Friday, May 13, 2016

இந்திய விடுதலைக்காக நேதாஜியுடன் இணைந்து போராடிய ஒரு தியாகியின் கதை- 2

சுதந்திரத்தின் பின்னர் இந்து-முஸ்லிமாக பிரிந்த இந்தியர்கள்

அருள் சத்தியநாதன்

"நேதாஜிக்கு மத நம்பிக்கை கிடையாது. எல்லா மதமும் சம்மதமே. ஆனால் அவர் உயர் சாதியைச் சேர்ந்தவர். ரங்கூனில் 1944 இல் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த மீலாத் விழாவுக்கு அவர் வந்திருந்தது எனக்கு அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. விழாவுக்கு பர்மிய பிரதமரும் வருகை தந்திருந்தார். 'விழாவுக்கு என்ன செலவாகி இருக்கும் ஒரு இரண்டு லட்சம்?' என்று கேட்டுவிட்டு எங்களுக்கு இரண்டு லட்சம் பணமும் தந்தார்."
அமீர் அம்சா

தன் நினைவுகளை இரைமீட்கும் அமீர் அம்சாவுக்கும் நேதாஜிக்கும் இடையிலான உறவு ஏறக்குறைய கிருஷ்ண பரமாத்மா மீது மீரா கொண்டிருந்த பிரேமையை ஒத்ததாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் இரண்டு தினங்கள் நேதாஜியை நேரில் பார்க்காமல் இருந்தால் அம்சாவுக்கு பைத்தியம் பிடித்த மாதிரி ஆகிவிடுமாம்!

யுத்த காலத்தில் ஜப்பான் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த பர்மா மீது அடிக்கடி பிரிட்டிஷ் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தும், ரங்கூன் அவற்றின் முக்கிய இலக்குகளில் ஒன்று. அடிக்கடி பத்து பன்னிரெண்டு விமானங்கள் வரும்… குண்டு வீசும் என்கிறார் அம்சா.

மகன் நேதாஜியுடன் இணைந்து பணியாற்றி வந்தது தெரிந்துவிட்டாலும் அவன் யுத்த முனைக்கு செல்வதை அம்சாவின் தந்தை விரும்பவில்லை. கடையை விட்டு வெளியே போகாதே என அடிக்கடி சொல்வார். ஒரு தடவை ஒரு நாள் முழுவதும் வீட்டில் அடைத்து வைத்திருந்தாராம். அடித்தும் பார்த்திருக்கிறார். ஆனால் அம்சாவின் நேதாஜி பிரேமை இம்மியளவும் அசைந்து கொடுக்கவில்லை. அவர் கடையில் தங்குவது குறைவு. காலை புறப்பட்டுச் சென்றால் இரவு ஒன்பது பத்து மணியளவில்தான் வீடு திரும்புவார். அப்போதெல்லாம் மாலையானதும் தெருக்கள் ஓய்ந்துவிடும். இரவில் ஆள்நடமாட்டம் இருக்காது. பேய் இரவு என்றால் யுத்த காலத்து ரங்கூன் இரவுகளைத்தான் சொல்ல வேண்டும். இத்தகைய இரவு வேளைகளில் குதிரை வண்டியில் அல்லது இராணுவ ஜீப்பில் வீடு வந்து சேர்வார் அம்சா. சில சமயம் இராணுவ சீருடையில் வந்திறங்கும்போது அவரது அப்பா உறைந்து போவாராம்.

"சில நாட்களில் நான் நேரம் சென்று வந்தால் அதுவரை தானும் சாப்பிடாமல் காத்திருப்பார் அப்பா…" என நினைவு கூர்கிறார் அம்சா.

ஆனால் அம்சாவின் இரும்புப் பிடிக்கு முன்னால் அப்பா பாசம் தோற்றுப் போனது என்பதே உண்மை. இறுதியில் 'இறைவா இவனுக்கு நல்வழி காட்டு' என்று இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அம்சாவின் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடுவதை நிறுத்திக் கொண்டார் அவரது அப்பா.

யுத்தத்தின் மூலமே பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் இருந்து அகற்ற முடியும் என்ற அசையா நம்பிக்கை கொண்டவராக நேதாஜி இருந்த போதிலும், அவர் யுத்த வெறியராகவோ இரத்த வெறி கொண்டவராகவோ இருக்கவேயில்லை என்று சொல்லும் அம்சா உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

ஒரு முறை குண்டு வீச்சு விமானங்கள் வந்தபோது ஜப்பானிய இராணுவம் இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது. ஐ. என். ஏ. இராணுவ வீரர்கள் இரண்டு அமெரிக்க விமானிகளை சிறைப் பிடித்தனர். இதைக் கேள்விப்பட்டதும் அவர்களை உடனடியாக இராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி கட்டளையிட்டுவிட்டு எக்காரணம் கொண்டும் விமானிகளை சித்திரவதை செய்யக்கூடாது என அதிகாரிகளிடம் கண்டிப்பாகச் சொன்னார். காயங்கள் குணமானதும், அவர்களை கௌரவமாக நடத்தும்படி கேட்டுக்கொண்ட பின்னரே ஜப்பானிய மேஜரிடம் ஒப்படைத்தார் நேதாஜி. நான் அறிந்த வரையில் ஆஸ்பத்திரியில் ஐம்பது போர்க் கைதிகள் வரை இருந்தனர் என்றார் அமீர் அம்சா.

