Tuesday, July 19, 2016

39வது சென்னை புத்தகக் கண்காட்சி

மணி  ஸ்ரீகாந்தன்

சென்னை 39வது புத்தகக் கண்காட்சி இம்முறை சென்னை தீவுத் திடல் மைதானத்தில் 700 அரங்குகளோடு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. வருடந்தோறும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கும் புத்தகத் திருவிழா, சென்னை வெள்ள அனர்த்தத்தின் காரணமாக திகதி பின்போடப்பட்டு ஜூன் மாதத்தில் நடைபெற்றது! வழமையான விற்பனையும், கூட்டமும் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய சென்னைத் தீவுத்திடல் வரை ஒரு நடைபோய் பார்த்தோம்.
புத்தகத் தேடுதலில் அலைமோதும் வழமையான கூட்டத்தை இம்முறை காணமுடியவில்லை. ஆனால் புத்தகக் கண்காட்சிக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த டீ ஸ்டோல், இனிப்புக் கடைகளில் அலைமோதும் கூட்டத்தைக் காண முடிந்தது. தீவுத்திடல் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நூல் காட்சி விளம்பரங்களில் பெரிய அளவிலான ஒரு தட்டியில் 'ஒரு கூர் வாளின் நிழலில்' புத்தகம் பற்றிய விளம்பரம் கவனத்தைக் கவர்ந்தது. தமிழினியின் புகைப்படத்தோடு காணப்பட்ட அந்தத் தட்டியைப் பார்க்கப் பெருமையாக இருந்தது.

கண்காட்சி அரங்கின் உள்ளே நுழைந்தபோது படைப்பாளர் பிரபஞ்சன், சல்மா, முனைவர் வான்மதி, திருச்சி பழனிச்சாமி, அமுதா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்களைச் சந்தித்து விட்டே சென்றோம். புத்தகக் கண்காட்சி வழமையாக நடைபெறும் நந்தனம் வை.எம்.சி. கல்லூரி வளாகத்தில் கிடைக்கும் குளிர்மை, தீவுத் திடலில் கிடைக்கவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தீவுத் திடலின் எதிர்ப்பக்கம் மெரீனா கடற்கரை. பின்பக்கம் கூவம் நதி. இரண்டும் சேர்ந்து உருவாக்கும் வெப்பம் தீவுத்திடலை சுற்றிவளைக்க, புத்தக அரங்கினுள் நுழையும் வாசகர்கள் வியர்வையில் குளித்து விடுகிறார்கள். ஜனவரி மாதம் காலையில் பனியாகவும் பகல்பொழுது மிதமாகவும் இருக்கும். நடமாட களைப்பாக இருக்காது. தீவுத்திடல் என்கிற பெயருக்கு தகுந்தாற்போலவே அந்த இடம் சென்னையில் இருந்து தனித்தீவாகவே துண்டிக்கப்பட்டிருக்கிறது. நிலப்பரப்பால் அல்ல, தொலைத் தொடர்பால்! புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் நுழைந்தவுடன் செல்பேசிகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது. அரங்கத்தின் வெளியே இருப்பவர்களிடமோ உள்ளே இருப்பவர்களிடமோ தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் திணறிப் போனார்கள்! இதுபற்றி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஒருவரிடம் வினவினோம்.
ரவி தமிழ்வாணன்
"சிக்னல் இல்லாதது பெரிய குறைதான். என்ன செய்வது,அடுத்த முறை இப்படியான தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம்" என்றார் அவர். முன்னேறி வரும் பெரு நகரங்களில் ஒன்றான சென்னையில் போன் சிக்னல் கிடைக்காத ஒரு இடம் இருக்கிறதா என்பதே ஆச்சர்யம்தான்!

புத்தகக் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக மணிமேகலை பிரசுரத்தின் 39 நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவற்றை தமிழகத்தின் முன்னணி படைப்பாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதுபற்றி ரவி தமிழ்வாணனிடம் பேசினோம்.

"சென்னை 39வது புத்தகக் கண்காட்சியை கௌரவப்படுத்துவது போலவே எமது 39 நூல்களும் வெளியிடப்பட்டது. அடுத்த வருடம் 40 நூல்கள் வெளியிடப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவரிடம், தீவுத்திடல் புத்தக விற்பனை எப்படி, வெற்றியா தோல்வியா என்று கேட்டோம்.

ஒரு நிமிடம் எம்மை உற்றுப்பார்த்த ரவி, நிதானமாகவே பேச்சை ஆரம்பித்தார்.

"தென் சென்னையில்தான் வாசிப்பவர்கள் அதிகம். ஆனால் வடசென்னை அப்படி அல்ல. பெரும்பாலான தொழிலாளர்களைக் கொண்ட பகுதி அது. ராயப்புரம் மீனவர்களையும், துறைமுகம், மண்ணடி போன்றவை தொழிலாளர்களையும், வியாபாரிகளையும் கொண்ட ஏரியா. அங்கே வாசிப்பு என்பது ரொம்பவும் குறைவுதான். அதோடு தென் சென்னை வாசிகளுக்கு வட சென்னை வருவதிலும் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. செயற்பாட்டு ரீதியாக விடப்பட்ட தவறு இது. எனினும் இது ஒரு புது முயற்சி என்றுதான் பார்க்க வேண்டும். கண்காட்சி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்த ஆண்டு வழக்கம் போல நந்தனத்திலேயே புத்தகக் கண்காட்சியை நடத்த தீர்மானித்து இருக்கிறோம்.
புத்தகக் கண்காட்சிக்கான திகதி தள்ளிப் போனதால் நந்தனம் வை. எம்.சியை வேறு நிறுவனங்கள் நிகழ்ச்சிக்காக பதிவு செய்துவிட்டன. அதனாலும் எங்களுக்கு அது கிடைக்கவில்லை. அதோடு வாடகையும் கொஞ்சம் அதிகமாகவே கேட்டார்கள். அதனாலேயே தீவுத் திடலை ஏற்பாடு செய்தோம். இது அரசுக்குச் சொந்தமானது என்பதால் குறைவான வாடகைதான். நடுத்தரமான விற்பனையும், நடுத்தரமான ஏற்பாடுமாக இருந்தது. பெரிய நஷ்டம் இல்லை. ஆனாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை என்பது வருத்தம்தான். அதோடு ஒரு முக்கிய விடயத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். வழமையாக ஜனவரியில் நடைபெறும் புத்தகத் திருவிழா இம்முறை திகதி தள்ளிப்போகிறது என்பதை கேள்விப்பட்ட சில அமைப்புகள் 'வெள்ளம்தான் வடிந்துவிட்டதே, புத்தகத் திருவிழாவை செய்யலாமே!' என்று அவசரப்பட்டு ஜனவரியிலேயே ராயப்பேட்டை மைதானத்தில் இருநூறு அரங்குகளோடு புத்தகக் கண்காட்சியை நடத்தின. அதனால் புத்தகம் வாங்கும் கணிசமான வாசகர்களின் ஒரு பகுதியினர் அங்கேயே புத்தகங்களை வாங்கிச் சென்று விட்டார்கள். அதாவது ஒரு முழு கேக்கின் ஒரு பாதியை வெட்டி எடுத்தது போல ஆகிவிட, அதுவும் புத்தக விற்பனைக்கு பாதிப்பாகிவிட்டது.
வாசகர்களின் வருகையை எடுத்துக் கொண்டால் குறிப்பாக வெளிநாட்டு வாசகர்களின் வருகை முற்றாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். டிசம்பர், ஜனவரி குளிர்காலம், வருடக்கடைசி, நீண்ட விடுமுறை போன்ற காரணங்களினால் புலம்பெயர் தமிழர்கள் தமிழகத்திற்கு பெருமளவில் வருவார்கள். அதோடு அந்த காலக் கட்டத்தில் இசைவிழா உள்ளிட்ட நிறைய விஷேசங்கள் நடக்கும். தைப்பொங்கல் சீசன் அல்லவா! ஜூன் வெயிலை அவங்களால தாங்க முடியாது. எங்களாலேயே தாங்க முடியல்லியே! அதனாலும் வருகை ரொம்பவும் குறைவு" என்றார் ரவி தமிழ்வாணன்.

சிங்கப்பூர் படைப்பாளர்களை ஏற்பாட்டாளர்களே அழைத்து வந்தார்களாமே, ஏன் இலங்கை எழுத்தாளர்களை அழைக்கவில்லை? என்று ரவியிடம் கேட்டோம்.
"சிங்கப்பூர் படைப்பாளர்களை விட இலங்கை எழுத்தாளர்களின் தொகை அதிகம்தான் என்றாலும், நாங்கள் ஸ்பெஷலாக யாரையும் அழைப்பதில்லை. புத்தகக் கண்காட்சி நடப்பது தெரிந்தாலே எல்லோரும் சென்னைக்கு படையெடுப்பார்கள். ஆனால் சிங்கப்பூர் அரசு அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களை தமது செலவிலேயே சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதோடு அவர்களுக்கு புத்தகக் கண்காட்சியில் நான்கு அரங்குகளையும் இலவசமாகவே வழங்கியும் இருக்கிறது. படைப்பாளர்களுக்காகவே பெருந்தொகையை சிங்கப்பூர் அரசு செலவு செய்திருக்கிறது. எனவே இலங்கையைச் சேர்ந்த படைப்பாளர்களும் அங்குள்ள அரசின் கவனத்துக்கு விடயத்தைக் கொண்டு வந்தால், உங்களையும் இருகரம் கூப்பி அழைக்கக் காத்திருக்கிறோம். அதற்கான முதல் சங்கை நீங்கள் ஊதி முயற்சியை தொடங்கினால் மறுபக்கத்தில் நாங்களும் அனைத்து உதவியையும் செய்யக் காத்திருக்கிறோம். உங்களுக்கு அரங்குகள் வழங்கப்படும், எந்தத் தடையும் இல்லை" என்று நிறைவாக ரவி தமிழ்வாணன் கூறி முடித்தார்.

(இன்னும்  வரும்..)

No comments:

Post a Comment