்கிறேன்.

கடைசிவரை நாங்கள் இரவில் சென்று படம் பார்க்கும் ரகசியம் வெளியே தெரியவரவே இல்லை’ என்று தாம் படம் பார்க்க எடுத்த ‘ரிஸ்கை’ பெருமிதமாக சொல்கிறார் பி. பி. தேவராஜ். ‘பள்ளிக்கூட காதல், கல்லூரிக் காதல் என்று ஏதாவது...’

‘அய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. படிக்கிற இடத்தில் எவ்வளவோ பெயரோடு பழகிறோம். அதையெல்லாம் காதல் என்று சொல்ல முடியாது’ என்று சமாளிக்கிறார் பி. பி. (பொதுவாகவே நாம் ஞாபக வீதிக்காக பிரமுகர்களை சந்திக்கும் போது நாம் காதல் என்றாலே எல்லோரும் பயப்படுகிறார்கள். காதல் என்ன அப்படி ஒரு அசிங்கமான விடயமா?)
திருமணத்தன்று

வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டாராம். மனைவி பெயர் விஜயலட்சுமி. நாவலப்பிட்டி உலப்பனை வீட்டில் தான் பெரிதாக பந்தல் போட்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. ‘அதன் பிறகு கண்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் இருந்த கண்டி பொட்டோ ஸ்ரூடியோவில் படம் பிடித்தோம். அந்த படத்தை மனைவி வீட்டில்தான் மாட்டி வைத்திருந்தாங்க, திருமணத்திற்கு வந்த பிரமுகர்களில் தொண்டமான், கம்பளை எம். பி. திஸாநாயக்க ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்’ என்று தமது திருமணம் பற்றி விபரிக்கும் பி. பிக்கு இப்போது பொழுது போக்கு என்றால் தொலைக்காட்சி தானாம்.

‘அரசி தொடர் முடிந்துவிட்டது. இப்போ செல்லமே தொடங்கிவிட்டது. அப்புறம் நமீதா பொண்ணு வருமே..... மானாட மயிலாட....... அந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பேன். குறிப்பாக ஜெயா டிவியில் எஸ். பி. பி. தொகுத்து வழங்கும் என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியை தவறவிடுவதேயில்லை’ என்று புன்னகைக்கு இடையே கூறி முடித்த பி. பிக்கு உயரமான இடத்தில் இருந்து கீழே எட்டிப் பார்ப்பதற்கு பயமாம். ஆங்கில இலக்கியம் கற்க வேண்டும் ஆசைப்பட்டேன் முடியாமல் போய்விட்டது என்பதை வாழ்க்கையில் ‘மிஸ்’ பண்ணிய விடயமாகக் கருதும் இவர் ‘தப்பு செய்துவிட்டேன்’ என வருந்துகிறார். நான் அரசியலில் இறங்கியிருக்க கூடாது. அதனால்தான் என் கல்வி பாதிப்படைந்தது என்று சொல்லும் இவரால் மறக்க முடியாத நபர் ஒரு பெங்காலி இந்தியராம்.

இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது இந்த பெங்காலி இந்தியரை சந்தித்திருக்கிறார். எப்போதும் சிரித்த முகத்தோடு ஜோக் அடித்துக் கொண்டே இருப்பாராம் அவரைக் கண்டாலேயே சிரிப்புதான் வருமாம்.

“சரி, இந்த வயதில் வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ புரிதல்கள் உங்களுக்குள் உதித்திருக்கும். வாழ்க்கையைப் பற்றி உங்கள் புரிதல் என்ன?”

“மகிழ்ச்சி, சந்தோஷம், அவ்வளவுதான். புத்த பெருமான் தன் முதன்மைச் சீடர் ஆனந்தவிடம் இப்படிச் சொல்கிறார்: பாரதம் ரம்மியமானது: வாழ்க்கை இனிமையானது. இதுதான் எனது புரிதலும்.”

(நான் எழுதிய இந்த நேர்காணல் 2010ம் ஆண்டு  தினகரன் வார மஞ்சரியில் வெளியானது.)

No comments:

Post a Comment