Thursday, April 28, 2016

புரட்டப்படாத பக்கங்கள்

ஐந்து லாம்பு சந்தியில் மிக்ஸி கிரைண்டர் திருத்துனராக இருக்கும் நிஸ்தாரை உங்களுக்கு தெரிந்திருக்குமே!

மணி  ஸ்ரீகாந்தன்

ந்தக் கால சமையல் கட்டுகளில் முக்கியமாக இடம்பிடிக்கும் அம்மிக்கல், ஆட்டுக்கல், திரிகைக்கல், உரல், உலக்கை உள்ளிட்ட பொருட்களை இன்று அருங்காட்சியகங்களில்தான் பார்க்கக்கூடியதாகவுள்ளது. அப்படியே அம்மிக்கல் சில வீடுகளில் இருந்தாலும் அது பாவிக்கப்படாத நிலையில் எங்காவது மூலையில், நாய், பூனை உறங்கும் கல்லாகவே பயன்பாட்டில் உள்ளது. அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை, திரிகைக்கல் இருந்த இடங்களில் ஒரு மிக்ஸி கிரைன்டரை வைத்து அனைத்து வேலையையும் சுலபமாகவும் விரைவாக நமது பெண்கள் செய்து முடித்து விடுகிறார்கள். அடுப்புக்கு விறகு வைத்து அடுப்பூதும் பெண்கள் மிகக் குறைவு. கிராமங்களில்தான் பார்க்கலாம். பட்டனை தட்டினால் அடுப்பு எரிகிறது. கரண்டும், கேசும் இன்றைய நவீன பெண்களின் துணைவியர். அந்தக் காலத்தில் கிராமங்கள், தோட்டங்களில் வழியாக பெரிய தலைப்பாகையோடு உளியையும், சுத்தியலையும் கையில் வைத்துக் கொண்டு அம்மி, ஆட்டுக்கல் கொத்தித்தர வரும் ஆசாமிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று அப்படியானவர்களை எங்கேயும் பார்க்க முடியாது. அந்த யுகம் முடிந்து, இன்று மிக்ஸி கிரைண்டர், கேஸ் அடுப்பு திருத்துனர்கள்தான் தெருவுக்குத் தெரு வந்துவிட்டார்கள். 'மிக்ஸிக்கு ஒரு ஆணியைப் பொருத்தித் தருவதற்கு ஆயிரம், ஐநூறு என்று பிடுங்குகிறார்கள்' என்பதே இன்றைய குடும்பப் பெண்களின் புலம்பலாக இருக்கிறது. ஆனால் இந்தப் புலம்பலுக்கெல்லாம் ரொம்பவும் நேர்மாறாக இருக்கிறார் ஏ.கே.எம்.நிஸ்தார். இவர் கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் உள்ள பழைய டவுன் ஹோல் வாசலில் மிக்ஸி, கேஸ் அடுப்பு திருத்துனராக இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறார்.
"ரோட்டோர வியாபாரிகளில், நல்லவனும் இருக்கிறான் கெட்டவனும் இருக்கிறான். நாம் ஜாக்கிரதையாக இருந்தால் சரி. மிக்ஸியில் ஒரு ஆணி கழண்டிருந்தால், அதைத் திருத்தித் தருவதற்குப் பதிலாக அதைச் செய்யனும், இதைச் செய்யனும் என்று ஆயிரம் காரணம் சொல்லி வரும் வாடிக்கையாளரை ஒரே அமுக்கா அமுக்கி காசு பிடுங்கிறதுலதான் நிறையப் பேர் குறியா இருக்கிறாங்க. ஆனால் அது நல்லதில்லை. நம்மை அந்த ஆண்டவன் பார்த்திட்டுதான் இருக்கான். அதனால் தொழிலில் நேர்மையா இருக்கணும், அப்படி வர்ர உழைப்புதான் நிலைக்கும்" என்று  தனது தொழில் பக்தியைச் சொல்லி நெஞ்சு நிமிர்த்துகிறார் நிஸ்தார்.

வாழைத் தோட்டத்திலிருந்து காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் தன் ஆட்டோவில் கிளம்பி வந்துவிடும் இவர், மாலை அறு மணிக்கு ஆட்டோவில் இயங்கும் மினி கடையை மூடிவிட்டு வீட்டுக்குக் கிளம்பி விடுகிறார். கேஸ் அடுப்பு, மிக்ஸி கிரைண்டருக்கான அனைத்து உதிரிப்பாகங்களையும் ஆட்டோவிலே வைத்திருக்கிறார்.

"கம்பனிக்காரன் முடியாது என்று சொல்லும் வேலைகளையெல்லாம் நான் முடிச்சுக் கொடுத்திடுவேன். சைனாவுக்கு, இந்தியாவையும், ஜப்பானுக்கு சைனாவையும் மாத்திப்போட்டு மிக்ஸியை திருத்துகிற டெக்னிக் எல்லாம் எனக்குத் தெரியும்" என்று நம்மை மிரள வைத்தவரிடம், இந்தத் தொழிலை எங்க படிச்சீங்க? என்று கேட்டோம்.

குவைத்தில் ஐந்து வருசமா டிரைவரா இருந்தேன். பிறகு கொஞ்ச நாளிலேயே மார்க்கட்டுக்குப் பொருட்களைப் போடும் வேலையைச் செய்தேன். அப்போது எனக்கு இரண்டு மணிநேரம்தான் வேலை. பின்னர் எனது கம்பனியில் கேஸ் அடுப்பு பிக்ஸ் பண்ணுற பட்டறைக்கு போய்ப் பார்ப்பேன். அங்கே பிலிப்பைன்காரர்கள் வேலை செய்வாங்க. அதைப்பார்த்துப் பார்த்து படிப்படியாக வித்தையைப் படித்துக் கொண்டேன். ஆனால் கிரைண்டர் மிக்சி போன்ற அரவை மெஷின்களை நானே கழற்றிப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அப்புறம் என் கண்கள் இருக்கே சரியாக கேமரா மாதிரி! பார்த்த விசயத்தை அப்படியே படமாக பதிவு செய்து என் மூலைக்கு அனுப்பிடும்" என்றவரிடம் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டோம்.
"நான் சுத்தமா படிக்கவில்லை. ஆனா எனக்கு பெங்காலி, அரபி, இந்தி, மலையாளம், பிலிப்பின் என்று ஐந்து மொழிகள் தெரியும். தமிழையும், சிங்களத்தையும் சேர்த்தா ஏழு மொழிகள். எழுதப் படிக்கத்தான் தெரியாது. ஆனாலும் கடவுள் எனக்கு நுட்பமான அறிவைத் தந்திருக்கிறார்" என்று நிஸ்தார் பெருமிதத்தோடு முடிக்க 'இந்த வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?' என்று கேட்டோம்.

"ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் தொழிலுக்கு நானே முதலாளி, நானே தொழிலாளி. யாருக்கிட்டேயும் கைகட்டி வேலை செய்ய வேண்டியதில்லை. பிரியாணி சாப்பிடாமல் காய்கறி உணவு சாப்பிடுவதால் கிடைக்கிற வருமானம் போதுமானதாக இருக்கிறது. அதோட இறைவன் எனக்கு நல்ல மனிதர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அப்படி அறிமுகமானவர்களில் மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் அஜந்த லியனகேயை என்னால் மறக்க முடியாது. எத்தனையோ விடயங்களில் அவர் எனக்குப் பெரிய பலமாக இருந்திருக்கிறார். என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியோடு இருப்பேன். அதோட, நான் நினைத்ததெல்லாம் நடந்திருக்கிறது. உம்ராவுக்கும் போய் வந்துவிட்டேன். இனி அடுத்து ஹஜ் பயணம்தான். அதையும் கடவுள் வெற்றியாக முடித்துக் கொடுப்பார். சின்ன வயசுல ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தவன். இப்போ மூன்றுவேளை சாப்பிடுகிறேன். இது போதாதா? என்று நிஸ்தார் நெகிழ்ச்சியோடு பதிலளிக்கிறார்.

நிஸ்தாருக்கு நாலு பிள்ளைகள். இருவர் திருமணம் முடித்துவிட மற்றவர்கள் வீட்டில் இருக்கிறார்களாம்.

"என் மனைவி ஒரு இருதய நோயாளி. நானும் இருதய நோயாளிதான். என்ன செய்ய, மருந்து தயவில் வாழ்கிறோம். எனக்குப் பிறகு என் மகன்கள் இந்த தொழிலை செய்வாங்களான்னு தெரியவில்லை. ஆனா அவங்களும் வித்தையைக் கற்றுக்கொண்டு வாராங்க" என்றவர்.

Sunday, April 24, 2016

"எனக்கு ஒரு வீடு வேண்டும்"

மணி ஸ்ரீகாந்தன்

'அறுபதுகளில் நாடறிந்த நாடக, திரைப்பட நடிகையாகத் திகழ்ந்த ஜெயகௌரி இன்று வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார். வெகு சிலரே அவருக்கு உதவி வருகிறார்கள். யாரேனும் கருணை உள்ளத்துடன் முயற்சி செய்து அவருக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தால் புண்ணியமாக இருக்கும். அவர் தன் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். இதைப் படிக்கும் நாமும் அவரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம். இந்நேர்காணல் அவருடைய வறுமையை போக்கி ஒரு வீட்டையும் தருமானால் சந்தோஷப்படுவோம்'

லங்கை தமிழ் நாடக, சினிமா வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் பெயர் ஜெயகௌரி. இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமான 'சமுதாயம்' படத்தின் நாயகியாகவும் அந்தக்கால இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்த ஜெய கௌரியை அவ்வளவு எளிதில் மறக்கத்தான் முடியுமா?

கலைத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு ரவுண்ட் வந்த இவர் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடிகையாக ஜொலித்திருக்கிறார். இவரின் கலைச்சேவையை பாராட்டி இலங்கை அரசு 'நாடக கீர்த்தி' விருதையும் வழங்கி கௌரவித்தது.
அந்தக் காலத்தில் இவர் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக பேசப்பட்டாலும், இன்று ஒளியிழந்து வாழ்க்கையின் வறுமைக்கோட்டில் வாடி நிற்கிறார். ஆண்டிவால் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு அவரை தேடியதில் "யாருங்க கௌரியா? அப்படி யாரும் இங்கே இல்லீங்க, ஓ அவங்க அந்தக் காலத்துல ஒரு நடிகையா இருந்தாங்களா?, ஆனா இப்போ இல்லை, வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டாங்க" போன்ற பதில்களே எமக்கு விடையாகக் கிடைத்தன. ஆனாலும் விடாமல் வலை வீசியதில் ஆண்டிவால் தெருவில் உள்ள ஒரு முட்டுச்சந்து வீட்டில் கௌரியைக் கண்டுபிடித்தோம்.

"என்ன பண்ணுறது, இப்போது இது பதினாறாவது வீடு என்று நினைக்கிறேன். சொந்த வீடு இல்லாததால் இப்படி நாடோடியாகத் திரிகிறேன். இலங்கையின் முதல் தமிழ்ப்பட நாயகின்னு பெயர் மட்டும்தான் இருக்கு, ஆனா என் வாழ்க்கையில் எதுவும் இல்லை. வாழ்க்கையைப் பற்றி நான் பேசினா நான் அழுது விடுவேன்" என்று தழுதழுத்த குரலில் கௌரி சொல்லும் போதே அவர் கண்களில் கண்ணீர்த்துளிகள் கட்டுப்பாட்டை இழந்து வடிந்தன.

குடும்ப வாழ்க்கையில் தோற்றுப்போன ஜெய கௌரிக்கு இன்று ஒரே ஆறுதலும், துணையும் அவரின் தங்கை ப்ரியா ஜெயந்திதான். அந்தக்காலத்தில் ப்ரியா ஜெயந்தியும் நடிகைதான். ஆனாலும் இன்று வாய்ப்புகள் இல்லாததால் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து அக்கா ஜெயகௌரியோடு வாழ்ந்து வருகிறார்.

