Saturday, May 28, 2016

சினிமானந்தா பதில்கள் -35


'பாகுபலி' படத்துக்கு கடந்த வருடத்தின் சிறந்த படம் என்று தேசிய விருது கொடுத்திருக்கிறார்களே?
ராஜன், கொழும்பு

அவர்களுக்கு சரி என்று பட்டதனால்தானே கொடுத்திருக்கிறார்கள். அது சரியா தப்பா என்று சொல்ல முடியாது. ஆனால் மாற்றுக் கருத்து இருந்தால் முன்வைக்கலாம்.

இந்தியாவின் சிறந்த படம் என்று விருதை வென்ற படத்தை 25 மாநிலங்களிலும் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதி சிறந்த படம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். நாட்டின் கலாசாரம், படம் சொல்லும் செய்தி, நடிப்பு, பாடல், இசை, இயக்கம் ஆகியவை கையாளப்பட்ட விதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் அந்த விருதைப் பெறும் படம் தெரிவு செய்யப்படும்.
'பாகுபலி' படத்தை அதன் காட்சித் தொகுப்புகளின்படி 4 ஆகப் பிரிக்கலாம். பிரபாஸின் பிறப்பு, வளர்ப்பு, பிரபாஸ் தமன்னா காதல் காட்சிகள், பிரபாஸ், ராணா ரம்யாகிருஷ்ணன், நாசர் ஆகியோரின் ராஜகதை பிரமாண்டமான யுத்தக் காட்சிகள் மற்றும் ஒரு குத்தாட்ட காட்சியும் உண்டு. இதை எதில் சேர்ப்பது?

பிரபாஸின் பிறப்பு வளர்ப்பு, பிரபாஸ் தமன்னா காதல் காட்சிகள் ஆகியவற்றில் ஏகுஓ (கிரபிக்ஸ்) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு ரசிகர்களை வசீகரித்தன. ராஜ காட்சிகள் வழமையான சரித்திரப் படங்களில் இருப்பதைப் போலத்தான் இருந்தது. ஆனால் படத்துக்கு பிரமாண்டமாக அமைந்தது யுத்தக் காட்சிகள்தான். ஆனால் legendary amazons  என்ற சீன – ஹொங்கொங் படத்தில் மிகவும் தத்ரூபமாக இடம்பெற்றுள்ள யுத்தக்களக் காட்சிகள் பாகுபலி படத்தில் இடம்பெறுகின்றன.

amazon படத்தில் யுத்தத்தில் ஈடுபடும் இரண்டு குழுக்களில் ஒரு குழுவில் பெரும்பாலும் பெண்களே இடம்பெறுகின்றனர். இதுதான் வித்தியாசமாக உள்ளது.

இன்னொரு படத்தில் இடம்பெற்ற யுத்தக் காட்சிகளை அச்சொட்டாக பின்பற்றி எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு நாட்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டமை சரியல்ல என்பதே எனது கருத்து. மிகவும் ஜனரஞ்சகமான படம் என்ற விருதைக் கொடுத்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும்.

பாகுபலிக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருது. ரஜினிக்குக் கொடுக்கப்பட்ட பத்ம விபூஷன் விருது ஆகியவை கொடுக்கப்பட்ட நேரத்தை கணக்கிட்டுப் பார்க்கையில் இதில் ஏதோ அரசியல் நெடி வீசுவதைப் போல உள்ளதே!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் 5, 6 முதல் சில சமயங்களில் 7 படங்கள் வரை வெளியிடப்படும் இந்தக் கால கட்டத்தில் சித்திரைப் புத்தாண்டுக்கு 'தெறி' மட்டும்தானே வெளியானது! இது நியாயமா?
மொஹமட் அஸ்மின், கடுகண்ணாவை

திரைப்பட தயாரிப்பாளர்கள் தியேட்டர் முதலாளிகள் இணைந்து பேசி செய்து கொண்ட தீர்மானம் இது.
பொங்கல், சித்திரை பெருநாள், தீபாவளி ஆகிய நாட்களும் பெரிய நடிகர்களின் படங்களை மட்டும்தான் வெளியிடுவார்கள். தெறியுடன் இன்னொரு பெரிய நடிகரின் படம் வெளிவந்திருக்கலாம். ஆனால் எந்தவொரு பெரிய நடிகரின் படமும் இந்த சமயத்தில் தயாரிப்பு வேலை முடிந்து திரையிட தயாராக இருக்கவில்லை. இனி தீபாவளிக்கு கபாலி, சில சமயம் அஜித் படம். அடுத்த பொங்கலுக்கு விஜயின் புதிய படம் தயாராகி வெளியிடப்படக்கூடும்.

