Monday, May 30, 2016

கலைஞர் கே. சந்திரசேகரனுடன் ஓர் உரையாடல்
உரையாடியவர்:  மணி  ஸ்ரீகாந்தன்

'வட புலத்தில் நிறைய குறும் படங்கள், திரைப்படங்கள் வெளி வருகின்றன. அவை தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தாலும் வசன உச்சரிப்பில் கோட்டை விட்டு விடுகிறார்கள். பேச்சில் ஏற்ற இறக்கம் பாவம் எதுவுமே கிடையாது'

'நம் நாட்டு சினிமா, நாடக தயாரிப்புகளில் தமிழகத்தை நாம் முந்திக் கொண்டுபோக முடியாமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. இங்கே நடிக்கும் கலைஞர்களை திறமையின் அடிப்படையில் இனங்கண்டு பாத்திரங்களை கொடுப்பதில்லை. நடிப்புக்கான ஒரே தகுதி நடிப்பவர் தயாரிப்பாளர், இயக்குநரின் மாமன், மச்சான், அக்கா, தங்கை, தம்பியாக இருந்தாலே போதுமானது. இதனால்தான் இங்கே வெளியாகும் படைப்புகள் அம்பேல் ஆகி விடுகின்றன. இந்த நிலை தமிழகத்தில் இல்லை. அங்கே நடிகர்களை இனம் கண்டு உருவாக்குகிறார்கள்.'

லங்கை தமிழ் நாடக, சினமா துறைகளின் பொற்காலம் 83ம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு நம் நாட்டு கலைஞர்கள் நாலா பக்கமும் சிதறிக் காணாமல் போய்விட்டார்கள். அதில் சிலர்தான் தப்பிப் பிழைத்து இன்றுவரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் கே. சந்திரசேகரன் தனிக்காட்டு ராஜாவாக இன்றுவரை எந்தத் தடையும் இல்லாமல் ரவுண்டஸ் வந்து கொண்டேயிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் தன்னை தினமும் அப்டேட் செய்யும் ஒரே இலங்கை கலைஞர் இவர் மட்டுமே!
மனைவியுடன்..

"தினமும் நம்மை நாமே அப்டேட் செய்தால்தான் இந்தத் துறையில் நிற்க முடியும். அப்படி அப்டேட் செய்யாத கலைஞர்கள் மங்கி மறைந்து போகிறார்கள். நான் அப்டேட்டில் இருந்தபடியால்தானே நீங்களே என்னைத் தேடி வந்தீர்கள்!" கலகலவென சிரிக்கிறார். அவரின் சிரிப்பில் சந்திர சேகரனின் டிரேட் மார்க் இன்றும் அப்படியே இளமையாக பளிச்சிடுகிறது. சந்திரசேகரனின் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் இவர் தினமும் பதிவேற்றம் செய்யும் திருக்குறள் விளக்கத்திற்கு ஒரு தனி மவுசு இருக்கிறது. காலையில் பேஸ்புக்கில் உட்கார்ந்து பின் எழும்பிப் போறது வேண்டாமே என நினைச்சதால் நாம் ஏதாவது தினமும் காலையில் பதிவேற்றம் செய்யணும்னு நினைச்சேன். அப்போ தோன்றிய ஐடியாதான் இது! அப்போதிலிருந்து திருக்குறளை தினமும் அப்டேட் செய்ய ஆரம்பித்தேன். நம்ம இளைஞர்கள் யாரும் திருக்குறளை தேடிப்போய் படிக்கிறது கிடையாது, கண்ணுக்கு முன்னாடி காட்டினாதான் படிப்பாங்க, அப்படி நிறைய இளைஞர்கள் குறளை படித்துவிட்டு 'சூப்பர், எனர்ஜடிக்கா இருக்கு' என்று சொல்றாங்க. கேட்க ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு! ஃபேஸ்புக் ஒரு பயனுள்ள ஊடகம். அதை சரியா பயன்படுத்தினா ஜெயிக்கலாம். எனக்கு ஃபேஸ்புக் நிறைய உதவி செய்திருக்கு. அதனால், இன்னைக்கு கலைத்துறையில் நிறைய அறிமுகம் கிடைச்சிருக்கு!" என்று முகநூலுக்கு முதல் மரியாதை செலுத்துகிறார் சந்திரசேகரன்.

