Tuesday, July 12, 2016

கபாலி ரஜினிக்கு கைக்கொடுக்குமா?

எஸ்.காவ்யா – தியத்தலாவை

கைகொடுக்க வேண்டும் என்பதைவிட கைகொடுத்தாக வேண்டும் என்பதே சரியானது. படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இது இரண்டு தாதாக்கள் சம்பந்தப்பட்ட கதை என்கிறார். இது ரஜினிக்கு கேக் சாப்பிடுகின்ற மாதிரி ஈஸியானது. மேலும் ரஜினி இமேஜூக்கு தளபதி, பாட்ஷா மாதிரியான கதைகள்தான் சரிப்பட்டு வரும். அமிதாப்பச்சன் தன்னை வயதான நடிகனாக திரையில் அறிமுகப்படுத்தி மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டார். அப்படி ஒரு காரியத்தைச் செய்யப்போய், அதாவது குசேலனில் இரண்டாவது கதாநாயகன் மாதிரி வந்து, படம் சரியாகப் போகாமல் வாங்கிக் கட்டிக்கொண்டார். கோச்சடையானை விட்டு விடுங்கள். லிங்காவில் அவர் ஏற்ற அணைக்கட்டு அமைக்கும் கருப்பொருளும் ரசிகர்களிடம் சரிப்பட்டு வரவில்லை. லிங்கா தோல்விப்படமல்ல, வசூலில் வெற்றிதான் என்கிறார் கலைப்புலி தாணு. ஆனால் அது பொக்ஸ் ஒஃபிசில் வெற்றி பெறவில்லை. ரஜினி படம் என்றால் பொக் ஒஃபிசில் கல்லாகட்ட வேண்டும். ஏனெனில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.

எனவே இவற்றை எல்லாம் மனதில் வைத்து, எடுத்த எடுப்பிலேயே பயங்கர வசூலைக் குவிக்கின்ற மாதிரி கபாலியை செதுக்கி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.  எதிர்பாராதவிதமாக 'வெற்றி' பெறத் தவறுமானால் அது '2.8' படத்தையும் பாதிக்கும் என்பது மட்டுமின்றி திரையுலகில் ரஜினியின் எதிர்காலம் விஜயகாந்தாகியும் விடலாம்!

சிம்புவுக்கு பொண்ணு பார்க்கிறாங்களாமே? அப்போ விரைவில் கல்யாணமா?
கே. திவ்யா – கொழும்பு – 14

ஜெமினியின் மகள் ரேகா பேரழகி. அந்தக் காலத்து தவமணிதேவி பரபரப்பு அழகி. காஞ்சனாவுக்கு என்ன குறை? இப்படிப் பல அழகான, எடுப்பான நடிகைகள் திருமணம் செய்யாமலேயே காலத்தைக் கழித்திருக்கிறார்கள். தவமணி கடைசிக் காலத்தில்தான் வேறு வழி இல்லாமல் ஒரு கோவில் அர்ச்சகரைத் திருமணம் செய்ய நேரிட்டது. இன்றைக்கு எடுத்துக்கொண்டால் த்ரிஷாவும் நயன்தாராவும் வயதாகிக் கொண்டிருக்கும் கன்னியர். ஒரு வயதின் பின்னர் திருமணம் செய்யாமலேயே இருந்துவிடலாம் என்று தோன்றும்.
அதன்பிறகு அறுபதைத் தாண்டியதும் திருமணம் செய்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ? என்ற எண்ணம் வரும். எனக்கென்னவோ, த்ரிஷாவும் நயனும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வார்கள் என்று தோன்றவில்லை. காதலிப்பதும் கைவிடுவதும் ஒரு விளையாட்டாகப் போய்விட்டிருக்கலாம். ஒரு தடவை தான் அமிதாப்பைக் காதலிப்பதாக ரேகா சொல்ல பச்சான் குடும்பத்தில் ஏக ரகளையானது. இவர்களும் என்ன செய்வார்களோ தெரியவில்லை. நடிகர்கள் பெரும்பாலும் பிரம்மச்சாரியம் காப்பதில்லை. அது அவர்களுக்கு சரிப்பட்டு வராது. ஆண் வாழ்க்கை அப்படி. அவனுக்கு ஒரு அந்தரங்கத் தோழி அவசியம். சிம்பு திருமணம் செய்து கொள்வார். ஆனால் அவரது டேஸ்டுக்கு அப்பெண் சரிப்பட்டுவருமா என்பது கேள்விக்குறிதான். திருமணம் ஒரு பிரளயமாகிவிடலாம். ஆனால் என்னதான் ஆட்டம் பாட்டம் போட்டாலும் டி.ஆர்.தன் மனைவிக்கு அடங்கியிருப்பவர்.

