Saturday, March 19, 2016

வீழ்ந்துவிட்ட வீரம், மண்டியிட்ட மானம்! 2


மணி ஶ்ரீகாந்தன்

காலில் விழுவதற்கும் நற்பிரஜையாக இருத்தலுக்கும் இடையே சம்பந்தம் கிடையாது

'சண்டே கிளாஸ் போவதால் மட்டும் மனிதர்கள் நல்லவர்களாகிவிட மாட்டார்கள்'

'இன்று கல்வி ஒரு சோடை போகாத வர்த்தகமாகி விட்டது'

காலில் விழுந்து கும்பிடுவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. உண்மையாக இருத்தல், பணிவாகவும் விசுவாசமாகவும் இருத்தல் என்பன நற்பண்புகளில் அடங்கும். இவற்றைக் கைக்கொள்ள வேண்டுமானால் பெரியவர்களை காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம்.

நற்பண்புகள் வீட்டிலேயே ஆரம்பமாக வேண்டும். கும்பிடுவதன் மூலம் இப்பண்புகள் சிந்தையில் ஏறுவதில்லை. ஒருவருக்கு, யார் காலிலும் விழலாம் என்ற எண்ணத்தைப் புகட்டுவதால் மட்டும் அவர் நல்ல மனிதராவதில்லை. காலில் விழுந்தால் காரியம் ஆகும் என்பது குறுக்கு வழியே தவிர நல்ல வழி அல்ல. இலங்கையில் 90 சதவீதமானோர் கோவில்களுக்கு போகிறார்கள். மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மிகப் பெரும்பாலான மாணவர்கள் ஞாயிறு தினங்களில் மதக்கல்வி வகுப்புக்கு போய் வருகிறார்கள். இந்நடவடிக்கைகளால் மக்கள் அனைவரும் திருந்தி நற்பிரஜைகளாக வாழ்கிறார்களா? 'சண்டே கிளாஸ்' போவதால் மாணவர்கள் நற்பிரஜைகளாக மாறி இருப்பதாகக் கூறும் புள்ளி விவரங்கள் ஏதேனும் இருப்பதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகக் காட்டும் புள்ளி விவரங்களும், ஆய்வறிக்கைகளுமே உள்ளன.

இவை இந்த பாரம்பரிய நம்பிக்கையில் எங்கோ பெரிய ஓட்டை இருப்பதையே காட்டுகின்றன. நமது பெரிய பிரச்சினையே, வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படுபவற்றை எந்தக் கேள்வியும் இல்லாமல் பின்பற்றுவதுதான். 2500 ஆண்டுகளுக்கு முன்னரேயே, 'நான் புத்தன் என்பதால் மட்டும் நான் சொல்பவற்றை அப்படியே ஏற்க வேண்டாம், பரம்பரையாக நம்பப்படுவதால் மட்டும் அவற்றை ஏற்க வேண்டாம். சொல்லப்படுபவற்றை உங்கள் புத்தியில் ஏற்றி அவை சரியானதா என்பதை ஆராய்ந்து பார்த்து அதன் பின் கை;கொள்ளுங்கள்' என்று கௌதம புத்தர் கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். புத்தரே,'நான் சொல்கிறேன் என்பதால் மட்டும் அதை நம்ப வேண்டாம். அதை நீயே சிந்தித்து முடிவெடு' என்கிறார். தனிமனித சிந்தனைக்கு அவர் எவ்வளவு இடமளித்திருக்கிறார் என்பது இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

குழந்தைகளுக்கு அந்தப் பருவத்தில் இருந்தே காலில் விழுந்து கும்பிடும் பழக்கத்தை அவர்களிடம் ஊட்டி விடுகிறோம். நீதி நேர்மையாக நடந்தால் யாருக்கும் பயப்படவோ பணியவோ தேவையில்லை என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை. வம்சாவளித் தமிழர்களிடம் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில், காலில் விழும் கலாசாரம் மிக அதிகம்.

ஜனவரி முதலாம் திகதியாகிவிட்டால் பெற்றோரே பிள்ளைகளிடம், 'பெரியவர்கள் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி வா' என்று சொல்லி அனுப்புகிறார்கள். அவர்களும் சந்தோஷமாகக் கிளம்பிப் போய், வீடு வீடாகச் சென்று காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். ஏனெனில் காலில் விழுந்தால் நிச்சயம் குறைந்தபட்சம் ஐந்து ரூபாயாவது கிடைக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். இனி, எத்தனை பேர் காலில் விழ முடியுமோ அத்தனைபேர் கால்களிலும் விழுந்து வணங்கி காசு பார்த்து விடுகிறார்கள். இது எப்படி நல்ல பண்பாக முடியும்? இது ஒரு குறுக்கு வழி அல்லவா! மேலும் 'பெரியவர்' என நாம் அழைப்பது வயதில் மூத்தவர்களையே. அவர்களின் தகுதி பார்க்கப்படுவதில்லை. வயதில் மூத்தவர் என்பதால் மட்டும் ஒருவர் பெரியவராகி விட முடியாது.

கும்பிடுவது என்பது மரியாதை தெரிவிக்கும் ஒரு பண்பு. கைகளைக் கூப்பி வலது தோல் பக்கமாக வைத்து வணக்கம் என்று சொல்வது தமிழர் கலாசாரம். இப்படிக் கும்பிடும்போது முகத்தை கனிவாகவும், புன்னகையோடும் வைத்துக்கொள்ள வேண்டும். கூப்பிய கரங்களை அல்ல, எதிரே இருப்பவர் அவதானிப்பது, உங்கள் முகக் குறிப்பைத்தான். இதற்குப் பதிலாகத்தான் மேற்கத்தியர்கள் கைலாகு கொடுக்கிறார்கள். ஜப்பானியர்கள் முதுகை வளைக்கிறார்கள். எல்லாமே மரியாதை செய்யும் உடல் குறிப்புகள்.

ஒருவருக்கு இப்படி முகமுன் கூறினாலே போதும். காலில் விழத்தேவையில்லை. தமிழர்கள் ஜமிந்தார், பண்ணையார் கால்களில் விழுந்து பழகியவர்கள். எஜமான் என்றால் காலில் விழ வேண்டும் என்பது ஊறிப்போன விஷயமாக இருக்கிறது. அதுவே வெள்ளைக்கார துரைகளின்,  காலில் கங்காணிகளை விழச் செய்தது. காலில் விழுந்தால், தவறு செய்தாலும், மன்னித்து விடுவார் என வேலை செய்கிறவர்கள் கணக்குப் போடுகிறார்கள். காலில் விழுந்து கும்பிடச் செய்தால் நாம் சொல்கிறபடி எல்லாம் இவர்களை ஆட்டி வைக்கலாம் என்று வேலை கொள்பவர் கணக்குப் போடுகிறார். இதிலே தோற்பது என்னவோ சுயமரியாதையே!

ஜனவரி முதல் தேதி என்றால் தோட்டக் கோவில்களில் பூஜைகள் நடக்கும். ஜனவரி முதல் தேதி என்பது கிறிஸ்தவ கலண்டரின் முதலாம் மாதத்து முதல் தேதி. அது ஒரு உலகளாவிய வர்த்தகக் கலண்டர். இந்து சமயத்துக்கும் தமிழ் ஆண்டுக்கும் ஜனவரி முதல் தேதிக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் பௌத்தர்களும் இந்துகளும் ஜனவரி முதலாம் திகதியை கொண்டாடித் தீர்த்து விடுகிறார்கள்.

ஜனவரி 1ம் திகதி யார் காலிலாவது விழுந்து வணங்கி காசு பார்க்கச் சொல்வதன் மூலம் பிஞ்சு மனதிலேயே அடிமைத் தனத்தை விதைத்து விடுவது பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. இதே ஜனவரி 1ம் திகதி தோட்ட மக்கள் பூஜைகளில் ஈடுபடும் போது இன்னொரு விஷயமும் அரங்கேறுகிறது. இந்த வழிபாடுகளின்போது தோட்ட அதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்று பலரும் கலந்து கொள்கிறார்கள். பூஜைகள் முடிந்ததும், தோட்ட மக்கள் தத்தமது குடும்பம் சகிதமாக தோட்டத்துரையின் காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். தோட்ட அதிகாரி தொடை தெரிகிற மாதிரி அரை கால் சட்டை அணிந்தபடி நிற்க, வயது வித்தியாசமின்றி அவரின் காலில் வரிசையில் நின்று விழுந்து கும்பிடுகிறார்கள். அந்த அதிகாரியின் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்குவதற்கு அவர் இந்த சமூகத்திற்காக என்ன பெரிய தியாகத்தைச் செய்து விட்டார்? ஒரு காலத்தில் இப்படிச் செய்தார்கள் என்பதால் இன்றைக்கும் இதைத் தொடர்வதா? யோசிக்க வேண்டாமா?

அடுத்ததாக பாடசாலைகளுக்கு வருவோம்.

நமது பாடசாலை ஆசிரியர்களும் இதற்கும் மேலே ஒருபடி சென்று காலில் விழும் நிகழ்வை பாத பூஜை என்ற பெயரில் பெரிய கோலாகல நிகழ்வாக நடாத்தி விடுகிறார்கள்.

'பெற்றோர்களின் காலை அவர்களின் பிள்ளைகள் தாம்பளத்தட்டில் வைத்து கழுவி பாத பூஜை செய்யும்போது, எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்கள்' என்று ஒரு ஆசிரியர் என்னிடம் பெருமிதமாக சொல்லி மெய் சிலிர்த்தார். இந்த பாத பூஜையை 'நல்ல பிரஜைகளை உருவாக்குவதற்கான முயற்சி' என்றும் அவர் வியாக்கியானம் செய்தார்! இப்படிச் செய்வதால் நல்ல பிரஜைகளை உருவாக்கிவிட முடியுமா? பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு மரியாதை இருப்பது கட்டயாம். அது இயல்பிலேயே எல்லா பிள்ளைகளிடமும் உள்ள பண்புதான். இப்படிப் பொதுவில் ஊரைக் கூட்டி விழா எடுத்து அவர்களின் கால்களுக்கு பூஜை செய்வதால்தான் பணிவும், பண்பும் வரும் என்று எதிர்பார்ப்பது மடமை. அப்படியொரு நல்ல சமூகத்தை உருவாக்குவது சாத்தியமுமில்லை. இப்படிச் செய்வதன் மூலம் வளரும் நம் சமூகத்திற்கு அடிமைத்தனத்தை வலுக்கட்டாயமாக புகுத்துகிறோம். மேலும் ஆசிரியர் தினங்களிலும் பாடசாலைகளில் சிறப்பு விழாக்கள் நடாத்துகிறார்கள். அதில் மாணவர்கள் ஆசிரியர்களின் காலில் பூத்தூவி கும்பிடச் சொல்கிறார்கள். குருவை மதிக்க வேண்டும். அவர்களுக்கு பணிவாக இருக்க வேண்டும் என்பது காலா காலமாக இருந்து வரும் ஒரு வழக்கம். இதில் எந்தத் தவறும் கிடையாது. மாதா, பிதா, குரு தெய்வம் என்பதில் குரு மூன்றாம் இடத்தில் இருக்கிறார். கடவுளுக்கே நான்காம் இடம்தான். இதற்குக் காரணம் இருக்கிறது.

அந்தக் காலத்தில் அச்சு இயந்திரம் கிடையாது. கல்வி என்பது உயர் குலத்தினருக்கானது. சாதாரண மனிதனுக்கு கல்வி வாய்ப்பு இல்லை. குரு என்பவரைத் தேடிச் சென்று குருகுல முறைப்படியே குருவுக்கு சேவை செய்து கல்வி பெற வேண்டும். தான் கற்றவற்றை அவர் சொல்லித் தந்தார். எனவே அவரை அடி பணிந்துதான் கல்வி பெற வேண்டும். அவரை விட்டால் கல்வி கிடையாது. இதனால் குரு என்பவர் உயர்ந்த இடத்தை வகித்தார். தெய்வத்துக்கு சமம் மாதிரித்தான். அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள்.

இப்போது நிலை தலைகீழாக மாறிவிட்டது. கல்வி அனைவருக்கும் சமம். திறமை உள்ள மாணவன் இலவசக் கல்வி மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். படித்தால் வருமானம், வசதி, செல்வாக்கு எல்லாம் வரும். இது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி. பாடங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கிறது. புத்தகங்களை அச்சிட்டு இலவசமாக வழங்குகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி கல்வி கற்பிக்கச் சொல்கிறது.

இன்றைக்குக் கல்வி ஒரு சோடை போகாத வர்த்தகமாகி விட்டது. ஆசிரியர்கள் டியூஷன் மூலம் நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஒரு நாள் டியூஷன் வகுப்புக்கு ஆயிரம் ரூபாவையும் கட்டணமாக அறவிடுகிறார்கள். காசு தந்தால் கல்வி தருவேன் என்றாகி விட்டது. எல்லா பாடங்களுக்கும் பயிற்சிப் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. அதை அப்படியே படித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். மாணவர்களும் அந்தப் புத்தகங்களின் உதவியுடன் பரீட்சையும் எழுதி சித்தியடைகிறார்கள். அறிவுக்கும் படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றாகிவிட்டாது. பெற்றோரும் மாணவர்களும் படித்தல் என்பது பாடசாலைப் படிப்பு மட்டுமே என்று கருகிறார்கள். படிப்பு முடிந்து தேர்வுகளில் சித்தியடைந்ததும் புத்தகங்களை மாணவர்கள் தூக்கி எறிகிறார்கள். அப்புறம் படிப்பதே இல்லை. பத்திரிகை, நூல்கள் வாசிப்பதும் மிகக் குறைவு. எனவே, டாக்டர்களுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களே அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போது சொல்லுங்கள் இவர்கள் என்ன தியாகம் செய்திருக்கிறார்கள் பூ தூவி கும்பிடுவதற்கு?

அண்மையில் ஹொரணை கல்வி வலையத்திற்குட்பட்ட ஒரு பாடசாலைக்குச் சென்று அந்த அதிபருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் பாடசாலையும் முடிந்துவிட, பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் வரிசையில் அதிபர் இருக்கும் அறைக்கு வந்தார்கள். வந்தவர்கள் பொத் பொத்தென்று அதிபரின் காலில் விழுந்து கும்பிட்டு விட்டு வெளியே போனார்கள். அதிபர் ஆசனத்தில் அமர்ந்தபடி என்னோடு உரையாடிக் கொண்டிருந்தார். அவரின் காலில் மாணவர்கள் விழுவதை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது ஒரு சில மாணவர்கள் அதிபரோடு பேசிக் கொண்டிருந்ததால் 'நானும் ஆசிரியராகத்தான் இருக்கும்' என்று நினைத்து என் காலிலும் விழ, நான் அதிர்ச்சியடைந்து கதிரையிலிருந்து எழும்பிவிட்டேன். 'நீங்க உட்காருங்க' என்று என்னை அதிபர் அமர வைக்க முனைந்தார்.

'இது என்ன, ஏன் காலில் விழுகிறார்கள்?' என்று நான் கேட்க,

'இதுதான் எங்கள் பாடசாலையின் பண்பு. நல்ல பிரஜைகளை உருவாக்குகிறேன். இந்த காரியத்திற்கு இந்த பிரதேச மக்களிடம் எனக்கு நல்ல ஆதரவும் கிடைக்கிறது' என்றார் அந்த அதிபர் பெருமிதத்தோடு!

மனிதன் மிருகத்தின் வழி வந்தவன். எப்போதும் யாரையாவது தனக்குக் கீழ் வைத்திருக்க விரும்புபவன். புகழ்ச்சியில் கிரங்கி நிற்பவன். காலில் விழுவதை ஏன் நாம் ஊக்குவிக்கிறோம் என்பதை ஆராய்ந்தால் இன்னொருவரை அடக்கி வைப்பதில் மனிதன் காணும் சுகமே இதற்குக் காரணம் என்பது புலப்படும்.

எல்லாக் கடவுள் வணக்கங்களை எடுத்துப் பார்த்தால், நான் பாவி, என்னை இரட்சியும் என்பதே அவற்றின் அடிநாதமாக இருக்கும். அதுவே கீழிறங்கி வரும்போது பெற்றோரை வணங்குவது, ஆசிரியர் காலில் விழுவது, மேலதிகாரியை வணங்குவது என்று உருமாறி வருகிறது. ஆனால் மரியாதை வேறு, காலில் விழுந்து கும்பிடுவது வேறு. காலில் விழுந்து நமஸ்கரிக்கும் பழக்கம் இல்லாத மேல்நாடுகளில் கல்வி, விஞ்ஞானம், வர்த்தகம் என சகல துறைகளும் எவ்வளவு முன்னேறி இருக்கிறது, பார்த்தீர்களா?

தமிழக அரசியலைப் பாருங்கள். எப்படி எல்லாம் அங்கே அமைச்சர்களும் மந்திரிமாரும், அடக்கி ஒடுக்கப்பட்டு தனிமனித சுயமரியாதை சிறுமைப்படுத்தப்படுகிறது என்பதை. இப்படிப்பட்ட கலாசாரத்தை நாமும் ஏன் ஊக்கப்படுத்த வேண்டும்? பொருளாதாரம் சார்ந்த நமது கல்வி முறைக்கு அப்பால் நாம் சுயமாக சிந்திக்கவும் கற்றிருக்க வேண்டும். சுயமரியாதை கொண்டவர்களாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை. 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு' என்றார் வள்ளுவர். இதுவே அறிவு என்பதற்கான மிகச் சரியான விளக்கம். காலில் விழுவது போன்ற வேண்டாத கலாசாரங்களைக் கைக்கொள்வதால் மெய்ப்பொருள் காணும் அறிவை நாம் இழந்து விடுகிறோம்.

ஒரு விடயத்தை சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் காலையில் பல் விலக்கும் பிரஸ், பேஸ்ட், சட்டை, சட்டை பாக்கட்டில் கிடக்கும் செல்போன், டிவி, ரேடியோ, மின்சாரம் என்று நீங்கள் படுக்கைக்குப் போகும்வரை பாவிக்கும் அனைத்துப் பொருட்களும் மேற்கத்திய கண்டுபிடிப்பாகத்தானே இருக்கிறது. அதில் எதையாவது ஒன்றை நமது 'நல்ல பண்பு'களோடு வளர்ந்த ஒருவர் கண்டுபிடித்திருக்கிறாரா? மேற்கத்தியவர்களுக்கு சுயமரியாதை இருக்கிறது. சுதந்திர சிந்தனை இருக்கிறது. பிறவியிலேயே வந்த அடிமைத்தனம் அவர்களிடம் இல்லை.

இது என் நண்பன் சொன்ன ஒரு சம்பவம்,

சில வருடங்களுக்கு முன் மேடை நிகழ்ச்சிக்கு இயக்குநர் சேரன் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் பலரும் மேடையில் ஏறி சேரனுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். என் நண்பரும் அவர் பக்கத்தில் இருந்திருக்கிறார். அப்போது அவரின் ரசிகர் ஒருவர் சேரனின் காலில் சட்டென விழுந்து கும்பிட்டார். சேரன் இதை எதிர்பார்க்கவில்லை. சேரனுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வர, கும்பிட்டு எழுந்த அந்நபரின் சட்டையை கொத்தாகப் பிடித்து உலுக்கிய சேரன், 'உன்னை யார் என் காலில் விழச் சொன்னது? எங்கே பழகினாய் இந்தப் பழக்கம்? யார் காலிலும் விழக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? நீயெல்லாம் என்ன மனுஷன்?' என்று சத்தம் போட்டு ஆக்ரோஷமாக அவரை திட்டித் தள்ளினார் சேரன். இதைச் சற்றும் எதிர்பாராத அந்த ரசிகர் வெலவெலத்துப் போய்விட்டார். பக்கத்தில் நின்றிருந்த நண்பரும் இச்சம்பவத்தால் ஆடிப்போனாலும், அவர் மனதில் சேரன் என்ற நபர் பல் மடங்கு உயர்ந்து நின்றார்.


இந்த சேரன் மாதிரி நமது 'பெரியவர்'கள் மாற வேண்டும். காலில் விழுந்து யாரையும் வணங்கக் கூடாது என்று நமது அதிபர்மாரும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். மாணவர்கள் காலில் விழுவதால் ஆசிரியர்கள் தம்மை உயர்வாகக் கருதிக்கொள்ளக் கூடாது. அவசியமின்றி யாரிடமும் அடிபணியாதே என்று மாணவர்களுக்கு சொல்லித் தருவதும் கல்விதான்.

பணிவும் பண்பும் உள்ளத்தில் இருக்க வேண்டியது. முகக் குறிப்பில் வெளிப்பட வேண்டியது. காலில் விழுந்தல்ல. என் காலில் விழ வேண்டும், விழச் செய்ய வேண்டும் என்பது நல்ல கலாசாரமோ பண்போ அல்ல.

No comments:

Post a Comment