ஐ.என்.ஏ. இராணுவத்தில் சுமார் ஒரு லட்ச வீரர்கள் இருந்திருப்பார்கள் என்று சொல்லும் அம்சா, அஸாம் மணிப்பூர் வழியாக இந்தியா நோக்கி ஐ. என். ஏ. படையினர் முன்னேறிய போது சுமார் இரண்டாயிரம் போர்க் கைதிகளைப் பிடித்ததாக சொல்கிறார். இவர் இராணுவ பயிற்சி பெற்றிருந்த போதிலும் நேதாஜிக்கு பிரியமானவராக இருந்ததாலோ என்னவோ போர்வீரராக இவரை யுத்த முனைக்கு நேதாஜி அனுப்பவில்லை. அம்சாவின் வேலை விநியோகப் பிரிவில். டிரக்குகளிலும் மாட்டு வண்டிகளிலும் உணவு மற்றும் இராணுவ தளபாடங்களை யுத்த முனைக்கு எடுத்துச் செல்வதும் தற்காலிக விநியோக நிலையங்களை அமைப்பதும்தான் அம்சாவின் பணி. யுத்த முனையில் இருந்து முப்பது நாற்பது மைல் தொலைவில் விநியோகப் பொருட்களுடன் இவர்கள் நிற்பார்கள். யுத்தமுனை முழக்கங்கள் தெளிவாகக் கேட்கும்.

இந்திய தேசிய இராணுவம் ஜப்பானிய இராணுவத்துடன் இணைந்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த சமயம், அம்சாவும் அவரது நண்பர்களும் தமது இராணுவம் டில்லியைக் கைப்பற்றி விடுவது நிச்சயம் என நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் திடீரென யுத்த சூழல் மாறியது. ஜெர்மனி யுத்தத்தில் தோல்வியடைந்தது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்கா ஹீரோஷிமா மீது அணுகுண்டு வீச, ஜப்பான் சரணடைந்தது. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் கைவிடப்பட்ட நிலைக்கு ஆளானது. பர்மாவின் சில பகுதிகள் நேசநாட்டுப் படைகளின் வசம் வீழ்ந்து எப்போது வேண்டுமானாலும் ரங்கூன் கைப்பற்றப்படலாம் என்ற சூழலில் ரங்கூனை விட்டு வெளியேறுமாறு ஜப்பான் நேதாஜியை கேட்டுக் கொண்டது.

"1945 மார்ச் 26ம் திகதி" என்று ஆரம்பிக்கும்போதே அம்சாவின் குரல் தளதளக்கிறது. "மாலை சுமார் நான்கு மணிக்கு நாங்கள் இருந்த முகாமுக்கு இராணுவ உடையில் நேதாஜி வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொன்னார். இது தற்காலிக பின்னடைவுதான். இப்போது சும்மாயிருந்து பின்னர் மீண்டும் போராடுவோம் என்று எங்களிடம் கூறினார். அப்போது அங்கே ஐம்பது அறுபது பேர் இருந்திருப்போம். அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்க நாங்கள் கண் கலங்கினோம். பின்னர் அங்கிருந்து சென்றார். அதுதான் அவரை நேரில் பார்த்த கடைசி சந்தர்ப்பம்."

"அவர் புறப்பட்டுச் சென்றதும் ரங்கூன் வீழ்ச்சி அடைந்தது. எங்கள் கடை கொள்ளையடிக்கப்பட்டது. நாங்கள் பார்த்திருக்க நகைகளையும் மணிகளையும் மூட்டையாகக் கட்டி அள்ளிச் சென்றது வெள்ளையர் இராணுவம். நாங்கள் கைது செய்யப்பட்டு ரங்கூன் ஜெயிலில் அடைக்கப்பட்டோம். சிறையில் இருக்கும்போதுதான் பார்மோஸா (இன்றைய தைவான்) தீவில் நேதாஜி பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகி அவர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தோம். உலகமே இருண்டு விட்டதைப்போல உணர்ந்தேன்."

