Wednesday, March 30, 2016

இந்திய விடுதலைக்காக நேதாஜியுடன் இணைந்து போராடிய ஒரு தியாகியின் கதை

தியாகி பென்ஷனில் காலம் தள்ளிய வைர வியாபாரி


அருள் சத்தியநாதன்


சுதந்திர வேள்வியை 'கண்ணீர் விட்டே வளர்த்தோம்' என்று விவரித்தார் பாரதி. எத்தனையோ ஆயிரம்பேர் உயிர்த்தியாகம் செய்த வேள்வி அது. 2006ம் ஆண்டு சென்னை சென்றிருந்த போது பர்மாவில் வைர வியாபாரியாக செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அமீர் அம்சா என்ற சுதந்திர போராட்ட வீரரை சந்திக்க நேர்ந்தது. அவரைப் பற்றிய உண்மைக் கதை இது.

லங்கையின் சுதந்திரத்திற்காக தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாகப் போராடினார்கள். சுதந்திரம் வந்த பின்னரே பிரச்சினைகள் கிளம்பின. இந்தியாவில் காங்கிரசுடன் இணைந்து முஸ்லிம்களும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரம் கிடைக்கும் தறுவாயில் பிரிவினை கோஷம் கிளம்பி மேற்கு வங்காளம் கொலைக்களமாகியது. முஸ்லிம்களும் இந்துக்களும் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். வெளியாரின் ஆட்சியின் கீழ் ஒற்றுமை காப்பதும் சுதந்திரம் பெற்றதும் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்ப்பதும் உலகின் பல நாடுகளில் இப்போதும் அரங்கேறும் கொடிய நிகழ்வாகத் தொடர்கின்றது.
வி.கே.டி.பாலனுடன் அம்சா

இவ்வாறான ஒரு சோகமும் வீரமும் நிறைந்த கதைதான் அமீர் அம்சாவின் கதை. இவரை நான் 2006ம் ஆண்டு சந்தித்த போது இவருக்கு 88 வயது. 2010ம் ஆண்டு இவரை கோவை செம்மொழி மாநாட்டிலும் சந்தித்தேன். இராமநாதபுரம் அபிராமம் இவருக்குப் பூர்வீகம். பிறந்தது வளர்ந்தது எல்லாம் பர்மாவில் ரங்கூனில். இவரது குடும்பம் வைர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த செல்வந்த குடும்பம். அதாவது 'சில்வர் ஸ்பூ'னுடன் பிறந்தவர் தான் அமீர் அம்சா. இன்று படு ஏழையாக தியாகிப் பென்சனை நம்பி காலத்தை ஓட்டி வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே வால்டாக்ஸ் தெருவில் ஒரு சிறு வாடகை வீட்டில் ஒதுங்கிக்கிடக்கிறார் இந்த முன்னாள் வைர வியாபாரி.

ஒரு வைர வியாபாரி இன்று தியாகி பென்சனில் காலத்தைக் கடத்த வேண்டி இருக்கிறது என்றால் ஒன்றில் அவர் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்தவராக இருக்க வேண்டும். அல்லது இலட்சிய வீரராக இருந்திருக்க வேண்டும். இவர் செய்த தவறெல்லாம் தாய் நாட்டை முழு மனதுடன் நேசித்ததும் நேதாஜியை தானைத் தலைவராக ஏற்றுக் கொண்டு இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராடியதுமாகும்.

இவரைச் சென்னையில் 2016ம் ஆண்டு சந்தித்தேன். மதுரா வி.கே.டி. பாலனை எழும்பூரில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அருமையான மனிதரை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அப்படியே அசந்துபோய்விடுவீர்கள் என்று சொன்னார். யாரோ ஒரு நடிகரைத்தான் பார்க்கப் போகிறோம் என நினைத்துக் கொண்டிருக்க பாலனின் அலுவலகத்தில் நான் சந்தித்தது ஒரு முதியவரை. அவர்தான் அமீர் அம்சா.

இவரது அப்பாவின் பெயர் எம்.கே. மொஹிதீன் ராவுத்தர். அபிராமம் சுப்பிரமணியம் கோயில் பக்கத்தில் இவரது வீடு அமைந்திருந்தது. ராவுத்தரின் குடும்ப உறுப்பினர்கள் பர்மாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். ராவுத்தருக்கு ரங்கூனில் வைர வியாபாரம். வெள்ளி, தங்க வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார். அம்சாவுக்கு 10 வயதான போது படிப்புக்காக அவரை பர்மாவுக்கு அனுப்பினார்கள். ரங்கூன் ரென்டேரி உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற அம்சா அவர்களது மூன் லைட் ஜுவலர்ஸ் நகைக் கடையில் ஓய்வு நேரங்களில் வேலை செய்வது வழக்கம். அங்கே 16 பேர் வேலை செய்தார்கள். அப்போது சவரன் விலை 30 ரூபா.

அம்சா படித்தது 9ம் வகுப்புவரைதான். ஹிந்தி, தமிழ், உருது, அரபி, பிரென்சு மொழிகள் இவருக்கு நன்றாக வரும். 1939ல் இரண்டாம் மகா யுத்தம் ஆரம்பித்ததும் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியதாயிற்று. அக்காலத்தில் பர்மாவில் 10 இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இதைத் தவிர தமிழர்கள் அல்லாத 5 இலட்சம் இந்தியர்களும் அங்கு வாழ்ந்து வந்தனர்.

அம்சா பணக்கார குடும்பத்தவராக இருந்த போதிலும் சுதந்திர தாகம் மிக்கவராக இருந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தை உன்னிப்பாக அவதானித்து வந்தார். பர்மாவில் அப்போது சுதந்திர இயக்கங்கள் பற்றிய தமிழ்ப் பிரசுரங்கள் கிடைக்கும். அவற்றைப் படித்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அவர் தெரிந்து கொண்டார். தன் நண்பர்களுடன் சுதந்திரப் போராட்டம் பற்றி இரகசியமாக கலந்துரையாடுவார். ஏனெனில் வைர வியாபாரியான இவரது அப்பா அழுத்தமான ஒரு பிரிட்டிஷ் ஆதரவாளர். ஆங்கிலேயரை அனுசரித்துப் போக வேண்டும் எனக் கருதிய சராசரி பணக்காரர். சுதந்திரப் போராட்டம் அவருக்குப் பிடிக்காத விசயம். செண்பகராமன், அரவின்தகோஷ் ஆகியோர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் நாடு கடத்தப்பட்ட செய்தியை அம்சா அறிந்திருந்தார். அவரது சுதந்திர வேட்கையை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய இளமையின் கனவு மற்றும் நேர்வழி ஆகிய இரு நூல்களும் வெ. சாமிநாதசர்மா எழுதிய ஒரு புத்தகமும் மென்மேலும் கிளர்ந்தெழச் செய்தன.
அமீர் அம்சா


இந்நிலையில் 1942ம் ஆண்டு ராஜ்பிகாரி போஸ் மற்றும் அரவிந்த போஸ் ஆகிய இரு வங்காளிகள் இந்திய சுதந்திரக் கழகம் என்ற பெயரில் ஒரு சுதந்திரப் போராட்ட அமைப்பை பர்மாவில் ஆரம்பித்தனர். அமீர் அம்சாவுக்கு அப்போது 19 வயது. இக்கழகத்தில் சேர்ந்த முதல் ஆள் அம்சாதான். ஆனால் பிரிட்டிஷ் இராணுவம் ராஜ்பிஹாரியைக் கைது செய்து நாடு கடத்தியது. இக்கழகத்தின் உறுப்பினர்களான ஐம்பதாயிரம் இளைஞர்கள் தலைவர் இல்லாமல் தவித்தனர்.

இந்த இளைஞர்களுக்கு தலைவனாகத் தெரிந்த ஒரே நபர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான். நேதாஜி லண்டனில் சிவில் நிர்வாகம் படித்தவர். காந்திஜியின் அஹிம்சை போராட்டம் சரிப்பட்டு வராது என உறுதியாக நம்பியதால் காங்கிரஸ் கட்சியில் அவரால் நீடிக்க முடியவில்லை.

இவர்கள் போசுக்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்தனர். நாங்கள் ஐம்பதாயிரம் பேர் பர்மாவில் தலைவன் இல்லாமல் இருக்கிறோம். எங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக உடனடியாக பர்மா வரவும் என அனுப்பிய செய்தியை நேதாஜி ஏற்றுக் கொண்டார்.

நேதாஜி அப்போது ஜெர்மனியில் இருந்தார். ஹிட்லருடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி ஜெர்மனிய நீர்மூழ்கியின் உதவியுடன் பல மாதங்களாகப் பயணம் செய்து ஜப்பானுக்கு வந்து சேர்ந்தார் நேதாஜி. கிழக்காசியாவில் சுற்றுப் பயணம் செய்து லட்சக்கணக்கான இந்தியர்களைச் சந்தித்த அவர், இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து ஜெர்மன் மற்றும் ஜப்பானின் உதவியுடன் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுப்பதற்குத் திட்டமிட்டிருந்தார். அம்சாவின் 50 ஆயிரம் பேரின் துணை இத் துணிச்சலான முடிவை எடுக்க அவருக்கு உதவியிருக்க வேண்டும்.

இந்திய சுதந்திரக் கழகத்தில் அம்சா முக்கிய உறுப்பினர். நேதாஜி ரங்கூனுக்கு வந்தபோது இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. ரங்கூனில் நேதாஜி கலந்து கொண்ட கூட்டத்தை அம்சாதான் ஏற்பாடு செய்திருந்தார்.

“எனக்கு அப்போது 24 வயது இருக்கும். நேதாஜிக்கு 44 வயது இருக்கலாம். அவரை முதன் முதலாகக் கண்டபோது கடவுளையே கண்டமாதிரி இருந்தது. முகத்தில் அப்படியொரு தேஜஸ். கம்பீரத் தோற்றம். அற்புதமன பேச்சாற்றல். அவரை நேரில் பார்த்ததுமே இவர்தான் என் தலைவர் என்பதை உணர்ந்து கொண்டேன். இன்றும் அப்படித்தான் நினைக்கிறேன். ஐ.என்.ஏ. என்ற இந்திய தேசிய இராணுவம் தன் முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் இந்து – முஸ்லிம் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. பாகிஸ்தான் பிரிவினையும் நடந்திருக்காது. ஏனெனில் ஐ.என்.ஏ. இராணுவத்தில் ஏராளமான முஸ்லிம்கள் இருந்தனர். உயர் இராணுவ அதிகாரிகளாகவும் கடமையாற்றினர்” என்கிறார் அம்சா.

“அந்தக் கூட்டத்துக்கு முதல் தடவையாக இராணுவ உடையில் நேதாஜி வந்திருந்தார். சுமார் மூன்று இலட்சம் பேர் அங்கு திரண்டிருந்தனர். அன்றுதான் எங்கள் கோரிக்கையை ஏற்று அவர் இந்திய தேசிய இராணுவத்துக்குத் தலைமை ஏற்றார். சரியாக சொல்வதானால் அன்று 1943 அக்டோபர் 27ம் திகதி. நாம் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை எமது சுப்ரீம் கொமாண்டராக ஏற்றோம்”

அப்போது பர்மாவை ஜப்பானிய இராணுவம் கைப்பற்றியிருந்தது. அந்தமான் தீவுகளும் ஜப்பானியர் வசம் வீழ்ந்திருந்தது. நேதாஜி சுதந்திர இந்திய அரசை பர்மாவில் இருந்து பிரகடனப்படுத்தினார். இந்த அரசுக்கு ‘ஆஸாத் ஹிந்த்’ எனப் பெயரிட்டார். இந்த சுதந்திர அரசை ஏழு நாடுகள் அங்கீகரிக்கவும் செய்தன. ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சீனா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. அச்சமயத்தில் இந்நாடுகள் ஜெர்மனி மற்றும் ஜப்பானிய படையினர் வசம் வீழ்ந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

“அந்தப் பொதுக் கூட்டத்தில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் நேதாஜி உணர்ச்சிமயமாக உரையாற்றினார். உங்கள் பிள்ளைகளை எனக்குத் தாருங்கள், நிதி தாருங்கள், இரத்தம் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோடு ஆயிரக்கணக்கானோர் எழுந்து நின்று ஆரவாரித்தனர். பெண்கள் தமது ஆபரணங்களைக் கழற்றிக் கொடுத்தனர். நேதாஜிக்கு போடப்பட்ட மாலை முதலாவதாக ஏலம் விடப்பட்டது. பத்தாயிரம் ரூபாவுக்கு அதை ஒருவர் வாங்கினார். லட்சங்கள் நிதியாகக் குவிந்தன…”
ஆயுதம் ஏந்திப் போரிட்ட மேஜர் லச்சுமி-இளமை,முதுமை
இவ்வாறு எம்மிடம் கூறிய போது அம்சா இந்த வயதிலும் உணர்ச்சிவசப்பட்டார். இச் சமயத்தில், "நேதாஜி இப்போது உங்கள் முன் தோற்றுகிறார் என வைத்துக் கொண்டால் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்வியைக் கேட்டார் வி.கே.டி. பாலன்.

“அடுத்த நிமிஷமே நிம்மதியாகச் செத்துப் போய் விடுவேன்” என்று பதில் சென்னார் அமீர் அம்சா. அப்படி ஒரு நேதாஜி பாசம்!

அப்பாவின் கடையில் பணியாற்றுபவர் என்ற வகையில் அம்சா பெயரில் ஒரு வங்கிக் கணக்கிருந்தது. அப்போது அமசா ஒரு காரியம் செய்தார். சுதந்திரத் தாகத்துடன் உணர்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அம்சா. ஏலத்துக்கு வந்த இரண்டாவது மாலையை வாங்க முடிவு செய்து ஏலம் கேட்டார். முடிவில் மூன்று இலட்சம் ரூபாவுக்கு அம்மாலையை வாங்கிய அம்சா,  அதற்கான பணத்தை காசோலையாக நேதாஜியிடம் கொடுத்தார். அப்போது ரங்கூனில் ஜப்பானி வங்கிகள்தான் இயங்கி வந்தன. யோஹோமா வங்கியில்தான் அம்சாவுக்கு கணக்கு இருந்தது. சேகரிக்கப்பட்ட பணத்தையும் நகைகளையும் மேடையில் குவித்துக் கொண்டிருந்த நேதாஜி அம்சாவின் காசோலையை மட்டும் தன்னுடன் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

மறுநாள் அம்சாவை அழைத்த நேதாஜி, "நீ மூன்று லட்சம் ரூபா கொடுத்ததை அப்பா அறிவாரா?" என்று கேட்டிருக்கிறார். "இல்லை" என்றிருக்கிறார் அம்சா. உடனே, “அப்பாவிடம் போய் விஷயத்தைச் சொல்லிவிட்டு வா” என்று அம்சாவை அனுப்பி வைக்க, அப்பாவின் முன் நிற்பதற்கு தைரியமில்லாத அம்சா, இரண்டு தினங்களாக நண்பர்களின் வீடுகளில் ஒளிந்து திரிந்திருக்கிறார்.

"இறுதியாக நேதாஜி கரீம் கனி என்ற தனது அமைச்சரை அனுப்பி அம்சாவின் அப்பா இராவுத்தரை தன் அலுவலகத்துக்கு அழைத்திருக்கிறார். இதற்குள் மூன்று லட்சம் (இன்று இதன் பெறுமதி ஆறு கோடியாக இருக்கலாம்) ரூபாவை மகன் தானம் செய்த செய்தி இராவுத்தரை சென்றடைந்திருந்தது. அப்பா நேதாஜி அனுப்பிய ஜீப்பில் வந்தார். ஆஸாத் ஹிந்த் அரசில் அமைச்சராக இருந்த கரீம் கனி தான் அவரை அழைத்து வந்தார். வாசல்வரை வந்த நேதாஜி கையைப் பிடித்து தன் அறைக்கு அப்பாவை அழைத்துச் சென்றார். அப்போது அப்பாவுக்கு அறுபது வயதிருக்கும். பழரசம் வரவழைத்து பருகக் கொடுத்தார். கனிவான குரலில் நேதாஜி அப்பாவிடம் பேசத் தொடங்கினார்.

"உங்கள் பையனை எங்களுக்கு நன்கு பிடித்திருக்கிறது. நான் கூட பெரிய படிப்பான ஐ.சி.எஸ். படிப்பை பாதியில் துறந்து விடுதலைப் போராட்டத்தில் குதித்தேன். பம்பாயில் கலெக்டர் வேலை கிடைத்தது. உதறிவிட்டேன். எனவே இவனை எங்களுடன் வைத்துக் கொள்ள அனுமதி வேண்டும"என்று தந்தையிடம் சொன்னார். "என் மகனைப் போல பையனைப் பார்த்துக் கொள்வேன்" என்று சொன்ன போது அப்பா உருகிப் போனார். உடனே அவர் ஆஸாத் ஹிந்த் வங்கியின் பெருக்கு இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாவுக்கு காசோலை ஒன்றை நேதாஜியிடம் வழங்கினார். இச்சம்பவம் நேதாஜி எவ்வளவு மனித நேயம் கொண்ட மென்மையான மனிதர் என்பதை எங்களுக்கு புட்டுக் காட்டியது" என்றார் அம்சா.(தொடரும்)

No comments:

Post a Comment