Thursday, March 17, 2016

இருள் உலகக் கதைகள்


வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்-மணி  ஶ்ரீகாந்தன்

விசாவளையை ஒட்டியிருக்கும் ஒரு பெரிய இறப்பர் தோட்டம் அது. அங்கே ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வந்தாலும், மாலை நெருங்கிவிட்டால் ஆள் நடமாட்டம் குறைந்து ஆள் அரவமற்று போய்விடும். இதுநாள் வரையும் இரவு பத்து மணியை கடந்த பின்பும் வீட்டுக் கதவை திறந்து வைத்தபடி டீவியிலே மெகா நாடகம் பார்க்கும் குடும்பப் பெண்கள், பெட்டிக் கடைச் சந்தியில் சிகரெட்டை வாங்கி ஊதித்தள்ளியபடியே நள்ளிரவு வரை வெட்டிக்கதை பேசும் இளசுகள் என்று இப்போது யாரையும் பார்க்க முடிவதில்லை. மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊர் அடங்கி விடுகிறது. தெருக்களில் அலையும் கட்டாக்காலி நாய்களின் ஊளைச் சத்தம் அந்த அமானுஷ்யம் நிறைந்த இரவுப் பொழுதுகளை மேலும் படு பயங்கரமாக மாற்றிக் கொண்டிருந்தது. சமீபகாலமாகவே அந்த தோட்டத்தை பயம் சூழ்ந்த ஒரு இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.

"இந்த ஊரில் இப்போ ஒரு ஐந்து வருசமா மாடனுக்கு ஆடு வெட்டி பூசை கொடுக்கிறது கிடையாது. அதனால,ஊர் காக்கும் மாடன் சும்மா இருக்கான். அந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த பேய்கள் மாலை ஆகிட்டாலே ஊருக்குள்ள நுழைந்து ஆட்டம் போட ஆரம்பிக்குதுங்க. இதற்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை" என்று அந்த ஊர் பெரிசு புலம்பிக் கொண்டிருந்தது.
வீரசிங்கம் பூசாரி

இரவு நேரத்தில் வீட்டுக் கூரைகளில் மண் விழுவதும், பூமி அதிரும் வண்ணம் யாரோ ஓடுவது மாதிரியான ஓசைகளும் அந்தப் பகுதி மக்களை கிலி கொள்ளச் செய்திருந்தது. அந்தத் தோட்டத்தில் ரொம்பவும் தைரியசாலியாக உலா வருபவன்தான் கந்தன். அடிதடி, வெட்டுக்குத்து என்று எது நடந்தாலும் அங்கெல்லாம் கந்தன்தான் பெரிய 'மாஸ்' ஹீரோ! அவன் மட்டும்தான் நள்ளிரவிலும் அந்த ஊரில் நடமாடும் மனித ஜீவன். ஆனால் அன்றொருநாள் சடா மரத்தடியில் மூர்ச்சையாகிக் கிடந்த கந்தனை சில இளைஞர்கள் தூக்கி வந்து பேயடித்து விட்டதாகச் சொன்னார்கள்.

பிறகு கந்தனுக்கு பூசாரிகள் மந்திரித்த கயிறு கட்டியும் ஒண்ணும் பலிக்காததால் வீரசிங்கம் பூசாரியை அழைத்து வந்து பரிகாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

பூசாரி அந்த பூஜை மன்றில் அமர்ந்து தனது குலதெய்வத்தை நினைத்துக் கும்பிட்டார். அப்போது அவர் உடல் சிலிர்த்தது. மந்திரங்களை உச்சாடனம் செய்யத் தொடங்கிய போது வீட்டுக்குள் மயங்கிய நிலையில் படுத்திருந்த கந்தன் திடீர் பலம் பெற்றவனாக எழுந்து பூசாரி எதிரே ஆக்ரோஷத்தோடு வந்து நின்றான்.

"ஏய் பூசாரி! உடனே உன் சித்து வேளையை நிறுத்து!" என்று கர்ஜித்தான். அதைக் கேட்ட பூசாரி கொஞ்சம்கூட அசராமல் பலமாக சிரித்தபடியே "எனக்குக் கட்டளை போட நீ யார்?" என்று கேட்டார்.

"நான்தான்டா பலராமன்!"
அங்கு கூடியிருந்தவர்கள் பலராமன் யார் என்பது புரியாமல் விழித்தார்களாம். பலராமன் யார் என்பது கூடியிருந்தவர்களுக்கும் தெரியாததால் அந்த துஷ்ட ஆவியை பூசாரி மிரட்டி விசாரிக்கத் தொடங்கினார்.

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கண்டி பிரதேசத்தில் பலராமன் என்பவன் அவலச் சாவு அடைந்து துஷ்ட ஆவியாக மாறி ஒரு இளம் பெண்ணின் உடம்பிற்குள் இறங்கியிருந்தானாம். அந்த ஆவியை விரட்டப்போன தாண்டவன் பூசாரி, பல முயற்சிகளின் பின்னர் தலைமயிர் வழியாக அந்த ஆவியை ஒரு போத்தலுக்குள் பிடித்து அடைத்தார். அந்த ஆவியை ஆழக்குழி தோண்டி புதைப்பதற்காக தாண்டவன் பூசாரி மயானத்தை நோக்கி நடந்த போது பலராமன் ஆவி, பூசாரியிடம் உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடியிருக்கிறது. பூசாரிக்கு காலம் முழுவதும் உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அந்த எமகாதக ஆவி, தன்னை விடுவிக்கும்படி கேட்டிருக்கிறது. மனமிரங்கிய பூசாரி பலராமனை போத்தலில் இருந்து விடுவித்து தன்னுடைய அடிமையாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்திருக்கிறார்.

அண்மையில் பூசாரி இறந்துவிட அந்த அடிமைப் பேய் தன்னை அடக்கவும், காக்கவும் ஆளில்லாததால் சுதந்திரமாக ஊரைச் சுற்றித் திரிந்திருக்கிறது. இதுதான் வீரசிங்கம் பூசாரி தெரிந்துகொண்ட பலராமன் கதை.

விசயத்தை அறிந்த ஊர் மக்கள் வெல வெலத்துப் பயத்தில் உறைந்து போனார்கள்.

"கண்டியில் இருந்த என்னை அழைச்சிட்டு வந்து இங்கே என்னை அநாதையாக விட்டு விட்டு தாண்டவன் போயிட்டான். இப்போ என்னை யார் கவனிப்பார்? நீ அழைச்சிட்டு போறீயா?" என்று அந்த துஷ்ட ஆவி வீரசிங்கத்தைக் கேட்ட போது வீரசிங்கம் இதென்ன புதுக்கதையாக இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டார். ''சரி, உனக்கு அதுதான் பிரச்சினையா? அதுக்கு எதுக்காக இவனைப் பிடித்து ஆட்டுற? இவன விட்டுடு'' என்று வீரசிங்கம் ஆவியிடம் கேட்டார். அப்போது கந்தனை பேய் எதற்காக பிடித்து ஆட்டுகிறது என்பதை விபரித்தது.

கந்தன் அன்றும் அந்த இறப்பர் தொழிற்சாலையில் வேலை முடிந்து நள்ளிரவில் ஊருக்கு வரும் வழக்கத்தைக் கொண்டவன். இறப்பர் ஷீட்டுகள் காய்வதற்காக நெருப்புப் போடும் தீக்கிடங்கில் வேலை செய்பவன் அவன். ஒற்றையடிப் பாதையில் தனி ஒருவனாக நடந்து வருவான். இயல்பிலேயே தைரியசாலி என்பதால் இரவில் தனியாக வருவதில் அவனுக்கு பிரச்சினை கிடையாது. அடிக்கடி பீடி குடிக்கும் பழக்கமுள்ள அவன் அன்றைக்கு வரும்போது தீப்பெட்டியை கையோடு கொண்டுவர மறந்துவிட்டான். பீடியை பற்ற வைத்து இழுக்க வேண்டும் என்ற நமச்சல் வரவே, எப்படி பற்ற வைப்பது என யோசித்துக் கொண்டே நடந்தான்.

அப்போது அங்கே சடா மரத்தடியில் ஒரு மனிதன் அமர்ந்திருப்பதை அந்த கும்மிருட்டில் அவனால் பார்க்க முடிந்தது. கந்தன் அவனருகே சென்று "அண்ணே, கொஞ்சம் நெருப்பு கிடைக்குமா? பீடி பத்தணும்" என்று கேட்டான். அந்த மனிதன் மறு பேச்சுப் பேசாமல் சட்டென ஒரு கொள்ளியை எடுத்து நீட்டினான். நெருப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் அதை வாங்கி பீடியை பற்ற வைத்துக் கொண்டு கந்தன விசிலடித்தபடியே நடந்தான். பீடிக்கு நெருப்புக் கொடுத்தது யார் என்பதையெல்லாம் பற்றி கந்தன் யோசிக்கவில்லை.

அடுத்த நாள் அதே அர்த்த ராத்திரியில் கந்தன் ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்தான். குறிப்பிட்ட அந்த சடா மரத்தடிப் பக்கத்தில் வரும்போது அவன் கையிலிருந்த பீடித் துண்டு அணைந்து போனது. சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு துலாவிப் பார்த்தான். 'சே! இன்னைக்கும் தீப்பெட்டியை விட்டுட்டு வந்துட்டேனே'ன்னு நினைத்தபடி சடா மரத்தடிப் பக்கமாகப் பார்வையைச் செலுத்தினான்.

'நேற்று இங்கே உட்கார்ந்திருந்த அந்த ஆளு இருந்தாலும் நெருப்பு வாங்கலாமே' என்று நினைத்தபடியே மறுபக்கம் திரும்பிப் பார்த்தான். என்ன ஆச்சர்யம்! நேற்று நெருப்புக் கொடுத்த அதே மனிதன் அங்கே இருந்த ஒரு பாறாங்கல்லில் அமர்ந்திருந்தான். இருளில் அவன் முகம் தெளிவாகத் தெரியவில்லை. 'அவன் யாராக இருந்தால் நமக்கென்ன' என்ற நினைப்புடன் கந்தன் அவனிடம் சென்று 'நெருப்புக் கொஞ்சம் தர முடியுமா?' மெல்லிய குரலில் கேட்டான். அடுத்த நிமிடமே அவன் கையில் இருந்து ஒரு நெருப்புக் கொள்ளி நீண்டது. அதைப் பார்த்த கந்தனுக்கு கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் தைரியமாக நெருப்பை வாங்கிப் பற்றவைத்தான். வாயில் வைத்து பீடிக்கு நெருப்பை மூட்டியபடியே மூச்சை உள்ளிழுத்து ஒரு தம் பிடித்தான். இரவு நேர குளிரில் உடல் நடுங்கியவனுக்கு அது ரொம்பவே இதமாக இருந்தது. உள்ளிழுத்த புகையை வெளியே ஊதியபடியே எதிரே அமர்ந்திருந்த அந்த மனிதனை பார்த்தான். ஆனால், அங்கே அந்த மனிதனைக் காணவில்லை! கந்தனுக்கு உடல் தூக்கி வாரிப் போட்டது. அடுத்த நிமிசமே மறுபக்கம் திரும்பி சடா மரத்தைப் பார்த்தான். அப்போது கந்தன் கண்ட காட்சி அவன் ரத்தத்தையே உறையச் செய்தது. சடா மரத்து உயரத்தையும் மிஞ்சுகிற அளவுக்கு ஒரு கோரமான கரிய உருவம். வழியை மறித்து நின்று கொண்டிருந்தது. கந்தன் உடல் நடுங்கினாலும் அவன் தைரியத்தை கைவிடவில்லை. உடனே அவன் கையிலிருந்த கொள்ளியை எடுத்து அந்த உருவத்தை நோக்கி வீசிவிட்டு எதிர்ப்பக்கம் இருந்த முள்ளுக் காட்டுக்குள் குதித்தான்!

பலராமன் கந்தனை எப்படிப் பிடித்தான் என்பதை காட்சியாக அந்த துஷ்ட ஆவி சொல்லி முடித்த போது, கூடியிருந்த மக்கள் குலை நடுங்கிப் போனார்கள். ஊரில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு எல்லாம் யார் காரணம் என்பதும் அவர்களுக்குத் தெரிய வந்தது.

பிறகு வீரசிங்கம் பூசாரி அந்த ஆவியுடன் பேரம் பேசத் தொடங்கினார். அது, கோழி, சாராயம், கசிப்பு(நாட்டு சாராயம்) மற்றும் பொரித்த பண்டங்கள் என்பனவற்றையும் பீடிகளையும் கேட்டது. அவற்றை எல்லாம் ஏற்கனவே தயாராக வைத்திருந்ததால் ஆவிக்கு அவை படையலாக போடப்பட்டன. பல நாட்களாக கொலைப் பட்டினியில் கிடந்தது போல அந்த ஆவி அனைத்து உணவுகளையும் கபளீகரம் செய்து விட்டு, உண்ட களைப்பில் கீழே படுத்துவிட்டது. சமயம் பார்த்துக் காத்திருந்த பூசாரி அந்தப் பேயை மந்திரத்தால் கட்டி தலைமுடியைக் கத்தரித்து போத்தலில் போட்டு அடைத்தார்.

பிறகு வழக்கம் போலவே சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அதை புதைக்க முற்படும் போது அந்தப் பேய் பூசாரியிடம் மன்றாடி உயிர் பிச்சை கேட்டதாம். அதற்கெல்லாம் மசியாத வீரசிங்கம், என்னை நம்பி வந்த ஊர் மக்களை நான் கைவிட மாட்டேன். நீ ஒழிந்து போ! என்றபடி அந்தப் போத்தலை குழியில் போட்டு மூடினார். பலராமன் கதை அத்தோடு முடிந்தது!

No comments:

Post a Comment