Saturday, May 14, 2016

பறை இசை: ஒரு வட்டத்துக்குள் இசையை அடக்குவதா?


நிலா லோகநாதனுடன் ஓர் உரையாடல்

மணி  ஶ்ரீகாந்தன்

'பறை ஒரு சாதியின் கருவியாகப் பார்க்கப்படுகையில் எப்படி அதை இசைக்க முன் வந்தீர்கள் என்று கேட்டால் அந்தக் கேள்வியில் ஒரு வக்கிரம் இருக்கிறது. இப்படி கூச்சமில்லாமல் வெளிப்படையாகக் கேட்கிறீர்களே என்பதில் வருத்தம் இருக்கிறது'

'பறை இசை மூலம் நல்ல இசையும், சந்தமும், நல்ல உடல் அசைவுகளும் எனக்குக் கிடைத்தது. ஆணும் பெண்ணும் சேர்ந்து இசைக்கும், இசைத்தபடியே ஆடும் இந்தக் கொண்டாட்டம் மக்களின் இயல்பான நிலை. பண்பாட்டில் வலிந்து புகுத்தப்பட்டிருக்கும் சமூக சட்டங்கள் இயல்பாகவே தகர்க்கும் வழி'


டுத்ததாக பேசியவரும் நிலாதான். இவர் நிலா லோகநாதன். பொறியியலாளராக பணியாற்றும் இவர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேர விரிவுரையாளராகவும் இருக்கிறார். திருகோணமலை பயிற்சி முகாமில் தனது கணவருடன் வந்து இருவருமே பறை இசை பயின்றார்களாம்.

பறை இசைக்கு மயங்கி அதன் மீது ஆர்வம் ஏற்பட்டதா? அல்லது சாதியத்தை உடைப்பதற்கான கருவியாக நினைத்து பறையை கையில் எடுத்தீர்களா? என்று அவரிடம் கேட்டோம்.

"இதே கேள்வியை மிருதங்கம் இசைபவரிடமோ, வீணை இசைப்பவரிடமோ கேட்க முடியுமா? இசைக்கு மயங்கியா அல்லது வர்க்க சிந்தனையினாலா என்று கேட்டால் இது இரண்டும் தனித்தனியாக நிகழ்ந்தது என்று சொல்ல முடியாது. இது இரண்டு ஒரே நிகழ்வுகளில் நிகழக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தது.
கணவனுடன் பறை இசைக்கும் நிலா
எனக்கு இயல்பாகவே மக்களின் கலைகள் மீது அதிக விருப்பம். தோற்கருவிகளின் ஒலியும் தொனியும் தரும் சந்த அமைப்பு கம்பீரத்தை தரக்கூடியது. எனக்கு பறை எனும் கருவி ஏற்படுத்தும் இசையின் கிளர்ச்சி சொல்ல முடியாத இன்ப நுகர்வைத் தருகிறது. தேசிய கலை இலக்கியப் பேரவையில் கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்கிற சந்தர்ப்பங்களில் மலையகத் தோழர்களின் தப்பு இசைக்கருவியை ஆவலுடன் தொட்டுணர்ந்திருக்கிறேன். பறை இசையின் ஒலியை நூதனமாகப் பிரித்தறியக் கூடிய நெகிழ்ச்சி என்னிடமிருக்கிறது. ம.க.இ.கா வினது ஆவணப்படங்களிலும், பாடல்களிலும், சினமா இசையிலும் இதனை உணர்ந்திருக்கிறேன்.பறையைத் தொட்டுணரக் கூடிய சந்தர்ப்பங்கள் எனக்கு வாய்க்கவில்லை.

சாதியக் கட்டுக்கள் இக்கருவிகளை எம்மிடமிருந்து அன்னியமாக்கியது உண்மை. எங்களுடைய காலத்தில் சாதியத்தின் சுவடுகள், வேறு வடிவத்தை எடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் தீண்டாமை ஒடுக்குமுறையாக இருந்தது. இப்போது ஆதிக்க சாதிகளின் பாசிச சர்வாதிகாரமாக மாறியிருக்கிறது. சாதிகள் நாகரீகம் கருதி வெளியில் பேசப்படாமல், ஆதிக்க சாதிகளின் சாயலைக் காட்டும் எல்லாமும் பகட்டாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னமும் ஊரையும், பிறந்த இடத்தையும் நாசூக்காகக் கேட்டுவிடும் பெரியவர்களை ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் சந்திக்கிறேன். ஆனால் இன்றைக்கு புலம்பெயர்ந்த இடங்களிலும், நகரத்திலும் வெளிப்படையாக சாதி வெறியை காட்ட முடியவில்லை என்றாலும் சம்பிரதாயத்தை விட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் சாதி வெறி இருந்து கொண்டே இருக்கிறது. சாதி தீண்டாமை கொடுமையை உருவாக்கி அவற்றை நியாயப்படுத்தும் ஆதிக்க சாதி வெறியர்கள் கூறும் வார்த்தை தான் சம்பிரதாயம்.

அண்மையில், நெருங்கிய உறவினரொருவரின் மரணச்சடங்குக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். மரணச்சடங்கிற்காக பறையிசைக் கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். பெரிய இருமுகப் பறையையும், சிறிய ஒருமுகப் பறையையும் கொண்டு வந்த அவர்களுக்கு வீட்டின் கடைக்கோடியில் ஓரிடம் வழங்கப்பட்டது.

மிகுந்த மனவருத்தமாக இருந்தது. நானும் என்னுடைய கணவரும் அவர்களிடம் சகஜமாக இருக்க விரும்பினோம். இரண்டொரு வார்த்தைகள் நட்பாகப் பேச முயற்ச்சித்தோம். யாழ்ப்பாணச் சூழலில், புலம் பெயர்ந்தவர்கள், சமயவாதிகள் சூழ்ந்த பாரம்பரிய மரணச்சடங்கொன்றில் நாங்கள் நிகழ்ந்து கொண்ட விதம் பண்பாட்டின் சிறந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும், கேவலம் எங்களுடைய குடும்பம் ஓரளவு முற்போக்கான அரசியலை அடிப்படையாகக் கொண்டது.

இதைச் சொல்லும் போது, ஆதிக்க மக்கள் ஒடுக்கப்பட்டவர்கள் மீது காட்டும் அருவருப்பூட்டும் அடையாள அரசியலாகவே படுகிறது. ஒருபக்கம் ஒடுக்கப்பட்டவர்கள் மீது அனுதாபம் காட்டிக் கொண்டு, இன்னுமின்னும் தம்மை உயர்த்திக் காட்டும் அழுகிய அரசியலை நானும் செய்வது போலப் படுகிறது. சக மனிதர் மீது இரக்கம் காட்டுவது தன்னை உயர்த்தப் பிரயத்தனப் படும் உத்தி. உயர்தட்டு மக்கள் நாய்க்குட்டிகளுடனும், ஏழைகளுடனும் இரக்கம் காட்டுவர். ஒருவரது வர்க்க நிலைப்பாடும் சமுகப்பார்வையுமே அவரது சிந்தனையையும் செயலையும் தீர்மானிக்கின்றது. மனிதரில் விருப்பம் கொண்டவர் ஒருவரோடு ஒருவர் தோழமை பூணுவர்.

ஒரு ஆதிக்க சாதி குடும்பத்துக்கு ஒடுக்கப்பட்டவர்கள் அடிமையாய் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்பதை வகை வாரியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இறப்புக்கும் பிறப்புக்கும் என ஒடுக்கப்பட்டவர்களின் சேவகம் ஆதிக்கத்துக்கு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மரணச்சடங்கில் இசை வாசித்தவர்களது நுட்பத்தையும், ஓங்கி ஒலிக்கும் குச்சிகள் அசைகிற ஒழுங்கையும், அதிர்வு தரும் தோலின் தொழிநுட்பத்தையும் வியந்து கொண்டே இருந்தேன். அந்த நேரடி நிகழ்வு என்னுள் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. அந்த இசை கிறக்கத்தை, ஒரு வித போதையை, இயல்பான நடன அசைவுகளைத் தரக் கூடியதாக இருந்தது. மரணவீடொன்றின் சம்பிரதாயச் சோகத்தை, மறக்கடித்து இயல்பான எண்ணங்களை, கையில் தாளம் போட வைத்தது. எனக்கு அந்த இயல்பு நிலை பிடித்துப் போனது. முகத்தை வேண்டுமென்றே சோகமாக வைத்துக் கொண்டு, கம்பீரமான அந்த ஒலியில் ஒழிந்துகொண்டேன்.

ஆரம்பக் கல்விக் காலத்திலிருந்து கண்டி, கொழும்பு என்று நகர்ப்புறத்தில் வசித்தாலும், எம்மத்தியில் ஊடுறுவியிருந்த ஒடுக்குமுறைகள், பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய விழிப்புணர்வும், வரலாற்றுப் பார்வையும் என்னிடமிருந்தது.
அம்மாவோ, அப்பாவோ இது பற்றிய திறந்த உரையாடலை எப்போதும் மறுத்ததில்லை.

அதே காலகட்டத்திலும், அதற்கு முன்பும் பேஸ்புக்கில், தமிழகத்தைச் சேர்ந்த தோழர்கள் பறையிசை பயிலும் புகைப்படங்களைப் பதிவேற்றும் போது ஆவல் இன்னுமின்னும் அதிகமாகியது. தோழர் மணிமாறனுடைய பறையிசை நடனப் பயிற்ச்சிப் பட்டறை இலங்கையில் நிகழவிருப்பதை அறிந்ததும், பங்கு கொள்ளும் ஆர்வம் நல்லதொரு இயல்புணர்வைத் தந்தது. பறை மேளமொன்றைச் சொந்தமாக விலைக்கு வாங்கி விடும் எண்ணம் அதிகமிருந்தது.

எல்லாத் தோள்களும் ஒடுக்கப்பட்ட மக்களது கருவியைச் சுமக்கும் போது ஏற்படும் அந்தச் சுமை, இரண்டாயிரமாண்டு பழமை வாய்ந்த, ஒவ்வொருவரும் சுமந்து திரியும் இந்தச் சாதியக் கட்டமைப்பை கொஞ்சமாவது உலுப்பிப் பார்க்கும் அதன் வலி ஒவ்வொருவருக்கும் உறுத்தும் என்பது திண்ணமாக இருந்தது.

குடும்பங்கள் எம்மீது கடத்தவிரும்பும் ஆதிக்கப் பண்பாட்டை தகர்க்கும் நோக்குடனே, பறை மேளமொன்றை இசைப்பதைப்போல புகைப்படமெடுத்து, பேஸ்புக்கில் பதிவேற்றினேன். புலம்பெயர்ந்த உறவினர்களிடமிருந்தும், மேட்டிமை நண்பர்களிடமிருந்தும், குடும்பத்தினரிடமிருந்தும் முடிந்தளவு எதிர்ப்பு உருவாகியது. இந்த சமுக அறம்பிறழ்ந்தவர்க்ளின் எதிர்ப்புகளில் ஒரு அற்ப மகிழ்ச்சி இருக்கிறது. அதை நான் மிகை மகிழ்ந்து கொண்டாடுகிறேன்.

