Friday, July 1, 2016

இருள் உலகக் கதைகள்

கேட்டு எழுதுபவர்:  மணி ஸ்ரீகாந்தன்

விசாவளை நகருக்கு அண்மையில் அமைந்திருக்கும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில்தான் கஸ்தூரி வேலை செய்கிறாள். அட்டன் பகுதியில் வசிக்கும் அவள் தொழில் தேடியதில் அவிசாவளை ஆடைத் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. இப்போது ஐந்து மாதங்களாக அங்கே வேலை செய்து வருகிறாள். உறவுகளை விட்டு ரொம்பத் தூரம் வந்ததில் கஸ்தூரிக்கு மனக் கஷ்டம் என்றாலும், தினமும் வேலை முடிந்து தங்கும் விடுதிக்கு வந்ததும் செல்போன் வழியாக உறவுகளோடு பேசுவதில் கஸ்தூரிக்கு அலாதி இன்பம்.

அன்றும் வழமை போலவே வேலை முடிந்து விடுதிக்கு வந்த கஸ்தூரி முதல் வேலையாகக் குளியல் அறைக்குள் நுழைந்தாள். ஷவரைத் திறந்து ஆசை தீரக் குளித்தாள். அப்போது அந்தக் குளியலறையின் கதவை யாரோ தட்டுவது போலிருந்தது. விடுதியில் தங்கியிருக்கும் சக பெண்களாக இருக்கும் என நினைத்தவள். "இதோ சீக்கிரம் வந்துடுறேன்" என்று குரல் கொடுத்துவிட்டு ஷவரை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக உடம்புக்கு சோப் போட ஆரம்பித்தாள். அப்போது இதுவரை அவள் கேட்டிராத ஒரு அமானுஷ்ய பெண் குரல் 'அக்கா… அக்கா….' என்று கூப்பிட்டது. கொஞ்சம் உடல் சிலிர்த்த கஸ்தூரி, யாராவது புதுசா விடுதிக்கு வந்திருக்கும் பெண் என்னை ஏன் கூப்பிடணும் என்ற வினாவோடு கதவைத் திறந்து வெளியே வந்தாள். அங்கே கஸ்தூரிக்கு ஒரே அதிர்ச்சி! வெளியே யாருமில்லை. பூரண அமைதி. யாரும் வந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. ஆனாலும் கஸ்தூரி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். செல்பேசியைத் துழாவி எடுத்து தனது வீட்டுக்கு அழைப்பை எடுத்து பேசத் தொடங்கினாள்.
வீரசிங்கம் பூசாரி


அப்போது அட்டனில் உள்ள கஸ்தூரியின் நண்பி ராணி தனது செல்லில் ஐ.எம்.ஓ. வழியாக கஸ்தூரியோடு தொடர்புகொண்டாள். தனது புதிய போனில் பெரிய திரையில் ஐ.எம்.ஓ. வில் கஸ்தூரியின் முகம் ரொம்பவே தெளிவாகத் தெரிந்தது. ராணிக்கும், கஸ்தூரிக்கும் ஐ.எம்.ஓ அழைப்பு முதல்முறை என்பதால் முகம் பார்த்துப் பேசுவதில் அப்படியொரு மகிழ்ச்சி. ஹட்டன் வீட்டில் இருந்தபடி ராணி கஸ்தூரியோடு பேசிக் கொண்டிருக்கும் போது போன் திரையில் கஸ்தூரிக்குப் பின்னால் யாரோ ஒருவர் நிற்பது போல மங்கலாகத் தெரிந்தது. கஸ்தூரிக்குப் பின்னால் நிற்பது யார் என்று ராணி கேட்க எத்தணித்தபோது, அந்த போன் திரையில் அவள் கண்ட காட்சி அவளின் இரத்தத்தை உறையச் செய்தது. கஸ்தூரியின் பின்னால் நின்றிருந்த அந்த உருவம் நகர்ந்து கஸ்தூரியின் அருகே வந்து அவளின் தலையில் கோரமான தனது கைகளால் அழுத்த முயற்சித்தது. இதைப் பார்த்த ராணி வெலவெலத்து வாயடைத்துப் போனாள். என்ன நடக்கிறது என்பது புரியாத கஸ்தூரி தனக்கு தலை ரொம்ப வலிப்பதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தாள். அப்போது ராணியின் கைகள் நடுங்கி போன் தரையில் விழுந்தது.

