Friday, May 13, 2016

தேவதாசி வரலாறு -19

கடவுளின் கடைசி

இரண்டு'மனைவி'கள்'


அருள் சத்தியநாதன்

ந்தியாவிலேயே விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயமாகும். இந்தக் கோவிலில் மட்டும் குறிப்பிட்ட சில பூஜைகளை பெண்கள்தான் செய்ய வேண்டும். பூரி ஜெகந்நாதருக்கு செய்யப்படும் 36 வகை பூஜைகளில் பெண்கள் பங்கேற்காமல் அந்த பூஜைகளைச் செய்யக்கூடாது என்பது மன்னர் காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஏனெனில் அவர்கள் கடவுளின் மனைவிகள். விசேஷ நாட்களில் இரவு நேரத்தில் கடவுள் உறங்கப் போகும்போது நடனமாடி பாட்டுப் பாடுவதும் தேவதாசிகளின் முக்கிய பணியாகும். திருமணமாகாத கன்னிப் பெண்கள்தான் இதைச் செய்ய வேண்டுமென்பதால் மன்னர்கள் காலத்தில் இந்த தேவதாசி முறை தோன்றியது. கடவுளுக்குச் சேவை செய்வதை பெரும் பாக்கியமாகக் கருதியவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை இங்கு கொண்டுவந்துவிட்டனர்.

இந்தியாவின் பிற பகுதிகளில் தேவதாசிகளைப் பற்றி தவறான எண்ணம் இருந்தாலும் பூரியைப் பொறுத்தவரை அவர்கள் கடவுளின் மனைவிகள். அவர்களுக்கு என தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. திருமணமான பெண்கள், இவர்கள் நிரந்தரமான சுமங்கலிகள் என்பதால் இவர்களிடம் வந்து ஆசி வாங்குவதுண்டு. விழாக் காலங்களிலும் தினசரி பூஜையின்போதும், பூரி ரத யாத்திரையின்போதும், பதினான்கு ஆண்டுகளுக்கொருமுறை மரத்தினால் வடிவமைக்கப்பட்ட கடவுள் சிலைகளை மாற்றி புதிய சிலைகள் அமைக்கும் போதும், இவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி ஆடி மகிழ்விப்பதுண்டு. கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்திற்குப் பின் நடக்கும் நந்தா உற்சவத்தின்போது, தன் வளர்ப்பு பெற்றோர்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருவதாக ஓர் ஐதீகம். அந்த சமயத்தில் தேவதாசிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அரச குடும்பத்தினரின் மேற்பார்வையில் கோவில் நிர்வாகம் இருந்தவரை தேவதாசிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவந்தனர். பின்னர் படிப்படியாக கடவுளை மணக்கும் பெண்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
பராஸ்மணி தேவி

தகவல் அறியும் உரிமைப்படி நூறாண்டுகளுக்கு முன்பு பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் 25 தேவதாசிகள் இருந்ததாகவும், 1956 ஆம் ஆண்டு ஒடிசா கெஸட் பதிவின்படி ஒன்பது பேராகவும், 1980 ஆம் ஆண்டில் ஹரிப்ரியா, கோகிலா பிரவா, பராஸ்மணி, சஷிமணி ஆகிய நால்வர் மட்டுமே இருப்பதாகவும் தெரிய வந்தது. அவர்களில் சஷிமணி தேவி (89) பராஸ்மணி தேவி (78) ஆகிய இருவர் மட்டுமே 2012ம் ஆண்டில் உயிரோடிருந்தனர்.

பூரி ஜெகந்நாதர் இன்றும் எங்களுடன் வாழ்ந்து வருகிறார் என்று கூறும் இவர்கள் இருவரும் கடவுளின் கடைசி மனைவியாக கருதப்படுகின்றனர். இவர்களில் சஷிமணி தேவி, தன் பெற்றோர்கள் முகமே மறந்துவிட்டது என்கிறார்.

