Wednesday, June 29, 2016

பறையிசை மணிமாறனுடன் ஒரு அதிர்வலை உரையாடல்

உரையாடியவர்: மணி  ஸ்ரீகாந்தன்

"எமது பறையொலி
சாவுக்கானது அல்ல வாழ்வுக்கானது!
எமது பறை முழக்கம் சாமியாடுவதற்கல்ல
சாதிகள் ஆட்டம் காண்பதற்கு!
ஓங்கி அடிப்பதில் கிழியட்டும்
பறைகளல்ல இந்திய சாதிகள்!" என்று தமது உரையாடலை தொடங்கும் போதே தடதடத்த பறை இசைக் கலைஞர் மணிமாறன், ஒரு புரட்சி சிந்தனையாளர்.

யாழ் என்டர்டைமன்ட் ஏற்பாட்டில் புத்தர் கலைக்குழுவின் பயிற்சி நெறியில் வடக்கிலும், கிழக்கிலும் நடைபெற்ற பறை இசைப் பயிற்சி வகுப்புகளுக்காக இலங்கை வந்திருந்த பறை இசைக்கலைஞர் கலைமாமணி மணிமாறனை ஒரு காலைவேளையில் சந்தித்துப் பேசினோம்.

புத்தர் கலைக்குழுவின் பறை இசைப் பயிற்சி முகாம் தமிழகத்தைத் தாண்டி, கடல் கடந்து நடந்தது இலங்கையிலா அல்லது வேறு நாடுகளிலா? என்று வினவியபோது,

"உலகத்தில் மனிதர்களை வாழும் எல்லாப் பகுதியிலும் பறையிசை பயிற்சிகளை நடத்தவே விரும்புகிறோம். ஆனால் அதற்கான வாய்ப்புக் கிட்டும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. எங்களால் மட்டுமே அதை செய்துவிட முடியும் என்று நினைக்கவுமில்லை. பல்வேறு தளங்களில் அவரவர் சக்திக்கு ஏற்ப பறையை பரவலாக்க முயற்சி செய்து வருகிறோம். காரணம், பறை மானுடத்திற்கான அடையாளம். விடுதலைக்கான குரல். பாலம் போன்று மனிதர்களை இணைப்பதற்கு பறை வழிவகுக்கிறது. ஆக மனிதம் மானுடம் சார்ந்த சிந்தனைகளை முழங்குவதற்கும், மனிதர்கள் கூடி தோழமையோடு உறவாடுவதற்கும், பறையை பயன்படுத்துகின்றோம். அந்த அடிப்படையில்தான் இலங்கை முழுமைக்கும் பறை இசை நடன பாசறைகளை நடாத்த ஆர்வம் கொள்கிறோம்" என்று நிதானமாகச் சொல்லி நிறுத்தினார்.

தங்களிடம் தமிழகத்தில் பறை பயிலும் மாணவர்களோடு, ஈழ மாணவர்களை ஒப்பிடும்போது ஏதாவது வித்தியாசங்களைக் காண்கிறீர்களா? உணர்கிறீர்களா? என்று அடுத்த வினாவை ஆரம்பித்த போது,

"அப்படி இரு நாடுகளுக்கிடையேயும் பெரிதாக வித்தியாசங்களைப் பார்க்க முடியவில்லை. வேறு ஒரு நாட்டில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படவில்லை. தமிழகத்தில் நடப்பது போலவே உணர்ந்தோம். பேச்சிலும், உணவுகளிலும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. மேலும் நாங்கள் தொழிலுக்காக வரவில்லை. தொப்புள் கொடி உறவுகளுக்காகவே வந்தோம். அவர்களின் அனுபவ பகிர்வு மட்டும்தான் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தது. பயிற்சிகளில் அவர்கள் காட்டிய ஆர்வமும், வேகமும் தமிழக மாணவர்களைப் போலவே இருந்தது" என்று சொல்லும் போதே மணிமாறனின் முகத்தில் மகிழ்ச்சி மின்னலடிக்கிறது.

