Saturday, July 16, 2016

லத்தீப் மாஸ்டரின் இதயம் பேசுகிறது.

மணி  ஸ்ரீகாந்தன்

இலங்கையில் தமிழ் கலை இலக்கிய படைப்புகள் கொடிகட்டிப் பறந்த ஆரம்ப நாட்களில் சினிமா, நாடகம், வில்லிசை, தெருக்கூத்து போன்ற கலை வடிவங்களில் புகழ்பெற்ற பல தமிழ்க் கலைஞர்கள் சிறப்புற்று விளங்கினர். கொழும்பு புதுக்கடையிலிருந்து புயலென புறப்பட்டு நம்நாட்டு சினிமா, நாடகங்களில் முத்திரை பதித்தவர்தான் எம். எம். லத்தீப். லடிஸ் வீரமணி, மஹதும் எம். ஏ. காதர் போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் கலைப் பிரவேசம் செய்த இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், சினிமாக்களிலும் தோன்றி நடித்திருக்கின்றார்.

வில்லன், நாயகன், குணச்சித்திர நடிகர் என்று பலதரப்பட்ட வேடங்களில் நடித்த ஒரே நடிகர் என்ற சிறப்பும் இவருக்கிருக்கிறது. வி.பி. கணேசன் நாயகனாக நடித்த ‘நான் உங்கள் தோழன்’ படத்தில் இரண்டாவது நாயகனாக தோன்றியவர்தான் லத்தீப் மாஸ்டர்.
இலங்கையின்
தமிழ் நாடக மற்றும் திரைப்படத் துறைகளில் பேசப்பட்ட ஒரு நபராக விளங்கிய
எம். எம். லத்தீப் மாஸ்டர் இன்றைய நமது
ஞாபக வீதியில்  உங்களுக்காக நடைபயில்பவர்.


புதுக்கடை பள்ளித்தோட்டத்தில் தமது எழுபத்தொண்பதாவது வயதில் உடல் தளர்ந்த நிலையில் வெள்ளைத்தாடியுடன் தன் வீட்டில் அமர்ந்திருந்த அவரை இல்லம் சென்று சந்தித்தோம். எம்மை கண்டதும் லத்தீப்புக்கு உற்சாகம் தாங்கவில்லை.

வாங்க இருங்க என்று மகிழ்ச்சி பொங்க வரவேற்ற லத்தீப்புக்கு நாம் அவரின் அந்தக்காலக் கதையை செவிமடுக்க வந்ததை கேட்டதும் அவரின் மகிழ்ச்சி மேலும் இரட்டிப்பாகியது. புதுதெம்பு வந்த உற்சாகத்தில் பேசத் தொடங்குகிறார்.
லத்தீப் மாஸ்டர்
மீரா மொஹிதீன் மாஸ்டர்கிட்டே முறையாக சிலம்பம் கற்றுக்கொண்டேன். அந்த சிலம்ப கலைதான் என்னை சினிமா நடிகனாக்கியது.

சினிமா நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் நான் சிலம்பம் கற்கவில்லை. அந்தக் காலத்தில் மாப்பிள்ளைமார் தன் பரிவாரங்களுடன் காரில் ஆட்டம் பாட்டங்களுடன் திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக செல்வார்கள். அப்போது சிலம்பகாரர்கள் ஊர்வலத்திற்கு முன்பாக சிலம்பம் சுற்றிக் கொண்டு செல்வது வழக்கம்.

இதற்காகத்தான் நான் சிலம்பம் கற்றேன். சுன்னத் ஊர்வலத்திலும் சிலம்பாட்டம் ஆடுவோம். இதற்கு கை செலவுக்கு காசு தருவார்கள். பிறகு நாடக கலைஞரான மஹதும் எம். ஏ. காதரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு நாடகத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானேன் பிறகு லெடிஸ் வீரமணியின் வில்லுப்பாட்டு குழுவிலும் இடம்பெற்றேன். தொடர்ந்து நாடகம், சினிமா என்று கலையுலகில் ஒரு ரவுண்ட் அடித்தேன் என்று தமது அறிமுகத்தை அடுக்கினார் லத்தீப்.