அந்த நிமிடமே ராணி தான் போனில் பார்த்த விடயத்தை குரல் நடுங்கியபடி தனது குடும்பத்தினரிடம் கூற, அவர்கள் பதறியபடி அந்த நிமிடமே அந்த விசயத்தை கஸ்தூரியின் பெற்றோரிடம் கூறினார்கள். விசயத்தைக் கேட்டு கஸ்தூரியின் பெற்றோர் ஆடிப்போனார்கள். அப்போதே மகளை தொலைபேசியில் அழைத்த அவர்கள் தாம் உடனே அவளைப் பார்க்க வருவதாக மட்டும் சொன்னார்கள். நடந்த சம்பவங்களைச் சொன்னால் மகள் பயந்து விடுவாள் என்பதால் விசயத்தை மறைத்து விட்டார்கள்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே கஸ்தூரியின் பெற்றோர்கள், அவிசாவளையில் இருக்கும் அந்த தங்கும் விடுதிக்கு வந்தபோதுதான் கஸ்தூரியின் நிலைமை மோசமாகி இருப்பதையும் அவள் குரல் மாறி ஆண் குரலில் அவள் பேசுவதையும் கேட்ட பெற்றோர்கள், கலவரம் அடைந்து விடுதி நிர்வாகியிடம் விடயத்தைக் கூறினார்கள். அவரும் இந்தப் பெண் நள்ளிரவில் பலமான குரலில் தனக்குத் தானே பேசி சிரிப்பது தனக்குக் கேட்டதாகச் சொன்னார்.

கஸ்தூரி பற்றி அடுத்தடுத்துக் கிடைத்த செய்திகள் பயங்கரமாக இருக்கவே, அந்தப் பகுதியிலேயே ஒரு பூசாரியைத் தேடிப் பரிகாரத்தை முடித்திடத் தயாரானார்கள். விடுதி நிர்வாகியிடம் அறையில் பூஜை செய்ய அனுமதி கேட்ட போது, அவரும் தீவிர காளி பக்தர் என்பதால் அந்தக் காரியத்திற்கு மகிழ்ச்சியோடு சம்மதித்தார். பிறகு கஸ்தூரியின் குடும்பத்தினர் அந்தப் பகுதியில் பிரபல பூசாரியாக விளங்கும் வீரசிங்கம் பூசாரியை சந்தித்து பரிகார பூஜைக்கு நாள் குறித்தனர். கஸ்தூரியின் நிலைமை மோசமடைந்ததினால் அடுத்த நாளே அவிசாவளையில் பரிகார பூஜையை நடத்த வீரசிங்கம் ஏற்பாடு செய்தார். பூசாரியின் சகாக்கள் அட்சர சதுர கோட்டை வரைந்து அதில் வீரசிங்கத்தை அமர்த்தினார்கள். பூசாரி தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி வேலையை ஆரம்பித்தார். மந்திரங்கள் வானைப் பிளக்க, கஸ்தூரியின் முகம் சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது.

'ஹே, பூசாரி! என்கிட்டயே உன் வேலையை காட்டுறீயா, அது நடக்காதுடா!'ன்னு கஸ்தூரி ஆண் குரலில் வீரசிங்கத்தை மிரட்டினாள். எதற்கும் அஞ்சாத வீரசிங்கம் ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு, "நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு உன்ன ஒழிக்காம விடமாட்டேன்!" என்றார்.

"பேய்களை யாராலும் சர்வ சாதாரணமாக பார்க்க முடியாது அப்படி பார்ப்பதாக இருந்தால் அவர்கள் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்து இருக்கணும். ஆனால் கெமரா போனில் பேய்கள் தெரியும். அதனாலதான் ராணியின் போன் திரை கஸ்தூரியை பேய் பிடிக்கும் காட்சியை காட்டியிருக்கு" என்று ஒரு சிறு விளக்கத்தையும் அங்கே கூடியிருந்தவர்களுக்கு வீரசிங்கம் கூறினார். பிறகு பூசாரி கஸ்தூரியை ஆட்டுவித்ததில் சில உண்மைகள் கிடைத்தன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடி, காதல் தோல்வியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களாம். அப்படி அவலச் சாவு அடைந்தவர்களின் ஆவி இரண்டும் அந்த விடுதியில் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த ஒரு அறையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளன. அப்போதுதான் அந்த அறைக்கு கஸ்தூரி குடி வந்து இருக்கிறாள். தங்களின் சுதந்திரத்திற்கு இடையூறாக ஒருத்தி வந்ததில் கோபம் கொண்ட அந்த கெட்ட ஆவிகளில் ஆண் ஆவி, கஸ்தூரியைக் கொன்றுவிட முயற்சி செய்திருக்கிறது என்ற தகவலை அந்த தீய சக்தியின் வாயாலேயே சொல்ல வைத்தார் பூசாரி.

"இன்னும் சில நாட்கள் தாமதித்திருந்தால் கஸ்தூரியை தீய சக்தி கொன்றிருக்கும்" என்று வீரசிங்கம் சொன்ன போது எகத்தாளமாக சிரித்த தீய சக்தி, "இன்னும் நான் இங்கேதான் இருக்கேன், அதுக்குள்ள என் கதையை முடிச்சிட்டதா துள்ளுற…" என்று கொக்கரித்தது.


"உன்ன இப்போதே ஒழிக்கிறேன் பார்" என்று கூறியபடியே ஒருபிடி விபூதியை அள்ளி கஸ்தூரியின் முகத்தில் அடிக்க, பேய் நிலைகுலைந்து நின்றது. வித்தை தெரிந்த ஒரு பூசாரிக்கு பேயை மடக்க ஒரு நிமிசம் போதுமே! வீரசிங்கம் அந்த கண் இமைக்கும் நொடியை பயன்படுத்தி மந்திரக் கட்டால் அதை வீழ்த்தினார். ஆனாலும் அந்த தீய சக்தி ரொம்பவும் கொடூரமாக இருந்ததால் அதனை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பிடித்து அடைத்தார்.

"ஆனாலும் இது நிரந்தரமில்லை. இந்த அறையில் உள்ள மற்ற பெண் பேய் எங்கே இருக்கிறது என்பது தெரியலை. ஒருவேளை நான் உள்ளே வரும் போது அது வெளியே ஓடியிருக்கலாம். உள்ளே நடப்பதை வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருக்கலாம். அதனால இப்போ இந்த அறையை மூடிடுங்க. பிறகு இந்த விடுதிக்கு ஒரு பரிகார பாதுகாப்பு பூஜையை செய்தால் பலன் கிடைக்கும்" என்ற வீரசிங்கம், வெற்றிக் களிப்புடன் புறப்பட்டார். அவர் வாகனத்தில் ஏற முற்பட்ட போது விடுதிக்கு எதிரே நின்ற ஒரு மரத்தில் ஒரு பயங்கரமான பெண் குரல் அலறும் ஓலம் பூசாரிக்கு மட்டும் தெளிவாகக் கேட்டது. 'நீ அமைதியா போயிட்டா தப்பிடுவ. இல்லன்னா உனக்கும் அவன் கதிதான்' என்று மனதிற்குள் நினைத்தபடியே வீரசிங்கம் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு தண்ணீர் போத்தலை கையில் எடுத்தார். 

No comments:

Post a Comment