மணிமாறனின் புத்தர் கலைக்குழு, இதுவரை கென்யா, மலேசியா, குவைத், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பறை இசைத்தும், பறை பயிற்சி வகுப்புகளை நடாத்தியுமிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில் 'பெட்னா' என்கிற தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்களின் முன்னால் புத்தர் கலைக்குழுவினரின் பறை இசை நடனம் அரங்கேறியதோடு, அங்கே நடைபெற்ற பறை இசை நடனப் பயிற்சியின் போது கலிபோர்னியா, வட கரோலினா, கனக்டிகட், வொஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் கலந்து பறை இசையையும் பயின்றார்களாம்!

இலங்கை பயிற்சி பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் என்றோம் ஆவலுடன்,

"யாழ் என்டர்டைமன்ட் உண்மையிலேயே மிகுந்த பாராட்டுக்குரியது. நிச்சயமாக எமது உளப்பூர்வமான வாழ்த்தும், ஒத்துழைப்பும் அவர்களுக்கு தொடர்ந்து இருக்கும். எம்மை உபசரித்ததில் உள்ள இடர்பாடுகளை நாம் புரிந்து கொள்கிறோம். அதேநேரம், பயிற்சி தொடர்பான விடயங்களில் இன்னும் செம்மையாக செயல்பட்டிருக்கலாம் என்பதே எமது கருத்தாக, அனுபவமாக இருக்கிறது. யாழ் என்டர்டைமன்ட் மட்டுமல்லாது,   வொய்ஸ் ஆப் ப்ரீடம் என்கிற அமைப்பும் இதில் இணைந்து கைகள் கோர்த்து களமாடியது, சிறப்பாக இருந்தது.

பரத நாட்டியத்தை பறை இசை கொண்டு ஆட வைத்து ஆச்சர்யப்படுத்தினீர்களாமே?

"பறை நாட்டியம் இங்கே தமிழகத்திலேயே சிலர் மாற்றுக் கருத்துகளை விமர்சனங்களை வைப்பதுண்டு. அவர்களின் கோபம் நியாயமானதுதான். அவங்க கேட்கிற விடயம் இதுதான். பரத நாட்டிய மேடைகளில் அல்லது பரத நாட்டியம் நிகழக்கூடிய சபாக்களில் பறை இசைக் கலைஞர்களுக்கு, நடனத்திற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அப்படி இருக்க, பறை இசை நடைபெறுகின்ற மேடைகளில் ஏன் நீங்கள் பரதத்தை அரங்கேற்ற வேண்டும். அதை ஏன் பறையோடு சம்பந்தப்படுத்துகிறீர்கள்? என்ற அளவில் அவர்களின் ஆதங்கம் வெளிப்படுகிறது. எம்மைப் பொறுத்தமட்டில் அவர்கள் என்ன செய்தாலும் அது அவர்களின் குணம் அதை நாம் பதிலுக்கு உள்வாங்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரத்தில் பரத நாட்டிய வரலாறு பாராட்டக்கூடிய அளவில் இல்லை என்றாலும் இன்று பரதம் பரவியிருக்கிற அல்லது பரதத்தின் மதிப்பு என்பது பல்கிப்பெருகி இருக்கிறது. பரத நாட்டியத்தில் பல்வேறு மாற்றங்களும் பல்வேறு வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன. பரத ஆர்வலர்கள் "என்ன நீங்கள் பரதத்தை பறை நாட்டியம் என்று அதை பின்னுக்குத் தள்ளுகிறீர்கள்" என்று என்னிடம் கேட்பார்கள். ஆனாலும் எல்லோருக்கும் அதை தனித்தனியாக விளங்கப்படுத்துகிற வாய்ப்பு இல்லை.
யாழ் என்டர்டெயின்ட்மன்ட் ஷாலினிக்கு விருது வழங்கும் மணிமாறன்

பறை நாட்டியம் என்பது பரதத்திற்கு எதிரானது அல்ல. பறை இசைப்பவர்கள் பரதத்தையும், பரதம் ஆடுபவர்கள் பறையை கற்பதன் மூலமும் சமத்துவம் உருவாகும் என்று நம்புகிறோம். பறையை வெறுமனே சாவு மேளம் என்கிற சிந்தனை இலங்கை முழுவதும் நிரம்பியிருப்பதை அங்கு பயிற்சியில் பங்கேற்றவர்கள் சொல்லக் கேட்டோம். பறை இசைக் கருவிக்கு பன்முகம் உண்டு. பல்வேறு தன்மைகள் உண்டு.

பறை இசைக் கருவியால் எங்கும் எதிலும் தன்னை இணைத்துப் பயணிக்க முடியும். கலைகளுக்கிடையிலும், கலைஞர்களுக்கிடையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்கிற அணுகுமுறையில் தான் பறை நாட்டிய நிகழ்ச்சியை நாங்கள் பார்க்கிறோம். நான் பறை இசைக்க, நட்டுவாங்க ஆசிரியை நட்டுவாங்க கருவியை இசைக்க கர்நாடக சங்கீத பாடகர் ஒருவர் நான் எழுதி மெட்டமைத்த பாடலைப் பாட, அதற்கு அங்கே பரத நாட்டிய மாணவர்கள் ஆடியது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவை என நிச்சயமாக நம்புகிறேன். பறைநாட்டியம் சிறப்பாக இருந்ததாக நிகழ்ச்சி முடிந்த பிறகு அனேகர் நேரில் வந்து கை குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்" என்கிறார் மணிமாறன் பெருமிதமாக. மணிமாறன் தற்போது சென்னை சரணாலயா பள்ளியில் கிராமியக்கலை ஆசானாக பணியாற்றி வருகிறார்.

தங்களின் புத்தர் கலைக்குழு பற்றிய யாழ் மக்கள் என்ன சொன்னார்கள்? விமான நிலையத்தில் ஏற்பட்ட கெடுபிடிகளின் போது புத்தர் கை கொடுத்தார் என்று தங்களோடு வந்திருந்த ஒரு சகோதரர் சொன்னாரே, அது பற்றி?

"புத்தர் கையும் கொடுத்தார், கவலையும் அளித்தார். நாங்கள் ஐவரும் புத்தர் கலைக்குழுவின் இலச்சினை பொறித்த பனியனோடுதான் கொழும்பு வந்தோம். பொதுவாகவே நாங்கள் குழுவாக போனால் அப்படிப் போவதுதான் வழக்கம். விமான நிலையத்தில் எங்களைப் பார்த்த அதிகாரிகளின் கண்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் வெளிப்பட்டது. பிறகு விசாரித்து தெரிந்து கொண்டார்கள். தமிழ் நாடா என்று வியந்தார்கள். பிறகு நாங்கள் கொண்டுபோகும் பறைகளுக்கு வைப்புப் பணம் அறவிட்டு பறைகளை திரும்பவும் கொண்டு வரவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்கள். நான் ஒரு உயர் அதிகாரியை சந்தித்து பத்து நாட்கள் இங்கே தங்கப் போவதையும் பயிற்சி நடக்கும்போது பறைகளை தீயில் காட்டி சூடேற்றுவோம் என்றும் அவை எரிந்து போகலாம் என்றும் அதனால் அத்தனையையும் திரும்பக் கொண்டுவருவோம் என்று உறுதி அளிக்க முடியாது என்றும் தெளிவு படுத்தினேன். அப்போது அந்த அதிகாரி என்னிடம் அப்படியானால் புத்தரை நீங்கள் வணிகம் செய்கிறீர்களா?" என்று கேட்டார். அந்த நிமிசம் நாங்கள் ரொம்ப காயப்பட்டவர்களாக வருத்தத்தை மௌனமாக தெரியப்படுத்தினோம். அப்போது என் மனதுக்குள் இலங்கைக்கு ஒரு அம்பேத்கர் தேவை என்ற எண்ணம்தான் ஓடியது. ஒருவகையில் புத்தர் என்கிற பெயர் நாங்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு வைப்பு நிதி செலுத்தாமல் வருவதற்கு உதவியது என்பதைத்தான் எங்களின் தோழர் சொல்லியிருக்கிறார்" என்ற மணிமாறன் மேலும் தொடர்ந்தார்.

"உண்மையிலேயே புத்தர் என்பவரை இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமாகவும், வன்மத்தின் வடிவமாகவும்தான் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையில் நாங்கள் புத்தர் கலைக்குழு என்று வரும்போது அந்தப் பெயரைத் தாண்டி எங்களை அவர்கள் புரிந்து கொண்டதற்கு நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இலங்கையின் எல்லா பாசறைகளிலும் 'ஏன் புத்தர் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?' என்ற கேள்வியை எழுப்பினார்கள். 'இங்கே எங்களுக்கு அச்சமும் அருவருப்பும்தான் மேலோங்குகிறது. அந்தப் பெயருக்கான காரணத்தை சொல்லுங்கள்' என்று கேட்டார்கள்.