பாடசாலை நாட்களைப் பற்றி கேட்டோம்.

“எனக்கு பாடசாலை நாட்களே கிடையாது. ஏனென்றால் நான் பாடசாலைக்கு போனதே மூன்று நாள்கள்தான். புதுக்கடை பாத்திமா கலவன் பாடசாலை (இன்று பாத்திமா மகளிர் கல்லூரி) க்குத்தான் சென்றேன். அங்கே ஒரு கறுப்பு உருவத்தில் பயங்கரமான வாத்தியார். அவரைக் கண்டாலே எனக்கு குலை நடுங்கும்.

அவர் மற்ற மாணவர்களை அடிப்பதை பார்த்து மிரண்டு போவேன். அவருக்கு பயந்து தான் மூன்று நாளைக்குப் பிறகு அந்த பாடசாலை பக்கமே நான் போகவில்லை. இப்போதும் அந்த பாடசாலை பக்கமாக போகும் போது எனக்கு அந்த கறுத்த வாத்தியார் பிரம்போடு நிற்பது போல் ஒரு பிரம்மை ஏற்படும்.

இவ்வாறு ஞாபக வீதியில் பயணம் செய்யத் தொடங்கிய லத்தீப்பிடம் அப்போ நீங்க குறும்பு செய்யவே இல்லையா? என்றோம்.

(சிரித்துக் கொண்டே) “நிறைய செய்திருக்கிறேன் வீட்டில் வாப்பாவின் பக்கெட் பணத்தையெல்லாம் திருடி நண்பர்களோடு சிகரட் பிடித்திருக்கிறேன். எங்கள் வீட்டில் ஒரு லாச்சு மேசை இருந்தது. அதில் தான் வாப்பா காசு வைத்திருப்பார்.
கமலஶ்ரீயுடன் லத்தீப்
அதற்கு முன்னால் நின்று கொண்டு என் கையை பின்பக்கமாகக் கொண்டு சென்று லாச்சை மெதுவாக இழுத்து அதில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவேன். ஆனால் மாட்டிக் கொள்வது என் அப்பாவி அண்ணன்தான்.

‘அவன் சின்னவன் அவனுக்கு பணம் தேவைப்படாது உனக்குதான் பணம் தேவையாக இருக்கும்’ என்று சொல்லி என் வாப்பா அண்ணனை போட்டு அடிப்பார்.” என்று அண்ணனை நினைத்து கவலைப்படும் லத்தீப். கிங்ஸ்லியில் சினிமா பார்த்த அனுபவத்தையும் மகிழ்ச்சியுடன் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“இப்போ மாதிரி அந்தக் காலத்தில் டிவி, விசிடி என்று எதுவுமே இல்லை. படம் பார்க்கணும்னா எல்லோரும் தியேட்டருக்குத்தான் போகணும். தியேட்டர்கள் நிரம்பி வழியும். சனம் கியூவில நிற்கும். கியூ குழம்பினால் தியேட்டர் மேனஜர் அடிப்பார். அப்போ கிங்ஸ்லி மனேஜரா கந்தையான்னு ஒருத்தர் இருந்தார். ரொம்பவும் முரட்டு ஆசாமி.

நாங்கள் எப்போவும் ஒரு குறுப்பாகத்தான் படம் பார்க்கச் செல்வோம். அங்கே சென்று டிக்கட் வாங்க நிற்கும் சனத்துக்குள் நாங்களும் நின்று கொண்டு அந்த கியூவை உடைத்து உள்ளே நுழைய ஏதும் ஐடியா இருக்கிறதா என்று பார்ப்போம்.

ஒரு முறை தென்னம் ஓலையை மடித்து பாம்பு செய்து அதை எமக்கு முன்னால் வரிசையில் உள்ளவர்கள் மீது வீசினோம். மங்கிய ஒளி வெளிச்சத்தில் அந்த தென்னம் ஒலை பாம்பு மாதிரி தெரிய சனம் வரிசையை விட்டு சிதறி ஓடியது. இது தான் சமயம் என்று நானும் எனது நண்பர்களும் தியேட்டருக்குள் நுழைந்து விட்டோம். இது மனேஜர் கந்தையாவுக்கு பிறகு தெரிய வர அவர் நாங்கள் தியேட்டர் பக்கம் வந்தாலே உஷாராகி விடுவார்.

பிறகு கிங்ஸ்லியில் டிக்கட் கிழிப்பவராக மணவைத்தம்பி வேலை செய்தார். அவரின் உதவியுடன் டிக்கட் வாங்குவோம். கியூ பெரிதாக இருந்தால் மணவைத்தம்பி எங்களிடம் வந்து ‘ஏய் சொன்னாகேட்க மாட்டீங்க.

ஒழுங்கா தள்ளிப்போய் நில்லு’ என்றவாறே எங்களை தள்ளிக்கொண்டு தியேட்டருக்குள் சென்றுவிடுவார். இப்படி நாங்கள் செய்யும் சேட்டைகளால் நிறைய தடவை தியேட்டர் மனேஜரிடம் அடிவாங்கி இருக்கிறேன்.

அப்படி அடிவாங்கி வாத்தியார் படம் பார்ப்பதே ஒரு சுகம் தான். அப்போதெல்லாம் நான் எம்.ஜி.ஆர். ரசிகனாகத்தான் இருந்தேன். பிறகு சிவாஜி ரசிகனாக மாறிவிட்டேன். இலங்கைக்கு சிவாஜி வந்த சமயம் நடந்த சம்பவத்தை நான் சொல்ல வேண்டும்.

சிவாஜி ‘பைலட் பிரேம்நாத்’ படப் பிடிப்பிற்காக இலங்கை வந்திருந்த நேரம் அது. நானும் இலங்கை சினிமா, நாடகங்களில் ரொம்பவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சிவாஜி தான் கொடுத்த பேட்டி ஒன்றில் “இங்குள்ள கலைஞர்கள் இன்னும் குழந்தைகள்தான். இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு என்று சொல்லியிருந்தார். அது எமக்கு சிவாஜியின் மீது ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது. இங்குள்ள பல கலைஞர்களுக்கு சிவாஜியின்
அந்தக் கருத்து வருத்தத்தை எற்படுத்திவிட்டது. அதனால் நாங்கள் சிவாஜியை பார்ப்பதற்கு செல்லவில்லை.

அப்போது ‘காத்திருப்பேன் உனக்காக படத்தில் ருக்மணி தேவியின் கணவ னாக நான் நடித்திருந்தேன். அந்த படத்தின் (டப்பிங்) ஒலிப்பதிவிற்காக நானும் கலைச்செல்வனும் கந்தானை விஜயா ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தோம்.

அக்காலத்தில் அது பிரபலமான ஸ்டூடியோ சினிமாஸ் குணரத்தினத்துக்கு சொந்தமானது.

ஜூலை கலவரத்தில் ஸ்டூடியோவை எரித்து விட்டார்கள். அந்த ஸ்டூடியோவில் தான் எங்களின் டப்பிங் நடைபெற்றது. அப்போது அதே ஸ்டூடியோவின் வேறு ஒரு அறையில்தான் ‘பைலட் பிரேம்நாத்’ படத்தின்  ஒரு  பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

