Sunday, April 24, 2016

"எனக்கு ஒரு வீடு வேண்டும்"

மணி ஸ்ரீகாந்தன்

'அறுபதுகளில் நாடறிந்த நாடக, திரைப்பட நடிகையாகத் திகழ்ந்த ஜெயகௌரி இன்று வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார். வெகு சிலரே அவருக்கு உதவி வருகிறார்கள். யாரேனும் கருணை உள்ளத்துடன் முயற்சி செய்து அவருக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தால் புண்ணியமாக இருக்கும். அவர் தன் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். இதைப் படிக்கும் நாமும் அவரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம். இந்நேர்காணல் அவருடைய வறுமையை போக்கி ஒரு வீட்டையும் தருமானால் சந்தோஷப்படுவோம்'

லங்கை தமிழ் நாடக, சினிமா வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் பெயர் ஜெயகௌரி. இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமான 'சமுதாயம்' படத்தின் நாயகியாகவும் அந்தக்கால இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்த ஜெய கௌரியை அவ்வளவு எளிதில் மறக்கத்தான் முடியுமா?

கலைத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு ரவுண்ட் வந்த இவர் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடிகையாக ஜொலித்திருக்கிறார். இவரின் கலைச்சேவையை பாராட்டி இலங்கை அரசு 'நாடக கீர்த்தி' விருதையும் வழங்கி கௌரவித்தது.
அந்தக் காலத்தில் இவர் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக பேசப்பட்டாலும், இன்று ஒளியிழந்து வாழ்க்கையின் வறுமைக்கோட்டில் வாடி நிற்கிறார். ஆண்டிவால் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு அவரை தேடியதில் "யாருங்க கௌரியா? அப்படி யாரும் இங்கே இல்லீங்க, ஓ அவங்க அந்தக் காலத்துல ஒரு நடிகையா இருந்தாங்களா?, ஆனா இப்போ இல்லை, வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டாங்க" போன்ற பதில்களே எமக்கு விடையாகக் கிடைத்தன. ஆனாலும் விடாமல் வலை வீசியதில் ஆண்டிவால் தெருவில் உள்ள ஒரு முட்டுச்சந்து வீட்டில் கௌரியைக் கண்டுபிடித்தோம்.

"என்ன பண்ணுறது, இப்போது இது பதினாறாவது வீடு என்று நினைக்கிறேன். சொந்த வீடு இல்லாததால் இப்படி நாடோடியாகத் திரிகிறேன். இலங்கையின் முதல் தமிழ்ப்பட நாயகின்னு பெயர் மட்டும்தான் இருக்கு, ஆனா என் வாழ்க்கையில் எதுவும் இல்லை. வாழ்க்கையைப் பற்றி நான் பேசினா நான் அழுது விடுவேன்" என்று தழுதழுத்த குரலில் கௌரி சொல்லும் போதே அவர் கண்களில் கண்ணீர்த்துளிகள் கட்டுப்பாட்டை இழந்து வடிந்தன.

குடும்ப வாழ்க்கையில் தோற்றுப்போன ஜெய கௌரிக்கு இன்று ஒரே ஆறுதலும், துணையும் அவரின் தங்கை ப்ரியா ஜெயந்திதான். அந்தக்காலத்தில் ப்ரியா ஜெயந்தியும் நடிகைதான். ஆனாலும் இன்று வாய்ப்புகள் இல்லாததால் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து அக்கா ஜெயகௌரியோடு வாழ்ந்து வருகிறார்.

"என் தங்கச்சியோட உழைப்புலதான் வாழ்க்கைச் சக்கரம் ஓடுகிறது. அவருக்கு மாதச் சம்பளம் வெறும் ஒன்பதாயிரத்து ஐநூறு. அதில வீட்டு வாடகை ஆறாயிரம் போக, கரண்ட் பில், தண்ணீர் பில் போனா மிஞ்சுறது கொஞ்சம்தான். ஆனாலும் எப்படியோ ஒவ்வொரு நாளும் பசியில்லாமல் இருக்கிறோம். 'அன்றன்று உள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்' என்கிற பைபில் வசனத்திற்கு அமைய ஆண்டவர் ஏதோ ஒரு வழியாக எங்கள் பசியைப் போக்க உதவுகிறார்" என்று கௌரி சொல்லும் போதே அவரின் கண்களில் கடவுள் மீதான நம்பிக்கை பிரகாசமாக ஒளிர்வதைக் கண்டேன்.
ஜெயகெளரி,
அக்கா பகீரதி,
மற்றும் ப்ரியா ஜெயந்தி
"கிட்னி நோயால் நான் ரொம்ப கஷ்டப்பட்டு செத்துப் பிழைச்சு வந்திருக்கேன். மருந்து வாங்கக்கூடப் பணம் இல்லை. வீட்டில் இருந்த டீவி, ரேடியோ எல்லாம் வித்துட்டேன். இங்கே உள்ள கலைஞர்கள் யாரும் கண்டுகிறதே இல்லை. நான் இளமையோடு, கலைத்துறையில் இருந்தபோது நான் இப்படி கீழே போவேன் என்று நினைச்சுக்கூடப் பார்க்கலை. எப்போவும் நாம் ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம்னு எண்ணினேன். இப்போது அதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா மனசு கணக்குது. வாழ்க்கையில் நிறைய விசயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். அனுபவம் ஒரு நல்ல புத்தகம். அதை இப்போது நான் முழுசா படிச்சு தெரிஞ்சுக்கிட்டாலும் திரும்பவும் அந்தக் காலத்துக்கு போய் முதலில் இருந்து தொடங்கி தவறுகளை சரி பண்ணத்தான் முடியுமா? எல்லாம் நாமாகத் தேடிக்கிட்டதுதான். நிறையப் பேரு எங்க முன்னேற்றத்திற்கு தடையா கத்திரி வச்சாங்க. அதில ஒரு சத்திராதி இருந்தான். அவன்தான் எங்களை முடக்கினான்" என்று ஆவேசப்பட்டவர் கொஞ்சம் நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.

"கலைத்துறையில் கே. சந்திரசேகரன், ஏகாம்பரம், கலைஞர் கந்தையா உள்ளிட்ட மூன்று பேரையும் நான் ரொம்பவே மதிக்கிறேன். அவங்க ரொம்பவே பெருந்தன்மையான மனிதர்கள். அதோடு லண்டனில் வசிக்கும் நண்பர் சிவாவையும் மறக்க முடியாது. செட்டியார் தெருவில் நகைக் கடை வைத்திருந்த அவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். நான் நெருக்கடியில் இருந்த நேரத்திலெல்லாம் கடவுளாக வந்து எனக்குப் பண உதவி செய்தவர். வீட்டில் டிவி இல்லாததைப் பார்த்து விட்டு உடனே 32 இன்ச் பிளட் ஸ்கிறீன் டிவியை வாங்கி வந்து கொடுத்தார். அப்போது அவரின் மனைவியும், பிள்ளைகளும் உடன் இருந்தார்கள். இப்போது இருக்கிறது அந்த டிவிதான். ரூபாவாஹினி என்னை நேர்காணல் செய்தபோது உடன் இருந்தவர் கே. சந்திரசேகரன். அவரின் ஏற்பாட்டில்தான் அது நடந்தது. அதற்குப் பிறகே அவர்களே என்னை பண்டாரநாயக்க மண்டபத்துக்கு அழைத்துச் சென்று 'நாடக கீர்த்தி' விருதையும், ஐம்பதாயிரம் பணமும் கொடுத்தார்கள்.
பெற்றோருடன் குட்டி கெளரி
இப்படி அதிர்ஷ்டமாகக் கிடைத்த பணமெல்லாம் வீட்டு வாடகைக்கு முன் பணம் கொடுக்கவே சரியாப் போயிட்டது. கடந்த ஆண்டுகளில் பிரபா கணேசனுடன் பேசி சொந்த வீடு வாங்க முயற்சி செய்தேன். ஆனால் கால மாற்றம் காரணமாக அது சாத்தியப்படவில்லை. இப்போது அமைச்சர் மனோ கணேசனுடன் தொலைபேசி வழியாக பேசினேன். ஆனால் இன்றுவரை அவரை என்னால் நேரில் சந்தித்து என் நிலைமையை விளக்க முடியாமல் இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. மனோவை சந்தித்தால் நிச்சயம் எனக்கு ஒரு நல்வழி கிடைக்கும். நான் இறந்த பிறகு என்னோட உடல் சொந்த வீட்டில் வைக்கப்படனும் என்பது எனது ஆசை. இது நிறைவேறுமா என்று தெரியலை" என்று கௌரி கவலை தேய்ந்த முகத்தோடு பெருமூச்சு விடுகிறார்.

கலை வாழ்க்கையில் நான் நிறையப் பேரை ஞாபகத்தில் வைத்திருந்தேன். அவர்களில் வீ.கே.டி. பாலனும் ஒருவர். நானும், என் தங்கச்சியும் அவரைச் சித்தப்பா என்றுதான் கூப்பிடுவோம். அவர் எங்கம்மாவை ரொம்பவே கேலி பண்ணுவாரு. அதனால் சித்தப்பான்னு சொல்லிக் கூப்பிடுவோம். "நான் உங்க ரசிகை. சமுதாயம் படத்தை மானெல் தியேட்டர்ல பார்த்தேன்' என்று சொல்லுவார். அவரோடு 'பேசும் வழிகள்' உள்ளிட்ட சில நாடகங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். நல்ல கலைஞர், ரொம்பவும் பண்பான மனிதர். 'நான் இலங்கைக்கு வந்தால் அங்குள்ள அரச பிரமுகர்களோடு பேசி உனக்கு கட்டாயம் சொந்த வீடு வாங்கிக் கொடுப்பேன்' என்று ஒருமுறை சொன்னார். அதற்கு நான், 'நீங்க எப்போது இங்கே வர்றது, நான் எப்போது சொந்த வீட்டுல குடியேறது' என்று சொல்லி இருக்கேன்" என்று முகம் மலர்ந்தார் ஜெயகௌரி.

மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட இவரின் பூர்வீகம் கேரளா திருவானந்தபுரம். "அப்பா அப்புக்குட்டி, அம்மா கல்யாணி. எனக்கும் தங்கச்சிக்கும் நன்றாகவே மலையாளம் பேச வரும்" என்றவரிடம் "கணவன் குழந்தை குட்டின்னு இருந்தா வாழ்க்கை ரொம்ப நல்லா இருந்திருக்குமே…? என்று ஃபீல் பண்ணுறீங்களா?" என்று கேட்டோம்.

"என்ன பண்ணுறது… என்னுடைய திருமண வாழ்க்கை எனக்கு நல்லா அமையல, அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தா அடுத்தவங்க பாராட்டுற மாதிரி வாழலாம் என்று நினைக்கிறேன்" என்று சொல்லிக் கசந்தார்.

சினிமாவைத் தொடர முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் ஏதாவது இருக்கிறதா?

அதைச் சொல்வதற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கு! ஆனாலும் பரவாயில்லை சொல்றேன்.. என்று தொடர்ந்தார் கௌரி.

"அப்போது நான் யாழ்ப்பாணத்தில் நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் 'குத்துவிளக்கு' படத்தில் எனக்கு ஒரு முக்கிய வேடத்தில் வாய்ப்புத் தருவதாகச் சொல்லி என் வீட்டுக்கு வந்த குத்துவிளக்குப் படத்தோடு சம்பந்தப்பட்ட இருவர் என் பெற்றோரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவர் எங்கள் குடும்ப நண்பர். அதனால் என் பெற்றோரும் சம்மதித்திருக்கிறார்கள். உடனே அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்கள். குத்துவிளக்குப் படத்தின் படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் நடப்பதால் அவர்களுக்கும் அது வசதியாக போய்விட்டது. என்னிடம் விசயத்தைக் கூறியதும் நானும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். பிறகு அவர்கள் என்னை ஒரு வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள். அந்த வீட்டில்தான் படப்பிடிப்பு நடப்பதாகச் சொன்னதால் நான் அங்கே போனேன். அது ரொம்ப பெரிய விசாலமான வீடு. ஆளுயர பெரிய மதில், கேட் என்று பிரமாண்டமாக இருந்தது. உள்ளே என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது. கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஆனால் அங்கே சிங்கள நடிகை சாந்திலேகாவும் அவரின் கணவரும் இருந்ததால் அங்கே தங்குவதற்கு சம்மதித்தேன். அன்றிரவு சாந்திலேகாவும் அவரின் கணவரும் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில்தான் நானும் படுத்திருந்தேன். ஹோலில் மட்டும் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. அறையில் லைட்டை அணைத்துவிட்டு படுத்த சில மணி நேரங்களில் என் உடம்பின் மேலே ஏதோ ஒரு பாரம் விழுந்திருப்பதை உணர்ந்து கண் விழித்துப் பார்த்தேன். அதிர்ந்தேன். ஒருவன் என்மேலே, மற்றவன் என் கால்களை இறுக்கிப் பிடித்திருந்தான். நான் அவர்களை உதறித்தள்ளிவிட்டு எழும்பி அலற… பக்கத்தில் இருந்த சாந்திலேகாவும், அவளின் கணவரும் ஓடி வந்தார்கள். அப்போது, அந்த நபர்கள் அறையில் இருந்து ஓடினார்கள். அவர்கள் குத்துவிளக்கு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர்கள்தான் என்பதை அறிந்து வேதனைப்பட்டேன்.
அடுத்த நாள் காலையிலேயே கொழும்புக்கு வந்து வீட்டில் நடந்த சம்பவத்தைக் கூற 'இனி நீ சினிமாவில் நடிக்க வேண்டாம், ஒரே நாளில் முடிந்து விடுவதால் நாடகத்தில் மட்டும் நடிக்கலாம்' என்று அப்பா சொல்ல, அன்றோடு சினிமா ஆசையை விட்டுட்டேன். இந்தக் கலைத்துறை ரொம்பவும் மோசமானது. நமக்கு நல்ல வேடமும் வாய்ப்பு வேண்டுமென்றால் கலையுலகின் பெரிய மனிதர்களின் ஆசைக்கு இணங்கிப் போக வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தப் பருப்பு நம்மகிட்ட வேகாததால் எனக்கு பெரிய அளவில் பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது. இங்குள்ள கலைஞர்களில் குறிப்பிட்ட சிலரைத்தவிர மற்றவர்கள் ரொம்பவும் மோசமானவங்க. அடுத்தவன வளரவிடாமல் குழிபறிப்பதிலேயே குறியாக இருப்பவர்கள்" என்று நம் நாட்டு கலைஞர்களை தன் தராசில் மதிப்பீடு செய்வரிடம், "அப்போ நீங்களும் அவங்க விருப்பத்திற்கு விட்டுக் கொடுத்திருந்தால் நட்சத்திர முகவரியோடு இருந்திருக்கலாமா…?" என்று கேட்டோம்.

"அட நீங்க வேற! அப்படி அட்ஜஸ் பண்ணிப் போன நடிகைகள் எல்லோருமே அட்ரஸ் இல்லாமலேயே போயிட்டாங்க! நாங்களாவது இன்னும் இருக்கிறோம் போராளிகளாக…" என்ற ஜெயகௌரியின் குரலில் கம்பீரம்.

சொந்த வீடு வாங்கும் கனவோடு யாரையோ சந்திக்கப் போகும் அவசரம் அவரிடம் இருந்ததால்’ அவர் கனவு நனவாக வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.

No comments:

Post a Comment