Saturday, March 5, 2016

சினிமானந்தா பதில்கள் -32

அஜித் மீண்டும் அடுத்த மாதமே படப்பிடிப்பில் இறங்கப் போகிறாராமே?
கவிதா, பாதுக்க

ஆமாம், அப்படித்தான் கேள்வி. அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களாம். அதில் ஒன்று சரித்திரப்படமாம். அதுவும் கறுப்பு வெள்ளைப் படமாம். யார் யாரோ சொல்லக் கேள்வி. இவை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் எல்லாம் இன்னும் இரண்டு மாதம் கழித்துத்தான் (அஜித்தின் கால் பூரண சுகமடைந்த பின்னர்தான்)

அஜித்தை அரசியல் பக்கம் இழுப்பதற்கு அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இன்னும் ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல். தேர்தல் பிரசார காலத்தில் அஜித் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்தால் அப்போது அவர் செம no time for politics என்று சொல்லிவிடலாம். அதற்குத்தான் இந்த ஏற்பாடா?சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடிப்பாரா?
அபிநாத், யாழ்ப்பாணம்

விஜய் சேதுபதியை ரவுடியாக்கிய நயன், சிவனை பைத்தியமாக்க வேண்டும். அப்போதுதான் படம் ஹிட்டாகும். ஆனால் படம் செம கொமடியாக இருக்க வேண்டும். ஆமாம், நயனுக்கு கொமெடி வருமா? வராவிட்டால் இப்படிச் செய்யலாம். நயன் சீரியஸ், சிவா கொமெடி!

நயன் ஒரு பிக்பொக்கட் திருடி. சிவா அவரை துரத்திப் பிடிக்கும் பொலிஸ். நயனைப் பிடிக்க முயலும் ஒவ்வொரு தடவையும் சிவாவிடம் உள்ள ஒரு பொருள் காணாமற் போகிறது. கைக்குட்டையில் ஆரம்பித்து பர்ஸ், குண்டாந்தடி, தொப்பி என்று வரிசையாக தொலைந்து விடும் சிவாவுக்கு பொலிஸ் வேலையும் போய் விடுகிறது. யோசித்துப் பார்க்கும் போது இது எல்லாவற்றுக்கும் காரணம் நயன்தான் என்று சிவாவுக்குத் தெரிகிறது.
நயனிடம் கெஞ்சிக் கூத்தாடி தனது தொப்பியையும் குண்டாந்தடியையும் வாங்கி பொலிஸில் ஒப்படைத்தால்தான் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நிலையில் நயனிடம் சரணடைகிறார் சிவா. தன்னை ஒருபோதும் பிடிக்கக் கூடாது என்றும் வேறு யாரும் பிடிக்க முயலும் போது தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்கும் நயனுக்கு சரி என்று சொல்லி தொப்பியையும் குண்டாந்தடியையும் வாங்கி மீண்டும் பொலிஸ் வேலையில் சேருகிறார் சிவா. திருடும்போது நயனை அகப்படாமல் காப்பாற்ற சிவா படும் பாட்டில் வேலை பறி போகிறது. இறுதியில் வருகிறது எவரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்!

'ஜாக்கிரதை, ஜேப்படி திருடி' என்று தலைப்பு வைத்துவிட்டால் படம் நிச்சயம் ஹிட்!

எல்லா தமிழ்ப் படங்களுக்கும் பூஜை போட்டுத்தானே ஆரம்பிக்கிறார்கள்! ஆனால் எப்படி ஒரு சில படங்கள் மட்டும் வெற்றி பெற முடிகிறது?
எஸ். தனுஷன், கண்டி

என்ன இருக்கிறதோ இல்லையோ தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களிடம் இறை பக்தி மட்டும் குவிந்து கிடக்கிறது! சில காலத்துக்கு முன் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் ஆரம்ப காட்சி (opening shot) கோயில் கோபுரமாகத்தான் இருந்தது. இப்போதுதான் இது கொஞ்சம் மாறியிருக்கிறது.

சினிமாவுக்கும் இறைபக்திக்கும் உள்ள தொடர்புக்கு நல்லவொரு உதாரணம் சொல்கிறேன்.

லியனார்டோ டி கப்ரியோ என்ற அமெரிக்க நடிகர் (டைட்டானிக் படத்தின் கதாநாயகன்) மிகவும் பிரபலமானவர். பத்துமுறை கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அவர் மூன்றுமுறை அந்த விருதை வென்றிருக்கிறார். அதேபோன்று பிரபலமிக்க ஒஸ்கார் விருதுக்கு 6 முறை பரிந்துரைக்கப்பட்ட போதும் அவர் வெற்றி பெற முடியவில்லை. இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது.

பொதுவாகவே ஹொலிவுட்டில் ஒஸ்கார் விருதை வென்றால்தான் அவர் முழுமையான நடிகன் என்ற கருத்துப் பரவலாக இருந்து வருகிறது.

7வது முறையாக 2016 ஆம் ஆண்டு ஒஸ்காருக்காக டி கப்ரியோ
The Revenant என்ற ஆங்கில படத்துக்காக இப்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இம்முறை அவருக்கு ஒஸ்கார் விருது கிடைக்குமா? கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உள்ள போதிலும் இம்முறையும் ஒஸ்கார் விருது தனது கையை விட்டுப் போய்விடும் என்ற பயம் அவருக்கு இருக்கவே செய்கிறது.

"எப்படியாவது இம்முறையாவது ஒஸ்கார் விருதைப் பெற வேண்டும். அதற்காக என்னென்ன செய்யலாம் என்று எனது நண்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் என்று பலரையும் கலந்தாலோசித்தேன். அதன்பின் எனது இந்திய ரசிகர்கள் கூறிய ஆலோசனையை பின்பற்றத் தீர்மானித்தேன்" என்கிறார், டி கப்ரியோ.

அதன்படி திருப்பதி பாலாஜி கோயிலில் ஆரம்பித்து பல கோயில்களுக்கு தல யாத்திரை செய்ய அவர் தீர்மானித்தார்.

கடந்த மாத நடுப்பகுதியில் திருப்பதி வந்த அவர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். அடுத்ததாக கறுப்பு உடையணிந்து ஐயப்ப சுவாமிகளை தரிசித்த அவர் மும்பாயில் உள்ள சித்திவிநாயகர் ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று வழிபாடு செய்தார்.

ஒஸ்கார் விருதை வென்றால் எல்லாம் திருப்பதியான் மகிமை என்று டி கப்ரியோ துதி பாடுவார். ஆனால் விருது கிடைக்காவிட்டால், திருப்பதியான் அவரை ஏமாற்றி விட்டால் யாரைக் குறை கூறப்போகிறார்?

No comments:

Post a Comment