பிறகு எங்களின் ‘டப்பிங்’ வேலை முடிந்து நாங்கள் இருவரும் ஒலிப்பதிவு கூடத்திலிருந்து வெளியே வந்தோம். அப்போது ‘பைலட் பிரேம் நாத்’ படப்பிடிப்பு முடிந்து சிவாஜியும் எங்களுக்கு எதிரே வந்தார்.
கோட்டை தோளில் தொங்க விட்டபடி சிவாஜிக்கே உரிய அந்த கம்பீர நடையோடு எங்களுக்கு எதிரே வந்தார். அவரை நாங்கள் நேருக்கு நேராக பார்த்தோம். அவரும் எங்களை அரைக் கண்ணால் அழுத்தமாக பார்த்து விட்டு சென்றார். அவர் எதிர்பாராத நேரத்தில் எங்கள் முன் தோன்றியது, கம்பீரமாக நடந்து வந்தது, சலனமற்ற முகத்துடன் ஆழமான பார்வையை வீசிச் சென்றது என்பன அடுத்தடுத்து அரங்கேற, அதுவரை அவரைத் திட்டிக் கொண்டிருந்த நாங்கள் இருவரும் அப்படியே செயலிழந்து போனோம். ‘கிணுன் போல்ட்’ என்பார்களே, அதுதான் எங்களுக்கு நடந்தது. சரியாகச் சொன்னால், சிவாஜி மெஜிக்!

அந்த இடத்தை விட்டு அகன்றதும் நான் கலைச் செல்வனிடம், “சிவாஜியின் அந்த ஒரு பார்வையே போதும். அப்படியே அவர் காலில் விழுந்திடலாம்னு நெனச்சேன்” என்றேன்.

அப்துல் ஹமீத் வீதியில் ஒரு சலூன் இருந்தது. பெயர் சரியாக ஞாபகத்தில் இல்லை. அங்கே தான் சென்று என் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பேன். அப்போது நான் ரொம்பவும் விரும்பிப் புகைக்கும் சிகரெட் நெவிக்கட். அந்த சிகரட்டில் பில்டர் இருக்காது. ஒரு நாள் காலை சலூன் வாசலில் நின்றபடி சிகரட் பிடித்துக் கொண்டிருந்தேன். பிறகு அது முடியும் போது வழமைபோல தெருவில் சுண்டி விட்டேன்.

அச்சமயத்தில் தனது பேத்தியை அழைத்துக் கொண்டு தெருவழியாக வந்து கொண்டிருந்த ஒரு மூதாட்டி அங்கே வர, அவர் காலடியில் சிகரட் துண்டு விழ, வெறுங் காலால் அவர் சிகரெட்டை மிதிக்க... நன்றாகவே சிகரட் தணல் அவர் பாதத்தை சுட்டுவிட்டது. அவர் வலியால் துடித்தார்.

அதை பார்த்த நான் ஓடிச் சென்று “அம்மா நான்தான் தெரியாமல் வீசி விட்டேன் இனி இப்படிச் செய்யமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என் றேன். அவரும் சமாதானமடைந்தவராக சென்று விட் டார்.

அடுத்த நாள் அதே சலூன் நெவிகட் சிகரட்டை அடிக்கட்டை வரை புகைத்து விட்டு மிகுதியை பாதையை நோக்கி சுண்டிவிட்டேன்.

எனது கெட்ட நேரம் தன் பேத்தியை அழைத்துக் கொண்டு அதே மூதாட்டி அங்கே வர, திரும்பவும் நான் வீசியெறிந்த சிகரட் துண்டு அவர் பாதத்தைப் பதம் பார்த்தது! அவர் வலியால் துடித்தார். இதைக் கண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடுத்த நொடியே திரும்பி பார்க்காமல் தலை தெறிக்க ஓடிவிட்டேன். எஸ்கேப்!

28 வயதில் லத்தீப் திரும ணம் செய்து கொண்டார். வாழைத்தோட்டத்தில் இரு ந்த மணமகள் வீட்டில்தான் எனது திருணம் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு எனது கலையுலக நண்பர்களான  லடிஸ் வீரமணி, கலைச் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொரளை டொனால்ட் ஸ்டூடியோவில் தான் திருணம் போட்டோ பிடித்தோம்.

கூட்டு குடும்ப வாழ்க்கை தான். திருணம் முடிந்து மூன்று மாதங்களுக்கு பிறகு ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ கதையை நாடகமாக்கி அரங்கேற்றினோம். அப்போது எனது படத்தை பெரிதாக போட்டு போஸ்டர் அடித்திருந்தார்கள். அதை எனது வீட்டிலும் ஒட்டி வைத்திருந்தார்கள். இது எனது மனைவிக்கு பிடிக்கவில்லை. அதை கிழித்து எறிந்து விட்டார். அதை பார்த்து கோபமான நான்.

இடமிருந்து வலமாக: கோவிலூர் செல்வராஜன்,
கலைச்செல்வன், மனைவி, லத்தீப், சுபாஷினி,
ஜவஹர், வி.பி. கணேஷ், தனரத்தினம்
“என்னை நாடகத்திலிருந்து யாராலும், பிரிக்கவோ, தடுக்கவோ முடியாது. நான் நாடகம் நடிப்பது உனக்கு பிடிக்கவில்லையென்றால் நீ இப்போதே எனது வீட்டை விட்டுப் போகலாம்” என்றேன்.

இதை அறிந்த எனது உறவினர்கள் எல்லோரும் வந்து என்னை நாடகம் நடிக்க அனுமதிக்கும்படி எனது மனைவிக்கு அறிவுரை சொல்லி பிரச்சினையை முடிந்தார்கள். அதுதான் எனக்கும், என் மனைவிக்குமிடையே ஏற்பட்ட பெரியதும், கடைசியுமான சண்டையாக இருந்திருக்க வேண்டும்.

வாழ்க்கையை பற்றிய இவரது புரிதல் என்ன?

“வாழ்க்கை ஒரு வட்டம். இதில் வாழும் காலத்தில் வரும் கஷ்ட நஷ்டத்தை சமாளித்து பிறர் படும் துயரத்திலும் பங்கெடுத்து உதவினால் அடுத்துவரும் சோதனை வட்டத்தில் நமக்கு அது நன்மையை தரும் என்று பதில் சொன்னார் மாஸ்டர். மகிழ்ச்சியான சம்பவம் பற்றி கேட்டபோது ‘நான் உங்கள் தோழன்’ படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அந்த நிமிடமே அதிக மகிழ்ச்சி அடைந்த தருணம் என்றார். இவர் அப்பப்பா அந்த சந்தோ சத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்கிறார் லத்தீப்.

“வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் என்றால் அது கலைச்செல்வன் தான். எனது கலை ஆர்வத்திற்கும்.
இன்ப, துன்பத்திற்கும் துணையாக இருந்து தோள் கொடுத்தவர். அவரை வாழ் நாளில் என்னால் மறக்க முடியாது என்று நெகிழ்க்கிறார்.
இந்த நெகிழ்ச்சி, அடிப்ப டையில் நல்ல மனிதர் என்பதை இனம் காட்டுகிறது.

கடைசி காலத்தில் எனக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சியான, நிம்மதியான நாட் கள்தான் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் என்று சொல்லும் லத்தீப்,

“எனக்கு பயம்மென்றால் அது தூள்தான்.

ஒரு முறை புதுக் கடையில் எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் வீட்டிற்கு போனேன். அவர் தூள் பாவிப்பவர்தான். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு தேநீர் தந்தார்கள். அதை நான் குடித்த போது ஒரு இன்பத்தை உணர்ந்தேன். அதை எப்படி சொல்வதென்று தெரியாது என்ற லத்தீபின் முகத்தில் பிரகாசம்.

ஆன்மீகத்தில் அதிகம் ஈடு பாடு உள்ள லத்தீப் தமது வாழ்நாளில் அனேக நேர த்தை பள்ளிவாசலில்தான் கழித்துக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment