Sunday, March 6, 2016

இருள் உலகக் கதைகள்

தாகத்துக்கு தண்ணீர் வார்த்த    வெள்ளை மாது!


முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்

"ஏய் துஷ்ட ஆவியே! நீ என்கிட்டயே உன் வேலையைக் காட்டுறீயா…? நான் வெள்ளைக்கார பேயையே ஓட ஓட விரட்டியவன். என்கிட்டே உன் ஆட்டம் பலிக்காது" என்று ஆவேசமாக சாட்டையை சுழற்றினார் முத்துப்பூசாரி.

கடந்த ஒரு மாதமாக காமாட்சிக்கு பேய் பிடித்து ஆட்டும் விசயம், இரத்தினபுரிக்கு அண்மையிலுள்ள அந்தப் பெருந்தோட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஏனெனில் சுத்தமாகப் படிப்பறிவே இல்லாத காமாட்சி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி சிரிக்கிறாளாம்!

அந்தத் தோட்டத்தில் அமைந்திருக்கும் காட்டு பங்களாப் பக்கமாக விறகு பொறுக்க காமாட்சியும் அவன் கணவனும் சென்றபோதே ஏதோ காத்து கறுப்பு காமாட்சியை அண்டிவிட்டதாக குணபால மாந்திரீகர் மை போட்டுப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் ஒரு மாதமாக பேயை ஓட்ட எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் இப்போது முத்துப்பூசாரி களமிறங்கி அதகளம் செய்து கொண்டிருந்தார். முத்துப்பூசாரி தமது குலதெய்வமான சுடலை மாடனை அழைத்து, உடுக்கையை கையிலெடுத்து உரத்த குரலில் மந்திரங்களை உச்சாடனம் செய்ய, காமாட்சி ஆடத் தொடங்கினாள். ஆனாலும் காமாட்சியின் ஆட்டம் வழமையான 'தமிழ்' பேய்களின் ஆட்டம் மாதிரித் தெரியவில்லை. இது ஏதோ கிளப்பில் குடித்துவிட்டு வெள்ளைக்காரர்கள் ஆடுமாட்டம் மாதிரியிருக்க, பூசாரிக்கு ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புரிய ஆரம்பித்தது. 'இங்கே ஆட்டம் போடுவது நம்ம ஊரு பேயல்ல. இது ஒரு வெளிநாட்டுத் தீய சக்திதான்' என்கிற விசயம் முத்துவுக்கு கிளீயரான போது கோபம் கொண்ட அவர், 'ஏய் தீய சக்தியே! நீ ஒரு வெளிநாட்டு பேய்தான் என்கிற விசயம் எனக்குத் தெரிந்து விட்டது. இனி மறைக்கிறதுக்கு எதுவுமில்லை' என்று மிரட்டும் தொனியில் கத்தினார். ஆடிக்களைத்து அமைதியாக உட்கார்ந்திருந்த காமாட்சி அந்தப் பிரதேசமே அதிரும்படி சிரித்துவிட்டு, 'ஏய் கூலி பக்கர்… என்னையே மிரட்டுறீயா மேன் ஃபூல்….!' என்று காமாட்சி ஆங்கிலம் கலந்த தமிங்கிலீஸ் பேசினாள்.

வந்திருப்பது ஒரு வெள்ளைக்கார ஆவிதான். ஆனால், எப்படித் தோட்டத்திற்குள் வந்தது என்பது அங்கே கூடியிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"இந்த அப்பாவிங்க உனக்கு என்னடி துரோகம் செய்தாங்க, ஏன் அவங்களைப் பிடித்து ஆட்டுற?" என்று பூசாரி கேட்க, "ஏய் கன்றி புரூட்! நீ என்ன பேசுற? முதல்ல முனுசாமிகிட்டே என்ன நடந்துச்சுன்னு கேளுடா!" ஆவி பூசாரியைக் கடுமையாகக் கேட்டது. கொஞ்சம் அரண்டுபோன முத்து, காமாட்சியின் கணவனிடம் நடந்த விசயத்தைக் கேட்டார்.

"விறகு பொறுக்கி வரலாம்னு காட்டு பங்களாப் பக்கமாக நானும் என் மனைவியும் போனோம். வழமை போலவே அந்தப் பங்களா பாழடைந்து ஆள் நடமாட்டம் எதுவுமில்லாமல்தான் இருந்தது. பங்களாவின் பின் பக்கமாகவிருந்த இறப்பர் தோட்டத்திலிருந்த ஒரு மரத்தில் ஏறி ஒரு பெரிய காய்ந்த மரக்கிளையை வெட்டி சாய்த்தேன். அப்போ நேரம் மாலை ஐந்து மணியிருக்கும். பிறகு விறகை இரண்டு பேரும் சரிசமமாகப் பிரித்துக் கட்டி தலையில் வைத்தபடி நடந்தோம்.
முத்து பூசாரி
அப்போ அந்தப் பங்களாப் பக்கமாக யாரோ பேசுவது மாதிரிக் கேட்க திரும்பிப்பார்த்தோம். அங்கே அந்த பங்களாவின் வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். பார்க்க ரொம்பவும் அழகாக இருந்தாள். அப்போது என் மனைவி காமாட்சி,

'எனக்கு ரொம்பத் தாகமாக இருக்கு வாங்க அந்த அம்மாக்கிட்ட தண்ணீர் கேட்போம்' என்று சொல்ல நானும் புதுசா காட்டு பங்களாவுக்கு யாரோ குடி வந்திருக்காங்கன்னு நினைச்சு அவங்க பக்கத்துல போய் தண்ணீர் கேட்டோம். அதற்கு அந்தப் பெண் எதுவும் பதில் சொல்லாமல் வீட்டுக்குள் சென்றாள். அடுத்த நிமிடமே தண்ணீர் கிளாசோடு வெளியே வந்தாள். தண்ணீர் கிளாசை வாங்கி நீரைப் பருகிவிட்டு கிளாசைக் கொடுத்ததும் அதை அவங்கிய அவள், கையிலிருந்த ஒரு பார்சலை என் மனைவியிடம் கொடுத்தாள். மகிழ்ச்சியில் பூரித்துப்போன என் மனைவி, அந்தப் பையை வாங்கிக்கொண்டு, புதுசா குடி வந்திருக்கீங்களா? என்று கேட்டாள். அவள் பதில் பேசவில்லை. அவளுக்குத் தமிழ் புரியாதுன்னு நினைத்தபடி அவளைக் கும்பிட்டுவிட்டு வந்தோம்.

'வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தாங்க குடிக்கத் தண்ணீர் கேட்டா நமக்குத் தண்ணீரும் கொடுத்து ஏதோ பரிசுப் பொருளும் கொடுக்கிறாங்க, நம்ம நாட்டில் வெள்ளைக்காரனே இருந்திருந்தா நாம் சும்மா இருந்தே சாப்பிட்டிருக்கலாம்' என்று அந்த தண்ணீர் கொடுத்த உத்தமியை வாயாரப் புகழ்ந்தாள் காமாட்சி. அடுத்த சில நிமிடங்களிலேயே 'என்னங்க அவங்க கொடுத்த தண்ணீரைக் குடிச்சு தாகம் அடங்களங்க. தண்ணீர் குடிச்ச மாதிரியே இல்லை…' என்று அவ சொன்ன போது நான் அப்படியே திரும்பி தூரத்தில் தெரிந்த அந்தக் காட்டுப் பங்களாவைப் பார்த்தேன். மாலை மங்கி விட்டதால் பங்களா பார்ப்பதற்கு ரொம்பவும் பயங்கரமாகத் தெரிந்தது. அப்போது எதிரே வந்த மேட்டு லயத்து முருகனைப் பார்த்து நடந்த விசயத்தைச் சொல்லி பங்களாவில் ஆள் குடி வந்து இருப்பதையும் சொன்னோம். அவன் புன்னகைத்துவிட்டு 'பைத்தியமாடா உனக்கு…. அந்தப் பாழடைந்த பங்களாவில் யாருடா குடியிருப்பா? அப்படி யாராவது குடியிருந்தா அது பேயாகத்தான் இருக்கணும்' என்று அவன் சொன்னதைக் கேட்க எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

நாங்கள் ஒரு கணம் வெலவெலத்துப் போயிட்டோம். பிறகு என்னை அவசரப்படுத்தி காமாட்சி வீடு நோக்கி வேகமெடுத்து நடந்தாள். அப்போது அவள் கையிலிருந்த பையின் எடையும் படிப்படியாக அதிகரித்து வருவதை என்னிடம் சொன்னாள்…. குலை நடுங்கிப்போன நான் அந்தப் பையை வாங்கி நடுங்கிய கையினால் பையைப் பிரித்தேன்…. அப்போது அதற்குள் இருந்து பிணவாடை வீசியது. என் மனைவி பத்தடி தூரம் தள்ளிப்போக நான் பைக்குள் இருப்பதைப் பார்த்து அலறியே விட்டேன்! அதில் ஒரு கோரமான அழுகிய முகம் பல்லிலித்தபடியே கிடந்தது. பையைத் தூக்கிக் காட்டுப் புதருக்குள் வீசிவிட்டு திரும்பி என் மனைவியைப் பார்த்தபோது அவள் மூர்ச்சையாகிக் கிடந்தாள். பிறகு விறகுக் கட்டுகளை அங்கேயே போட்டுவிட்டு என் மனைவியை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்தேன்" என்று முனுசாமி முடித்தபோது முத்துப்பூசாரிக்கு முன்னால் மண்டிபோட்டு அமர்ந்திருந்த அந்த ஆவி அந்த ஊரே அதிரும்படி சிரித்து விட்டு    "பங்களாவில் அமைதியாக தூங்கிக் கிட்டிருந்த என் தூக்கத்தை விறகு வெட்டி இவங்க கெடுத்திட்டாங்க அதனாலதான் கோபப்பட்டு இவங்களுக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டிட்டேன்" என்ற விசயத்தை முத்துவிடம் ஆவி சொன்னதைக் கேட்ட முத்து, இது பழிவாங்குற பேய் இல்ல, கோபத்தில் கொஞ்சம் விளையாட்டுக் காட்டத்தான் அண்டியிருக்கு. இதை விரட்டுறது சுலபம் என்பதைப் புரிந்துகொண்டார். அவர் அந்த அசுத்த ஆவிக்கு நிறைய சாப்பிடக் கொடுத்தார். ஆனால் அந்த ஆவியோ சிகரெட்டைத்தான் அதிகமாக ஊதித்தள்ளியது. பிறகு ஆவியைப் பிடித்து மந்திரக்கட்டுப் போட்டு போத்தலில் அடைத்து சுடுகாட்டுக்கு சென்று புதைத்துவிட்டு வந்தார். "என் வேலை முடிந்தது. இனி அந்த ஆவி இந்தப் பக்கம் வராது. ஆனா, இனி யாரும் அந்தக் காட்டுப் பங்களாப் பக்கம் போகாதீங்க. அங்கே இன்னும் எத்தனை பேய்கள் இருக்குமோ யாருக்குத் தெரியும்?" என்று பீதியைக் கிளப்பி விட்டபடியே முத்துப்பூசாரி விடைபெற்றுச் சென்றார்.

No comments:

Post a Comment