Friday, May 27, 2016

இருள் உலகக் கதைகள்
வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஶ்ரீகாந்தன்

த்தளை உணுப்பிட்டிய பிரதேசத்தை இருள் மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது. நேரம் மாலை ஆறரையைக் கடந்திருக்கும். அந்த நேரம் வழமையை விட காரிருள் கொஞ்சம் அதிகமாகவே சூழ்ந்து கொண்டு அந்த முட்டுச் சந்தில் இருக்கும் ஒழுங்கையை மிரட்டிக் கொண்டிருந்தது. அன்று விடுமுறை நாள் என்பதால், தெருக்களில் ஓரிரு வாகனங்களைத் தவிர வீதி வெறிச்சோடிக் காணப்பட்டது. வீட்டுக்கு வெளியே கொடியில் காயப் போடப்பட்டிருந்த துணிகளை எடுக்கத் தாமதமாகி விட்டதால் குமாரி அரக்க பறக்க ஓடி வந்து துணிகளை கொடியில் இருந்து எடுத்தாள். அப்போது ஒரு துணி கீழே தவறி விழுந்தது. அதை எடுக்க அவள் குனிந்தாள். அப்போது குமாரியின் தலையை யாரோ அன்பாக தடவியது போல ஒரு உணர்வு ஏற்பட, குமாரி அடுத்த கனமே படாரென தலையை உயர்த்திப் பார்த்தாள். ஆனால் அங்கே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வெளியே எரிந்த மங்களான பல்ப் வெளிச்சத்தில் அவளுக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவள் வீட்டுக் கூரையில் ஏதோ ஒரு உருவம் வெள்ளையாக நகர்வது போல இருக்கவே, அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். ஜில்லிட்டுப்போன அவளின் உடல் புல்லரித்து சிலிர்த்த போது குமாரி அப்படியே நிலத்தில் சரிந்து வீழ்ந்தாள்.
வீரசிங்கம் பூசாரி
மூர்ச்சையாகிக் கிடந்தவளை அவளது கணவன் நிஸ்தார் தண்ணீர் தெளித்து எழ வைத்தான். நிஸ்தாரை காதல் திருமணம் செய்த குமாரிக்கு ஐந்து ஆண்டுகளில் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள். இப்போது ஐந்தாவது குழந்தையும் வயிற்றில்."மூணு மாத குழந்தை வயிற்றில் இருக்கிறதே. உனக்கு ஞாபகம் இல்லையா இப்படியா ஓடி வந்து விழுவாய்?" என்று குமாரியை நிஸ்தார் கோபத்தில் திட்டித் தீர்த்தான்.

குமாரி பின்னர் நடந்த விடயத்தை சொன்ன போதுதான் ஏதோ பெரிய விபரீதம் நடக்கவிருந்ததை நிஸ்தார் உணர்ந்து கொண்டான். பிறகு அந்தப் பகுதியில் இருந்த ஒரு பூசகரிடம் நூல் மந்திரித்துக் குமாரிக்கு கட்டி விட்டார்கள்.

உணுப்பிட்டிய பிரதேசத்தில் குமாரி பெரிய செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பதாலும், சைட் பிசினசாக வட்டிக்குப் பணம் கொடுத்து வருவதாலும், அவளுக்கு பேய் அடித்த கதை ஜூவாலை விட்டு அந்தப் பகுதியில் பற்றிக் கொண்டது. அப்போது சில அமானுஷ்யமான விடயங்கள் குமாரியின் வீட்டில் நடக்கத் தொடங்கவே, ஜூவாலை காட்டுத் தீயாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

நள்ளிரவில் அந்தப் பகுதியே அதிரும் வண்ணம் குமாரி பேய்க கூச்சல் போட்டதோடு தன் கணவனையும் மிருகத்தனமாக தாக்கினாள். இந்த விபரீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே தினமும் குமாரியின் வீட்டில் பரிகார பூஜைகள் நடக்கத் தொடங்கின.

பூஜைகள் எதுவும் பலனளிக்காத நிலையில் கடைசி முயற்சியாக வீரசிங்கம் பூசாரியை அழைத்து வந்தார்கள். தமது சகாக்களோடு குமாரியின் வீட்டு வாசலை பூசாரி நெருங்கினார். அப்போது அந்த வீட்டுக் கூரை மீது கொடூரமான முகத்தோடு ஒரு வயது முதிர்ந்த மனிதன் அட்டகாசமாக அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அந்த துஷ்ட உருவம் அமர்ந்திருந்த காட்சி வீரசிங்கத்தின் எக்ஸ்ரே கண்களுக்கு மட்டுமே க்ளிக் ஆனது. சகாக்கள் யாருக்கும் அந்தக் காட்சி தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லைதான். வாழ்நாளில் பாதி நேரத்தை துஷ்ட ஆவிகளோடேயே கழிப்பதால் வீரசிங்கம் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இன்னைக்குப் பெரிய வேட்டைதான் என்று நெஞ்சை நிமிர்த்தியபடி பரிகார மன்றில் அமர்ந்தார் வீரசிங்கம் பூசாரி. சில நிமிடங்களிலேயே வீரசிங்கம் பூசாரியின் மந்திர உச்சாடனங்கள் அந்த முட்டுச் சந்து தெருவில் வியாபிக்கத் தொடங்கியது. ஆனாலும் குமாரியின் உடம்பில் தீய சக்தி குடியிருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
குமாரியை பிடித்து ஆட்டும் தீய சக்தி சரியாக நள்ளிரவு 12 மணிக்குத்தான் அவள் உடலுக்குள் இறங்குமாம். இது குமாரியின் கணவன் சொன்ன தகவல். இதைக் கேட்டு கடுப்பான வீரசிங்கம்,"எனக்கு நேரம்தான் முக்கியம். ஆவி உடலுக்குள் இறங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது" என்று சொன்னவர், உடனடியாக பேயை அழைக்க தண்ணீரில் சீனியை கலந்து கலக்கி அதற்குள் சில மாத்திரைகளை உச்சாடனம் செய்து குமாரிக்கு குடிக்கக் கொடுத்தார். நீரை அருந்திய சில நிமிடங்களிலேயே குமாரி ஆட்டம் போடத் தொடங்கினாள். அவள் மூன்று மாத கர்ப்பிணி என்பதால் அவளின் ஆக்கரோசமான ஆட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு வீரசிங்கம் கட்டளையிட்டார். குமாரியை பதினேழு பேர் பிடித்துக் கொண்டனர். ஆனாலும் அவளிடமிருந்து கிளம்பிய சக்தியை அடக்க அவர்கள் பெரும் பாடு பட்டார்கள். குமாரியின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் நடந்து விடக்கூடாது என்பதில் பூசாரி ரொம்பவே கவனமாக இருந்தார்.

குமாரியின் உடம்பில் அவள் பாட்டன் சிறிசேன குடியிருப்பதை கண்டுப்பிடித்த பூசாரி, கர்ப்பிணி பொண்ணுக்கும் குழந்தைக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாமல் தீய சக்தியை எப்படி வெளியேற்றுவது என்று யோசிக்கத் தொடங்கினார். அதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. அதனால் குமாரியை அடிக்க ஓங்கிய சவுக்கை தூக்கி மூலையில் வீசிட்டு அமர்ந்தார். அப்போது குமாரியின் உடம்பில் இருந்த தீய சக்தி பூசாரியை பார்த்து எகத்தாளமாக சிரித்து விட்டு,

"என்னை உன்னால ஒண்ணும் செய்ய முடியாதுடா!" என்று கொக்கரித்தது. வீரசிங்கம் சிரிப்பை அடப்ப முடியாமல் சிரித்து விட்டு, "உன்ன மாதிரி எத்தனையோ பேய்களை பார்த்திருக்கேன். நீ எனக்கு தூசுடா!" என்று கர்ஜித்து விட்டு மந்திரங்களை ஓங்கி உச்சரிக்க ஆரம்பித்தார். மந்திரங்கள் அந்த தீய சக்தியின் கழுத்தை நெரிக்கவே, திணறிப்போன அந்த ஆவி, தான் பாசமாக வளர்த்த பேத்தியை தன்னால் கைவிட முடியாது என்றும் போகும் போதும் அவளை சுடுகாட்டுக்கு அழைத்துக்கொண்டுதான் போவேன் என்றும் உறுதியாகச் சொல்ல ஆரம்பித்தது. அங்கே கூடியிருந்த ஊர் மக்கள் வாயடைத்து நின்றார்கள். ஆனாலும் பூசாரி அசரவில்லை. அந்தத் தீய சக்தியை பொறியில் சிக்க வைக்க நேரம் பார்த்து காத்திருந்தார். ஆவி கேட்ட அனைத்து உணவுப் பண்டங்களையும் அதற்கு முன்னால் வைத்துவிட்டு அவற்றை அது தொட்டு சாப்பிடாதவாறு பார்த்துக் கொண்டார்.
கர்ப்பிணித்தாய் கண்டதையும் சாப்பிட்டு விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை. சுறுட்டு, பீடி, சிகரெட், சாராயம் என்று எல்லாம் அப்பெண்மணி முன்னால் படைக்கப்பட்டிருந்தும்கூட அவற்றைத் தொட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அந்த தீய சக்தி சப்புக் கொட்டிக் கொண்டிருந்தது. இதுதான் சரியான தருணம் என்பதை புரிந்து கொண்ட பூசாரி அந்த தீய சக்தியிடம் 'டீல்' பேச முன்வந்தார். குமாரியை அழைத்துப் போவதால், வயிற்றில் இருக்கும் சிசுவும் பாதிக்கப்படுமே என்கிற விசயத்தை அந்த தீய சக்திக்கு புரிய வைத்தபோது, அந்தப் பாசக்கார பாட்டனாரின் ஆவி கதறி அழுதது. பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது என்பதை புரிந்து கொண்ட பூசாரி, குமாரியின் கையில் ஒரு பூசணிக்காயை கொடுத்துவிட்டு மந்திரங்களை உச்சரித்து குமாரியின் உடம்பில் குடிகொண்டிருந்த தீய சக்தியை அந்த பூசணிக்காயில் இறக்கினார். பாசத்திற்கு கட்டுப்பட்ட தீய சக்தி பூசணிக்காயில் முழுவதுமாக இறங்கிவிட்ட பிறகு கறுப்பு சேவலை பூசணிக்காயின் மீது படுக்க வைத்தார். சேவலும் பூசாரியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு படுத்துக் கிடந்தது. அதன் முதுகில் கற்பூர கட்டிகளை குவித்து கொளுத்தினார். தீ கொளுந்துவிட்டு எரிந்த போதும் சேவல் ரொம்பவே சாதுவாக படுத்துக் கிடந்தது. பிறகு கற்பூரம் எரிந்து முடிந்த பிறகு கறுப்பு சேவல் எழுந்து நின்று உடம்பை சிலிர்த்து ஆட்டியபோது எல்லாம் முடிந்து விட்டது என்பதை பூசாரி அறிந்து கொண்டார். பின்னர் அந்தக் கறுப்பு சேவலோடு மற்றொரு சேவலையும் சேர்த்து வைத்து மந்திரங்களை உச்சரித்து தீய சக்தியை சரிபாதியாக இரண்டு சேவல்களினதும் உடம்பில் இறக்கினார். அப்போது அந்தச் சேவல்கள் மிரட்டும் தொனியில் கொக்கரித்தப்படி உணுப்பிட்டிய முட்டுச்சந்து தெருக்களில் தறிக்கெட்டு ஓடி மறைந்தன. சேவல்களின் உடம்பில் தீய சக்தி குடி கொண்டிருப்பதை ஊர்வாசிகள் புரிந்து கொண்டாலும், சேவல்களை ஏன் பூசாரி கொல்லவில்லை என்று அவர்கள் முணுமுணுத்தார்கள்.

"சேல்களை பலி கொடுத்திருந்தால் துஷ்டனின் கதை முடிந்துவிடும், ஆனால் குமாரியின் வயிற்றில் உள்ள குழந்தையை அது பாதிக்கும். அதனால் குமாரியின் பிரசவம் வரை இந்தப் பகுதியிலேயே இவை நடமாடித் திரியும். அதை யாரும் எதுவும் செய்யக்கூடாது. அப்படி செய்வது ஆபத்தை நீங்களே கேட்டு வாங்குவது போல ஆகிவிடும். பிரசவம் முடிந்த பிறகு நானே வந்து அதை பலி கொடுத்து விடுவேன்" என்று பூசாரி சொன்னதைக் கேட்டு ஊர்வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் சேவல்களை எப்படிப் பாதுகாப்பது என்று குழம்பிப்போனார்கள். ஆனாலும் சிலர் தாங்கள் அதைப் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார்கள். இதைக்கேட்டு வீரசிங்கம் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். இப்போது குமாரி பூரண குணத்தோடு இருப்பதாகக் குமாரியின் கணவன் தொலைபேசி வழியாக சொன்னதாகப் பூசாரி சொல்கிறார்.

No comments:

Post a Comment