"புத்தனின் போதனைகளில் மற்றும் பௌத்த மார்க்கத்தில் மனிதன் மனிதனாக மட்டுமே ஏற்றத்தாழ்வின்றி பார்க்கப்படுகிறான். எல்லோரும் மனிதர்கள் என்கிற அளவில்தான் புத்தரின் போதனையும் பௌத்த மார்க்கத்தின் உள்ளடக்கமும் இருக்கிறது. இந்திய சாதீய அமைப்புக்குள் நாங்கள் மனிதர்களாக இன்று வாழ வழி செய்த தலைவர்களில் புரட்சியாளர் அம்பேத்கர், தமிழகத்தைச் சார்ந்த அயோத்திதாச பண்டிதர் போன்ற முன்னோர்களால் எங்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவரே கௌதம புத்தர். கருத்தியல் ரீதியாக பௌத்தமும் அந்த கருத்தியலின் மூலவராக புத்தனையும் சுட்டிக்காட்டியதால்தான் அதனை உள்வாங்கிய நாம், உருவ வழிபாடு அற்ற, பஞ்ச சீலக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த வழியில்தான் நாங்கள் புத்தரை ஏற்றிருக்கிறோம். அதோடு நாங்கள் இருக்கின்ற காஞ்சிபுரம் பௌத்தத்தை பின்புலமாக கொண்ட மாவட்டம். கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்கள் மாரியம்மன், மதுரைவீரன் போன்ற குலசாமி பெயர்களைத் தாங்கி நிற்கும்போது நாம் உலக அளவில் மனிதத்தை தாங்கிய புத்தரை அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் மும்மொழிந்த புத்தரை குழுவின் பெயராக ஏற்றுக்கொண்டோம். இது வெறுமனே பெயர் மட்டுமல்ல, சகல மனிதர்களும் சமமானவர்களே என்ற உலகப் பொதுமறையின் வெளிப்பாடு என்றே நாங்கள் கருதுகிறோம். இலங்கைக்கும் நாங்கள் கருத்தியல் ரீதியாக ஏற்றுக்கொண்டிருக்கும் புத்தருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இலங்கையை மனதில் வைத்து புத்தர் என்ற பெயரை நாங்கள் வைக்கவில்லை. இலங்கைத் தமிழர் மனதில் பதிந்திருக்கும் புத்தருக்கும் நாங்கள் மனதில் கொண்டிருக்கும் புத்தருக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது என்று ஒரு விரிவான விளக்கத்தை நாங்கள் முன்வைத்தோம். அதை முழுமையாகப் புரிந்து கொண்டார்களோ எமக்குத் தெரியாது" என்று கூறியபடியே பெரூமூச்சு விட்ட மணிமாறன், பறை குறித்தான இலங்கை விமர்சனம் ஒன்றை இப்படிச் சொல்கிறார்:

திருகோணமலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒருவர், 'மணிமாறன் இலங்கையில் பிறந்திருந்தால், நமது மருத்துவச் செலவு குறைந்திருக்கும். நாம் இவ்வாறான இசையில் நடனத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கலாம் என்றார். அதனை தன்னடக்கத்தோடு உற்று நோக்கினோம். அதே சமயத்தில் அதே நிகழ்வில் பார்வையாளர் தரப்பில் ஒருவர் 'பராசக்தியின் பக்கத்தில் பறையைக் கொண்டு சேர்ப்பதா?' என்று புலம்பியிருக்கிறார். அடிப்படையில் அவர் தன்னை பொது உடமைவாதி, கவிஞர் என்று காட்டிக் கொள்வாராம். பராசக்தியை இயக்கக் கூடிய ஆற்றல் பறை சக்திக்கு உண்டு என்பதை அவர் அறிந்திருக்கவில்லை" என்று ஆச்சரிய வெளிப்பாடோடு தன் நேர்காணலை மணிமாறன் நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment