Monday, June 27, 2016

மில்லகந்தையின் வெள்ளை முனீஸ்வரன்


'வீரபுத்திர வேலாயுத சுவாமியின் சூலத்தை அகற்றச் சொன்னபோது ஒரு கல்லை பெயர்த்தோம். அதில் இருந்து நாகம் வெளிப்பட்டது. பூஜை செய்து பால் அபிஷேகம் செய்த பின்னரேயே அவ்விடத்தை விட்டு அது நகர்ந்தது'

மணி  ஸ்ரீகாந்தன்

குலம் காக்கும் தெய்வம் குலதெய்வம். இது வழிவழியாக வருவது. தமிழர்களின் சாதி ரீதியான கடவுளாகவும் காவல் தெய்வங்கள் மதிக்கப்படுகின்றன. சில குடும்பங்களின் வீரமும், மானமும் கூட இந்த காவல் தெய்வங்களின் கைகளிலேயே தங்கியிருப்பதாக நம்புகிறார்கள்.
இந்து தமிழ் கலாசாரத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குலதெய்வம் இருக்கும்.
வீரபத்திர வேலாயுத
சுவாமியின் சூலம்அந்தக் காலத்தில் மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தான். அப்போது பஞ்ச பூதங்களின் பிரதிநிதிகளாக குலதெய்வங்களை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இந்தியத் தமிழர்களின் குலதெய்வமாக, சுடலை மாடன், முனீஸ்வரன், காளி, மதுரைவீரன், கருப்புசாமி உள்ளிட்ட எல்லைச் சாமிகளே முதலிடத்தை வகிக்கின்றன. எந்தவொரு நல்ல காரியமாக இருந்தாலும் குலதெய்வத்தை வணங்கிவிட்டுத்தான் தொடங்குவார்கள். குழந்தைக்கு முதல்முடி எடுப்பதில் இருந்து முதல் கல்யாண பத்திரிகை வைப்பது வரை வீட்டில் எந்த விஷேடமானாலும் முதல் மரியாதை குலசாமிக்குத்தான். காரில் நீண்ட பயணம் போகும் முன்கூட, முன் சக்கரங்களில் இரண்டு எலுமிச்சம் பழங்களை வைத்து நசுக்கிவிட்டு வாகனத்தை கிளப்புகிறார்கள். அப்போதுகூட காவல் தெய்வங்களை வணங்கிவிட்டுத்தான் அதனைச் செய்கிறார்களாம்.

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று கூறுகிறார்கள் அல்லவா? அந்த தெய்வம் காவல் தெய்வம்தான். குல தெய்வங்களுக்கு சாதி சனத்துடன் சென்று கடா வெட்டி படையல் போட்டு கும்பிடுவது தமிழர்களின் சிறப்பான அடையாளம். முக்கியமாக எல்லை சாமிகள் ஊருக்கு வெளியே ஐந்தாறு கிலோ மீற்றர் தாண்டித்தான் இருக்கும். ஆனால் புளத்சிங்கள மில்லகந்தையில் மட்டும் மக்கள் குடியிருப்புக்கு அருகிலேயே வெள்ளை முனீஸ்வரர் காவல் தெய்வமாக அமர்ந்திருக்கிறார். ஊரின் எல்லையில் இருக்க வேண்டியவருக்கு இங்கு என்ன வேலை என்று தேடிப்பார்த்தோம்.
வரதராஜன் -      தியாகராஜன்


"அந்தக் காலத்தில் என் பாட்டன்மார் வெள்ளைக்காரனை நம்பி பஞ்சம் பிழைப்பதற்காக தென்னிந்தியாவில் இருந்து பயணமாகி கால்நடையாக இந்த ஊருக்கு வந்தபோது, அவங்களுக்கு இங்கே யாரையும் தெரியாது. அப்போ அவங்களுக்கு துணையாகவும், பலமாகவும் இருந்தது இந்த வெள்ளை முனீஸ்வரன்தான். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சொல்வாங்களே. அப்படி திக்கற்றவர்களுக்கு துணையாக இன்னிக்கு வரை சுமார் 150 ஆண்டுகளாக இந்த வெள்ளை முனி காவல் தெய்வமா இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கந்தர்வ கோட்டையில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக காவல் காக்கும் வெள்ளை முனீஸ்வரனை விட்டுட்டு மில்லக்கந்தைக்கு வரும்போது அந்த ஆலயத்திலிருந்து ஒருபிடி மண்ணை வீரபுத்திரன் கங்காணி தமக்கு துணையாக எடுத்துவந்து இங்கே அதை வைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்திருக்கிறார். அவருக்கு பிறகு அவரின் மகன் குருசாமி கங்காணி அப்புறம் என் பாட்டன் சிவசாமி, எனது அப்பா நடேசன் ஐயர் ஆகியோர் வழி வழியாக வழிபட்டு வந்தாங்க. இப்போ நாங்கள் நிர்வகித்து வருகிறோம்" என்று ஒரே குரலில் பதில் சொல்கிறார்கள் வரதராஜன், தியாகராஜன் சகோதரர்கள்.
கந்தர்வகோட்டை வெள்ளை முனீஸ்வரனை
வணங்கும்  தியாகராஜன்

புளத்சிங்கள நகரில் ஹொரனை, மத்துகமை நெடுஞ்சாலையின் அருகிலேயே காவல் தெய்வமாக இந்த வெள்ளை முனீஸ்வரன் காவலாக இருப்பது அந்த நகருக்கு தனிச்சிறப்பு. அந்தக் காலத்தில் இப்போது மாதிரி பாதை வசதிகள், வாகன போக்குவரத்து என்று எதுவும் கிடையாது. நெடுந்தூரம் பயணமானாலும் நடை பயணம்தான். பாதைகளின் ஆங்காங்கே இந்த எல்லைச்சாமிகள் தமக்கு காவலாக இருப்பதாக ஒரு நம்பிக்கை. அந்த சமயத்தில் இச்சாமிகளை கும்பிட்டு விட்டு பயணத்தை தைரியத்தோடு தொடர்வார்களாம்.

"வெள்ளை முனி கந்தர்வ கோட்டையில் காவல் காப்பதை என் அப்பா, தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறோம். எப்படியாவது அங்கே சென்று வெள்ளை முனீஸ்வரனை கும்பிட்டுட்டு வரவேண்டும் என்ற ஆசை மனசுல தீயா எரிஞ்சிட்டு இருந்தது.

போன வருசம் ஜனவரியில் ஐயப்பனுக்கு மாலை போட்டு மலைக்குப் போய் வரும்போது கந்தர்வகோட்டையில் இருக்கும் எங்க மாமா பழனிச்சாமியின் உதவியோடு வெள்ளை முனீஸ்வரனை தரிசித்தோம். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. முனீஸ்வரனின் பெரிய பிரமாண்ட சிலைகளை பார்க்கும்போது அது எமக்கு புது அனுபவமாக இருந்தது. அதேமாதிரி பெரிய குதிரையோடு முனீஸ்வரனுக்கு சிலை வைக்க எங்களுக்கும் ஆசை. ஆனால் நிதி பற்றாக்குறையாக இருக்கு. அதற்கு முனிதான் ஒரு வழி காட்டனும்" என்கிறார் வரதராஜன் நெகிழ்ச்சியாக. கந்தர்வ கோட்டையில் இருக்கும் வெள்ளை முனீஸ்வரன் ஆலயத்தில் யாரும் மந்திரங்கள் சொல்லி பூஜை பண்ணக் கூடாதாம். முனியரை மனதில் நினைத்து விபூதி பூசிக்கிட்டாலே எல்லாம் சரியாகிவிடும். ஜனவரியில் ஆடு, கோழி வெட்டி திருவிழா நடக்கும். ஜல்லிக்கட்டுக்கு போகும் காளைகளும் இங்கே முனீஸ்வரனின் ஆசிர்வாதத்தோடுதான் களத்தில் இறங்குமாம்.
கந்தர்வகோட்டை

"ஆனா மில்லகந்தையில் இருக்கும் வெள்ளை முனீஸ்வரனுக்கு இப்போ யாரும் பலி கொடுக்கிறது இல்லை. அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. 1972ல் இங்கே அரிசி பஞ்சம் வந்திருக்கு. அப்போது முனிக்கு அன்னதானம் போட அரிசி இல்லை. அதனால் பலிகொடுக்க கொண்டு வந்த ஆடு, கோழிகளை 25 சதம், 10 சதத்திற்கு ஏலம் போட்டு இருக்காங்க. அந்தப் பழக்கம் இன்றுவரை தொடருது. இங்கே தை முதல் நாள் பூஜையோடு திருவிழா தொடங்கும். அடுத்த நாள் அன்னதானம் வழங்கப்படும். அப்போது பக்தர்கள் பலி கொடுக்க ஆடு, கோழிகளோடு வந்துவிடுவார்கள். மில்லகந்தையை சுற்றியுள்ள தோட்டங்களான கல்லு மலை, குடாகங்க, துப்பட்டா, மல்லிகைப்பூ, உன்னாகந்த, தல்கஸ்கந்த உள்ளிட்ட தோட்ட மக்கள் அனைவரும் கூடி விடுவதால் பூஜை தட்டுக்களும் ஆயிரக்கணக்கில் குவிந்துவிடும்.

பூஜை தொடங்கும்போது என் தம்பி தியாகராஜனின் உடம்பிற்குள் வெள்ளை முனீஸ்வரனின் சக்தி இறங்கிவிடும். பிறகு அவர் கத்தி மேல் ஏறி நின்று அருள் வாக்கு சொல்வார். வேலைகளை தொடங்க அனுமதி கொடுப்பார். அப்போது பலிக்காக கொண்டு வரப்பட்டிருக்கும் ஆடு, கோழிகளின் தலையில் தண்ணீரை தெளித்ததும் அவை தலையை ஆட்டி பலியை ஏற்றுக் கொண்டதை தெரிவிக்கும். பிறகு ஏலம் ஆரம்பமாகும். இப்போது ஒரு கோழி இரண்டாயிரம், மூவாயிரம் வரை ஏலத்தில் போகும். கிடைக்கும் வருமானம் கோயில் நிதியில் சேர்க்கப்படும்" என்று சொல்லும் போதே வரதராஜனின் முகத்தில் பக்திப் பரவசம்!

அந்த நாட்களில் முனி, கருப்பு சாமி உள்ளிட்ட காவல் தெய்வங்கள் கால் சலங்கை ஜல், ஜல் என்று ஒலிக்க நள்ளிரவில் ஊரைக் காவல் காப்பதாக கேள்விப்பட்டிருப்பதை வரதராஜனிடம் கூறினோம்.

"அந்தக் கதையை நானும் பெரியவங்க சொல்லித்தான் கேட்டிருக்கேன். இப்போது நாங்கள் அப்படி எதையும் இங்கே கேள்விப்படவில்லை" என்று வரதராஜன் ஆரம்பித்தபோது குறுக்கிட்ட தியாகராஜன்,

"அப்படி அற்புதங்கள் நடக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி செய்தபோது வீதியோரத்தில் இருந்த அபூர்வ வீரபுத்திர வேலாயுத சுவாமியின் சூலத்தை சுற்றியுள்ள மேடையை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது அங்கே இருந்த ஒரு கல்லை என் சகோதரர் அகற்றியபோது அதன் உள்ளே இருந்து ஒரு நல்ல பாம்பு படமெடுத்து ஆடியது. அதன்பிறகு கோயில் குருக்களை அழைத்து பரிகார பூஜை செய்து பால் அபிஷேகம் செய்த போது பாம்பு அந்த இடத்தை விட்டு வெளியேறியது. ஆனால் சில நாட்களில் அந்த பாம்பை இங்கே ஒரு இளைஞன் அடித்துக் கொன்றுவிட்டான். அதன்பிறகு அவனை அதே இடத்தில் யாரோ அடித்துப் போட்டு விட்டார்கள். பிறகு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவன் இறந்துவிட்டான்" என்று சம்பவத்தை தியாகராஜன் மெய் சிலிர்த்து பேசினார்.

எனினும் வரதராஜன், தியாகராஜன் சகோதரர்கள். தமது வாரிசுகள் வெள்ளை முனீஸ்வரன் மீது பெரிய அளவில் ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள். எமக்கு பிறகு அவர்கள் கோயில் நிர்வாகத்தை பொறுப்பேற்பார்கள் என்று சொல்ல முடியாது என்கிறார்கள் வருத்தத்தோடு. பரம்பரை பரம்பரையாக தமது குடும்பத்திற்கு காவல் குல தெய்வமாக விளங்கும் வெள்ளை முனீஸ்வரனை வெளியாரிடம் தான் கையளிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லும்போது அவர்கள் குரலில் சோகம் வெளிப்படுகிறது. என்ன செய்ய… புதுசுகள் பழையதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் இல்லையே! முனீஸ்வரன் மட்டும் என்ன விதிவிலக்கா…

No comments:

Post a Comment