நடிகைகள் நீலப்படங்களில் மாட்டிக்கொள்வது பற்றி?
ஆர். கிருபா – மட்டக்களப்பு

தொண்ணூறுகளில் ஸ்ரீதேவி நீலப்படமொன்றில் நடித்ததாக கதை பரவி வில்லங்கமானது. ஸ்ரீதேவி அதை மறுத்திருந்தார். கமல்ஹாசன் பற்றியும் இப்படி செய்தி வந்தது. ஆனால் இப்போது ஏகப்பட்ட 'ஸ்பை' கெமராக்கள் வந்துவிட்ட நிலையில், கணினி தொழில்நுட்பத்தில் ஆகாத காரியம் இல்லை என்றாகிவிட்ட நிலையில் நடிகைகளின் அந்தரங்கம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை. ஒரு நடிகையின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டும் என ஒருவர் தீர்மானித்துவிட்டால் அதை அவர் செய்துகாட்ட முடியும். நடிகைகள் இதை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு படம் தயாரிக்கும்போது நிறையக் காட்சிகள் நீக்கப்படுகின்றன. காதல் காட்சியைப் படமாக்கும் போது பல காட்சிகள் நீக்கப்படுகின்றன. அவ்வாறு நீக்கப்படும் காட்சிகளில் பல எக்குத்தப்பதாக இருக்கலாம். ஏனெனில் படம் பிடிக்கும்போது பல கோணங்களில் கெமரா கோணம் வைப்பார்கள். இவற்றை மெமரியில் இருந்து திருடிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீலப்படங்களில் நடித்துத்தான் பணம் பண்ண வேண்டும் என்று ஒரு நடிகை நினைக்க மாட்டாள். சம்பாதிக்க நடிகைகளுக்கு வழிகளா இல்லை. ஒரு நீலப்பட நடிகை இன்றைக்கு மும்பையில் முன்னணி நடிகையாக (சன்னி லியோன்) திகழ்கிறாரே!

த்ரிஷா அம்மா வேடங்களில் நடிக்கத் தொடங்கி விட்டாராமே?
எச்.எப்.எஸ்.சுக்ணா
காத்தான்குடி


த்ரிஷா ஒரு நல்ல நடிகை. அவருக்கு இன்றைக்கும் கதாநாயகியாக நடிக்கலாம். ஆனால் சினிமா ஒரு மாய உலகம். கடுமையான போட்டி நிலவும் இடம். ஹிந்திப் படத்தில் நடிகைகளும் கன்னட உலகில் கன்னட நடிகைகளும் மலையாளத்தில் மலையாள நடிகைகளும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கொலிவூட்டில் மாத்திரம்தான் எல்லா மாநில நடிகைகளும் கோலோச்ச முடியும்.
ஏனெனில் தமிழ் நடிகை என்று சொல்வதற்கு இங்கே யாரும் இல்லை. இதனால் போட்டி அதிகம். த்ரிஷாவுக்கு 34 வயதிருக்கலாம். நடிப்புத்தான் தொழில் என்றால் அவர் அக்கா, தங்கை, இரண்டாம் கதாநாயகி என நடிப்பதில் தவறு இல்லை. எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ஜோடியாக நடித்தவர்கள் பின்னர் அவர்களுக்கு தங்கையாகவும் அம்மாவாகவும் நடித்திருக்கிறார்களே! அரசு உத்தியோகம் பார்த்தவர் ஓய்வின்பின்னர் செக்கியூரிட்டி கார்டாகவும். பிட்டிஷன் எழுதுபவருமாக மாறுவதில்லையா? மாய உலகில் எல்லாம் மாயமாகத்தான் இருக்கும்!


தமிழ் திரையுலகில் பேய் படங்களின் வருகை ஆரோக்கியமானதா?
எம்.புவிகரன்
யாழ்ப்பாணம்


ஒருவகையில் ஆரோக்கியமானதுதான். அந்தக்காலத்தில் ட்ரகூலா படம் பார்த்து இரவெல்லாம் நடுங்கிச் செத்திருக்கிறோம். யார் நீ படத்தில் ஜெயலலிதாதான் பேய். அவரைப் பார்த்து உடல் சில்லிட்டிருக்கிறோம். அப்படி 'கெத்து' காட்டிக் கொண்டிருந்த பேயை தெருவில் வித்தை காட்டும் பாம்பாட்டி, குரங்காட்டி அளவுக்கு பேய்களை மலினப்படுத்தி ஜோக்கராக்கியதில் இந்தப் பேய்ப்படங்களுக்கு ஒரு சலாம் வைக்கலாம்.
எது உங்களுக்கு இன்னும் நிகழவில்லையோ அதை நினைத்துப் பயப்படுவதே அச்ச உணர்வு. இந்த அச்சம் மனிதர், மிருகம் என எல்லா ஜீவராசிகளிடமும் நிறைந்துள்ளது. இதில் பிரதானமானது பேய் மீதான பயம். நாய் குரைத்துக் கொண்டுவந்தால் என்ன செய்வது என்ற கற்பனைதான் பேயை உருவாக்குகிறது. நமக்கு திரில் மேல் ஒரு காதல் உண்டு. அதனால்தான் பேய்ப்படங்களை நடுங்குவதற்காகவே தியட்டருக்குச் செல்கிறோம். அங்கே கொஞ்சம் நடுக்கத்தையும் நிறைய சிரிப்பையும் தருகின்றன. இத்தமிழ்ப் பேய்ப்படங்கள் பாகற்காய் கசப்பு. அதை எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இந்தப் பேய்ப்படங்களும் இப்படித்தான்!

No comments:

Post a Comment