Thursday, April 14, 2016

வடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த பறையிசைப் பயிற்சி

மணி    ஶ்ரீகாந்தன் 

பறையிசை பயின்ற சிலரிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்தவை இங்கே உங்கள் பார்வைக்காக….

தி தமிழன் கண்டுபிடித்த ஒரு அற்புதமான தொலைத்தொடர்பு சாதனம்தான் பறை. இன்று பாவனையில் உள்ள போன், செல்போன், வாட்சப், வைபர், ஸ்கைப் என்பனவற்றுக்கெல்லாம் முன்னோடி. ஆனால் நாம் அந்த கருவியை கௌரவப்படுத்தாமல், சாதிய ரீதியாக ஒடுக்கி வைத்திருக்கிறோம். தமிழ் வாத்தியக் கருவிகளின் தாயாகத் திகழும் பறை அந்தக் காலத்தில் மருத்துவ ரீதியான ஸ்டெதஸ்கோப்பாகவும் செயல்பட்டிருக்கிறது. மரணம் ஒன்று சம்பவித்து விட்டால் அதை உறுதிப்படுத்தவே பறை இசைத்தார்களாம். பறைக்கு அந்த இறந்த உடல் ஆடவில்லை என்றால் அந்த மரணம் உறுதிசெய்யப்பட்டு விடும்.

'செத்த மாட்டு தோலுரித்து – வீரக்கா
செவிட்டி அடிக்கையிலே – வீரக்கா
சத்தம் கேட்டு எழுந்துக்கல – வீரக்கா
சவக் குழிக்கு ஆளனுப்பு…'


என்று பறை இசைக்கலைஞர் மணிமாறன் தனது மறுவாசிப்பு நூலில் பாடலாக பதிவு செய்திருக்கிறார். இப்படிப் பெருமைப்பட்டு நாம் கொண்டாட வேண்டிய வாத்தியக் கருவி தீண்டத்தகாத வாத்தியமாக மூலையில் முடங்கிக் கிடப்பது வேதனை தந்தாலும், சில பகுத்தறிவுவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மறுவாசிப்பில் ஆர்வம் கொண்டோரினால் சாதி வேலியை உடைத்து பறை முழங்கவும் முடிகிறது என்பது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அண்மையில் நம் நாட்டில் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட மூன்று இடங்களில் பறை இசைப்பயிற்சி முகாமை யாழ். என்டர்டைமன்ட் அமைப்பு வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த புத்தர் கலைக்குழுவினரின் பயிற்சி நெறியில் 'பறை விடுதலைக்கான குரல்' என்கிற ஒரு வெளிநாட்டு அமைப்பினரின் அனுசரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட இசை ஆர்வலர்கள் கலந்து பயிற்சியை நிறைவு செய்திருந்தார்கள். ஒவ்வொரு பயிற்சி முகாமின் இறுதிநாள் நிகழ்விலும் கலை நிகழ்ச்சிகளோடு பயிற்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களை புத்தர் கலைக்குழுவின் தலைவர் மணிமாறன் வழங்கினார். அதோடு பறை இசைக்காக சிறப்பாக களப்பணியாற்றியவர்களுக்கு புத்தர் கலைகுழுவின் 'தொல்லிசை சுடர் - 2016' என்ற விருது வழங்கப்பட்டது.


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் அருட்தந்தை ஜோசுவா, சார்ள்ஸ் சாலினி இசையமைப்பாளர் ப்ரியன், மலையக பறை இசைக்கலைஞர் விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் விருது பெற்றவர்களாவர். பயிற்சியை திறம்பட நடாத்திய யாழ். என்டர்டைமன்ட்  அமைப்பின் இயக்குனர் சார்ள்ஸ் சாலியினிடம் பறை இசை வகுப்புகள் பற்றி வினவினோம்.

"ரொம்பவே சிறப்பாக நடைபெற்றது. அண்ணன் மணிமாறனும் அவரோடு வந்திருந்த சகோதர்களும் மிகவும் சிறப்பான முறையில் பயிற்சி நெறியை வழங்கியிருந்தார்கள். 'தாரை தப்பட்டை' படத்தின் தாக்கம்தான் நீங்கள் பறை இசையை இங்கே செய்வதற்கு காரணம் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால், அது இல்லை காரணம். தாரை தப்பட்டை இப்போதுதான் ரிலீஸானது. எனக்கு பறை இசை பயிற்சி நடாத்த ஐடியா இரண்டு வருசத்திற்கு முன்னரேயே வந்துவிட்டது. மணிமாறனை இரண்டு வருடங்களுக்கு முன்பு யாழில் சந்தித்து பயிற்சி வகுப்புப் பற்றி உரையாடி இருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்தது" என்று சாலினி மனசு நிறைந்த பூரிப்போடு பேசுகிறார்.

யாழ். என்டர்டைமன்ட் என்கிற அமைப்பின் மூலமாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக கலைப்பணிகளையும், சமூக சேவைகளையும் சாலினி சார்ள்ஸ் செய்து வருகிறார். அமைப்பின் நிறைவேற்று இயக்குனராக சாலினியின் கணவர் ப்ரியன் பணியாற்றுகிறார். அவரோடு பாரம்பரிய கலைக்குழுவின் இணைப்பாளராக துஷிதரன், சமூக சேவை இணைப்பாளராக தர்ஷிதன் மார்கண்டு உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள். "எங்கள் அமைப்பின் ஊடாக ஐம்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவைகளை தயாரித்து வெளியிட்டிருக்கிறோம். ஆனாலும் பறை இசை நடனப் பயிற்சி முகாம் நடத்தியதில் ஒரு பேரானந்தம் இருக்கிறது. பறை பயிற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்து பறை பயின்றார்கள். இதில் முக்கியமாக, யாழ்ப்பாணத்தில் இருபதுக்கும் அதிகமானோரும், வவுனியாவில் சிறுவர்கள் பெருவாரியாகவும் பறை பயில வந்திருந்தார்கள். திருகோணமலையில் முப்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். அவர்களில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் கலந்து கொண்டது ஆச்சரியம் அளித்தது. யாழ்ப்பாணத்திலும் பெண்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் வல்வெட்டித்துறையிலிருந்து ஒரு திருநங்கையும் கலந்து கொண்டிருந்தார். திருகோணமலையில் நடைபெற்ற பயிற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜனார்த்தனன் பறை பயில வந்திருந்தது ஒரு முன்மாதிரியாக இருந்தது" என்றவரிடம்,

"சாதியம் தாண்டி எப்படி உங்களால் பறையைத் தொட முடிந்தது?" என்று கேட்டோம்.

"வெளியே போய் வீட்டுக்குள் வந்தாலே கால் கழுவி விட்டு வா என்று சொல்லும் ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவள் நான். ஆனாலும் எனது முயற்சிகளுக்கும், முன்மாதிரிகளுக்கு என் குடும்பத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லை. அவர்களின் ஆதரவு இல்லை என்றால் என்னால் பறை பயிற்சியை யாழில் நடத்தியிருக்க முடியுமா? ஆனாலும், போனிலும், முகநூலிலும் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டேன். "சாவுக்கு இசைக்கும் பறையை பழகலாமா…" என்று நிறைய பேர் ஏளனமாகத்தான் கேட்டார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி நாங்கள் ஜெயித்திருக்கிறோம்.

முதல் பயிற்சியை ஓ. எல். ஆர் ஆலயத்தில் நடத்தினோம். ஆனால் முதல் நாளே எமக்குப் பிரச்சினை வந்துவிட்டது. ஆலய சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பால் இடத்தை உடனே காலி செய்யும்படி 'பாதர்' வேண்டுகோள் விடுக்க இடத்தைக் காலி செய்தோம். அதன் பிறகு நாவாந்துறை மைதானத்திலும் சனசமூக நிலையத்திலும் நல்லபடியாக நடத்தினோம்" என்றவரிடம் சர்ச் சுற்றுவட்டாரத்தில் குடியிருந்தவர்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டது என்றால், அவர்கள் ஆதிக்க சாதியினரா என்றதும் "இருக்கலாம்" என்று பதில் சொன்ன சாலினி "நிறைய பேர் தங்களை தமிழ் பாரம்பரிய காப்பாளர்களாகக் காட்டிக் கொள்வதோடு, பாரம்பரிய விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் பேச்சளவிலேயே சொல்வார்கள். அதோடு அவர்களின் கதை முடிந்துவிடும். ஆனால் பறை இசைக்கவோ, அதைத் தொட்டுப் பார்க்கவோ கூட யாரும் தயாராக இல்லை. இந்தப் பறை முகாம் நிறையப்பேரின் முகத்திரையை கிழிக்கவும் செய்தது" என்று முடித்தார்.
ஜனார்த்தனன்

திருகோணமலை மாகாணசபை உறுப்பினர் ஜனார்த்தனனிடம் பறையிசைப் பயிற்சி பற்றி  பேசிப் பார்த்தோம்.

இதைக் கேட்டு ரொம்பவே உற்சாகமான அவர், "பறை இசைப்பது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால் வேலைப்பளு காரணமாக ஒருநாள் மட்டுமே பயிற்சியில் கலந்துகொள்ள முடிந்தது. இந்தியத் திரைப்படங்களிலும் பறை ஒரு சாதிக்கான வாத்தியக் கருவி என்ற ரீதியிலேயே நோக்கப்படுகிறது. ஆனால் திருகோணமலையைப் பொறுத்தவரையில் சாதி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் இங்கே சாதி பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. அதனால் பறை இசைப்பதை யாரும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. ஆனால் இவர்களுக்கு ஒரு முகப்பறை என்பது புதுசு. இங்கே விழாக் காலங்களில் இரு முகப்பறைதான் வாசிப்பார்கள். அதனால் நாம் ஏன் புதியதை இங்கே அறிமுகம் செய்யணும் பழையதை இசைக்கலாமே என்று கருத்துச் சொன்னார்கள். நான் பறை இசைப்பதை பார்த்த நிறையப்பேர் 'அட ஜனா அண்ணனே பறை அடிக்கும் போது நாமளும் அடிக்கலாமே' என்றது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது" என்றார்.
கல்யாணி

மட்டக்களப்பு சூரியா பெண்கள் நிலையத்தில் நிகழ்ச்சித் திட்ட உதவியாளராக பணியாற்றும் கல்யாணி சுந்தரலிங்கம் திருகோணமலையில் நடந்த பயிற்சியில் பங்கேற்றவர். அவர் தமது அனுபவம் பற்றி எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"கலைகளின் ஊடாக மக்கள் மத்தியில், முக்கியமாக பெண்கள் சிறுவர்களுக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அமைப்பில் ஒரு திட்டமாக உள்ளது. எனவே எமக்கு இசைக்கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இசை பொதுவானது. எனவே அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஒன்றுமில்லை. இணையத்தில் வெளியான விளம்பரத்தைப் பார்த்துத்தான் சாலினி அக்காவோடு பேசி இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டேன். என்னோடு மட்டக்களப்பிலிருந்து விவேகா, பிரேமானந்தி ஆகியோரும் பறை பயின்றனர்.

தாய், தந்தை, குரு, பறை என்று மணிமாறன் சேர் கற்பித்த முறை சிறப்பானதாகவும், புது மாதிரியாகவும் இருந்தது. கற்பிக்கும் நமது ஆசான் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்க நாம் கீழே இருந்து படிப்பது தானே வழமை! ஆனால் மணிமாறன் சேர் எங்களோடு ஒரு மாணவனாக அமர்ந்து படிப்பித்தது மகிழ்ச்சியான அனுபவம். அந்த மூன்று நாள் பயிற்சியை என்னால் மறக்கவே முடியாது. பயிற்சி நிறைவில் மணிமாறன் சேரிடம் ஒரு பறையையும் கேட்டு வாங்கிக் கொண்டேன். ஏனென்றால் தொடர்ந்து இதைப் பயின்று பறை இசைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போ என்னோடு பத்து பெண்கள் பறை பயின்று வருகிறார்கள்" என்று ரொம்பவே கலகலப்பாக கல்யாணி பேசி முடித்தார். அடுத்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருநங்கையான ஈழ நிலாவோடு பேசினோம்.
ஈழநிழா

"எனக்கு சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை. எனக்கு சாதியம் தெரியாது. தமிழர்கள் அனைவரையும் தமிழர்களாகவே பார்க்கிறேன். ஐந்நிலங்களின் ஒன்றான குறிஞ்சியில் (சேயோன்) முருகன் கடவுளாக இருக்கிறார். அதோடு அந்த நிலத்தின் முக்கிய சிறப்பாக பறை விளங்குகிறது. அதனை வெறியாட்டுப் பறை, தொண்டகப்பறை என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் படித்திருக்கிறேன். அதிலிருந்து எனக்கு அந்தப் பறையை இசைக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் சாலினி என்னோடு தொடர்பு கொண்டு பறை பயிற்சி பற்றிக் கூறிய போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அந்தப் பறையைத் தொட்டு வாசிக்க கிடைத்ததை ஒரு வரமாகக் கருதுகிறேன். எனக்கு அந்த இசையைக் கற்றதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைத்தது" என்று நெகிழ்ந்து போகிறார் ஈழநிலா.
பிரணவ ஜோதி

திருகோணமலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் பிரணவஜோதி திருகோணமலையில் நடைபெற்ற பறை இசை நடனப் பயிற்சி முகாமில் பங்கு பற்றியவர்.

"நமது பாரம்பரிய இசையை பயில்வதில் நமக்கு எந்த ஏற்றத்தாழ்வும் இருக்கக் கூடாது. பறை சாதியத்துக்குள் ஒடுக்கப்பட்டிருக்கிறது. அதை இப்படியான பயிற்சி பட்டறைகளின் மூலமாகத்தான் வெளியே கொண்டுவர வேண்டும். திருகோணமலையில் இருமுகப் பறை நவராத்திரி தினங்களில் ஆகம விதிகளுக்குள் வராத ஆலயங்களில் தொடர்ச்சியாக ஒன்பது நாட்களும் இசைக்கப்படுகிறது. எனவே பறை மீதான பார்வை திருகோணமலையைப் பொறுத்த வரை அது சாதாரணம்தான். இந்தப் பகுதியில் சாதியம் என்பது இல்லை. எல்லோரும் ஒன்றாகவே வாழ்கிறோம், ஆனால் புலம்பெயர் நாடுகளில் வாழும் என் உறவினர்கள், நான் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்த பறை அடிக்கும் படங்களைப் பார்த்துவிட்டு 'நீ என்ன பறையனாக மாறி விட்டாயா? இதைப் படிச்சு செத்த வீட்டுக்கு வாசிக்கப் போறீயா?' என்று இழிவாக விமர்சனம் செய்தார்கள்.

நான் நமது தாய்கருவியின் மகிமை பற்றி அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். பறையை நான் கலையாகக் கற்றேனே தவிர தொழிலாகக் கற்றுக்கொள்ளவில்லை. இன உணர்வாளர்கள் அனைவரும் பறையைக் கற்றுக்கொள்வதில் தப்பில்லை" என்று பறை பயின்றதை பெருமையாக நினைத்து பெருமிதம் கொள்கிறார் இவர். திருகோணமலையில் நடந்த பறை இசைப் பயிற்சியின் நிறைவு நாளன்று பறை இசையோடு பரதத்தையும் அரங்கேற்றி புதுமை படைத்திருந்தார்களாம். மணிமாறனின் பாடல் வரிகளுக்கு, அவரே பறை இசைக்க சிவதர்ஷனி மனோஜ்குமாரின் நட்டுவாங்கம் அமைந்திருந்தது. இந்தப் பரதம் - பறை நிகழ்வு சபையோரின் அமோக வரவேற்பைப் பெற்றிருந்ததாம். பறையும், பரதமும் ஒரே மேடையில் இணைந்தது இலங்கையைப் பொறுத்தவரையில் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

(பறை  தொடர்ந்து  அதிரும்...)

No comments:

Post a Comment