"எனக்கு மூன்று வயதாகும்போது பெற்றோர்கள் என்னை தேவதாசி லாவண்யா தேவியிடம் ஒப்படைத்ததாகக் கேள்விப்பட்டேன். அவரது கண்காணிப்பில் பயிற்சி பெற்றேன். நாம் பூரி ஜெகந்நாதருக்காகவே பிறந்தவர் என்று கூறி எட்டு வயதில் என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு 'சாரி பந்தா' என்று பெயர். சிறுவயதிலிருந்தே கோவில் பணிகளில் ஈடுபட்டு வந்தேன். ஒருமுறை என் கனவில் வந்த ஜெகந்நாதர், 'நம்முடைய உறவு மற்ற திருமணங்களைப் போன்றதல்ல. நாம் இருவரும் அழிவற்ற அன்பால் இணைக்கப்பட்டிருக்கிறோம்…' என்று சொன்னது இன்னமும் என் நினைவில் உள்ளது…" என்கிறார்.
சஷிமணி தேவி

சஷிமணி தேவியைவிட பதினொன்று வயது இளையவரான பராஸ்மணி தேவி, "இந்தக் கோவிலுக்கு வந்தது பற்றி எதுவும் என் நினைவில் இல்லை. கண்விழித்துப் பார்த்தபோது என் வளர்ப்பு தாய் தேவதாசி குந்தாமணி தேவியின் மடியில் இருப்பதை உணர்ந்தேன். அவர்தான் என்னை வளர்த்து 'தேவதாசி' பயிற்சியளித்தார். அப்பா, சகோதரன் போல் இங்கு ஏன் ஆண்களே இல்லை என்று என் வளர்ப்பு தாயிடம் கேட்டேன். இங்கு அனைவருமே கடவுள்தான் என்றார். அப்பொழுது அதன் பொருள் எனக்குப் புரியவில்லை. பின்னர் அனைத்தையும் புரிந்து கொண்டேன். ஏழு வயதில் கடவுளை என் இதயத்தில் ஏற்றுக்கொண்டபின் எந்தவொரு காரணத்திற்காகவும் வேறொருவரை நான் மனதாலும் நினைத்ததில்லை…" என்கிறார்.

இந்த இருவரில் சஷிமணி தேவியின் வாழ்க்கை, அவரது வளர்ப்பு மகன் சோமநாத் பூஜா பண்டா வீட்டில் ஓர் அறைக்குள் அடைந்து கிடக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மாடு முட்டியதால் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவிலுக்குச் செல்ல முடியாததால், கோவில் நிர்வாகம் இவருக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் 300 ரூபாய் வழங்கிவருகிறது. பிரசாதம் வழங்குவதில்லை.

பராஸ்மணியின் நிலைமை ஓரளவு பரவாயில்லை. பூரி அருகாமையிலேயே பசிலி சஹியில் ஒரு சிறிய அறையில் வசித்து வரும் இவருக்கு மாநில அரசு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு ஆயிரத்து 500 ரூபாவும் வழங்குகிறது. இந்த ஓய்வூதியம் ஆறுமாதத்திற்கு ஒருமுறையோ அல்லது ஓராண்டுக்கு ஒரு முறையோ கூட வருவதுண்டு. 700 ரூபாய் வாடகையில் குடியிருக்கும் இவர் கடன் வாங்கி வாடகையைக் கொடுத்துவிட்டு ஓய்வூதியம் வந்தவுடன் கடன்களை அடைக்கவே சரியாக இருக்கிறது… என்கிறார் இவர். கோவிலை விட்டு இரண்டு கி.மீ. தொலைவில் வசிப்பதால் சில நாட்களில் பிரசாதம் வாங்கிச் செல்ல முடிவதில்லை. அன்றைய தினம் பட்டினிதான் என்கிறார்.

இடையில் மீண்டும் தேவதாசிகளைத் தேர்வு செய்ய கோவில் நிர்வாகம் அறிவித்தபோது தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பவே அந்த யோசனை கைவிடப்பட்டது. 1955 ஆம் ஆண்டு முதல் இந்த தேவதாசிமுறை மறைந்தது. அந்த வரிசையில் கடைசியாக உள்ள இந்த இரு கடவுளின் மனைவிகளும் உயிருள்ளவரை கடவுளுக்கு சேவை செய்யவே விரும்புகின்றனர்.