சமீபகாலமாக சக்தி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நாடகங்களில் எல்லாம், சந்திரசேகரன் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

"சக்தியில் ஒளிபரப்பான ஒன்பது நாடகங்களில் நடித்திருக்கிறேன். இப்போது ஒரு நாடகம் ஒளிபரப்பாகிறது. ஒன்று படப்பிடிப்பில் இருக்கிறது, அதுதவிர நம் நாட்டில் தயாரிக்கப்படும் 'வெளிவேசம்' என்கிற முழு நீள சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றவரின் பேச்சில் அவர் ரொம்பவே பிஸியாக இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டோம். நம் நாட்டு தமிழ் சினிமா, நாடகம் போன்றவை மீண்டும் புத்துயிர் பெற்று எழும்புவதற்கான அறிகுறிகள் மின்னலடிக்கிறதே…? என்று நாம் தொடங்கியபோது,
குடும்பப் படத்தில் இடமிருந்து
வலமாக கடைசியாக நிற்கும்
குட்டிப் பையன்

"உண்மைதான்… நிறைய குறும்படங்கள், பாடல் அல்பம், சினிமா என்று மாதம் தோறும் ஏதாவது ஒன்று வெளியாகிக் கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக ஈழத்தில் நிறைய படைப்புகள் வெளியாகின்றன. அதன் தரத்தை பார்க்கும் போது தொழில்நுட்ப ரீதியில் மிகவும் சிறப்பாக இருப்பதை அவதானிக்கிறோம். ஆனால் வசனம் பேசுவதில் அதாவது டயலொக் டெலிவரியால் சொதப்பி விடுகிறார்கள். பேச்சில் ஏற்ற இறக்கம் என்று எதுவுமே கிடையாது. காட்சிகளை பார்க்கும்போது இவனையெல்லாம் ஏண்டாக நடிக்க வச்சாங்க என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக சினிமா, நாடகங்களின் வெற்றிக்கு பெரிய பங்களிப்புச் செய்வது வசன வெளிப்பாடுதான். ஒரு வெளிநாட்டு கார்ட்டூன் தொடருக்குக்கூட மிகச் சிறப்பாக வசன உச்சரிப்பு செய்திருப்பார்கள். நாம் அதில் கோட்டை விட்டு விடுகிறோம். தற்போது இங்கே வெளியாகும் பெரும்பாலான குறும்படங்களில் வசன நடை தமிழ் நாட்டு பாணியிலேயே அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு பாணியில் வசனத்தை டெலிவரி செய்தால்தான் விற்க முடியும் என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான எண்ணம். யாழ் பேச்சு வழக்கில் கூட வெற்றிகரமாக படைப்புகளை செய்யலாம். பேச்சு வழக்கு என்பது பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடுவது இயல்புதானே!
மகன்களுடன்

அதோடு நம் நாட்டு சினிமா, நாடக தயாரிப்புகளில் தமிழகத்தை நாம் முந்திக் கொண்டுபோக முடியாமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. இங்கே நடிக்கும் கலைஞர்களை திறமையின் அடிப்படையில் இனங்கண்டு பாத்திரங்களை கொடுப்பதில்லை. நடிப்புக்கான ஒரே தகுதி நடிப்பவர் தயாரிப்பாளர், இயக்குநரின் மாமன், மச்சான், அக்கா, தங்கை, தம்பியாக இருந்தாலே போதுமானது. இதனால்தான் இங்கே வெளியாகும் படைப்புகள் அம்பேல் ஆகி விடுகின்றன. இந்த நிலை தமிழகத்தில் இல்லை. அங்கே நடிகர்களை இனம் கண்டு உருவாக்குகிறார்கள். அதோடு நாம் தரமான படைப்புகளை கொடுத்தால் ரசிகர்கள் அதை நிச்சயம் வரவேற்கவே செய்வார்கள். தமிழகத்தோடு ஓட முடியாதுதான், ஆனாலும் நடந்தாவது போகலாமே என்றவர் நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

"புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுக்காரர்களின் உதவியோடு அதி நவீன வீடியோ கெமராக்களை பெற்றுக்கொள்ளும் கலை ஆர்வலர்கள், உடனே படம் செய்ய கிளம்பி விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒளிப்பதிவு நடிப்பு, ஸ்கிரிப்ட் என்று எதுவுமே தெரிவதில்லை. 'எல்லோரும் பண்றாங்க நாமும் பண்ணுவோம்' என்ற ஆர்வத்தில் செய்றாங்க. அதனால் சிறப்பான படைப்புகள் வெளிவருவது அபூர்வமாகிவிட்டது. நம்மவர்கள் அனேகரிடம் திறமையும் ஏக்கமும் இருக்கிறது. ஆனால் அதற்கான வசதி, வளம் இல்லை. வசதியும், வளமும் இருப்பவனிடம் திறமை இல்லை என்ன செய்வது" என்று பெருமூச்சு விடுகிறார் இவர். ஒரு உண்மையான கலைஞனிடம் இயல்பாகவே இருக்கும் அங்கலாய்ப்புதான் இது!

நடிப்பு உங்களுக்கு முழுநேரத் தொழிலா? என்று கேட்டோம்.

"அதை முழுநேரத் தொழிலாக செய்து கொண்டிருந்தால் என் மனைவி என்னை அடித்தே துரத்தியிருப்பாள்" என்று சிரித்தவர், தொடர்ந்தார்.

"நம் நாட்டை பொறுத்தவரையில் நடிப்பை முழுநேரத் தொழிலாக செய்வது கஷ்டமான காரியம். இங்கே அது சாத்தியப்படாது. அப்படி முழுநேரத் தொழிலாக செய்பவனாக இருந்திருந்தால் நான் ஒரு ஏமாற்றுக்காரனாகத்தான் இருந்திருக்க வேண்டும். எனக்கு நடிப்பு பார்ட் டைம், வேலைதான்" என்றார் வெளிப்படையாகவே!

அடுத்ததாக கலையுலக பிரவேசம் பற்றி அவரிடம் கேட்டோம்.

"நான் பாடசாலையில் படிக்கும் போது வீரமங்கை ஜான்சிராணி என்கிற நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்த நாடகத்தில் பி. எச். அப்துல் ஹமீது, ஜீ. போல் அன்டனி உள்ளிட்டோர் நடித்தார்கள். அதில் ஒரு காட்சியில் நடிக்க ஆசிரியர் வசனம் எழுதிக் கொடுத்தார். வசனத்தின் முடிவில் அடைப்புக் குறிக்குள் (சிரிப்பு) என்று எழுதியிருந்தார். தேர்வுக்கு வந்திருந்த மாணவர்கள் அந்த வசனத்தை படித்துவிட்டு புன்னகைத்தார்கள். சிலர் ஹீ… ஹீ ன்னு சிரித்தார்கள். நான் மட்டும் வசனத்தை சொல்லி முடித்துவிட்டு பி. எஸ். வீரப்பா மாதிரி ஹா… ஹா… ன்னு சிரிக்க, ஆசிரியர் நீதான் நடிக்கிறேன்னு என்னைத் தெரிவு செய்தார். அந்த நாடகத்தில் நான் ஒரு வெள்ளைக்காரனாக நடித்தேன். 'வேற பையனே உங்களுக்கு கிடைக்கலையா இந்த கருப்பு பையனை எப்படி வெள்ளையாக மாற்றுவது?' என்று மேக்கப் போட வந்த சச்சு மாஸ்டர் எனது வகுப்பாசிரியரிடம் கூறியதாக பிறகு தெரிந்து கொண்டேன். அதன்பிறகு சிறுவர் மலர், இளைஞர் மன்றம், நாடக அரங்கம் என்று நம்ம பயணம் பல கட்டங்களை கடந்து வந்திருக்கு!

