Sunday, March 6, 2016

ஜெயகாந்தனுடன் நிகழ்ந்த ஒரு பழைய சந்திப்பு ஞாபகங்கள்

"தமிழ் உனக்குத் தாய் என்றால் அவள் எனக்கு மனைவி"


அருள் சத்தியநாதன்

மிழகத்தின் மிகப்பெரும் எழுத்தாளர்களில் ஒருவர் மட்டுமல்ல தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை படைப்பாளராகவும் விளங்குபவர் ஜெயகாந்தன். அறுபதுகளின் ஆரம்பத்தில் சஞ்சிகைகளுக்கு எழுதத் தொடங்கிய ஜெயகாந்தனுக்கு வெகுஜன ஜனரஞ்சக ஊடகமான ஆனந்த விகடன் எழுதுவதற்கு மேடை அமைத்துத் தந்தது. ஜெயகாந்தனின் சிலநேரம் சில மனிதர்கள், சினிமாவுக்குப் போன சித்தாளு. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் எனப் பல நாவல்களும் சிறுகதைகளும் வெளிவந்தன. கோபுலுவின் ஓவியங்கள் இவரது கற்பனைகளுக்கு ஜீவனை அளித்தன. ஜெயகாந்தன் தமிழ் வாசகர்களை திரும்பிப்பார்க்க வைத்தார். எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளும் அவர் எழுத்துக்காக தவமிருக்கத் தொடங்கின. அவரது எழுத்துக்கள் மிக வித்தியாசமானவையாகவும், இதுவரை யாரும் கவலைப்பட்டிருக்காத சமூகத்தின் இருள் மூலைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சி வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வந்ததாகவும் அமைந்திருந்தன. பாலியலை, நிர்வாணத்தை அவர் கையாண்ட விதம் தமிழ் படைப்புலகில் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஜெயகாந்தன் சிறுகதை, நாவல், நெடுங்கதை, நாடகம், சினிமா, அரசியல், தத்துவம், மெய்ஞானம், கவிதை எனத் தொடாத விஷயமே கிடையாது. பரந்த விரிந்த ஆழமான அறிவும் அனுபவமும் கொண்டவர். ஏழைப் பையனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர். தோழர் ஜீவாவின் பொதுவுடமைப் பாசறையில் வளர்ந்தவர். கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் 'தேத்தண்ணி' பையனாக இருந்தவர். அவரைப் பற்றி இன்று பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது மொத்த எழுத்துக்களும் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன. ஒருவர் இவற்றை எல்லாம் படித்துமுடித்த பின்னரும், ஜே.கே. என அழைக்கப்படும் ஜெயகாந்தனை முற்றிலும் அறிந்துகொண்டிருப்பாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலானோருக்கு இன்னும் அவர் ஒரு புதிர். ஏனென்றால் அதுதான் ஜெயகாந்தன்.

இப்பேர்ப்பட்ட ஜெயகாந்தனைப் பார்த்து பேசிவிட வேண்டும் என நானும் நண்பர் கலைச்செல்வனும் முடிவு செய்தோம். அவர் அந்தனி ஜீவாவிடம் இருந்து ஒரு அறிமுகக் கடிதத்தையும் கொண்டு வந்திருந்தார். ஜெயகாந்தன் ஒரு தடவைகூட இலங்கைக்கு வந்ததில்லை இனிவரப்போவதும் இல்லை. இத்தகைய ஒரு பெரும் படைப்பாளர் காலத்தில் நாமும் குப்பை கொட்டினோம் என்பதே பெருமைப்படத்தக்க விஷயம்தான். இலங்கை என்றதும் அவர் சிலரைத்தான் நினைவில் வைத்திருக்கிறார். அந்தனி ஜீவாவும் டொமினிக் ஜீவாவும் அவருக்கு மிகவும் பரிச்சயமான பெயர்கள். எம்மிடம் அவர்கள் சௌக்கியமாக இருக்கிறார்களா? எனப் பரிவுடன் விசாரித்தார்.


ஜெயகாந்தன் ஒரு புதிர். சில சமயம் அவரைச் சென்று பார்ப்பவர்களுடன் அன்புடன் பேசுவார் என்றும் 'மூடு' இல்லாதிருக்கும் சமயத்தில் பொருட்படுத்தமாட்டார் என்றும் கேள்விப்பட்டிருந்தோம். அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டு வந்தவர்களும் உண்டு என்றும் தகவல் உண்டு.

குட்டுப்பட்டாலும் பரவாயில்லை. அது மோதிரக் கை என்று நான் கலைச் செல்வனிடம் கூறினேன்.

பிற்பகல் இரண்டரை மணியளவில் ஜெயகாந்தனின் வீட்டைச் சென்றடைந்தோம். ஐம்பது மற்றும் அறுபதுகளில் எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்டு ஒருவர் வசதியான வாழ்க்கை நடத்துவது தமிழகத்தில் சாத்தியம் இல்லை என்று சொல்வார்கள். இலங்கையில் இப்போதும் இது சாத்தியம் இல்லைதான். ஆனால் எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்டதன் மூலம் வசதி வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் என்றால் தமிழ்வாணனும் ஜெயகாந்தனுமாகத்தான் இருக்க வேண்டும். தமிழ்வாணன் கல்கண்டு சஞ்சிகை ஆசிரியர். சம்பளம் வாங்கியிருக்கக் கூடியவர். ஜெயகாந்தனோ வெறும் எழுத்தாளராக மட்டும் இருந்து அந்த வருமானத்தில் சொந்தக் கார் வாங்கி ஓட்டியவர். இப்போதுதான் மாடி வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக தன்மொட்டை மாடியில் கிடுகு வேய்ந்து அதில் தான் பகல் பொழுதைக் கழிக்கிறார். பார்க்க வருவோரைச் சந்திக்கிறார். இந்த எழுத்துலக முனிபுங்கவரின் பர்ணசாலை இது. எம்மை அன்புடன் குடிலுக்குள் வரவேற்றார் புரட்சி எழுத்தாளர். நாம் எம்மை அறிமுகம் செய்துகொண்டோம். அவர் ஷர்ட், சாரம் அணிந்து ஒரு சுழல் இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.

அவரைப் பற்றி அவரது மகனிடம் பின்னர் விசாரித்தபோது இறுக்கமான முகத்தோடு பதில் சொல்லாமல் எரிச்சல் பார்வை பார்த்தார். ஏன் இதை எல்லாம் கேட்கிறீர்கள் என்று எரிச்சல்பட்டார். நாங்கள் மௌனமாகி தெருவைக் கடந்து எந்த வழியாகச் சென்றால் பஸ் பிடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது மெதுவாகக் கேட்டைச் சாத்திவிட்டு தெருவைக் கடந்து எம்மை அணுகியவர், வாருங்கள் பஸ் ஸ்டாண்ட் வரை போகலாம் என்றார். பின்னர் பல விஷயங்களைப் பற்றியும் ஓயாமல் பேசத் தொடங்கினார் ஜே.கேயின் மகன்.

"அப்பா அளவுக்கு நாங்கள் யாருமே இல்லை. எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசக்கூடிய பரந்த அறிவும் ஞாபக சக்தியும் இருக்கிறது. அவரைப் பற்றி எதுவும் சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதி இருக்கிறதா தெரியவில்லை…" என்றார் எம்மிடம். ஜெயகாந்தன் இப்போதெல்லாம் பெரும்பாலும் வீட்டிலே தான் இருக்கிறார். முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொள்கிறார். அறிவு தீட்சண்யம் அப்படியே இருந்தாலும் உடல் தளர்ந்திருக்கிறது. நடை வயதால் தளர்ந்திருந்தாலும் கண்களில் அந்தத் தீட்சண்யமும் முகத்தில் வித்வகர்வமும் பளிச்சிடுகின்றன. தெளிவாகவும் ஆற அமரவும் பேசுகிறார்.

"பொதுவாகவே மாடியில் அறைவைத்துக் கொண்டிருப்பவர்கள் வயதான காலத்தில் ஏறி இறங்குவது கஷ்டம் என்பதால் கீழே வந்து வசிக்க ஆரம்பித்து விடுவார்கள். உங்கள் அப்பாவோ வயதான காலத்தில் மேல் மாடியில் குடிசை போட்டு வாழ்கிறாரே!" என்று அவர் மகனிடம் கேட்டேன். இக்கேள்வியை அவர் விரும்பாதமாதிரி முகக் குறிப்பைக் காட்டி விட்டு, "அப்பா சாப்பிடுவது படுப்பது எல்லாம் கீழேதான். காலையில்தான் மேலே போகிறார். இப்போதும் படிக்கிறார். ஆனால் என்னென்ன படிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவருக்கு மேலே ஏறுவதும் கீழே இறங்குவதும் கஷ்டம்தான்" என்று பதில் சொன்னார். இரவில் மது அருந்தும் பழக்கம் உண்டு என்றும் பகலில் தண்ணி அடிக்கும் வழக்கம் இல்லை என்றும் அவர் சொன்னார். கஞ்சா பழக்கம் இப்போதும் உண்டா என்ற கேள்வி தொண்டைவரை வந்து, மகனின் முகம் சரியில்லை என்பதால் நின்று விட்டது. இக்கேள்வியை ஜே. கே.யிடம் கேட்டிருந்தால் ஒளிவு மறைவின்றி பளிச்சென பதில் சொல்லியிருப்பார். அச்சமயம் எங்களுடன் சிங்கப்பூர் இளைஞரும் பெண்மணியும் இருந்ததால் கேட்கவில்லை.
ஜெயகாந்தனின் புதல்வருடன்
கலைச்செல்வன்ஜெயகாந்தனிடம் பேட்டி வைத்துக்கொள்வது கஷ்டம் போல தோன்றியது. ஏனெனில் பல விஷயங்களைப் பற்றி அவராகவே பேசினார். கேள்வி கேட்டாலும் நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. ஆனாலும் பதில் தாமதாக வேனும் வரத்தான் செய்தது.

ஜெயகாந்தன் ஒரு பிடிவாதக்காரர். எடுத்தெறிந்து பேசிவிடக் கூடியவர். அவரது சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை படமாக்க விரும்பினார் இயக்குநர் பீம்சிங். தான் சொல்வதே சரி என்றும் மற்றவர் பேச்சை பொருட்படுத்தமாட்டார் என்றெல்லாம் ஜே.கே. யைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால் படமாக்கும் உரிமையைத் தருவாரா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்ததாம். தனது மகனை ஜே.கே.யிடம் அனுப்பி விஷயத்தை சொல்லி இருக்கிறார் பீம்சிங். அங்கே அவருக்கு காத்திருந்ததோ இன்ப அதிர்ச்சி. "பீம்சிங் என்பதால் மகிழ்ச்சியுடன் கதையைத் தருகிறேன். என் கதைக்கு விலை நிர்ணயம் செய்ய விரும்பவில்லை. கதை பிடித்திருக்கிறது என்பதால் என்ன தோன்றுகிறதோ அதைக் கொடுத்தால் போதும். மேலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்" என்று ஒப்புதல் தந்ததும் பீம்சிங் அதிர்ந்தே போய்விட்டாராம். அவர்மீது வைத்திருந்த தப்பபிப்பிராயங்களும் தகர்ந்தனவாம். பீம்சிங் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரைக்கதையையும் அமைத்துக் கொடுக்கவும் செய்தாராம் ஜெயகாந்தன்.

நாம் போன சமயமும் நல்ல மனநிலையில் இருந்தார் ஜே.கே. பரிவுடன் உரையாடினார். பேனாவையும் குறிப்புப் புத்தகத்தையும் வெளியே எடுத்ததையும் கண்ட அவர், இல்லை இல்லை என்ற சைகை மொழி காட்டி அவற்றை உபயோகிக்க வேண்டாம் என்றார். பின்னர் தெளிவான குரலில்.

"நீங்க பத்திரிகைக்காரர்தானே… நல்ல பத்திரிகைக்காரனுக்கு நல்ல ஞாபக சக்தியும் இருக்கணும். நான்பேசறேன். நீங்க கேட்டுக்கொள்ளுங்கள். நோட்டுப் புத்தகம் எல்லாம் வேணாம். நான் பேசி அது உங்கள் மனதில் நிக்கலைனா நான் ஒழுங்கா சொல்லலை என்பதுதான் அர்த்தம்" என்றார் ஜே.கே. பேனாவை மூடி வைத்துவிட்டேன். சிங்கப்பூர் பெண்மணி அர்த்த புஷ்டியுடன் புன்னகைத்தார். அவர்கள் எமக்கு முன்னரேயே வந்திருந்தனர். அவர்களிடமும் குறிப்புக்குத் தடாபோட்டிருக்க வேண்டும் என்றே தோன்றியது.

நான் இக்கட்டுரைத் தொடரைப் பெரும்பாலும் குறிப்பேட்டின் உதவியின்றியே எழுதி வருகிறேன். ஜே. கேயுடனான சந்திப்பையும் நினைவில் இருந்தே எழுதுகிறேன். எனவே ஜே.கேயிடம் பாஸ் மார்க் பெற்ற மாணவர் என என்னைச் சொல்லிக் கொள்ளலாம். அவர் சில வார்த்தைகளைப் பேசுவது, சுழல் இருக்கையில் ஒரு அரை வட்டம் அடிப்பது பின்னர் பேச்சைத் தொடர்வது. நடுவே உரக்க ரசித்து சிரிப்பது என்பதாக அவரது உரையாடல் அமைந்திருந்தது.

என்னருகே சுழன்று வந்து,"உங்களுக்கெல்லாம் தமிழ் ஒருத்தாய். எனக்கோ அவள் மனைவி” என்று  சொன்னவர், ஏன் தெரியுமா? என்று கேட்டபடியே ஒரு அரை வட்டமடித்தார். பின்னர் திரும்பி வந்து,

"நான் படைக்கிறவன். அதனால் அவள் எனக்கு மனைவி. மனைவியும் ஒரு வகையில் தாயல்லவா!" என்றவர் கடகடவென சிரித்தார்.

"தமிழ் நாடகத்துறை என்கிறார்கள். தமிழில் நாடகமே கிடையாது. தமிழகத்தில் போடப்படுபவை நாடகங்களே கிடையாது. நான் நல்ல தமிழ் நாடகங்களைப் படித்திருக்கிறேன். இயல் இசை, நாடகம் என்கிறோம். எங்கே ஐயா நாடகம் வந்தது? தமிழ் இலக்கியத்தில் நாடக இலக்கியம் என்ற ஒன்றை முடியுமானால் எடுத்துக் காட்டுங்களேன்! தமிழுக்கு நாடகம் புதிது. இறக்குமதி செய்யப்பட்டது. சிறந்த நாடகங்கள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் இருக்கின்றன. தமிழில் முதல் நாடக நூல் மனோன் மணியம். அதை எழுதியவர் தன் முகவுரையில் இது ஒரு ஆங்கில நாடகத்தின் தழுவல் என்கிறார். ஆக, தமிழின் முதல் நாடகமும் ஒரிஜினல் கிடையாது தழுவல்தான். இதனால் தான் நான் நாடகம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காக நாடகம் எழுதினேன். நல்ல நாடகம் வாசிக்கப்பட வேண்டியது".

நாடகம் பற்றி ஜெயகாந்தன் கூறியவற்றை நாடகக் கலைஞரான கலைச் செல்வன் கூர்ந்து கேட்டுக் கொண்டார். நான் மனதில் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment