Saturday, March 12, 2016

கலைஞர் கலைச்செல்வனுடன் ஒரு அதிரடி பேட்டிநேரில் -மணி ஶ்ரீகாந்தன்

ம் நாட்டுக் கலைத்துறையில் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக தனிக்காட்டு ராஜாவாக உலா வருபவர் கலைஞர் கலைச்செல்வன். வயது முதுமையைத் தொட்டிருந்தாலும் உள்ளத்தால் இன்னும் இருபது வயது இளைஞராகவே இருக்கிறார். 'கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு… கண்ணாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு…' என்று இன்றைய இளசுகளுக்கான பாடல்களையும் அதே இளைய மனதோடு பாடி ரசிக்கக்கூடியவர்.

கொம்பனி வீதியில் உள்ள கலைச்செல்வனின் வீட்டில் அவரை ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.

உங்கள் ஊர் கொழும்பா? பிறந்தது, வளர்ந்தது பற்றிக் கொஞ்சம்…

"பூர்வீகம் தமிழகம் திருநெல்வேலி மாவட்டம். நான் பிறந்தது கொழும்பு, வாழைத்தோட்டத்தில். என்னைப் பெற்றவர்கள் முகம்மது மொய்தீன், பாத்திமுத்து… இவர்களுக்கு தலைப்பிள்ளை"

நடிப்பு, நாடகம், மேடை இதெல்லாம் எப்போதிருந்து ஆரம்பம், விரும்பி வந்ததா, யாராவது வழிகாட்டினார்களா?

"படிக்கிற காலத்தில் நடிக்கும் ஆசை எனக்குள் இருந்ததில்லை. நான் ஒரு ஆசிரியராக வர நினைத்திருந்தேன். ஆனால், அப்போது தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த இயக்குநர் எம். என். ராஜரத்தினம் பிள்ளை தன்னுடைய நாடகப் பிரதியை என்னுடைய கையெழுத்தில் எழுதித் தரும்படி கேட்டார். என்னுடைய கையெழுத்து ரொம்ப அழகாக இருக்கும். நானும் அவர் சொன்னபடியே அதை எழுதி அவரிடம் கொண்டு சென்று கொடுத்த போது, அதைப்பார்த்த அவரும்,'அட ரொம்ப நல்லா இருக்கு, நீ நாடகத்தில் நடித்தால் என்ன?' என்று கேட்டார். நான் மறுத்து விட்டேன். அவர் விடவில்லை. இறுதியாக நான் 'இளவரசன்' என்ற அந்த நாடகத்தில் நடித்தேன். ஒரு துணைப் பாத்திரம்தான். இங்கே என் கையெழுத்து என் தலையெழுத்தை மாற்றிவிட்டது. அதற்குப் பத்திரிகைகள் கொடுத்த உற்சாகம், விமர்சனம் என்பன என்னில் இருந்திருக்கக் கூடிய கலை உணர்வைக் கொழுந்து விட்டெரியச் செய்தது. இக்கலை உணர்வுக்கு என் தந்தையும் ஒரு காரணம்தான்.

40ம் ஆண்டுகளில் கலைஞர்களின் குருகுலமாக இருந்த மனோரஞ்சித கான சபாவில் என் தந்தை ராஜபார்ட் வேஷம் போடுவார். அதனால் அவரின் இரத்தம் என் உடலில் இருக்கத்தானே செய்யும். அதற்குப் பிறகு தினகரன் நாடக விழாவில் எனக்கு ஆறு விருதுகள் கிடைத்தன. அதன் பிறகு 69 முதல் இன்றுவரை இந்தத் துறையை விட்டுக் கொஞ்சமும் விலகவில்லை" என்று நிதானமாகப் பேசினார் கலைச்செல்வன். இந்த வயதில் நின்று திரும்பிப் பார்க்கும்போது இந்தத் துறைக்கு வந்து வாழ்க்கையை வீணாக்கி விட்டோம் என்று நினைக்கிறீர்களா? என்று கலைஞருக்கு பொடி வைத்தோம்.

"இந்த வயதில் என்று குறிப்பிட்டீர்கள். நான் எனக்கு இன்னும் இருபதைத் தாண்டவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு நூற்றியிருபது வயதானாலும் சரி, நான் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம், நான் கடந்து வந்த பாதையைப் பார்த்து மகிழ்ச்சி அடைவேனே தவிர, வேறு எந்த உணர்வும் எனக்குக் கிடையாது. இந்தத் துறையில் பூரணமான ஆத்ம திருப்தி எனக்குக் கிடைத்திருக்கிறது" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் கலைச்செல்வன்.

தொழில் செய்திருக்கிறீர்களா? அலுவலகம் வீடு என்றிருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்கும் இல்லையா?

