Tuesday, March 15, 2016

சினிமானந்தா பதில்கள் -33

இலங்கை தமிழ் சினிமா வளர்கிறதா?
கவிதா, ஹேவாகம, பாதுக்க

துளிர் விடுகிறது என்று சொன்னால் தப்பில்லை.
'புதிய காற்று' உள்ளிட்ட பல இலங்கைத் தமிழ்ப் படங்களைத் தயாரித்த வி. பி. கணேசனின் மகனாக பிரபாகணேசன் இலங்கையில் புதிய தமிழ்ப் படமொன்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். இலங்கையின் தமிழ் - சிங்கள முன்னணி நடிகையொருவர் புலம்பெயர் நாட்டு இளைஞரொருவருடன் இதில் ஜோடி சேருகிறார்.
'கிங்ரட்ணம்' 'கோமாளி கிங்ஸ்' என்றொரு படம் தயாரிக்கிறார்.

அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் படகு அகதிகள் பற்றிய ஒரு படம் 'முடிவில்லாத முற்றுப்புள்ளி' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வடக்கில் உள்ள சில கலைஞர்கள் மலையகத்துக்குச் சென்று மலையக மண்வாசனையுடன் கூடிய படமொன்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள சில கலைஞர்கள் யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாண பாஷையில் ஒரு நகைச்சுவைப் படமொன்றைத் தயாரிக்கவுள்ளனர்.

கொழும்பிலுள்ள தமிழ்க் கலைஞர்கள் சிலர் மலையக மண்வாசனையுடன் கூடிய சிங்களப் படமொன்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இவை தவிர முழு நீள இலங்கைத் தமிழ்ப்படம் தயாரிக்கும் பல முயற்சிகள் திரைமறைவில் நடப்பதாகத் தெரிய வருகிறது.

முழு நீள தமிழ்த் திரைப்படங்களுக்கு முன்னோடியாக குறும்படங்கள் மற்றும் காணொளிப் பாடல்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டு பலரால் பாராட்டப்பட்டும் வருகின்றன.

வடக்கில் உள்ள திரையரங்குகளில் வாரா வாரம் இவ்வாறான ஒரு படமாவது திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் பல தரமாகவும் நிறைவாகவும் உள்ளன.

கவிமாறன் சிவாவின் ஜெப்னா என்ற குறும்படம் 30 நிமிடங்களுக்கு மேல் ஓடுகிறது. 'சோலையன்' காணொளிப் பாடல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

குவளை நீரில் இவை துளிகள் மட்டுமே.

புலம்பெயர் நாடுகளின் இளைஞர்களுடைய பங்களிப்பு இவ்வாறான குறும்படங்கள், காணொளிப் பாடல்கள் தயாரிப்புக்கு நிறையவே கிடைக்கிறது.

வடக்கில் இடம்பெறும் குறும்பட மற்றும் காணொளிப் பாடல் தயாரிப்புகள் மூலம் நடிகர்கள் கவிமாறன் சிவா, ஜெராட் நொயேல், நடிகைகள் மிதுன் மிதுனா, லோஜினி பெண் இயக்குநர் ஷாலினி சார்ளஸ் உள்ளிட்ட பலர் வடக்கின் பெயர் சொல்லும் பிள்ளைகளாகியுள்ளனர்.

இதற்கிடையே கவிஞர் அஸ்மின், இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபா, பாடகர் தினேஷ் கனகரட்ணம் ஆகியோர் தென்னிந்திய தமிழ்த் திரைப்படத்துறைக்குள் நுழைந்து விட்டனர். அவர்கள் இனி இலங்கை தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்ற விரும்புவார்களா? உயரே சென்ற பிறகு கீழே இறங்கி வருவார்களா? அப்படி வந்தாலும் அவர்களது சம்பளத்தை இலங்கை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களால் தாங்க முடியுமா?

இதே சமயம் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களுக்கு இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் வழங்கும் உதவி ஒத்தாசை திருப்திகரமாக இல்லை. இவ்விடயத்தில் கூட்டுத்தாபனத்தின் ஆதரவினை முழுமையாகப் பெற்றுக்கொள்ள இலங்கை தமிழ் சினிமா கலைஞர்கள் தமக்கென ஒரு சங்கத்தை அமைத்துக்கொண்டு திரைப்படக் கூட்டுத்தாபன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் இலங்கை தமிழ் சினிமாவுக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தற்போது எந்தவொரு தமிழ் அதிகாரியும் பதவியில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.


நிறைய மலையாளப் படங்களை தமிழில் ரீமேக் செய்கிறார்களே?
எஸ். ராஜூ, கண்டி

குறைந்த பட்ஜெட்டில் கேரள மண்வாசனையுடன் வரும் சில படங்கள் அங்கு நன்றாக ஓடிவிட்டால் தமிழ் படாதிபர்களுக்கும் இயக்குநர்களுக்கும் உள்ளுக்குள் அரிக்கிறது. அந்தப் படங்களை தமிழ் பேச வைத்து நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிடுகிறது.

அந்த மண்ணில் வளர்ந்த செடியை அப்படியே கொண்டு வந்து இங்கே நடும்போது மண்வளம் ஒத்துக்கொள்ளாததால் அவை பட்டுப்போகின்றன. அண்மையில் வந்த பெங்களுர் நாட்கள் என்ற படத்தை (மலையாளத்தில் பெங்களுர் டேஸ்) பெயர் கூட மாற்றாமல் தமிழ்ப்படுத்தினார்கள். காட்சிக்கு காட்சி சுட்டிருந்ததை ஏற்றுக்கொள்வதற்கில்லை. கதாநாயகி தனது ஒன்றுவிட்ட சகோதர்களுடன் ஒரே கட்டிலில் படுத்திருப்பது (பிள்ளைப் பராயம் முதல் அப்பழுக்கற்ற நட்பு என்று இருந்தாலும் கூட) தமிழுக்கு ஒத்துவராது என்பது அந்த மலையாள இயக்குநருக்கு எப்படி தெரியாமல் இருந்தது? படம் மண்கவ்வ இது ஒன்று போதாதா.
மூலப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியிருக்க வேண்டும். சரியான நடிக நடிகையர்களை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவ்வாறின்றி தமிழுக்கு ஒத்து வராத நிலையில் படத்தை தயாரித்து அது ஓடும் என்று எதிர்பார்ப்பது விழலுக்கிறைத்த நீர்.

'பாபநாசம்', '36 வயதினிலே' ஆகியவற்றை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியிருந்தார்கள். அத்துடன் கமல், ஜோதிகா நடிப்பு மூலப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு அமைந்திருந்தது. இதனால் அப்படங்கள் ஓடின. அப்படி ஏன் மற்றைய இயக்குநர்களால் செய்ய முடியவில்லை?
யோசிக்க மறந்தது ஏனோ?

No comments:

Post a Comment