Saturday, April 30, 2016

சினிமானந்தா பதில்கள் -34


வடிவேலு எங்கே 'எலி'க்குப் பிறகு ஆளையே காணோமே?
பிரசாந்த், தெஹிவளை

'எலி' சரியாகப் போகாததால் கொஞ்சம் மன வருத்தமே தவிர வடிவேலு நலமாகத்தான் இருக்கிறார். சின்னத் திரையில் பாருங்கள் வடிவேலுவும் கவுண்டரும் ஒவ்வொரு செனலிலும் சிரிப்பூட்டிக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார். குடும்பத் தொல்லையில்லை. நேரத்துக்கு உணவும் ஓய்வும் கிடைப்பதால் தொப்பை போட்டுவிட்டது. இடையில் கிடைத்த ஒரு நல்ல செய்தி மீண்டும் காமெடியனாக நடிக்க (கதாநாயகனாக அல்ல) சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பதாகும்.
ராகவா லோரன்ஸின் அடுத்த படத்தில் லோரன்ஸின் டைரக்சனில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கிறார் வடிவேலு.

தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். வாயால் கெட்ட இன்னொரு அப்புராணி வடிவேலு. வீட்டை விட்டு வெளியே வந்தால் டப்பிங் பேசுவதற்குத் தவிர வேறு எதற்கும் வாயைத் திறக்கக் கூடாது என்று வடிவேலுக்கு யாராவது சொல்லி வைத்தால் நல்லது. ஏனெனில் அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் சட்டசபைத் தேர்தல் வரப்போகிறதே அதனால்தான். 

பாகுபலி 2ல் பிரபாஸ் நடிக்கவில்லை என்று கூறுகிறார்களே? உண்மையா?
எஸ். சாரு தொல்புரம்

பாகுபலியின் வெற்றிக்கு பெரிதும் காரணமான பிரபாஸை அவ்வளவு எளிதில் ராஜ் மௌலி விட்டுக்கொடுப்பாரா? பாகுபலி 2 இல் பிரபாஸ் நிச்சயம் நடிப்பார்.

பாகுபலி ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அதன் பிரமிப்பும் பிரமாண்டமும் தொடருமானால் பாகுபலி 3, பாகுபலி 4 ஏன் 5 வரை கூடச் செல்லலாம். ஆனால் அதற்கு பல வருடங்கள் செல்லும்.

கீர்த்தி சுரேஷ் அதற்குள் விஜயுடன் ஜோடி சேர்ந்து விட்டாரே?
ஆறுமுகம், தெஹிவளை

பழைய நடிகை மேனகாவின் மகள்தான் இந்த கீர்த்தி. இவரை திரைப்படத் துறைக்குள் கொண்டுவர மேனகா நீண்டகாலம் திட்டமிட்டு வந்தார். ரஜினி முருகனில் சிவாவுக்கு ஜோடி சேர முடிந்தது இவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. மலருடன் சேர்ந்து நாரும் மணம் பெறுவது போல சிவாவுடன் சேர்ந்ததில் கீர்த்தியும் பெருமை பெற்றார்.


உண்மை என்னவென்றால் ரஜினி முருகனில் கீர்த்திக்குப் பதில் ஸ்ரீதிவ்யாவோ, ரெஜினாவோ, சுரபியோ யார் நடித்திருந்தாலும் ரஜினி முருகன் சிவாவினால் ஓடியிருக்கும். கீர்த்தி சிவாவின் ஜோடி எனப் பேசப்பட்ட சமயம் விஜயின் புதுப்படத்துக்கு ஜோடி தேடியிருக்கிறார்கள். மார்க்கெட் உள்ளவர் என்ற வகையில் கீர்த்தியுடன் பேச உடனடி சம்மதம் சொல்லியதால்தான் அவர் விஜய் ஜோடியாகியிருக்கிறார்.இந்த நிலையில் தனுஷ்சுடனான புதுப்படம் கீர்த்திக்கு வம்பையும்,சர்ச்சையையும் மட்டுமன்றி அவப் பெயரையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதன் பாதிப்பு எப்படி அமையுமோ தெரியவில்லை.அதன் காரணமாகத்தான் விஜயின் புதிய படத்தில் கீர்த்திக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேயை ஜோடியாக்க திரைமறைவில் முயற்சி நடப்பதாகக் கேள்வி.

சூர்யாவின் 24 பற்றி சொல்லுங்களேன்!
வை. யாழினி, களுத்துறை

அஞ்சானும், மாசியும் சூர்யாவுக்கு இறங்கு முகமாக அமைந்துவிட்டன. பசங்க 2 லாபம் கொடுத்தது. ஆனால் சூர்யாவின் நடிப்புக்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே 24 மற்றும் சிங்கம் 3 ஆகிய இரண்டும் சூர்யா பெரிதும் எதிர்பார்த்துள்ள படங்கள். இந்தப் படங்கள்தான் சூர்யாவின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை நிர்ணயிக்கப் போகின்றன. 24 டீசரையும் டிரெயிலரையும் பார்த்து உறுதியாக எதையும் சொல்வதற்கில்லை.

தனுஷ் மற்றும் பிரகாஷ்ராஜைப் போல் சூர்யா ஒரு நல்ல படத் தயாரிப்பாளராக இருந்தாலோ போதும். பேரும் வரும், பணமும் வரும்!

No comments:

Post a Comment