முடிவுரை 


தேவதாசியர் குலம் என்றொரு சமூகப் பிரிவினர் தென்னிந்திய சமூகத்தின் அங்கமாக இருந்தனர் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். சுப்பு லட்சுமி ரெட்டி கொண்டுவந்த சட்டத்தின் மூலம் தேவதாசியர் முறை ஒழித்துக்கட்டப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வகுப்பைச் சேர்ந்த பெண்கள் திருமணம் செய்யாமல் கடவுளுக்குத் திருமணம் செய்விக்கப்படுவதாகச் சொல்லி விலை மாதர்களாக்கும் ஒரு ஆணாதிக்கத் திமிருக்கு இவ்வகையில் முடிவு கட்டப்பட்டது. முன்னர், கணவனை இழந்த பெண்கள் தீக்குளித்து மடிய வேண்டும் என்றிருந்த சதிமுறை ராம்மோகன் ராய் என்பவரின் தீவிர முயற்சியால் இந்தியாவெங்கும் சதி தடை செய்யப்பட்டது. பின்னர் பால்ய வயது திருமணத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் பின்னரேயே தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

தேவதாசி முறைதான் ஒழிக்கப்பட்டதே தவிர பாலியல் தொழில் ஒழிக்கப்படவில்லை. இப்போது யார் வேண்டுமானாலும் பாலியல் தொழிலாளியாகலாம். அது வேறு விஷயம். குறித்த சமூகத்தினர்தான் அதைச் செய்ய வேண்டும் என்ற நிலையே நீக்கப்பட்டிருக்கிறது. விதவையர் மறுமணமும் தொடர்ந்தும் ஊக்குவிக்கப்படும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு கணவனை இழந்த பெண் விரும்பினால் இன்னொரு ஆணைத் திருமணம் செய்ய சமூக ரீதியான சுதந்திரம் இருக்க வேண்டும். மறுமணத்துக்கு சட்ட ரீதியான தடை இல்லை என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் அதை கௌரவமாகப் பார்க்கும் நிலை மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது. 2009 உள்நாட்டு போரின் முடிவில் பல்லாயிரக் கணக்கான இளம் பெண்கள் கணவர்மாரை இழந்தனர். இக்கைம்பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது அவர்கள் சுயமாக வருமானம் தேடுவதற்கும் அடிப்படை வாழ்வாதாரங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டனவே தவிர, விரும்பினால் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள எவருமே உதவ முன்வரவில்லை. தமிழ்ச் சமூகம் இன்றைக்கும் பிற்போக்கு ஆணாதிக்க சிந்தனைகளில் இருந்து வெளிவருவதற்குத் தயாரில்லை என்பதையே இது காட்டுகிறது.

தேவதாசியர் சமூகம் பற்றி இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல நூல்களும் வெளிவந்துள்ளன. இலங்கையிலும் தேவதாசியர் கோவில் சேவகம் செய்து வந்துள்ளனர். அதுபற்றி எந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. மு. நித்தியானந்தன் மட்டுமே தனது கூலித்தமிழ் என்ற நூலில், இழிவுபடுத்தப்பட்ட இக்குலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இலக்கிய வெளிப்பாடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இத்தொடர் கட்டுரையை எழுத உதவிய நூல்களையும் சஞ்சிகை கட்டுரைகளையும் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

1.    கூலித் தமிழ் - மு. நித்தியானந்தன் - க்ரியா பிரசுரம்
2.    தமிழகத்தில் தேவரடியார் மரபு – பன்முக நோக்கு – முனைவர் நர்மதா – போதிவனம்
3.    வரலாற்றில் தேவதாசிகள் - சி. எஸ். முருகேசன் - குறிஞ்சி வெளியீடு
4.    தேவதாசியும் மகானும் - வெங்கட் கிருஷ்ணன் ஸ்ரீராம் - காலச்சுவடு பதிப்பகம்
5.    தினமணிக்கதிரில் வெளியான கட்டுரை
6.    இந்தியா டுடேயில் வெளியான கட்டுரைகள்
7.    தந்தை பெரியாரின் உரைகள்
8.    சுப்புலட்சுமி ரெட்டி தொடர்பான பல கட்டுரைகள் மற்றும் இணைய பக்கங்கள்
9.    தேவதாசி தொடர்பான இணைய பக்கங்கள்

No comments:

Post a Comment