இது புரட்சிகளில் விரும்பியிருப்பதற்கான அடையாளமோ, கலககக் காரியாகக் காட்டிக்கொள்ளப் பிரயத்தனப்படுவதோ இல்லை. அடக்க நினைக்கும் ஒரு சமுகத்தை துச்சமாக மதிக்கும் செயல் என்று எண்ணலாம். அதைத் தவிர வேறு எண்ணங்கள் இருந்தாலும் பரவாயில்லை. மக்களைக் கொண்டாடும் மகிழ்ச்சியிலிருந்து நான் ஒரு போதும் விலகப் போவதில்லை.

பறை பயில போவது குறித்து உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் கூறிய கருத்து?
முன்பே சொன்னதைப் போல என்னுடைய குடும்பத்தினர், ஒருவகை மேலாதிக்கமான கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிக்க விருப்பப்படுபவர்கள். நாகரீகமும் வேண்டும், மேலாதிக்கச் சிந்தனையும் வேண்டுமென நினைப்பவர்கள் எதாவது ஒரு இடத்தில் தோல்வியுறுவர். என்னுடன் மிக நாகரீகமாக நடந்து கொள்ளத் தலைப்பட்டதால் தோல்வியுற்றனர்.
உண்மையில் அம்மாவும், அப்பாவும் படித்தவர்களுக்கான நாகரீகமாக இருக்காது என்பதினால் "வேண்டாம்" என்று வார்த்தையால் சொல்லவில்லையே தவிர, இதன் பின் விளைவுகள், ஊறவினர்கள், சமுகக் கண்ணோட்டம்....என்று வகுப்பெடுக்கத் தவறவில்லை. நாங்கள் திருகோணமலையில் தங்கியிருந்த நண்பர்களின் வீடுகளிலும் இதுவே நடந்தது. வேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்லுவதற்கு சமூகம் சிந்திக்கின்றது என்றால், இந்த நிலை ஏற்படுவதற்கான மக்கள் போராட்டங்களையும், இழப்புகளையும் பற்றி கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சமுகம் ஒருபக்கம் நாகரீகமாகத் தன்னைக் காட்டிக் கொள்வதில் பெருமைப்படுகிறது. அதே பக்கம் தன்னுடைய இருப்புக்கு அச்சம் ஏற்படும் போது, தீவிர நிலைகளை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. மேலாதிகச் சமூகங்கள் பல, ஒடுக்கப்படுபவர்களை நாகரீகமாக நூதனமான முறையில் கையாள்கின்றன. ஒடுக்கப்பட்ட சமுகங்கள் தமக்கான கோரிக்கையையோ கேள்விகளையோ முன்வைக்கும் போதோ அல்லது கல்வியில், பொருளாதாரத்தில் உயரும் போதோ எரிச்சலும், மேலாதிக்கப் புத்தியின் பாசிச நோக்கமும் அதிகமாகி ஒருவரை ஒருவர் பந்தாட எண்ணுகின்றனர்.

ஒரு சிறிய வளர்ச்சியைக் கூட பொறுக்க முடியாதவர்களாகின்றனர். ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுங்கிய நிலையில் இருக்கும் போது இரக்கப்படல் நிகழ்கின்றது. அது அடையாள அரசியலின் உச்சநிலை.

பறையை ஒரு சாதியக் கருவியாக நமது சமுகம் பார்க்கின்ற வேளையில் எப்படி அதனை இசைக்க முன் வந்தீர்கள்? கூச்சமாக இருக்கவில்லையா?

ஒருபோதும் கூச்சமாக இருக்கவில்லை. இந்தக் கேள்வியை எந்தவிதத் தயங்கமும் இல்லாமல் வெளிப்படையாகக் கேட்கிறீர்கள் என்பது மனவருத்தமாக இருக்கிறது. மக்களுக்கு பத்திரிகைகள் கொண்டு சேர்க்கும் தகவல்கள் நேர்மையானதாக இருக்க வேண்டும்.

உண்மையைச் சொல்லப் போனால், பறை ஒரு சாதியினது மட்டுமேயான அடையாளமாக இருந்ததனால்தான் அதனை இசைக்க பெரு விருப்புக் கொண்டேன். எல்லாத் தோள்களும்,எல்லார் தோள்களும் ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளங்களைச் சுமந்தால் என்ன?

பறையை, பறையிசைக்கலைஞர்கள் தவிர மற்றவர்க்ள் சுமப்பதால், யாரும் இறக்கப்போவதில்லை. தீங்கு நிகழப்போவதில்லை. யாருக்கும் எதுவும் குறைந்து போகப் போவதில்லை. ஆயின்  ஏற்றத்தாழ்வுகளிலிருந்து ஒருவரை விடுவிக்க நீங்கள் எடுக்கும் முயற்ச்சி எங்ஙணம் குறைந்தது? எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் நல்ல இசையும், சந்தமும், நல்ல உடலசைவுகளுமே. பெண்ணும், ஆணும் சேர்ந்து இசைக்கும், இசைந்து ஆடும் இந்தக் கொண்டாட்டம், மக்களின் இயல்பான நிலை. பண்பாட்டில் வலிந்து புகுத்தியிருக்கும் சமுகச் சட்டங்களை இயல்பாகவே தகர்க்கும் வழி. எமக்குளிருக்கும் சமுக அசௌகரியங்களை ஒழிக்கச் சிறப்பான வழி.

எல்லோரும் பறையைத் தோளில் சுமப்பதினால் மட்டுமே சாதியம் தகர்ந்து விடும் என்று ஒரு போதும் சொல்ல மாட்டேன். அந்தக் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கு மக்கள் பொது எண்ணங்களீன் அடிப்படையில் திரள வேண்டும். தமக்கான வெளிகளை கேள்விகள் மூலமும், போராட்டங்கள் மூலமும் உருவாக்க வேண்டும். தனது தேவையிலிருந்து பெறப்பட்ட போராட்ட விளைவே நேர்மையான புரட்சியாளரை உருவாக்கும். அதுவே நீடித்த பெரு வெளிகளையும் உருவாக்கிவிடும்.

மற்றைய இசைக்கருவிகளை, பரதத்தை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க பெற்றோர்கள் அந்தரப்படுவதைப் போல பறைமேளத்திற்கும் அந்தரப்பட வேண்டும். எங்களைத் தவிர பாடசாலை மாணவர்கள்...குறிப்பாக மாணவிகள் பறையிசை நடனப் பாசறையில் கலந்து கொண்டனர். அவர்கள் இதனை வெகுவாக குதூகலித்தனர். பயிற்சிகள் முடிந்த ஒவ்வொரு மாலையும், பொது வெளியில், மக்கள் பார்க்கும் விதமாக பறையை வாசித்தோம். மக்களிடமிருந்து கிடைத்த பின்னூட்டங்கள் முக்கியமானவை. பொதுமக்கள் பலர் இசைக்கருவியைத் தொட்டுணர விரும்பினர். அதனுடைய தோலின் தன்மையைக் கேட்டறிந்தனர். நாங்கள் வாசித்து, ஆடும் போது சூழ்ந்து நின்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த மாற்றம் நல்லது. இதை வரவேற்க வேண்டும். ஒருசில நச்சூட்டங்கொண்டவர்களையும், கவனக்கலைப்பன்களையும் இறுதிநாள் நிகழ்விலும், திருகோணமலைக் கடற்கரை வெளியில் வாசிக்கும் போதும் சந்திக்க நேர்ந்தது. அவர்களை நாங்கள் உரிய முறையில் நேர்கொண்டோம்.

எதிர்ப்புகளும், குழப்பங்களும் கேள்விகளும், தெளிவான பதில்களை மக்களுக்குத் தெரிவிப்பதற்கும், மக்களிடையே இருக்கும் அச்சத்தையும் குழப்பத்தையும் தீர்க்கவும் உதவும். ஆகவே சபை குழப்பிகளையும் மதிக்கிறேன்.

No comments:

Post a Comment