"என் தங்கச்சியோட உழைப்புலதான் வாழ்க்கைச் சக்கரம் ஓடுகிறது. அவருக்கு மாதச் சம்பளம் வெறும் ஒன்பதாயிரத்து ஐநூறு. அதில வீட்டு வாடகை ஆறாயிரம் போக, கரண்ட் பில், தண்ணீர் பில் போனா மிஞ்சுறது கொஞ்சம்தான். ஆனாலும் எப்படியோ ஒவ்வொரு நாளும் பசியில்லாமல் இருக்கிறோம். 'அன்றன்று உள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்' என்கிற பைபில் வசனத்திற்கு அமைய ஆண்டவர் ஏதோ ஒரு வழியாக எங்கள் பசியைப் போக்க உதவுகிறார்" என்று கௌரி சொல்லும் போதே அவரின் கண்களில் கடவுள் மீதான நம்பிக்கை பிரகாசமாக ஒளிர்வதைக் கண்டேன்.
ஜெயகெளரி,
அக்கா பகீரதி,
மற்றும் ப்ரியா ஜெயந்தி
"கிட்னி நோயால் நான் ரொம்ப கஷ்டப்பட்டு செத்துப் பிழைச்சு வந்திருக்கேன். மருந்து வாங்கக்கூடப் பணம் இல்லை. வீட்டில் இருந்த டீவி, ரேடியோ எல்லாம் வித்துட்டேன். இங்கே உள்ள கலைஞர்கள் யாரும் கண்டுகிறதே இல்லை. நான் இளமையோடு, கலைத்துறையில் இருந்தபோது நான் இப்படி கீழே போவேன் என்று நினைச்சுக்கூடப் பார்க்கலை. எப்போவும் நாம் ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம்னு எண்ணினேன். இப்போது அதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா மனசு கணக்குது. வாழ்க்கையில் நிறைய விசயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். அனுபவம் ஒரு நல்ல புத்தகம். அதை இப்போது நான் முழுசா படிச்சு தெரிஞ்சுக்கிட்டாலும் திரும்பவும் அந்தக் காலத்துக்கு போய் முதலில் இருந்து தொடங்கி தவறுகளை சரி பண்ணத்தான் முடியுமா? எல்லாம் நாமாகத் தேடிக்கிட்டதுதான். நிறையப் பேரு எங்க முன்னேற்றத்திற்கு தடையா கத்திரி வச்சாங்க. அதில ஒரு சத்திராதி இருந்தான். அவன்தான் எங்களை முடக்கினான்" என்று ஆவேசப்பட்டவர் கொஞ்சம் நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.

"கலைத்துறையில் கே. சந்திரசேகரன், ஏகாம்பரம், கலைஞர் கந்தையா உள்ளிட்ட மூன்று பேரையும் நான் ரொம்பவே மதிக்கிறேன். அவங்க ரொம்பவே பெருந்தன்மையான மனிதர்கள். அதோடு லண்டனில் வசிக்கும் நண்பர் சிவாவையும் மறக்க முடியாது. செட்டியார் தெருவில் நகைக் கடை வைத்திருந்த அவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். நான் நெருக்கடியில் இருந்த நேரத்திலெல்லாம் கடவுளாக வந்து எனக்குப் பண உதவி செய்தவர். வீட்டில் டிவி இல்லாததைப் பார்த்து விட்டு உடனே 32 இன்ச் பிளட் ஸ்கிறீன் டிவியை வாங்கி வந்து கொடுத்தார். அப்போது அவரின் மனைவியும், பிள்ளைகளும் உடன் இருந்தார்கள். இப்போது இருக்கிறது அந்த டிவிதான். ரூபாவாஹினி என்னை நேர்காணல் செய்தபோது உடன் இருந்தவர் கே. சந்திரசேகரன். அவரின் ஏற்பாட்டில்தான் அது நடந்தது. அதற்குப் பிறகே அவர்களே என்னை பண்டாரநாயக்க மண்டபத்துக்கு அழைத்துச் சென்று 'நாடக கீர்த்தி' விருதையும், ஐம்பதாயிரம் பணமும் கொடுத்தார்கள்.
பெற்றோருடன் குட்டி கெளரி
இப்படி அதிர்ஷ்டமாகக் கிடைத்த பணமெல்லாம் வீட்டு வாடகைக்கு முன் பணம் கொடுக்கவே சரியாப் போயிட்டது. கடந்த ஆண்டுகளில் பிரபா கணேசனுடன் பேசி சொந்த வீடு வாங்க முயற்சி செய்தேன். ஆனால் கால மாற்றம் காரணமாக அது சாத்தியப்படவில்லை. இப்போது அமைச்சர் மனோ கணேசனுடன் தொலைபேசி வழியாக பேசினேன். ஆனால் இன்றுவரை அவரை என்னால் நேரில் சந்தித்து என் நிலைமையை விளக்க முடியாமல் இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. மனோவை சந்தித்தால் நிச்சயம் எனக்கு ஒரு நல்வழி கிடைக்கும். நான் இறந்த பிறகு என்னோட உடல் சொந்த வீட்டில் வைக்கப்படனும் என்பது எனது ஆசை. இது நிறைவேறுமா என்று தெரியலை" என்று கௌரி கவலை தேய்ந்த முகத்தோடு பெருமூச்சு விடுகிறார்.

கலை வாழ்க்கையில் நான் நிறையப் பேரை ஞாபகத்தில் வைத்திருந்தேன். அவர்களில் வீ.கே.டி. பாலனும் ஒருவர். நானும், என் தங்கச்சியும் அவரைச் சித்தப்பா என்றுதான் கூப்பிடுவோம். அவர் எங்கம்மாவை ரொம்பவே கேலி பண்ணுவாரு. அதனால் சித்தப்பான்னு சொல்லிக் கூப்பிடுவோம். "நான் உங்க ரசிகை. சமுதாயம் படத்தை மானெல் தியேட்டர்ல பார்த்தேன்' என்று சொல்லுவார். அவரோடு 'பேசும் வழிகள்' உள்ளிட்ட சில நாடகங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். நல்ல கலைஞர், ரொம்பவும் பண்பான மனிதர். 'நான் இலங்கைக்கு வந்தால் அங்குள்ள அரச பிரமுகர்களோடு பேசி உனக்கு கட்டாயம் சொந்த வீடு வாங்கிக் கொடுப்பேன்' என்று ஒருமுறை சொன்னார். அதற்கு நான், 'நீங்க எப்போது இங்கே வர்றது, நான் எப்போது சொந்த வீட்டுல குடியேறது' என்று சொல்லி இருக்கேன்" என்று முகம் மலர்ந்தார் ஜெயகௌரி.

மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட இவரின் பூர்வீகம் கேரளா திருவானந்தபுரம். "அப்பா அப்புக்குட்டி, அம்மா கல்யாணி. எனக்கும் தங்கச்சிக்கும் நன்றாகவே மலையாளம் பேச வரும்" என்றவரிடம் "கணவன் குழந்தை குட்டின்னு இருந்தா வாழ்க்கை ரொம்ப நல்லா இருந்திருக்குமே…? என்று ஃபீல் பண்ணுறீங்களா?" என்று கேட்டோம்.

"என்ன பண்ணுறது… என்னுடைய திருமண வாழ்க்கை எனக்கு நல்லா அமையல, அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தா அடுத்தவங்க பாராட்டுற மாதிரி வாழலாம் என்று நினைக்கிறேன்" என்று சொல்லிக் கசந்தார்.

சினிமாவைத் தொடர முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் ஏதாவது இருக்கிறதா?

அதைச் சொல்வதற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கு! ஆனாலும் பரவாயில்லை சொல்றேன்.. என்று தொடர்ந்தார் கௌரி.

"அப்போது நான் யாழ்ப்பாணத்தில் நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் 'குத்துவிளக்கு' படத்தில் எனக்கு ஒரு முக்கிய வேடத்தில் வாய்ப்புத் தருவதாகச் சொல்லி என் வீட்டுக்கு வந்த குத்துவிளக்குப் படத்தோடு சம்பந்தப்பட்ட இருவர் என் பெற்றோரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவர் எங்கள் குடும்ப நண்பர். அதனால் என் பெற்றோரும் சம்மதித்திருக்கிறார்கள். உடனே அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்கள். குத்துவிளக்குப் படத்தின் படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் நடப்பதால் அவர்களுக்கும் அது வசதியாக போய்விட்டது. என்னிடம் விசயத்தைக் கூறியதும் நானும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். பிறகு அவர்கள் என்னை ஒரு வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள். அந்த வீட்டில்தான் படப்பிடிப்பு நடப்பதாகச் சொன்னதால் நான் அங்கே போனேன். அது ரொம்ப பெரிய விசாலமான வீடு. ஆளுயர பெரிய மதில், கேட் என்று பிரமாண்டமாக இருந்தது. உள்ளே என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது. கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஆனால் அங்கே சிங்கள நடிகை சாந்திலேகாவும் அவரின் கணவரும் இருந்ததால் அங்கே தங்குவதற்கு சம்மதித்தேன். அன்றிரவு சாந்திலேகாவும் அவரின் கணவரும் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில்தான் நானும் படுத்திருந்தேன். ஹோலில் மட்டும் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. அறையில் லைட்டை அணைத்துவிட்டு படுத்த சில மணி நேரங்களில் என் உடம்பின் மேலே ஏதோ ஒரு பாரம் விழுந்திருப்பதை உணர்ந்து கண் விழித்துப் பார்த்தேன். அதிர்ந்தேன். ஒருவன் என்மேலே, மற்றவன் என் கால்களை இறுக்கிப் பிடித்திருந்தான். நான் அவர்களை உதறித்தள்ளிவிட்டு எழும்பி அலற… பக்கத்தில் இருந்த சாந்திலேகாவும், அவளின் கணவரும் ஓடி வந்தார்கள். அப்போது, அந்த நபர்கள் அறையில் இருந்து ஓடினார்கள். அவர்கள் குத்துவிளக்கு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர்கள்தான் என்பதை அறிந்து வேதனைப்பட்டேன்.