Thursday, April 28, 2016

புரட்டப்படாத பக்கங்கள்

ஐந்து லாம்பு சந்தியில் மிக்ஸி கிரைண்டர் திருத்துனராக இருக்கும் நிஸ்தாரை உங்களுக்கு தெரிந்திருக்குமே!

மணி  ஸ்ரீகாந்தன்

ந்தக் கால சமையல் கட்டுகளில் முக்கியமாக இடம்பிடிக்கும் அம்மிக்கல், ஆட்டுக்கல், திரிகைக்கல், உரல், உலக்கை உள்ளிட்ட பொருட்களை இன்று அருங்காட்சியகங்களில்தான் பார்க்கக்கூடியதாகவுள்ளது. அப்படியே அம்மிக்கல் சில வீடுகளில் இருந்தாலும் அது பாவிக்கப்படாத நிலையில் எங்காவது மூலையில், நாய், பூனை உறங்கும் கல்லாகவே பயன்பாட்டில் உள்ளது. அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை, திரிகைக்கல் இருந்த இடங்களில் ஒரு மிக்ஸி கிரைன்டரை வைத்து அனைத்து வேலையையும் சுலபமாகவும் விரைவாக நமது பெண்கள் செய்து முடித்து விடுகிறார்கள். அடுப்புக்கு விறகு வைத்து அடுப்பூதும் பெண்கள் மிகக் குறைவு. கிராமங்களில்தான் பார்க்கலாம். பட்டனை தட்டினால் அடுப்பு எரிகிறது. கரண்டும், கேசும் இன்றைய நவீன பெண்களின் துணைவியர். அந்தக் காலத்தில் கிராமங்கள், தோட்டங்களில் வழியாக பெரிய தலைப்பாகையோடு உளியையும், சுத்தியலையும் கையில் வைத்துக் கொண்டு அம்மி, ஆட்டுக்கல் கொத்தித்தர வரும் ஆசாமிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று அப்படியானவர்களை எங்கேயும் பார்க்க முடியாது. அந்த யுகம் முடிந்து, இன்று மிக்ஸி கிரைண்டர், கேஸ் அடுப்பு திருத்துனர்கள்தான் தெருவுக்குத் தெரு வந்துவிட்டார்கள். 'மிக்ஸிக்கு ஒரு ஆணியைப் பொருத்தித் தருவதற்கு ஆயிரம், ஐநூறு என்று பிடுங்குகிறார்கள்' என்பதே இன்றைய குடும்பப் பெண்களின் புலம்பலாக இருக்கிறது. ஆனால் இந்தப் புலம்பலுக்கெல்லாம் ரொம்பவும் நேர்மாறாக இருக்கிறார் ஏ.கே.எம்.நிஸ்தார். இவர் கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் உள்ள பழைய டவுன் ஹோல் வாசலில் மிக்ஸி, கேஸ் அடுப்பு திருத்துனராக இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறார்.
"ரோட்டோர வியாபாரிகளில், நல்லவனும் இருக்கிறான் கெட்டவனும் இருக்கிறான். நாம் ஜாக்கிரதையாக இருந்தால் சரி. மிக்ஸியில் ஒரு ஆணி கழண்டிருந்தால், அதைத் திருத்தித் தருவதற்குப் பதிலாக அதைச் செய்யனும், இதைச் செய்யனும் என்று ஆயிரம் காரணம் சொல்லி வரும் வாடிக்கையாளரை ஒரே அமுக்கா அமுக்கி காசு பிடுங்கிறதுலதான் நிறையப் பேர் குறியா இருக்கிறாங்க. ஆனால் அது நல்லதில்லை. நம்மை அந்த ஆண்டவன் பார்த்திட்டுதான் இருக்கான். அதனால் தொழிலில் நேர்மையா இருக்கணும், அப்படி வர்ர உழைப்புதான் நிலைக்கும்" என்று  தனது தொழில் பக்தியைச் சொல்லி நெஞ்சு நிமிர்த்துகிறார் நிஸ்தார்.

வாழைத் தோட்டத்திலிருந்து காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் தன் ஆட்டோவில் கிளம்பி வந்துவிடும் இவர், மாலை அறு மணிக்கு ஆட்டோவில் இயங்கும் மினி கடையை மூடிவிட்டு வீட்டுக்குக் கிளம்பி விடுகிறார். கேஸ் அடுப்பு, மிக்ஸி கிரைண்டருக்கான அனைத்து உதிரிப்பாகங்களையும் ஆட்டோவிலே வைத்திருக்கிறார்.

"கம்பனிக்காரன் முடியாது என்று சொல்லும் வேலைகளையெல்லாம் நான் முடிச்சுக் கொடுத்திடுவேன். சைனாவுக்கு, இந்தியாவையும், ஜப்பானுக்கு சைனாவையும் மாத்திப்போட்டு மிக்ஸியை திருத்துகிற டெக்னிக் எல்லாம் எனக்குத் தெரியும்" என்று நம்மை மிரள வைத்தவரிடம், இந்தத் தொழிலை எங்க படிச்சீங்க? என்று கேட்டோம்.