என்னுடைய நடிப்பு ஆர்வத்திற்கு அப்பா ஆதரவு கிடையாது. என் அம்மா முழு ஆதரவு தந்தார். 'உன் தாத்தா சந்தனம் வாத்தியார். சிலம்பம், பாட்டு, மியூசிக் என்று கலைமீது ஆர்வம் உள்ள ஒரு கலைஞர். அவரோட ஜீன் உன் உடம்பில் இருக்கு என்று நினைக்கிறேன். அதுதான் உனக்கு கலை மீது இவ்வளவு ப்ரியம் என்று என் அம்மா அடிக்கடி சொல்வாங்க. இப்போ என்னோட கலைப்பயணத்திற்கு பெரிய உதவியாக இருப்பவர் என் மனைவிதான். அவரின் உதவியால்தான் நான் இன்றும் ஜெயிக்கிறேன் என்ற கே. சந்திரசேகரனுக்கு மூன்று மகன்மார். அவர்கள் மூவரும் வெளிநாடுகளில் தொழில் பார்க்கிறார்கள். அவர்களுக்கு பெண் பார்க்கும் படலத்தையும் சந்திரசேகரன் தொடங்கி விட்டாராம்.

கலைப்பயணத்தில் உங்கள் மனசில் கண் சிமிட்டிய காதல் எத்தனை?

"அதை காதல் என்று சொல்ல முடியாது… அப்போ டீ.வி, சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்த ஒரு பெண் என்னை திருமணம் முடிக்க கேட்டாங்க. அதற்கு நான் முடியாது, 'என் முறைப் பொண்ணு தமிழ் நாட்டில் இருக்கு. அவங்களைத்தான் நான் திருமணம் முடிக்கப் போறேன்'னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன். ஆனா தமிழகத்தில் முறைப் பொண்ணு இருக்கா என்கிற விசயமே எனக்குத் தெரியாது. சும்மா தப்புவதற்காக அப்படிச் சொன்னேன். ஆனால் விதி தமிழகத்து செல்வி என்ற முறைப்பொண்ணையே எனக்கு வாழ்க்கைத் துணையாக ஆக்கிவிட்டது. நாக்குத் தவறி வந்த வார்த்தை வாழ்க்கையில் நிஜமாகிவிட்டது" என்று இன்றும் ஆச்சர்யம் நீங்காமல் பேசுகிறார்.

நம் நாட்டில் சினிமா, நாடகத்தில் நடிக்க வரும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலைதானே காணப்படுகிறது? என்று கேட்டோம்.

தமிழக சினிமா கலைத் துறைகளோடு ஒப்பிடும்போது நம் நாட்டின் சினிமாத் துறை ரொம்பவும் சின்னது. அதில் ஒரு சிலரின் நடத்தையை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தது. அதோடு அந்த நேரத்தில் இங்கே தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் கதைகள் எல்லாமே சின்ன வீடு செட்டப் பண்ணுவதையே கருவாக வைத்து தயாரிக்கப்பட்டன. அதனால் பெண்களை நடிக்க அனுப்புவதற்கே பெற்றோர்கள் பயந்தார்கள். அதில் நடித்தவர்களையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். அதற்காக இங்கே சினிமாவில் நடிக்கும் எல்லா பெண்களையும் தப்பாக நோக்குவது தவறு. நல்லவர்களும் இருக்கிறார்கள்" என்றவர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.

No comments:

Post a Comment