எங்கே சென்றாலும் அடிபடுவது புது நடிகர்களும் சிறிய நடிகர்களும்தான். அவர்களது படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது குதிரைக் கொம்பு. அவர்கள் அண்மைக் காலத்தில் சில நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்த விடயத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் மேலும் சிந்திக்க வேண்டும். 

நட்சத்திர சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி சேகரிப்பதற்காக நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் ஆயிரம் ரூபா கொடுத்து டிக்கட் வாங்க வேண்டியிருந்ததாமே?
அஸ்வின், யாழ்ப்பாணம்

நடிகர்கள் கலை நிகழ்ச்சி நடத்தித்தான் நிதி சேகரிப்பது வழக்கம். கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது, மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தித்தான் சங்கத்துக்கு நிலம் வாங்க நிதி திரட்டினார். ஆனால் சங்கத்தின் நிர்வாகம் இப்போது இளைஞர்கள் வசம் வந்திருக்கிறது. அதனால் அவர்கள் கலை நிகழ்ச்சிக்குப் பதிலாக கிரிக்கெட்டில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களில் எத்தனை பேருக்கு நன்றாக கிரிக்கெட் விளையாட வரும்?
நடிகர்கள் விஷ்ணு, விக்ராந்த் ஆகிய இருவர் மட்டுமே நன்றாக விளையாடக் கூடியவர்கள். இருவரும் தமிழ்நாட்டு கிரிக்கெட் அணிக்காக ஆடியிருக்கிறார்கள். ஏனைய நடிகர்கள் 9 ஆம், 10 ஆம், 11 ஆம் இலக்க ஆட்டக்காரர்கள்தான்.

இதனால்தானோ என்னவோ நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்பார்த்தபடி கூட்டம் வரவில்லை.

1000 ரூபா, டிக்கட் விறுவிறுப்பற்ற ஆட்டங்கள், அணிக்கு ஆறு பேர் மட்டும் என்ற முறை எல்லாம் எடுபடவில்லை.

ஆனால் எப்படியோ நட்சத்திர கிரிக்கெட் மூலம் சுமார் 12 கோடி ரூபா சேர்ந்து விட்டதாக தெரிய வருகிறது. இதில் 9 கோடி சன் டிவி போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைக்காக கொட்டிக் கொடுத்ததாம். கட்டடம் கட்ட இது போதும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் சங்கத்துக்காக சன் டிவி கட்டிக் கொடுத்த கட்டடம் என்று கூறலாமா?

அண்மைக்காலத்தில் எந்தெந்த படங்கள் வெற்றி பெற்றன. 
கவிதா, ஹேவாகம பாதுக்க

இதுவரை வருடத்தின் 4 மாதங்கள் முடியவில்லை. அதற்குள் 50க்கு மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஐம்பதில் 5 படங்கள்தான் தேறியுள்ளன. ரஜினி முருகன், இறுதிச்சுற்று, அரண்மனை 2, விசாரணை, பிச்சைக்காரன் ஆகிய படங்கள் மட்டுமே தயாரிப்பாளரை காப்பாற்றிய படங்கள்.

பெரிய நடிகர்கள் இயக்குநர்கள் பங்குபற்றிய தாரை தப்பட்டை, பெங்களுர் நாட்கள், ஜில் ஜல் ஜக், மிருதன், ஆறாது சினம், சேதுபதி, கணிதன், காதலும் கடந்து போகும் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியில் நிறைவைத் தரவில்லை. இது தொடர்ந்தால் கடந்த வருடத்தைப் போல் இந்த வருடமும் வெளியாகும் படங்களின் மொத்த எண்ணிக்கை 300ஐத் தாண்டும். ஆனால் அதில் எத்தனை தேறும்? ஒரு 20, 25…..

திரைப்படங்களின் எண்ணிக்கையை குறைத்து தயாரிப்பு செலவை மட்டுப்படுத்தி தரத்தைக் கூட்டுவது ஒன்றுதான் இதற்குத் தீர்வு.

No comments:

Post a Comment