Sunday, March 6, 2016

புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஏ. கே. விஜயபாலனின் அந்தநாள் நினைவுகள்…

கெமராமேன் ராஜப்பா தடை தாண்டி

எம்.ஜி.ஆரை எப்படி நெருங்கினார்?


மணி  ஸ்ரீகாந்தன்

'எம். ஜி. ஆரிடம் ராஜப்பா தனக்கு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்த ஆசையாக இருக்கிறது என்று சொல்ல, சினமாஸ் குணரட்னத்தைப் பார்த்த எம். ஜி. ஆர், "குணம், Give him25 thousand" ” என்று சொல்ல, அந்தப் பணம் ராஜப்பாவுக்கு அளிக்கப்பட்டது. 25 ஆயிரம் என்பது அன்றைக்கு பல லட்சங்களுக்கு  சமன்! அப்போது ஒரு பவுண் தங்கமே 190 ரூபாதான்!'

வ்வொரு வருடமும் ஆகஸ்ட் 19ம் திகதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. நாம் செய்தித்தாள்களில் பக்கம் பக்கமாக எழுதுகிற விடயத்தை ஒரே படத்தின் மூலம் சொல்லிவிட முடிகிறது என்றால், கெமரா என்பது சாதாரண விஷயமா என்ன? கெமரா புழக்கத்துக்கு வந்து நூற்றாண்டு தாண்டியும் கூட அதன் மகத்துவம் மங்கவில்லை. கெமராவுக்கு பின்னர் பாவனைக்கு வந்த சமகால கண்டுபிடிப்பான ரேடியோ மவுசு இன்று மங்கிவிட்டது. 5ம் நூற்றாண்டில் சீனாவில் வாழ்ந்த தத்துவமேதை மோட்டி, 'ஒரு துளை வழியாக ஓர் இருண்ட பகுதிக்குள் ஒளி கடந்து செல்லும்போது ஒரு தலைகீழ் மற்றும் முகப்படத்தை உருவாக்க முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே கெமராவின் செயல்பாட்டை பதிவு செய்தவர் இவரே.

175 வருடங்களைக் கடந்திருக்கும் புகைப்படக்கருவி இன்று பல பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. புகைப்படக் கலையை ஆங்கிலத்தில் போட்டோகிராபி என்று அழைக்கிறார்கள். ஆனால் அது ஒரு கிரேக்க வார்த்தை. ஒளியின் எழுத்து என்பது அதன் பொருள். புகைப்படக் கருவி வந்த பிறகு ஓவியர்களின் தேவை கொஞ்சம் குறைந்து விட்டது. பிறகு புகைப்படப் பிடிப்பாளர்கள் பலர் உருவாகத் தொடங்கி அதையே முழுநேரத் தொழிலாகவும் செய்ய ஆரம்பித்தார்கள். நம் நாட்டிலும் பல கெமராக் கலைஞர்கள் இருந்தாலும், ஒரு சிலர்தான் தொடர்ச்சியாக அந்தப் பணியை இன்றுவரை செய்து வருகிறார்கள். கிங்ஸ்லி செல்லையா, ராஜப்பா போன்ற புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்கள் மறைந்துவிட இன்றும் புகைப்படக் கலையை திறம்பட செய்து வருபவர் ஏ.கே. விஜயபாலன். ஏ.கே. என்றால் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது ஒரு சக்தி வாய்ந்த துப்பாக்கி. விஜயபாலனும் கெமரா என்ற பவர்ஃபுல் 'துப்பாக்கி'யால் படங்களை 'சூட்' பண்ணி வருகிறார், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக! கெமரா கலைஞராக இலங்கை பத்திரிகை துறையில் வலம்வரும் இவர், வயதில் அறுபதைக் கடந்து விட்டிருந்தாலும் இன்னும் இருபது வயது இளைஞனாகவே சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரது புகைப்படங்கள் மட்டுமல்ல, அவரும் வசீகரமான முகத்தோற்றத்தையும் புன்னகையையும் கொண்டவர்தான்.

"நான் இங்கே தமிழனாக அறியப்பட்டாலும் என் தாய்மொழி மலையாளம். இலங்கையில் நான் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிறந்தவன். கொழும்பில் ஜப்பான் விமானங்கள் குண்டுமழை பொழிந்த காலம். அதனால் ஒரு வயதாக இருக்கும்போதே என்னை கேரளாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்களாம். திருச்சூர் பக்கத்தில் இருக்கும் கொடுங்கலூர்தான் என் சொந்தக் கிராமம். ரொம்பவும் அழகான பசுமையான ஊர். அங்கே உள்ள தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது வரை படித்தேன். அதன் பிறகு கொழும்புக்கு வந்து மிகுதி படிப்பை இங்கேயும் பிறகு எஸ்.எஸ். சியை கேரளாவிலும் முடித்தேன்" என்று பெருமையாகச் சொல்கிறார் பாலன். பாலனின் தந்தை கொழும்பு துறைமுகத்தில் தொழில் செய்திருக்கிறார். அவரின் பெயர் குஞ்சை ஐயப்பன், தாய் லீலாவதி.
எம்.ஜி.ஆருடன் விஜயபாலன்
"அந்தக் காலத்திலேயே 250 ரூபா சம்பளத்திற்கு ஒரு கம்பனியில் எங்கப்பா எனக்கு ஒரு வேலையை வாங்கித் தருவதாகச் சொன்னார். நான்தான் கேமராக் கலைமீதுள்ள ஆர்வத்தால் அதை வேணாம் என்று மறுத்துட்டேன். அப்போ 28 ரூபாவில் ஒரு பொக்ஸ் கெமராவைச் சொந்தமாக வாங்கி படங்களை பிடிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் பேராதெனிய பூங்கா பக்கமாகச் சென்றிருந்தேன். அங்கே ஒரு சிறிய தொங்குபாலம். மூன்று பேர் மட்டுமே அதில் கடக்க முடியும். ஆனால் அதில் ஆறு பேர் கடக்க நான் அதை என் கெமராவில் பதிவு செய்துவிட்டேன். பிறகு படத்தை பிரிண்ட் போடும்போது படத்தைப் பார்த்த ஸ்ரூடியோக்காரர், 'இந்தப் போட்டோ அருமையா இருக்கு, இதை தினகரனில் கொடுத்தா காசு கிடைக்கும்' என்று சொன்னார். நானும் அந்தப் போட்டோவை தினகரன் அலுவலகத்தில் கொடுக்க சிறந்த புகைப்படங்கள் வெளியாகும் புதன் மலரில் என் படமும் இடம்பெற்றது. அந்தப் படத்துக்கு பத்து ரூபா கிடைத்தது. அதற்குப் பிறகு, வீரகேசரி, ராதா பத்திரிகைகளில் எனக்கு தொழில் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது" என்று மகிழ்ச்சியோடு பேசுகிறார் விஜயபாலன்.
விஜயபாலனுக்கு மொத்தம் ஆறு சகோதரிகள். பாலன்தான் மூத்தவராம். அதில் ஒரு சகோதரி அண்மையில் திருச்சியில் காலமானார்.

"நமக்குப் பெரிதாகக் கிடைத்த பாராட்டு என்றால் அது சிறிமா பண்டாரநாயக்காவை நான் எடுத்த புகைப்படம்தான். நீதிமன்றத்தின் உள்ளே புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை உண்டு. 1977 ஜே. ஆர். ஆட்சி வந்த பின்னர் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்தார். புல்லர்ஸ் வீதியில் இருந்த ஒரு கட்டடத்தில் ஆணைக்குழு இயங்கியது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அங்கே வந்து சாட்சியமளித்தார். அப்படி வரும்போது வீரகேசரி புகைப்படக்காரராக இருந்த நான் திருமதி பண்டாரநாயக்காவை புகைப்படம் எடுப்பேன். எல்லா பத்திரிகையாளர்களும் வெளியே நின்று ஸ்ரீமா நீதிமன்றத்தின் உள்ளே பிரவேசிக்கும் போது புகைப்படங்களை எடுப்பார்கள். ஒருமுறை என்னால் நேரத்திற்கு அங்கே செல்ல முடியாததால் அந்தப் படங்களை க்ளிக் செய்ய முடியவில்லை. எப்படியும் எனக்குப் படம் வேண்டும் என்பதால் என்ன செய்வது என்று குழம்பிய நான் அந்த நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன். பிறகு எப்படியோ கூட்டத்திற்குள் புகுந்து முன்னேறி விசாரணை நடக்கும் இடத்தை நெருங்கிவிட்டேன். என் நல்ல நேரம் அங்கே இருந்த கண்ணாடி ஜன்னலில் ஒரு ஓட்டை இருந்தது. அதன் வழியாகப் பார்த்த போது ஸ்ரீமா நின்றபடி சாட்சியமளிப்பதைக் காண முடிந்தது. சந்தர்ப்பத்தை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நான் கேமராவின் ஃபிளாஷை கழற்றி விட்டு கேமராவை அந்த ஓட்டைக்குள் திணித்து படபடவெள க்ளிக் செய்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அடுத்த நாள் அந்தப் படம்தான் வீரகேசரியின் முதல் பக்கத்தை அலங்கரித்தது. வீரகேசரி ஆசிரியர் என்னைப் பாராட்டி அந்தப் படத்திற்கு 25 ரூபா கொடுத்தார். பிறகு தினபதியும் அந்தப் படத்தை என்னிடம் இருந்து பெற்று பிரசுரித்தது. ஸ்ரீமாவின் உதவியாளர் ஒருவர் என்னைத் தேடி வந்து படத்தின் ஐம்பது நகல்களை இரண்டு ரூபா கணக்கில் பெற்றுக் கொண்டார்" என்று தனது கெமரா சாகசத்தை மகிழ்ச்சியுடன் விவரித்த அவர், எம். ஜி. ஆர். இலங்கைக்கு வந்த சம்பவத்தையும் பூரிப்போடு சொல்லத் தொடங்கினார்.

"எம். ஜி. ஆர் இலங்கைக்கு வந்த அந்த நாளில் அவர் கோல்பேஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார். நாடு முழுவதுமிருந்து ரசிகர்கள் திரண்டு வந்து தலைவனைப் பார்க்க கோல்பேஸ் ஹோட்டலின் முன்பாக காலிமுகத்திடலில் குடியும் குடித்தனமாகத் தங்கியிருந்தார்கள். நானும் அப்போது எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்பதால் தலைவனைப் பார்க்கும் ஆவல் எனக்கு இருந்தது. புகைப்படக்காரன் என்பதால் எனக்கும் அவரை இலகுவாக நெருங்க முடிந்தது. பிரபல புகைப்படப் பிடிப்பாளர் ராஜப்பா என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்.

ராஜப்பா கண்டிப்பு, கறாரானவர். ஒரு மலையாளி. எம். ஜி. ஆர் விஜயம் தொடர்பான ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பாக ராஜப்பாவை உள்ளே விடக்கூடாது என்று திடசங்கற்பம் கொண்டிருந்தார்கள். இதனால் ஹோட்டல் வாசலுக்கு வெளியே ராஜப்பா எம்.ஜி. ஆரின் வருகைக்காகக் காத்திருந்தார். எம்.ஜி. ஆர் காரை விட்டு இறங்கி வாசலை நோக்கி நடக்கும்போது வழியில் குறுக்கிட்ட ராஜப்பா, மலையாளத்தில் ஏதோ சொன்னார். 'அட, நம்ம தாய் மொழியை பேசுகிறானே' என்று ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்து புன்னகைத்த எம்.ஜி. ஆர். அவர் தோளில் கைபோட்டு அவரை தன்னுடன் அழைத்துச் செல்ல, ராஜப்பாவை உள்ளே விடக்கூடாது என்று நின்றவர்கள் அப்படியே துவண்டு போனார்கள்! அதன் பின்னர் அவருடனேயே ராஜப்பா இருந்தார்!

கோல்பேஸ் ஹோட்டலில் எம்.ஜி. ஆருக்கு பக்கத்திலேயே ராஜப்பாவுக்கும் ஒரு ரூம் போடப்பட்டது என்றால் ராஜப்பன் செல்வாக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்!

ஒரு நாள் ஹோட்டல் அறையில் தன் நண்பர்களுடன் எம். ஜி. ஆர். பேசிக்கொண்டிருந்தார். ராஜப்பா அருகில் இருக்கவே, அவருடைய குடும்ப விவகாரங்களை விசாரித்தார். தன் கஷ்டங்களை ராஜப்பா எம். ஜி. ஆரிடம் சொன்னார். முழுமையாக விவரங்களைக் கேட்ட மக்கள் திலகம், 'உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார். 'எனக்கு ஒரு ஸ்டூடியோ தொடக்க உதவினால் நல்லா இருக்கும்' என்று ராஜப்பா சொன்னார். 'அடுத்த நாள் வா செய்து தருகிறேன்'ன்னு எம். ஜி. ஆர். வாக்குறுதி கொடுத்து அனுப்பி வைத்தார். அதன்படியே அடுத்த நாள் ராஜப்பா வந்தார். சினமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே. குணரட்னம் எம். ஜி. ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்தார். குணரட்னத்திடம் எம். ஜி. ஆர், "குணம், give him 25 thousand” என்று சொன்னார். இன்றைக்கு அதன் பெறுமதி இருபது லட்சமாக இருக்கும். பெரியதொகை! உடனே தன் காசோலை புத்தகத்தை எடுத்து செக் எழுதி ராஜப்பாவிடம் தந்தார் குணரட்னம். ராஜப்பாவுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா! என ஏனையோர் உள்ளுக்குள் புகைந்தனர். அந்த நாட்களில் ஒரு பவுண் தங்கம் 190 ரூபா என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

பிறகு கொழும்பு விவேகானந்த மேட்டில் ராஜப்பா ராஜா ஸ்ரூடியோவை திறந்தார். அதை டட்லி திறந்து வைத்தார். அதன் பிறகு எம். ஜி. ஆர். ராஜப்பாவுக்கு இரண்டு கடிதங்கள் நலம் விசாரித்து அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தை நானும் பார்த்தேன். அதில் நலம் விசாரிப்போடு ஸ்டூடியோ எப்படி போகிறது? என்பதையும் எம்.ஜி. ஆர். கேட்டிருந்தார். ஆனால் ராஜப்பா அந்தக் கடிதங்களுக்கு பதில் அனுப்பவேயில்லை!

சில வருடங்களின் பின் ராஜப்பா தமிழகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது தலைவரை பார்ப்பதற்காக ராமாவரம் போயிருக்கிறார். கொழும்பு லங்கா ஸ்டூடியோவில் போட்டோ கிரபராக இருந்த ராமகுட்டி என்பவர் ராமாவரத்தில் டீக்கடை வைத்திருக்கிறார். அவரிடம் சென்ற ராஜப்பா தலைவரை பார்க்க வந்தேன் என்று சொல்ல, அவரு 'தலைவர் இருக்கிறாரு கூர்க்காவிடம் தகவல் அனுப்பினால் பார்க்கலாம்' என்று வழிகாட்ட ராஜப்பாவும் கூர்க்காவிடம் தான் கொழும்பிலிருந்து வந்த விபரத்தைச் சொல்ல அவர் எம். ஜி. ஆரிடம் ராஜப்பா வந்த விடயத்தை தெரிவித்திருக்கிறார். எம். ஜி. ஆர். என்ன செய்தார் தெரியுமா?

'நான் இல்லன்னு எம். ஜி. ஆர் சொன்னதாக ராஜப்பாவிடம் போய்ச் சொல்' என்று தலைவர் சொல்லி அனுப்பியிருக்கிறார். கூர்க்காவின் பதிலைக் கேட்டு ஆடிப்போன ராஜப்பா சிறிது நேரம் எம். ஜி. ஆர் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து விட்டு திரும்பினாராம். அத்தோடு ராஜப்பாவிடம் எம். ஜி. ஆர் கொண்டிருந்த நட்பு முறிந்து…" என்று கடந்த கால நினைவுகளில் விஜயபாலன் மூழ்கிப் போகிறார்.

இறுதியாக அவர் இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்.

"அப்போது காலஞ் சொன்ற மணவைத்தம்பி கொழும்பில் ஒரு சினமாப் பத்திரிகையை நடத்தி வந்தார். திரைக்கலை என்பது அதன் பெயர். அதில் அவர், எம். ஜி. ஆருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக எழுதிவிட்டார். கொழும்பு வந்தபோது எவரோ இதை எம். ஜி. ஆரிடம் போட்டுக் கொடுத்து விட்டார்கள். மணவைக்கு இது தெரியாமல் இருந்திருக்கலாம். ஒருநாள் எம். ஜி. ஆரைப் பார்க்க கோல்பேஸ் ஹோட்டலுக்கு மணவைத்தம்பி வந்தார். அவரைப் பார்த்ததும் எம். ஜி. ஆருக்கு கோபம் வந்துவிட சத்தம் போட்டார். மணவை அவரிடம் பணிவோடு வருத்தம் தெரிவித்ததோடு பிரச்சினை முடிவுக்கு வந்தது"

No comments:

Post a Comment