Friday, May 13, 2016

இருள் உலகக் கதைகள்

மதகடியில் கேட்ட மர்ம முணங்கள்

முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்:மணி ஸ்ரீகாந்தன்

து அமாவாசை இரவு. வானமும், பூமியும் காரிருள் சூழ்ந்து, பயங்கரத் தோற்றத்தை உருவாக்கியிருந்தது. பலாங்கொடையை அண்மித்து இருக்கும் ஒரு பெருந்தோட்டத்தின் மண் பாதையின் முச்சந்தி நிசப்தம் நிறைந்து காணப்பட்டது. அந்தக் காலத்தில் அங்கே சுடுகாடு இருந்ததால் கல்லறை சந்தி என்று அந்த சந்தியை அழைப்பார்கள். ஆனால் இப்போது அங்கே புதைகுழி எதுவும் இல்லை. எல்லாம் தேயிலைக் காடாக உருமாறிப் போயிருந்தது.

அந்தச் சந்தியைக் கடந்து ஐநூறு மீட்டர் தூரம் சென்றால் இறப்பர் தோட்டம் வந்துவிடும். அந்தப் பக்கத்திலிருந்து கோட்டான்களின் அலறல் சத்தம், நிசப்தம் குடி கொண்டிருந்த அந்தப் பகுதியை சிதைத்துக் கொண்டிருந்தது. வழியில் இருந்த ஒரு பாழடைந்த மதகின் கீழிருந்து ஒரு முணங்கல் சத்தம். ஈனக் குரலில் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது.
பொழுது விடிந்தது. காலையில் தோட்டப் பணிகளுக்கு ஆட்கள் வழமை போலவே அந்த வழியாக கிளம்பிப் போனார்கள். மேட்டு லயத்து காமாட்சியும் கொழுந்துக் கூடையை மாட்டிக் கொண்டு எட்டாம் நம்பர் மலைக்குள் புகுந்தாள். காமாட்சியின் கணவன் வேலாயுதமும் தோட்டத்தில்தான் புல் வெட்டுகிறான். "தோட்டத்தில் அடைபட்டு பாழடைந்து கிடக்கிற மதகுகளை தூர்வாரும் வேலை இன்றைக்கு" என்று காமாட்சியிடம் வேலாயுதம் சொல்லியிருக்கிறான். அதனால் பனிரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற எண்ணம் மனதில் ஓட வேலையில் மூழ்கிப் போனாள் காமாட்சி.

சிறிது நேரத்தில் நேரம் பகல் பனிரெண்டு மணியாகியது. சாப்பாட்டு இடைவேளைக்காக வீட்டுக்கு காலி கூடையோடு நடந்தாள். இறப்பர் தோட்டத்தை தாண்டினால் மேட்டு லயம் வந்துவிடும். இறப்பர் தோட்டத்திற்குள் காமாட்சி நுழைந்ததும் இனம்புரியாத ஒரு சோகம் அவளிடம் படர்ந்தது. மரங்கள் சூழ்ந்து இருந்ததினால் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியாக இருந்தது. சில அடிகள்தான் கடந்திருப்பாள் அப்போது அவளின் பின்னால் இருந்து ஒரு முணங்கல் சத்தம் கேட்க திடுக்கிட்டவள், திரும்பிப்பார்த்தாள்.
முத்து பூசாரி
ஆனாலும் சத்தம் தொடர்ந்து கேட்டது. மதகின் கீழிருந்துதான் சத்தம் கேட்கிறது என்பதை காமாட்சி புரிந்து கொண்டபோது அவளின் உடல் சில்லிட்டது. ஆனாலும் அந்த முணங்கல் சத்தம் சாப்பிடாமல் பட்டினி கிடந்து உயிருக்கு போராடும் ஒரு மனிதனின் குரலாகவே அவளுக்குக் கேட்டது. காமாட்சியின் புத்திக்கு ஏதோ உரைக்க அந்த இடத்திலிருப்பது நல்லதல்ல என்பதை புரிந்து கொண்டவள், ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குச் சென்றாள். மூச்சிறைக்க ஓடிவரும் காமாட்சியைப் பார்த்து பதைபதைத்துப் போன வேலாயுதம், விசயத்தைக் கேட்டுவிட்டு,

"அது மன பிரம்மையா இருக்கும். நாளைக்கு அந்தப் பக்கம்தான் மதகு திறக்கப் போகிறேன். திறந்து பார்த்துவிட்டு உனக்குச் சொல்கிறேன்" என்று அவன் அலட்சியமாகச் சொல்ல காமாட்சிக்கு மேலும் பயம் அதிகரித்தது.

அடுத்த நாள் வேலாயுதமும் அவனது நண்பனும் இறப்பர் தோட்டத்திற்குள் பாழடைந்து மூடிக்கிடந்த மதகுகளை தூர்வாரிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் வேலாயுதத்திற்கு அவன் மனைவி சொன்ன அந்த முணங்கல் சத்த விசயமும் ஞாபகத்திற்கு வந்தது. மூடிக்கிடந்த அந்த மதகை பெரும்பாடு பட்டு சுத்தம் செய்தார்கள். அந்த மதகின் உள்ளே ஒரு பெண்ணின் நீண்ட தலைமுடி மண்ணில் புதைந்து கிடந்தது. அதை வேலாயுதம் வெளியே இழுத்து எடுத்தான். மண்ணும் சகதியும் அப்பிக் கிடந்த அந்த நீண்ட முடிக் கற்றையை பார்த்தவன், 'மழை வெள்ளத்துல அடிச்சிட்டு வந்து இதுல சிக்கிக் கிடக்கு' என்று நினைத்தவன் அதைத் தூக்கி வீசிவிட்டு பணியில் ஈடுபட்டான். ஆனால் அப்போது வேலாயுதம் உடம்பு கொஞ்சம் எடை கூடியது போன்ற ஒரு உணர்வு அவனுள் ஏற்பட்டது. வேலை முடிந்து வீடு வந்து நுழைந்த போது உடம்பில் இருந்த அந்த எடையும் குறைந்தது போல அவனுக்குப் பட்டது.

ஆனால் அன்றிரவு முதல் அந்த வீட்டில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கின. இரவில் வீட்டைச் சுற்றி கொலுசு சத்தம் ஒலிக்க ஒரு பெண் நடந்து போவது போலவும் காமாட்சி நள்ளிரவில் தூக்கத்தில் அழுவதும், பிறகு கொடூரமாக சிரிப்பதுமான சேட்டைகள் தொடர்ந்தன. வேலாயுதம் வெலவெலத்துப் போனான். ஊரில் உள்ள சின்ன பூசாரிகள் செய்த பரிகாரங்கள் பலன் தராததால் கஹவத்தை பகுதியில் பிரபல பூசாரியாக விளங்கும் முத்துப் பூசாரியை அழைத்து வந்து பரிகார பூஜையை தொடங்கினார்கள்.

முத்து உடுக்கையை கையிலெடுத்து குல தெய்வமான மாடனை அழைத்து ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார். முத்து உச்சாடனம் செய்த மந்திரங்கள் விண்ணைத்தொட காமாட்சியும் ஆட்டம் போடத் தொடங்கினாள்.

ஊர் மக்கள் திரண்டு வந்ததால் முத்து தனது சித்து வேலைகளில் ஜாலம் காட்டத் தொடங்கினார். தனது சாட்டையை சுழற்றியவரின் காலில் விழுந்த அந்த துஷ்ட ஆவி, கதறி அழத் தொடங்கியது.
"பூசாரியண்ணே என்ன விட்டுடுங்க.. நான் அந்தக் காலத்தில இந்த ஊரிலதான் குடியிருந்தேன். என்னை மாயக்கான்னு கூப்பிடுவாங்க. என் புருஷன் மேல உள்ள சந்தேகத்துல சண்டை போட்டு விசம் குடிச்சு செத்து போனேன். அதுக்குப் பிறகு ஆவியா இந்த ஊரையே சுத்தி சுத்தி வந்தேன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. என் புருஷன் மாயாண்டி ஒரு சபல புத்திக்காரன். நான் இருக்கும் போதே மத்த பொண்ணுகளை ஒரு மாதிரியாப்பார்ப்பான். அதனால எனக்கு பின்னாடி அவன் வேற யாரு கூடவாவது உறவு வைத்திருக்கிறானா என்கிறதை தெரிஞ்சு கொள்ள அவன் பின்னாடியே அலைஞ்சு வேவு பார்த்தேன். ஆனா அவன் ரொம்ப நல்லவன். அப்படி ஏதும் தப்பு பண்ணல. அப்போதான் நான் சந்தேகப்பட்டு எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு புரிஞ்சுது. பிறகு என் புருஷனும் செத்துப் போயிட்டான். அதுக்குப் பிறகு பேய் நடமாட்டம் இருக்கும்னு என் புருஷன் வீட்டுல எட்டுக் குச்சு அடிச்சி என்னை உள்ளே வர முடியாம தடுத்துட்டாங்க. அதுக்குப் பிறகு ஊரை சுத்திட்டு மதகுல போய் தங்கிடுவேன். அப்போதான் ஒரு நாள் பெய்த பெரிய மழையில மதகு மூடிருச்சு. அதுக்குப் பிறகு அதிலேயே சிறைப்பட்டுக் கிடந்தேன். அப்போதான் வேலாயுதம் மதகை திறந்து எனக்கு விடுதலை கொடுத்தான். வெளியே வந்த நான் அவன் உடம்பில புகுந்து பிறகு அவன் வீட்டுக்கு போனதும் அவன் மனைவி மேல இறங்கிட்டேன். இங்கேயே நிம்மதியா இருக்க நினைச்சேன்" என்று காமாட்சியின் உடம்பில் இருந்த தீய சக்தி கூறியது.

"அது நான் இருக்கும் மட்டும் நடக்குமா?" என்று எகத்தாளமாக சிரித்த முத்து பூசாரி, ஒரு மந்திரத்தை பலமாக உச்சரித்து கையிலிருந்த சேவலின் கழுத்தை படீரென்று துண்டிக்க தீய சக்தி ஸ்தம்பித்து நின்றது. அந்த வினாடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திய முத்து, காமாட்சியின் உச்சி மயிரை கொத்தாக பிடித்து வெட்டி போத்தலில் போட்டு அடைத்தார். அடுத்த நிமிடமே காமாட்சி பொத்தென்று மயங்கி விழுந்தாள்.

"அவளை தண்ணீர் தெளித்து காற்றோட்டமான இடத்தில் படுக்க வையுங்கள்" என்று கட்டளை போட்ட முத்து, சுடுகாட்டுக்கு தமது சகாக்களோடு சென்று பரிகாரத்தை முடித்தார். அப்போது அவரின் … கண்ணில் ஒரு மதகும் அருகில் கிடைக்கும் மயிர்க் கற்றையும் நிழலாடியது. அதுபற்றி விசாரித்து தெரிந்து கொண்டவர் அதை எடுத்து எரித்து சாம்பலாக்கி விடும்படி சொல்லிவிட்டு வீடு நோக்கி வெற்றியுடன் நடந்தார்.

No comments:

Post a Comment