"நான் நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் மருதானையில் ஒரு புடவைக் கடையில் சேல்ஸ் மேனாக வேலை செய்திருக்கிறேன். எஸ். எஸ். சி. படித்துக் கொண்டிருந்த போதே நாடகத்திற்காக, என் படிப்பைத் துறந்தவன் நான். அதனால் திருமணத்திற்குப் பின் என் வாழ்க்கையை ஓட்ட ஒரு நல்ல கௌரவமான வேலை கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எப்படியும் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தால் துறைமுகத்தில் ஒரு லொரியில் க்ளீனராக ஒன்றரை மாதங்கள் பணியாற்றினேன். இப்படிச் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் அனுபவம்தான் மனிதனுக்கு ஒரு நல்ல பாடம். அனுபவத்தின் மூலமாகத்தான் ஒரு கலைஞன் எதையும் பிரதிபலிக்க முடியும். அனுபவமில்லாமல் பிரதிபலித்தால் அதில் ஜீவன் இருக்காது. அந்த இரண்டு தொழில்களின் பின்னர் இன்றுவரை கலைத்தொழில்தான்".

திருமணம், குடும்பம் பற்றிச் சொல்வீர்களா?

"தினகரன் நாடக விழாவில் எனக்குப் பரிசுகள் கிடைத்ததற்குப் பிறகு எனக்கு நிறைய இடங்களில் பாராட்டு விழா எடுத்தார்கள். அதில் பசறை குறிஞ்சி இலக்கிய பண்ணையின் சார்பில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அந்த வரவேற்பு பண்டாரவளையில் நிகழ்ந்த போது அங்கே இருந்த லக்ஷ்மி ஸ்டூடியோவையும் நான்தான் திறந்து வைத்தேன். அந்த நிகழ்வுக்குப் போகும்போது என் மனைவியின் அக்கா, (அப்போது எனக்குத் திருமணமாகவில்லை) 'நீங்க ஊருக்குப் போனா எங்க வீட்டுக்குப் போய் வாங்க'னு சொல்லி அனுப்பினார். நானும் அவங்க வீட்டுக்குப் போனேன். அங்கே வாசலில் ஒரு பெண் குட்டைப் பாவடையோடு நின்று கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் வெட்கத்தில் வீட்டுக்குள் ஓடி விட்டாள். பிறகு நான் வீட்டுக்கு வந்தேன். வந்தவுடன், என் அப்பா, 'டேய் நீ இப்படியே நாடகம், கூத்துன்னு போனா நல்லாயிருக்காது, நீயும் குடும்பமும் குடித்தனமுமாகணும். உனக்குக் கடவத்தையில ஒரு பொண்ணு பார்த்திருக்கிறேன் பார்க்கிறதுக்கு சரியா ஜெயலலிதா மாதிரி இருக்கும்'ன்னு சொன்னார்.

'நான் பண்டாரவளையில் பொண்ணு பார்த்திருக்கிறேன். அது சரியா 'சிவந்த மண்' காஞ்சனா மாதிரி இருக்கும்'னு நான் சொல்ல, 'தும்புக்கட்டையைத் தூக்குவேன்!' என்று அவர் கோபப்பட்டார். அதுக்கு நான், 'நீங்க சொல்லுறதத்தான் பண்ணனும்னு கட்டாயம் இல்லை. நீங்க ஜெயலலிதாவை பார்த்திருக்கேன்னு சொன்னீங்க. நான் காஞ்சனாவைப் பார்த்திருக்கேன்னு சொன்னேன். ஜெயலலிதாவா, காஞ்சனாவானு நீங்களே முடிவு பண்ணுங்க' என்றேன் நான். உடனே அம்மா, அப்பா பண்டாரவளைக்கு போனாங்க. ஒரே மாதத்தில் கல்யாணம். அவங்க பெயர் மஸாயிமா. அதாவது சிவந்த மண் காஞ்சனா" என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்.

மேடை வாழ்க்கையில் பல பெண்களை இளமையில் சந்தித்திருப்பீர்கள். காதல் இதயக் கதவைத் தட்டியிருக்கிறதா? என்று கலைக்குக் கொக்கி போட்டேன்.

கலை முன் ஜாக்கிரதையாக அவரின் மனைவியை அழைத்துக் கேள்வியைப் படித்துக் காட்டுகிறார். அதற்கு அவரின் மனைவி கண்களில் ஆச்சர்யம் காட்டிவிட்டு உள்ளே சென்றார்.

இளமையில் ஒரு பெண்ணோடு சந்திப்பு என்றாலே அது காதல்தான். அது கதவைத் தட்டத் தேவையில்லை. தானாகவே கதவு திறந்து கொள்ளும். அப்படி நிறைய அனுபவங்கள் இருக்கிறது. ஒண்ணு ரெண்டு இல்ல ஐந்து ஆறு காதல் இருக்கிறது. இதில் ஒளித்து மறைக்க ஒண்ணுமில்லை என்று பளீச்சென்று பதிலைச் சொல்லிவிட்டு கலை அடுத்த அறையை எட்டிப்பார்க்கிறார். (மனைவியின் ரியாக்ஷனை கவனிக்கிறார்போல)

தமிழ் பேசும் மக்களை எடுத்துக் கொண்டால் நடிக்க வரும் பெண்களுக்கு அங்கீகாரம் தர மாட்டார்கள். கேவலமாக பேசுவார்கள். இந்த மனப்பான்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"நடிக்க வரும் பெண்கள் மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அங்குள்ள பெண்கள் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள் என்றால் அதை கற்பனை செய்துதான் பேசுகிறார்கள் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட முடியாது. அதற்கு அவர்களின் நடத்தையும் காரணமாக இருக்கலாம்" என்று கூறிய அவரிடம் பெண்களின் தியாகம், துணிச்சல் பற்றியும் சொல்லுங்களேன் என்றேன்.

"தியாகம் பற்றிச் சொல்லலாம். ஆனால் துணிச்சல் பற்றிச் சொல்வதாக இருந்தால் அதில் நிறைய சங்கதிகள் பின்னணியில் இருக்கு. துணிச்சல் என்றால் நீ சார்ந்திருக்கும் துறையில் உன் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் துணிச்சலை வெளிப்படுத்தி இருந்தால் அதை நிச்சயம் பாராட்டலாம். அது இல்லாமல் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அந்தத் துணிச்சல் வருமானால் நமது பண்பாட்டையும், கலாசாரத்தையும் மீறிப் போகிறது என்றால், அந்தத் துணிச்சலைப் பாராட்ட முடியாது" என்று மனதில் பட்டதையெல்லாம் பட்டென்று சொல்லி விட்டு அடுத்த கேள்விக்கு தயாராகிறார்.

நம் நாட்டில் நாடகத்துறை வளர்ச்சி பெறுமா? அதற்கு என்ன செய்யலாம்? ஃபேஸ்புக் எல்லாம் வந்த பின்னர் நிலைமைகள் மாறி விட்டனவே என்பதுதான் கேள்வி.

"இந்த நாடகத்தின் வளர்ச்சி காலத்துக்குக் காலம் மாறுபட்டு வந்திருக்கிறது. சர்வதேச போக்கிற்கு அமையவே எந்தத் துறையும் வளர்ச்சியடையும். நாற்பதுகளில் தமிழக நாடகத்துறையில் சங்கரதாஸ் சுவாமியும் பம்பல் சம்பந்தம் முதலியாரும் முக்கியமானவர்கள். அதில் சுவாமிகள் இசைக்கு முக்கியத்துவத்தையும் முதலியார் உரை நடைக்கு முக்கியத்துவத்தையும் கொடுத்தார். அதற்குப் பிறகு திராவிட கழகத்தின் வருகையுடன் எழுத்து, பேச்சு என்று நாடகங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இது இளைஞர்களை வெகுவாக ஆகர்ஷித்தது. அந்த நாடகங்கள் நூல் வடிவிலும் வந்தன. அதை எல்லோரும் விரும்பி வாங்கிப் படித்தார்கள். அதே மாதிரித்தான் இங்கேயும் நாடகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதே நேரத்தில் வட இந்தியாவில் எல்பிஸ்ட்டன் அரங்கு குழுவினர் பார்ஸி நாடக முறையை அறிமுகமாக்கி இருந்தார்கள். இந்தப் பார்ஸி நாடகமுறை உலக நாடகமுறைகளோடு ஒட்டியிருந்தது. அதன் பிறகு தழுவல் நாடகங்கள் முறை வந்தது. அறுபது தொடக்கம் எண்பது வரை இந்நிலை நீடித்தது. எண்பதுக்குப் பிறகு பெரிய மாற்றத்தைச் சந்திக்கிறது. இதே போலத்தான் ஷேக்பியரின் குலோபல் நாடக அரங்கு ஏற்படுத்திய மாற்றம். 1919ல் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் யதார்த்த நாடக சூழல் உருவாகியது. அதே மாதிரி இங்கே 1956ல் வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் அரசில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அந்த அரசுதான் கலைக்காக ஒரு திணைக்களத்தையே உருவாக்கியது. அப்படி வந்த இந்தத்துறை எண்பதுகளிலிருந்து இந்த இரண்டாயிரத்து பத்து வரை முப்பது ஆண்டுகளுக்கு பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நாட்டில் நிலவிய இருள் சூழ்ந்த நிலமை. அதோடு முக்கியமான ஒரு விடயம், நமது கலைஞர்களிடம் வாசிப்பு, தேடுதல் என்பது சுத்தமாகவே கிடையாது. இதுபற்றி எனது குறுநாடகங்கள் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். வாழ்க்கையின் அத்திவாரமும் அஸ்திரமும் வாசிப்பும், தேடுதலும்தான். ஆரம்ப காலத்தில் பார்த்தீர்களென்றால் காக்கா, குருவி, சிங்கம், புலி, யானை பாத்திரங்களை வைத்துத்தான் சிறுவர் நாடகங்களை நடத்தினார்கள். ஆனால் இப்போது மிருகங்களே இல்லாத சிறுவர் நாடகங்கள்தான் மேடையேற்றப்படுகிறது. ஆனால் நாங்க இன்னும் அங்கேயேதான் நிற்கிறோம். ஆகவே கால மாற்றத்திற்கு ஏற்ப கருத்து மாற்றங்கள் வராத போது, கலையுலகத்திலும் நமது திறமைகளிலும் ஆற்றல்களிலும் மாற்றம் வராது என்பதே உண்மை" என்று நீண்ட விளக்கம் தந்த அவரிடம்,

எத்தனை நாடகங்கள் நூல்கள் என்பன பற்றி… சொல்ல முடியுமா? என்று கேட்டேன்.

"இதுவரை அறுபது நாடகங்களில் ஆயிரத்து ஐநூறு தடவைக்கு மேல் நடித்திருக்கிறேன். வானொலியில் ஒரு மூவாயிரம் நிகழ்ச்சிகள், சிறுகதை, நாடகம் என்று பட்டியில் ரொம்ப பெரிசு. அதோடு நிறைய நாடகங்களும் எழுதியிருக்கிறேன்.

உங்களுக்குப் பிடித்தமான உணவுகள் பானங்கள் பற்றி?

"எனக்கு பழைய சோற்றை தண்ணீரில் ஊற வைத்து குடிக்கும் அந்த நீர் ஆகாரம் ரொம்பவே பிடிக்கும். அதோடு சிகப்பு அரிசி சோற்றோடு பச்சையாக இருக்கிற காய்கறி குழம்பு ரொம்பவே பிடிக்கும். இந்த உணவுக்கு நம்மை இளமையாகவே வைத்திருக்கக் கூடிய மருத்துவக் குணம் இருக்கு. மற்றது பானம் பற்றிக் கேட்டீங்க அது உங்களுக்கு பானம் எங்களுக்குத் தீர்த்தம். அது என்னாணு உங்களுக்கே புரியும் (சிரிக்கிறார்)

கடந்து வந்த வாழ்க்கையைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? நிறைவாக இருக்கிறதா?

"எனக்கு ரொம்பவே நிறைவாக இருக்கிறது. எனக்கு பிள்ளைகள் ஐந்து பேர். அவங்க கல்யாணம் முடித்து பேரன் பேத்திகள் என்று மொத்தம் பதினோரு பேர் இருக்காங்க. இதே கேள்வியை என் மனைவியிடம் கேட்டாலும் இப்படியே தான் பதில் வரும். ஒரு மனைவியின் திருப்தியும் சந்தோஷமும்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுமை பெறச் செய்கிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

திருமணமாகாமல் சேர்ந்து வாழ்தல் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

"திருமணம் என்பது நம் முன்னோர்கள் வகுத்து விட்ட ஒரு மதச் சடங்குதான். இதை நாம் வாழையடி வாழையாக பின்பற்றி வந்திருக்கிறோம் அவ்வளவுதான். ஆனால், மதச்சம்பிரதாயங்கள் படி செய்யப்படுகிற திருமணங்கள் எல்லாம் காலம் முழுவதும் நிலைத்து நிற்கிறதா? காலம் பூராவும் கூடி வாழ்ந்து இருக்கிறார்களா? ஆகவே இல்லற வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதே தவிர, அந்தப் புரிந்துணர்வை இந்த திருமணங்கள் ஏற்படுத்தும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை" என்று அதிரடியாகப் பதிலளித்துவிட்டு எம்மை நிமிர்ந்து பார்த்தவரிடம், இப்படியும் கேள்விகளா? சீ! என்று ஆகிவிட்டதா? என்று கேட்டேன்.

"அப்படி ஆகவில்லை. இவ்வளவுதான் கேள்வியா ப்பூ! என்று ஆகிவிட்டது" என்று கலகலவென்று கலைச்செல்வன் சிரிக்க நாம் விடை பெற்றோம்.

No comments:

Post a Comment