Thursday, July 14, 2016

மரிக்கார் ராமதாஸின் நினைவோ ஒரு பறவை…

மணி   ஸ்ரீகாந்தன்

மரிக்கார் என்றதும் எவருக்குமே அடுத்ததாக ஞாபகத்தில் வரும் பெயர் ராமதாஸ் என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு மக்களை வசீகரித்தவர் இவர். தொழில்என்ற ரீதியில் இவர் நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும் இவரது பிரதான தொழில் நாடக மேடையாகவும் பின்னர் சினிமா, டெலி நாடகங்களாகவுமே இருந்தன. இலங்கைத் தமிழ் ரசிகர்களை எடுத்துக் கொண்டால் அவர்களை அதிகம் சிரிக்க வைத்த ஒரே நபர் ராமதாஸாகத்தான் இருக்க வேண்டும். சிரிக்க வைப்பது ஒரு சிரமமான கலை என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதை சுலபமாகச் செய்த, செய்ய முடிந்த நபர் ராமதாஸ் என்றால், அவர் எத்தனை ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும்! மேலும் அறுபதுகளைச் சேர்ந்த நம்மூர்க் கலைஞர்களில், கலையில் கரைந்தவர்கள்தான் அதிகம் பேர். வாழ்ந்தவர்கள் மிகக் கொஞ்சமானவர்களே. இவ்வகையில் நாடகம், சினிமா என கலைத்துறையிலும் விளம்பரத்துறையிலும் ஈடுபட்டு அவற்றின் மூலம் பொருளாதார வளத்தையும் பெருக்கிக் கொண்டவர் இவர் என்பது இன்னொரு விசேஷமான தகவல்.13-07-2016 சென்னையில் காலமான மரிக்கார் ராமதாஸின் நினைவாக அவரை 7வருடங்களுக்கு முன்பாக தினகரன் வார மஞ்சரிக்காக சந்தித்து பேசிய அந்த நேர்காணலை எனது முகநூல் நண்பர்களுக்காக மீண்டும் பதிவேற்றுவதில் மகிழ்கிறேன்.
“ராமநாதபுர மாவட்ட சிவகங்கையில் தான் நான் பிறந்தேன். நான் பிறந்து ஆறு மாதத்திலேயே என்னை கொழும்புக்கு தூக்கிக்கொண்டு வந்து விட்டார்கள்.

என் அப்பா பெயர் சத்தியவாகீஸ்வரன். அம்மா நாகலட்சுமி. ஆசாரமான ஐயர் குடும்பத்தில் வந்தவர்கள் அவர்கள். குடும்பத்தில் நான்தான் மூத்தவன். எனக்கு நான்கு சகோதரிகள். எனது இரண்டு சகோதரிகளுக்கு கர்நாடக இசையில் நல்ல ஈடுபாடு என் அம்மா நாகலட்சுமி இலங்கை வானொலியில் கர்நாடக சங்கீதம் இசைத்தவர். என் அப்பாவும் ஒரு நல்ல ரசிகர். என்னை அழைத்துச் சென்று பழைய படங்களைக் காட்டுவார். பழம்பெரும் நடிகர் பி. யூ. சின்னப்பா என் உறவுக்காரர்தான். அதனால் என்னவோ நான் நடிகனாக வேண்டும் என்பது என் அப்பாவின் விருப்பமாக இருந்தது. ஆனால் அதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை.
இளமையில்

வெள்ளவத்தை கிரீன்லைன் கல்லூரியில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. இப்போது அந்தக் கல்லூரியின் பெயர் ஹிசிபதன மகா வித்தியாலயம்.

அப்பாதான் என்னை அந்தப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வார். திருமதி ஆறுமுகம் டீச்சர் எனக்கு ‘அகரம்’ கற்பித்த ஆசிரியை.

அந்தப் பள்ளியில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ரியோ தியேட்டர் உரிமையாளர் நவரத்தினம், கனகேந்திரா, கனகரட்ணம், அன்டன், இப்ராஹீம் உள்ளிட்ட சிலரைக் குறிப்பிடலாம்.

நான் பள்ளிக்கூடத்தில் எஸ். எஸ். சி. வரையும் சும்மா போய் வந்தேன் என்றுதான் கூறவேண்டும். படித்தேன் என்றால் அது தவறாகிவிடும். வரலாற்றில் பதிவு செய்யும் படி நான் பெரிய குறும்பு செய்யவில்லை தான். ஆனால் குறும்பு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கிரீன்லைன் கல்லூரியின் தலைமை ஆசிரியர் குருப்பு தன் சேவைக்காலத்தில் என்னைத்தான் அதிகமாக அடித்திருப்பார். ஆனால் என் அம்மாவும், அப்பாவும் என்னை எப்போதும் அடித்ததே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்னைக் கண்டாலே பயம்’ என்று சொல்லும் ராமதாஸ் தனது கலையுலக பிரவேசம் பற்றி இப்படி கூறுகிறார் :

“கலைப் பிரவேசம் பற்றி சொல்வதென்றால் என் தங்கை மஞ்சுளா சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பாட்டு பாடுவாள். அவளை வானொலி நிலையத்திற்கு அழைத்துச் செல்வதுதான் என் வேலையாக இருந்தது. என் தங்கையைப் போல என் குரலும் வானொலியில் வரவேண்டும் என்பதில் எனக்கு ஒரே ஆசை.

ஒருநாள் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்தி வந்த சரவணமுத்து மாமாவிடம் நேரிடையாக சென்று எனக்கு ஒரு வாய்ப்பு தரும்படி கேட்டேன். அவரும் என் குரலை பரிசோதித்துவிட்டு சிறுவர் மலர் நாடகத்தில் ‘சிங்காரம்’ என்ற பாத்திரத்தில் நடிக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கினார். அதன் பிறகு எனக்கு தொடர்ந்து நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. பிறகு தமிழ் நாடக தயாரிப்பாளராக இருந்த சானாவின் நாடகத்திலும் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

எனக்கு அந்த நாடகத்தில் 45 ரூபா சம்பளமும் கிடைத்தது. எனக்கு கிடைத்த முதல் சம்பளமும் அதுதான். நான் வானொலி உலகில் பிரவேசம் செய்யும் போதே ஹமீத், எஸ். செல்வசேகரன், கே. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் எனக்கு நண்பரானார்கள். என் கலை வாழ்க்கையும் அவர்களோடு பயணித்தது. சானா தயாரித்து வந்த ‘மத்தாப்பூ’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நான், ராஜேஸ்வரி சண்முகம், ரொசரியோ பீரிஸ், சற்சொரூபவதி நாதன் ஆகியோர் நடித்திருந்தோம். அந்த அனுபவங்களை நினைத்தாலே இன்றும் மெய்சிலிர்க்கிறது.

திடீர் வெடி, நடிகர்கள், வாடகை வீடு, புரோக்கர் கந்தையா உள்ளிட்ட பல மேடை நாடகங்களில் நான் தொடர்ந்து நடித்ததால் ராமதாஸ் என்ற என் பெயர் கலையுலகில் பிரகாசிக்க தொடங்கிய போதுதான் எனக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. முதல் படம் ‘குத்து விளக்கு’, அதன் பிறகு எனது நண்பரான வி. பி. கணேசனின் ‘புதியகாற்று’ படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

எம். ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் என்ற கட்டுமஸ்தானா உடல்வாகுடன் அழகான தோற்றம் கொண்ட நடிகர்கள் உலாவந்த அந்தக் காலத்தில் இலங்கை சினிமாவால் கதைக்கேற்றபடி ஒரு சாதாரண குடும்பத்து இளைஞன் எப்படியிருப்பான் என்பதை கிரகித்து அதன்படியே ஒரு ஹீரோ அறிமுகமானார். அவர்தான் வி. பி. கணேசன். பார்க்க தனுஷ் மாதிரி இருப்பார்.

இப்போது கதைக்கேற்றபடி நாயகர்கள் வருகிறார்கள் என்று சினிமா விமர்சனத்தில் எழுதுகிறார்களே அந்த நாயகர்களின் முன்னோடியாக விளங்கியவர் தான் வி. பி. கணேஷ் என்ற அடித்துச் சொல்வேன். புதிய காற்றை தொடர்ந்து ஏமாளிகள், மாமியார் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறேன்’ என்ற ராமதாஸ், தினகரன் நாடக விழாவில் முதல் பரிசு பெற்ற ‘சுமதி’ நாடகத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடித்து விருதும் வென்றேன் என்கிறார் மகிழ்ச்சியுடன்.

நாடக வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி ராமதாஸ் எம்மிடம் விளக்கினார். ‘அப்போது நான் நடித்த கோமாளிகளின் கும்மாளம் நாடகம் இலங்கை வானொலியில் ஞாயிறு தோறும் மாலை நான்கு மணிக்கு இலங்கை வங்கியின் அனுசரணையுடன் ஒலிபரப்பாகி வந்தது. ஒருநாள் பிரபல திரைப்பட இறக்குமதியாளர் சினிமாஸ் குணரட்ணம் என்னிடம் தொலைபேசியில் அழைத்து என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்.
 உடனே நான் அய்யய்யோ நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள் என்னை சந்திப்பது அழகாக இருக்காது நான் உங்களை வந்து சந்திக்கிறேன், என்று கூறிவிட்டு அவரின் இல்லத்திற்கு சென்றேன். என்னைக் கண்டதும் குணரத்தினம் கட்டிப்பிடித்து ‘நீங்கள் நடிக்கும் கோமாளிகள் தொடரை தொடர்ந்து நான் கேட்டு வருகிறேன் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவர் கூடவே ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு கோமாளிகள் நாடகம் ஒலிபரப்பாவதால் தாங்கள் இறக்குமதி செய்து திரையிட்டுள்ள தமிழ்ப் படங்களின் பிற்பகல் காட்சிக்குக் கூட்டம் வருவது குறைவாக இருப்பதாகவும் பெரும்பாலானோர் கோமாளிகள் நாடகத்தையே அந்த நேரத்தில் ரேடியோவில் கேட்கிறார்கள் என்றும் சொன்னவர் இந்த எனது கோமாளிகள் நாடகம் ஒலிபரப்பாகும் நேரத்தை மாற்றும்படி வேண்டிக் கொண்டார். அதிர்ச்சியடைந்த நான் இதை நீங்கள் என்னிடம் கேட்பதைவிட இலங்கை வங்கியிடம் தான் கேட்க வேண்டும்... ஏனென்றால் அவர்கள்தான் அந்த நாடகத்தை ஒலிபரப்புகிறார்கள் என்றேன்.

(பிறகு குணரத்தினம் இலங்கை வங்கி தலைவரிடம் தன் கோரிக்கையை முன்வைக்க அவர் மறுத்து விட்டார்.” நாடக திரைப்பட நடிகரான அவரிடம் காதல் அனுபவங்கள் பற்றிக் கேட்டோம். நிறையவே களஞ்சியத்தில் இருக்கும் என்பது என் எண்ணம்.

“இப்போதும் எனக்கு பழைய ஞாபகங்கள் அப்படியே தான் இருக்கின்றன. எனக்கு கண் பார்வைதான் கொஞ்சம் மங்கி விட்டது. சிலரை அடையாளம் காண்பது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் என் மனைவியோ வீட்டுக்கு எந்த பொம்பிளை வந்தாலும் நல்லா அடையாளம் தெரியுது ஆனால் ஆண்களை மட்டும்தான் அடையாளம் தெரியிறதே இல்லைன்னு சொல்ற.

ஒருநாள் சென். பெனடிக்ஸ் மண்டபத்தில்ல ஒரு கலை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும் அதைப் பார்ப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். எனக்கு பின் வரிசையில், பெயர் ஞாபகத்தில் இல்லை, ஏதோ மேரின்னு ஒரு பெயர், அந்தப் பொண்ணும் நின்னுக்கிட்டு இருந்தது. அந்தப் பொண்ணு இலங்கை வானொலியில் ஒரு சில நாடகங்களில் நடித்திருந்தது. என்னைப் பார்த்த அந்தப் பொண்ணு நீங்கதானே ராமதாஸ்! உங்க நாடகங்க எல்லாமே ரொம்பவும் நல்லா இருக்கு என்றாள். நானும் ‘தேங்ஸ்’ என்றேன். அடுத்ததாக அவள் என்னிடம் ஒன்றை கேட்டாள்.

‘உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. நான் உங்களை காதலிக்க ஆசைப்படுகிறேன்’ என்றாள். அப்போது மேடையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இரைச்சலாக இருந்தது. எனக்கும் அவள் என்ன சொன்னாள் என்றே புரியவில்லை. என்ன சொன்னீர்கள் என்று நான் திரும்பவும் கேட்க ‘நான் உங்களை காதலிக்கிறேன்’ என்று அவள் சத்தமாக சொன்னாள். நான். ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப் போயிட்டேன்.

பிறகு சுதாகரித்துக் கொண்ட நான் என்னை நம்பி நாலு தங்கச்சிங்க இருக்காங்க! அவங்கள கரைசேர்ப்பதுதான் என் முதல் கடமை அதனால இந்த காதல் எல்லாம் எனக்கு தேவையில்லை சாரி! என்றேன். அதற்கு அவள் நன்றாக யோசித்து சொல்லுங்க என்றாள். எனக்கு நல்லா யோசித்து சொல்லுற அளவுக்கு மூளை கிடையாதுங்க என்றேன். அவள் சிரித்தாள். அவ்வளவுதான் அதற்குப் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை.

அவள் இன்று எங்கு இருக்கிறாளோ? என்று சொல்லும் ராமதாஸ் இந்த விசயம் இதுவரைக்கும் என் மனைவிக்குக்கூட தெரியாது. அப்படித் தெரிந்தாலும் பயமில்லை... அப்படி அவ வந்தாள் அவளுடனேயே போயிடுங்க.. எனக்கும் நிம்மதின்னு சொல்லுவா” என்று சொல்லிச் சிரிக்கிறார் ராமதாஸ்.
திருமணம் பற்றிக் கேட்டோம். வீட்டில் ஒரு படத்தைக் காட்டி, உனக்கும் வயது வந்திருச்சி... இந்தப் பெண்ணை கட்டிக்கிறியா? என்று கேட்டார்கள். நானும் சரி என்று சம்மதம் சொல்லிவிட்டேன். ஏனென்றால் என் மனைவி இப்போ இருக்கிறதவிட அப்போ அழகாதான் இருந்தாள். எனக்கு திருமணம் பேசிய விடயம் பற்றி எனது நண்பிகளான பி. எச். அப்துல் ஹமீதின் துணைவியான சசிகலா, அவரின் தங்கை கீதாஞ்சலி ஆகியோரிடம் கூறினேன். அவர்களும் போட்டோவை காட்டுங்க நாங்கள் பார்த்துவிட்டு பொண்ணு நல்லா இருக்கான்னு சொல்லுறோம் என்றார்கள். நானும் வீட்டில் கேட்டு போட்டோவை வாங்கி சசிகலா, கீதாஞ்சலியிடம் கொடுத்தேன். அவர்களும் அந்தப் போட்டோவை பார்த்துவிட்டு பொண்ணு நல்லா இருக்கு என்று நற்சான்றிதழ் வழங்கினார்கள்.” என்று சொல்லி அது ஒரு காலம் என்று பெருமூச்சி விடுகிறார் ராமதாஸ். ராமதாஸின் திருமணம் வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலில் நடைபெற்றதாம். திருமணத்திற்கு கலை உலகை சேர்ந்த பலர் கலந்து சிறப்பித்தார்கள் என்று சொல்கிறார் ராமதாஸ். மறக்க முடியாத நபர்கள் பற்றி கேட்டதற்கு பி. எச். அப்துல் ஹமீதை என்னால் மறக்க முடியாது என்கிறார்.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

‘கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நண்பர்கள் யாராவது வெளிநாட்டிலிருந்து வரும்போது அவர்களை அழைத்துவர நான் எனது நண்பர்கள் சிலரோடு விமான நிலையம் செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது சீதுவையில் இருந்த ஒரு மதுச்சாலைக்குச் சென்று கொஞ்சமாக ஏற்றிக் கொள்வோம்.

விமான நிலையத்திலிருந்து வரும் போதெல்லாம் அந்த மதுக்கடை ஞாபகத்திற்கு வரும்... சீதுவையை கடக்கும் போதெல்லாம் காரின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி மதுக்கடையை தேடுகிறேன்... பார்க்க முடியவில்லை....’ என்று அந்தக் காலத்தை நினைத்து ஏங்கும் ராமதாஸிடம், இன்றைக்கும் பயப்படுகிற விடயம் எது என்று கேட்டேன். ‘எழுபத்தி மூன்றாம் ஆண்டிலிருந்து என் பொண்டாட் டிக்குதான் பயப்படுகிறேன். ஏனென்றாள் என் கல்யாணம் 73ல் தான் நடைபெற்றது.”

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

என்று கேட்டதற்கு ராமதாஸ் இப்படி பதிலளிக்கிறார். “இருக்கிறது. என் குலதெய்வம் திருநெல்வேலி கலக்காடு மாரியம்மன்தான். வருடந்தோறும் அந்தக் கோயிலுக்கு சென்று படையல் போட்டு சாமி கும்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்.’ வாழ்க்கையை பற்றி ராமதாஸ் கூறும் போது... ‘வாழ்க்கை இனிமையானது. ஆனால் இன்னும் நான் வாழ்க்கையில் முழு நிறைவுபெற்றதாக நினைக்கவில்லை. இன்னும் ஏதாவது செய்ய வேண்டும், கலை சார்ந்த ஒரு வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை!”என்று தனது பழைய ஞாபகங்களின் தேடல்களிலிருந்து விடைபெற்றுக் கொள்கிறார் ராமதாஸ்.

No comments:

Post a Comment