Sunday, March 6, 2016

வீழ்ந்துவிட்ட வீரம், மண்டியிட்ட மானம்!
மணி ஸ்ரீகாந்தன்

ஒரு மனிதனின் காலில் இன்னொரு மனிதன் வீழ்ந்து கும்பிடும் பழக்கம் ஆறறிவு உள்ள மனிதர்களிடம் மட்டுமே காணப்படும் ஒரு அதிசய பழக்கமாகும். இந்தப் பழக்கம் ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடம் கிடையாது. ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தின் காலில் மண்டியிடுவதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

'தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்றான் பாரதி. ஆனால் நாம் அறிந்தவரையில் பாரதியின் இந்த வீரவசனம் வெறும் ஏட்டில் மட்டுமே கம்பீரமாக நிற்கிறது.

தமிழன் தலைசாய்த்து, நாலாக மடிந்து சாஸ்டாங்கமாக எவர் எவர் கால்களிலோ விழுந்து கிடப்பதைத்தான் நாம் அன்றாடம் செய்திகளிலும், நேரிலும் பார்க்கிறோம். வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது. ஒரு மனிதனின் காலில் இன்னொரு மனிதன் வீழ்ந்து கும்பிடும் பழக்கம் ஆறறிவு உள்ள மனிதர்களிடம் மட்டுமே காணப்படும் ஒரு அதிசய பழக்கமாகும். இந்தப் பழக்கம் ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடம் கிடையாது. ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தின் காலில் மண்டியிடுவதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆறறிவு கொண்ட மனித இனத்தில் மட்டுமே நாம் இதைப் பார்க்கிறோம். குறிப்பாக, இந்தப் பழக்கம் தமிழர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்து தமிழர்களிடம்! காலில் விழுவது தமிழனின் பண்பாட்டு கலாசார அம்சமாக போற்றப்படுகிறது. 'காலில் வீழ்ந்தாவது காரியத்தைச் சாதித்து விடுவேன்' என்று சிலர் பெருமையாகச் சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம். காலில் விழும் இந்தப் பழக்கம் எப்படி தமிழர்களிடம் வந்தது என்று தேடிப்பார்த்தால், தமிழர்களிடையே காணப்படும் சாதியம்தான் இதற்கான தோற்றுவாய் என்று சொல்லலாம்.
வர்ணாசிரமத்தின் பிரகாரம் உயர் குலத்தவர் எனப்படுவோர் தங்களுக்கு கீழானவர்களை அடிமைப்படுத்தி சமூக அமைப்பில் காணப்படும் பல்வேறு வழிமுறைகளின் கீழ் தம்மிடம் மண்டியிடச் செய்து வந்தார்கள். கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து, வசதி வாய்ப்பு என்பனவற்றில் உயர்குலத்தோர் முன்னணி வகித்ததால் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது வேலைகளை செய்து கொண்டார்கள். மனுதர்மத்தின்படி நான்காம் வர்ணத்தினர் கல்வி கற்பது தகாது. 'அது அவர்களுக்குரியதல்ல. அதைமீறிக் கற்றால் அடுத்த பிறவியில் வெளவ்வால் முகம் கொண்ட மனிதனாகப் பிறந்து வாயிலேயே உண்டு, வாயிலேயே மலம் கழிப்பாய்' என்று குறிப்பிட்டு இருந்ததால் அதை நம்பிய பாமர மக்கள் கல்வி கற்காமல் உயர் குலத்தோருக்கு ஆமாம், சாமி போட்டுக் கொண்டிருந்தர்கள். கடவுளுக்கு அடுத்தபடியாக, உயர் குலத்தோருக்கு பெரும் மரியாதை செய்து வந்தார்கள். இங்கேதான் காலில் விழுந்து வணங்குவது ஆரம்பமாகிறது.

அதன்பிறகு இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாக தமிழர்களிடையே தொடர்ந்தது. பின்னர் வர்த்த நோக்கங்களோடு ஐரோப்பியர் இந்தியாவுக்கு வருகின்றனர். அவர்களோடு ஐரோப்பிய கலாசாரமும் கிறிஸ்தவமும் கூடவே கல்வியும் இந்தியாவில் பிரவேசிக்கின்றன. அதுவரை காலமும் கருமேனியரான உயர் குலத்தவர்களைக் கண்டு நடுங்கி, மண்டியிட்ட இந்த சாதாரண மக்கள் வெள்ளை வெளேரென்று இருக்கும் மனிதனைக் கண்டதும் பிரமித்துப் போனானார்கள். இந்த உயர் சாதியினரை விட வெள்ளையன் அதி புத்திசாலியாகவும் விசித்திரமான பழக்கவழக்கங்களையும் கொண்டிருந்ததால், ஒரேயடியாக சாஸ்ட்டாங்கமாக அவன் காலில் வீழ்ந்தான்.
மன்னர்களை வணங்குவதில் ஒரு கம்பீரம் இருக்கும்
வெள்ளைக்காரனுக்கும் அப்போது அது தேவையாகத்தான் இருந்தது. 'நமக்கு ஒரு அடிமை சிக்கி விட்டான்' என்ற திருப்தியான மகிழ்ச்சி வெள்ளையனுக்கு! எல்லாவகையிலும் வெள்ளைக்காரன் உயர்ந்தவனே என இம்மக்களால் சுலபமாக முடிவெடுக்க முடிந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்வரை, தமது வேலை கொள்வோர் அல்லது 'பெரியவர்' என மதிக்கப்படுபவர்களை 'கும்பிடுகிறேன் சாமி' என விளிப்பது தமிழ் சமூகத்தின் பொதுப் புத்தியாக இருந்தது.

1920களின் பின்னர் இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் ஆகியோர் சாதியத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கம்யூனிஸ சிந்தனைகள் உழைக்கும் வர்க்கத்தை சிந்திக்க வைத்தது. பின்னர் வந்தவர் ஈ.வே. ரா. பெரியார், பெரும்பாலும் எழுத்திலும் பேச்சிலுமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களின் எழுச்சிக் குரலை, போராட்ட வடிவில் முன்னெடுத்தார். சாதி வேறுபாடுகளைக் களைய வேண்டுமென்பதை ரௌத்தரமாகச் சொன்னவர் அவர். கடவுளை ஒரேயடியாக மறுத்து புராணங்களைக் கடுமையாகச் சாடியதோடு ஒடுங்கிக் கிடந்த பெண்களின் விடுதலைக்காகவும் கலகக்குரல் எழுப்பினார். அவரது சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கமாக இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பெரியார் காலில் விழுந்து வணங்குவதை ஏற்கவில்லை. ஆனால் தி.மு.க. வில் இக்கலாசாரம் ஓரளவுக்கு வளர்க்கப்பட்டது. அ.தி.மு.க.வில் காலில்

விழும் கலாசாரம் பெரும் விருட்சமாக வளர்ந்து இன்று தோப்பாகி நிற்கிறது.

அங்கங்கே விழுந்தால் அது அ.தி.மு.க,அறிவாலயத்தில் மட்டும் விழுந்தால் அது தி.மு.க.என்று டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் எழுதும் அளவுக்கு நிலமைமை மோசமாகி விட்டது.

ஜெயலலிதா அம்மாவை கடவுளை சேவிப்பது போல காலில் விழுந்து கூச்ச நாச்சமில்லாமல் சேவிக்கிறார்கள். அம்மாவுக்காக தீச்சட்டி ஏந்தி, காவடி எடுத்து, மண்சோறு சாப்பிட்டு, தீ மிதித்து… இது பார்க்க அருவருப்பாகவும் தமிழ் சமூகத்துக்கு தலைகுனிவாகவும் இருந்தாலும் இதில் ஒரு கபட அரசியல் உள்ளது. அதைவிடுத்துப் பார்க்கும்போது, காலில் விழும் கலாசாரம் தமிழர்களிடம் ஊறிப்போனதாக இருப்பதால்தான் நாம் எந்த இடத்திலும் யார் காலில் வேண்டுமானாலும் விழத் தயாராக இருக்கிறோம். காலில் விழுதல் என்றதுமே இன்றைக்கு சட்டென ஞாபகத்துக்கு வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்.

திருமணமாகாத அவர் தன் காலில் அனைத்து ஆண்களும் நடுநடுங்கி வீழ்ந்து வணங்க வேண்டும் என்பதில் ஒரு குரூர திருப்தி அடைகிறார் என்று அவரது இச்செய்கை தொடர்பாக உளவியல் ரீதியாக அளிக்கப்படும் விளக்கம் ஏற்கக்கூடியதே. அமைச்சர்களே காலில் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கி, பணிந்து, நெளிந்து கும்பிடு போடும்போது, தாம் சிரமப்பட்டு பார்க்க விரும்பும் சக்தி வாய்ந்த அமைச்சர்களே அம்மா காலில் விழுந்து வணங்குகிறார்கள் என்றால் அம்மாவின் உயரமும், அந்தஸ்தமும் எவ்வளவு மகத்தானதாக இருக்க வேண்டும்! என்ற தன்னைப் பற்றிய பிரமிப்பை சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படுத்தித் தரும் என ஜெயலலிதா கருதுவதால்தான் காலில் விழும் கலாசாரத்தை அவர் கடைப்பிடித்து வருகிறார் போலும்!

முதல்வர் ஜெயலலிதாவை எப்படியெல்லாம் விதவிதமாக அமைச்சர்கள் வணங்குகிறார்கள் என்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. பரிணாம கோட்பாட்டில் குரங்கு எப்படி மனிதனானது என்பதை படிமுறையில் விளக்கும் வரைபடங்கள் உள்ளன. நான்கு காலில் நடக்கும் குரங்கு படிப்படியாக முள்ளந்தண்டை நிமிர்த்தி மனிதனாக நடக்கும். ஜெயலலிதாவை வணங்கும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்க்கும்போது கொஞ்சமாக இடுப்பைத் தூக்கி நிற்குமே குரங்கு, அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது! ஜெயலலிதா நிற்கும் இடத்தில் இருந்து பத்து அடி தூரத்திலேயே இரண்டாக வளைந்து கும்பிட்டபடியே நடந்து சென்று அவர் காலில் விழுவதைப் பார்க்க நமக்கு வேடிக்கையாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது.
இந்தப் பாணியில் வணக்கம் செலுத்தும்முறை அரசர் காலத்திலும் இருந்ததாகத் தெரியவில்லை. முழந்தாளிட்டு தரையில் நெற்றி படும் வகையில் வணங்கி பின்நோக்கி எட்டுக்கள் வைத்து திரும்பிச் செல்லும் கம்பீரமான வணக்கமுறை அரசர் காலத்தில் இருந்தது. ஆனால் மந்திரிகள் இவ்வாறு அரசரை வணங்குவதில்லை. அரசனைச் சந்திக்க வருபவர்கள் அரசனுக்கு செலுத்தும் மதியாதை இது!

இங்கே தமிழ்நாட்டுக்கு வந்தால் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான பன்னீர் செல்வம், ஜெயலலிதா வாகனத்தில் அமர்ந்திருக்க அந்த வாகனத்தின் டயரை தொட்டுக் கும்பிடுகிறார்! இதைவிட தமிழர்களுக்கு வேறு என்ன வெட்கக்கேடு இருக்க முடியும்? மனிதனுக்கு மிகமிக முக்கியமானது சுயமரியாதை. காந்திஜியின் அறப்போராட்டத்தின் ஆணிவேரே சுயமரியாதைதான். உப்புக்கான வரியை ஏற்காமல் சொந்தமாக உப்பு காய்ச்சுவேன் என்ற உப்பு சத்தியாக் கிரகமாகட்டும், வெள்ளையனே வெளியேறு இயக்கமாகட்டும் அல்லது அந்நிய துணி எரிப்புப் போராட்டமாக இருக்கட்டும். அனைத்து சுதந்திர போராட்டங்களும் 'நான் இந்தியன், இது என் நாடு' என்ற சுயமரியாதை உணர்வின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருந்தது. தமிழன் தன் இழந்த பெருமைகளை உணர வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் கட்டமைக்கப்பட்ட சமூக விழிப்புணர்வு போராட்டமே சுயமரியாதை இயக்கம் என அழைக்கப்பட்டது.
ஆனால் அந்த சுயமரியாதையை தமிழன் இன்று தொலைத்து நிற்பதாகவே நடப்பவற்றைப் பார்க்கும்போது நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் ஜெயலலிதாவை காலில் விழுந்து அமைச்சர்களும் ஏனைய அ.தி.மு.க. காரர்களும் வணங்கினாலும், தமிழகத்தில் சாஷ்டாங்க வணக்கம் பெரிய அளவில் இல்லை. அங்கே பாடசாலைகளிலும் இந்த காலில் விழும் கலாசாரமும் பரவலாக இல்லை. மத சார்பற்ற நாடு என்பதால் சமய வழிபாடுகள் (நவராத்திரி, சிவராத்திரி, பொங்கல், நத்தார் போன்ற சமய பண்டிகைகள்) தமிழகத்தில் தேசிய ரீதியாகவோ, பாடசாலை மட்டத்திலோ அனுஷ்டிக்கப்படுவதில்லை. அரசாங்கம் இவற்றுக்கு ஊக்கம் அளிப்பதும் இல்லை. ஆனால் இலங்கையில் பாடசாலைகள் மத ரீதியாகவும் இனரீதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மதம் ஒரு பாடமாக பாடசாலைகளில் போதிக்கப்படுகிறது. மாணவர்களை நாம் இன, மத ரீதியாகப் பிரித்தே வளர்க்கிறோம். ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத தனித்தனி கும்பல்களாக மாணவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். இதனால்தான் நமது இளைய சமுதாயம் மத, இன ரீதியாக சிந்திக்கிறது. பௌத்தத்தை தமிழன் புரிந்து கொள்வதில்லை. சிங்களவருக்கு தமிழரும் அவர்களின் கலாசாரமும், மதம், பண்பாடு என்பனவும் இன்றைக்கும் புரியாத புதிராக இருப்பதற்குக் காரணம், தனித்தனிச் சூழல்களில் அவர்கள் வளர்க்கப்படுவதே காரணம்.

இங்கே தவறான புரிதல்களுடன்தான் பெற்றோரும், ஆசிரியர்களும், காலில் விழும் கலாசாரத்தை வளர்த்தெடுத்து வருகிறார்கள். வளர்ந்த நாடுகளில் ஏன் இந்தியாவின் வடமாநிலங்களில் கூட, காலில் விழும் கலாசாரம் கிடையாது. இலங்கையில் ஆசிரியர்கள், அதிபர் காலில் விழுந்து வணங்க மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

ரௌத்திரம் தொடரும்...

1 comment: