Monday, July 11, 2016

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் கொழும்பில் வீசவில்லையே?

கபாலி எப்படி இருக்கப் போகிறது?
எஸ்.சுந்தரம், வத்தளை

அண்மையில் வெளிவந்த 'கபாலி' டீசர் உலக அளவில் இரண்டாம் இடத்தை (யு டியூப்பில்) பிடித்திருப்பதாக சொல்லிக் கேள்வி. உண்மையெனில் இது சாதனைதான்.
படத்தை பொறுத்தவரை பாட்ஷாவின் 2 ஆம் பாகமாகத்தான் 'கபாலி' இருக்கப் போகிறது. அண்மையில் வெளிவந்த விஜய்யின் 'தெறி'யில் கூட 'பாட்ஷா' வாடை வீசியதே!

கோழியை CHICKEN 65 ஆக்கினாலென்ன, செட்டி நாடு காரக்குழம்பு வைத்தாலென்ன. பாலான்டியாக சமைத்தாலென்ன. எந்த வகையிலும் சரியாக முறையாக சமைத்தால் கோழிக்கறி ருசிக்காதா என்ன!

ரஞ்சித் ஸ்டைல் பாட்ஷா 'கபாலி'….
அட்லி ஸ்டைல் பாட்ஷா 'தெறி'
சிவா ஸ்டைல் பாட்ஷாதான்
அஜித்தின் அடுத்தது! 'ஆயிரம் தோட்டாக்கள்' என்று அதற்குப் பெயராம். அஜித்துக்கு அதில் பொலிஸ் வேடமாம்.
பாட்ஷா தொடர்கிறது…


இப்போது வரும் பாடல்களில் ரீங்காரம் இல்லையே?
ரவீந்திரன், சிலாபம்

ரீங்காரத்தை இப்போது யார் கேட்பார்கள்? எதுகை மோனையில் சில வார்த்தைகள் இருந்தால் போதும். மெட்டு இருந்தாலும் ஒன்றுதான். இல்லாவிட்டாலும்…. அதனால்தான் எல்லாப் பாடல்களும் ஒரே மெட்டில் இருப்பதைப் போல் உணர்கிறீர்கள்.

அன்றைய பாடல்கள் நினைவில் இனித்தன
இன்றைய பாடல்கள் கேட்டதும் மறந்தன!


புதுமுகங்கள் நடிக்கும் லோ பட்ஜெட் படங்களில் ஒரு சில நன்றாகத்தானே உள்ளன?
கவிதா, பாதுக்க

புதுமுகங்கள் நடிக்கும் சில படங்கள் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் அவற்றை நிறையப் பேர் பார்க்க முடிவதில்லையே! ஏனெனில் அவற்றை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இருக்கும் தியேட்டர்களில் பலவற்றை பெரிய நடிகர்களின் படங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்வதால் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் நகர்ப்புற தியேட்டர்கள் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களில் அல்லது நகரின் ஒதுக்குப்புறங்களில் உள்ள தியேட்டர்கள்தான் கிடைக்கின்றன. அதனால் அவை ரசிகர்கள் பார்க்காமலும் வசூலில் நலிவடைந்தும் போகின்றன. தியேட்டர்களில் ஓடினால்தானே ரசிகர்கள் அவற்றைப் பார்க்க முடியும்!இதனைத் தவிர்க்கும் ஒரு செயற்பாடாக பெரிய நடிகர்களின் படங்களைப் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்று பண்டிகை நாட்களில் மட்டும் திரையிடுவதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? மேற்படி பண்டிகை தவிர்ந்த இதர நாட்களில் பெரிய நடிகர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள 'கொஞ்சம்' பெரிய நடிகர்கள் அந்த நாட்களை தமக்கென பிடித்துக்கொண்டனர். பிறகென்ன, புதுமுகங்களும், குறைந்த பட்ஜெட் படங்களும் ஓரம்போக வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.


மாதத்தின் இறுதி வாரத்தில் பெரிய நடிகர்கள் கொஞ்சம் பெரிய நடிகர்கள் ஆகியோரின் படங்கள் தவிர்க்கப்பட்டு முற்றிலும் குறைந்த செலவில் உருவான படங்களைத் திரையிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதாவது புதிய வட்டாரத்துக்கு மாதத்தில் இறுதி வாரம் பௌர்ணமியாகட்டும் அப்போதுதான் திரையுலகம் உருப்படும்.

தமிழ் நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்திடம் இந்த யோசனையை சமர்ப்பிப்போம். முதல்வருக்கும் சினிமாவைப் பற்றித் தெரியும். நல்லது எது என்று புரியும். இதற்கு நல்ல தீர்வு காண அவரால்தான் முடியும். அவர் செய்வாரா? செய்வாரா? செய்வாரா?                                                                        மனசுக்குள் ஒரு மழைச்சாரல்    கொழும்பில் வீசவில்லையே?
ஜோன், கொழும்பு

மழைச்சாரல் இப்போது வடக்கில் மட்டுமே வீசுகிறது. அடுத்த சில நாட்களில் தலைநகரிலும் வீசும் என நம்புவோம்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படத்தை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் திரையிட முடியாமல் இருப்பதற்கு யார் காரணம்? தயாரிப்பாளர்கள், தமிழ் ரசிகர்கள் அல்ல. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்தான். இது அரசாங்கத்தின் கீழ் வருகிறது. மேலிடத்து உத்தரவு கிடைத்தால் அதைக் கூட்டுத்தாபனம் நிறைவேற்றியிருக்கும்.

இதற்காகத்தான் இலங்கை தமிழ் சினிமா கலைஞர்கள் சங்கத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். இனியாவது ஒன்று சேருவோம். சேர்ந்தால் ஒருமித்து குரலெழுப்பலாம். இல்லையேல் விதியை நொந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

திருட்டு DVD உருவாவதை தடுக்க முடியுமா?
ஆர். ஜானகி, கண்டி

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இப்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை இத்திருட்டு DVD பிரச்சினைதான். சூர்யாவின் '24' படத்தின் திருட்டு DVD பெங்களுரில் '24'  படம் காட்டப்பட்ட தியேட்டரிலேயே அதன் ஆபடேரின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டு திருட்டு DVD ஆகியிருக்கிறது.

சினிமாவை டிஜிட்டலுக்கு ஏற்ற வட்டுக்கு மாற்றினால் அதனை கியூப் என்பார்கள். CUBE நிறுவனத்துக்கு படத்தின் கொப்பியைக் கொடுத்து ஓரிரு நாட்களில் அதனை மாற்றித் தருவார்கள். அவ்வாறு மாற்ற தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அப்படியே அதனை திருட்டு DVD க்கு மாற்றி விடுகிறதாம் அந்த நிறுவனம். கோ 2 படத்தின் திருட்டு DVD இப்படித்தான் உருவாகியிருக்கிறது. இது போதாதென்று தணிக்கை சபைக்குக் கொடுக்கப்படும் பிரதி கூட திருட்டு DVD யாக மாற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு.

மற்றவர்கள் உழைப்பை திருடி காசு பார்க்கும் மாபியா குழுவினர் இருக்கும்வரை திருட்டு DVD பழக்கத்தை தடுத்து நிறுத்த முடியாது. ஒரு பக்கம் அடைத்தால் மறுபக்கம் அது பிய்த்துக் கொள்ளும்.

இதற்கு ஒரே தீர்வு, திரையரங்குகளை மூடிவிட்டு தொலைக்காட்சிகளில் திரைப்பட சேனல்களை ஆரம்பிப்பது NETFLIX சேனலில் உள்ளது போல் காசு கொடுத்து எந்த சினிமாவையும் பார்க்கும் வகையில் அது இருக்க வேண்டும். கமல் இதுபோன்று D2H பற்றியும் விஸ்வரூபத்தை அவ்வாறு திரையிடப்போவதாகவும் கூறியபோது தியேட்டர்காரர்கள்தான் எதிர்த்தார்கள். அவர்களை தூக்கியெறிந்துவிட்டு இந்தத் திட்டத்தை பின்பற்றினால் திருட்டு DVD பழக்கத்தைத் தடுத்து நிறுத்தலாம்.

திருட்டு DVD யுடன் பயணிப்பதா? புதிய திட்டம் வகுப்பதா? தமிழ் சினிமா உலகம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

No comments:

Post a Comment