இவரும் ஷா நவாஸ்கான் போன்ற ஐ.என்.ஏ. முக்கியஸ்தர்களும் இரண்டு மாதங்களை ஜெயிலில் கழித்த பின்னர் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தேசத்துரோகிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்படி இவர்கள் டில்லியில் தூக்குக் கயிறை முத்தமிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள் தேச பக்தர்களே தவிர தேசத்துரோகிகள் அல்ல என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் பரவவே, இவர்களை விடுவிக்க வேண்டும் என்று மக்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இவர்களைத் தூக்கிலிடக்கூடாது என நேருஜி, காந்திஜி, ஜின்னா, படேல், லியாகத் அலிகான், ராஜேந்தர் பிரசாத் போன்ற தலைவர்கள் குரல் கொடுத்ததோடு இவர்களுக்காக வாதாடுவதற்கு சட்ட அறிஞர் குழுவொன்றையும் நிறுவினர். இறுதியில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

"1947 ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து இவரது அப்பா வெறுங்கையாக இந்தியா திரும்பினார். கோடீஸ்வர குடும்பம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நடுத்தெருவுக்கு வந்தது. வாழவழியின்றி அம்சாவின் குடும்பம் அபிராமத்துக்கு திரும்பியது. மீண்டும் கிராம வாழ்க்கை ஆரம்பமானது.

1947 ஆகஸ்ட் மாதமளவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குமெனவும் இந்திய பெருநிலப் பரப்பில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து தனி நாடாக சுதந்திரம் பெறும் என்றும் பேச்சு அடிபட ஆரம்பித்தது. அதையடுத்து இந்து முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே குரோதம் வளர்ந்து முறுகல் நிலை தோன்றியது. 47ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது. எங்கள் ஊரில் உள்ள சிலர், முஸ்லிம்களை இந்துக்கள் தாக்குவதால் இந்த சுதந்திரம் எமக்கு சுதந்திரமே அல்ல என்று கூறினார்கள். ஊர் ஜமாத் கூட்டப்பட்டு சுதந்திர தினத்தன்று முஸ்லிம்கள் தமது வீடுகளில் கொடியேற்றக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்காக போராடி அனைத்தையும் இழந்து நேதாஜியின் இராணுவத்துக்காக இலட்சக்கணக்கில் நிதியுதவி செய்த எங்களால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தியர்களுக்குத்தான் சுதந்திரம் கிடைக்கிறது. இதில் இந்து முஸ்லிம் என்ற பேதத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. எனவே 15ம் திகதி நள்ளிரவில் ஜமாத் கட்டளையையும் மீறி எனது அப்பா எங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றினார். இது பிரச்சினையை ஏற்படுத்தினாலும் நாங்கள் பொருட்படுத்தவில்லை.

சுதந்திரத்தோடு பிரிவினையும் வந்ததால் டில்லி, கல்கத்தா, பம்பாய், வங்காளமெங்கும் பயங்கர இனக்கலவரம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை இராமநாதபுரம் மாவட்டத்திலும் உணர முடிந்தது.
ஒரு நாள் எங்கள் ஊரை அயல் கிராம இந்துக்களின் கோஷ்டியொன்று தாக்க வருவதாகத் தகவல் கிடைத்தது. எங்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையாக இவ்வளவு காலம் ஒற்றுமையாகப் போராடிவிட்டு இப்போது ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்ப்பதா?

"நாங்களும் கிராமத்து முஸ்லிம்களும் என் அப்பாவின் தலைமையில் ஊர் எல்லைக்கு கிளம்பிச் சென்றோம். ஆயுதம் ஏந்தி வருவோரை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து சமாதானப்படுத்தி அவர்களைத் திருப்பி அனுப்புவதே எமது நோக்கம்.

ஊர் எல்லையில் அவர்களை சந்தித்தோம். பிரச்சினை வேண்டாம். சமாதானமாக வாழ்வோம் என அவர்களிடம் எடுத்துச் சொன்னோம். காரசாரமான விவாதம் எழுந்தது. அச்சமயத்தில் வெறி கொண்ட ஒருவன் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த என் அப்பாவை கத்தியால் திடீரென தாக்கினான். அப்பா கதறியபடியே நிலத்தில் விழுந்தார். அவர் உயிர் பிரிந்தது."

இப்படித் தன் கதையைக் கூறி முடித்தார் அமீர் அம்சா.

நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடி, தன் செல்வத்தை எல்லாம் இழந்த அமீர் அம்சாவின் குடும்பம் நாடு விடுதலையடைந்த பின்னர் ஒரு இந்தியக் குடிமகனின் மதவெறிக்குப் பலியானதை என்னவென்று சொல்வது?

தன் கதையை அவர் சொல்லி முடித்தபோது ஒரு திகில் திரைப்படத்தைப் பார்த்த உணர்வு எமக்கு ஏற்பட்டது. தன் குடும்பத்துக்கு நேர்ந்ததைப் பற்றியோ தனது இன்றைய நிலை பற்றியோ அம்சா கவலைப்படவில்லை.

அவர் ஒரு நேர்மையான, உண்மையான, நெஞ்சுரம் மிக்க சத்திய மனிதராகவே இறுதிவரை வாழ்ந்து வந்தார்.

இந்திய விடுதலைக்காக நேதாஜியுடன் இணைந்து போராடிய தியாகி அமீர் அம்சா தனது 98வது வயதில் இவர் கடந்த மாதம் காலமானார்.

(முற்றும்)

No comments:

Post a Comment