குவைத்தில் ஐந்து வருசமா டிரைவரா இருந்தேன். பிறகு கொஞ்ச நாளிலேயே மார்க்கட்டுக்குப் பொருட்களைப் போடும் வேலையைச் செய்தேன். அப்போது எனக்கு இரண்டு மணிநேரம்தான் வேலை. பின்னர் எனது கம்பனியில் கேஸ் அடுப்பு பிக்ஸ் பண்ணுற பட்டறைக்கு போய்ப் பார்ப்பேன். அங்கே பிலிப்பைன்காரர்கள் வேலை செய்வாங்க. அதைப்பார்த்துப் பார்த்து படிப்படியாக வித்தையைப் படித்துக் கொண்டேன். ஆனால் கிரைண்டர் மிக்சி போன்ற அரவை மெஷின்களை நானே கழற்றிப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அப்புறம் என் கண்கள் இருக்கே சரியாக கேமரா மாதிரி! பார்த்த விசயத்தை அப்படியே படமாக பதிவு செய்து என் மூலைக்கு அனுப்பிடும்" என்றவரிடம் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டோம்.
"நான் சுத்தமா படிக்கவில்லை. ஆனா எனக்கு பெங்காலி, அரபி, இந்தி, மலையாளம், பிலிப்பின் என்று ஐந்து மொழிகள் தெரியும். தமிழையும், சிங்களத்தையும் சேர்த்தா ஏழு மொழிகள். எழுதப் படிக்கத்தான் தெரியாது. ஆனாலும் கடவுள் எனக்கு நுட்பமான அறிவைத் தந்திருக்கிறார்" என்று நிஸ்தார் பெருமிதத்தோடு முடிக்க 'இந்த வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?' என்று கேட்டோம்.

"ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் தொழிலுக்கு நானே முதலாளி, நானே தொழிலாளி. யாருக்கிட்டேயும் கைகட்டி வேலை செய்ய வேண்டியதில்லை. பிரியாணி சாப்பிடாமல் காய்கறி உணவு சாப்பிடுவதால் கிடைக்கிற வருமானம் போதுமானதாக இருக்கிறது. அதோட இறைவன் எனக்கு நல்ல மனிதர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அப்படி அறிமுகமானவர்களில் மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் அஜந்த லியனகேயை என்னால் மறக்க முடியாது. எத்தனையோ விடயங்களில் அவர் எனக்குப் பெரிய பலமாக இருந்திருக்கிறார். என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியோடு இருப்பேன். அதோட, நான் நினைத்ததெல்லாம் நடந்திருக்கிறது. உம்ராவுக்கும் போய் வந்துவிட்டேன். இனி அடுத்து ஹஜ் பயணம்தான். அதையும் கடவுள் வெற்றியாக முடித்துக் கொடுப்பார். சின்ன வயசுல ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தவன். இப்போ மூன்றுவேளை சாப்பிடுகிறேன். இது போதாதா? என்று நிஸ்தார் நெகிழ்ச்சியோடு பதிலளிக்கிறார்.

நிஸ்தாருக்கு நாலு பிள்ளைகள். இருவர் திருமணம் முடித்துவிட மற்றவர்கள் வீட்டில் இருக்கிறார்களாம்.

"என் மனைவி ஒரு இருதய நோயாளி. நானும் இருதய நோயாளிதான். என்ன செய்ய, மருந்து தயவில் வாழ்கிறோம். எனக்குப் பிறகு என் மகன்கள் இந்த தொழிலை செய்வாங்களான்னு தெரியவில்லை. ஆனா அவங்களும் வித்தையைக் கற்றுக்கொண்டு வாராங்க" என்றவர்.
"அடுப்புகளில் நிறைய ஐட்டம் இப்போது வருதுங்க. 'சன்யோ, கோல்ட் ஸ்டார், ரினோ, சிங்கர், சோனி, கொசுமா, டெலிசோனிக், ரிக்கோன், சுண்டா, பிஜன், கிச்சன் குயீன்'னு நிறைய வருது… இதில் ரினையின் அடுப்பு செய்றதுக்கு மட்டும் கொஞ்சம் டைம் எடுக்கும். மத்தப்படி எல்லாம் நமக்குப் பெரிய விசயமே இல்லை. மூணு ஹவர்ல ஒரு அடுப்ப முழுசா சேர்விஸ் செய்து முடிச்சிடலாம். அப்படி நான் செய்து கொடுத்த அடுப்பில் ஏதாவது பழுதாகி சரியா வேலை செய்யாவிட்டால் அதுக்கு காசு வாங்க மாட்டேன். நமக்கு காசு மேல பெரிய ஆசை இல்லை. செய்கிற வேலைக்கு சரியான கூலி கிடைச்சா போதும். ஆனால் சிலர் 'கையில ஐநூறு மட்டும்தான் இருக்கு நீங்க சொல்லுற கணக்கை கொடுத்தா எனக்கு பஸ்சுக்கு பணம் இல்லாம போயிடும். அதனால இப்போ நானூறு வாங்கிக்கங்க அடுத்த வாரம் கொழும்பு வரும்போது உங்களுக்கு மிச்சத்தை தாறேன்'னு  சொன்னா அவங்க உண்மையிலேயே ரொம்ப தூரத்தில் இருந்து வந்தவங்களா இருந்தா மறுப்பேதும் சொல்லாம வாங்கிடுவேன்" நிஸ்தார் பெருந்தன்மையாக சொன்னார்.

'அப்படி வாங்குறவங்க அடுத்த வாரம் திருப்பித் தராம ஏமாற்றிவிட்டால்..' என்று நிஸ்தாருக்கு கொக்கி போட்டதற்கு அவர்,

"அந்தப் பணம் திரும்பி வந்தா எனக்கு வரவுக் கணக்கு அப்படி வரலைன்னா அது எனக்கு புண்ணியக் கணக்கு. எப்படிப் பார்த்தாலும் எனக்கு நஷ்டமில்லயே" என்று வெள்ளந்தியாக சிரிக்கிறார் நிஸ்தார்.

No comments:

Post a Comment